உள அழுத்தம் -கடிதங்கள்

NTVM0598626

உள அழுத்தம் பற்றி

 

அன்புமிக்க ஜெயமோகன்,

 

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

https://www.jeyamohan.in/109190#.Wv0lEUiFOUk

 

இந்த கடிதத்தில் குறிப்பிட்டபடி, சமுதாயத்தில் பொதுவாக வெற்றி என எது கருதப்படுகிறது என்பதும், நிலையற்ற பாதுகாப்பற்ற தொழில் சூழலின் மீது கொண்ட விமர்சனங்களைநான் ஏற்கின்ற போதிலும்,  அதற்கு  யோசனையாக அவரவர் குலத்தொழிலுக்கு  பின்நோக்கி செல்லலாம்,  பிரமிட் அடுக்கில் கீழே உள்ளவர்கள் அனைவராலும் ஒதுக்கப்பட்ட தொழில்களை  ஆன்மீகமாவோ, Round robin முறையிலோ புரியலாம் என்ற  தொணியில் எழுதப்பட்டிருக்கும் கருத்தை கடுமையாக எதிர்க்கிறேன்.

 

சமுதாயத்தால் திணிக்கப்படாமல், தனிமனித விருப்பத்தேர்வுடன் அவன் உளமகிழ்வு கொள்ளும் தொழில்களை தேர்ந்தெடுத்து புரிந்தாலே மன அழுத்தம் இருக்காது.

 

படைப்பு மனநிலைக்கு எதிரான உள்ளீடற்ற போட்டி மனப்பான்மையும், குமாஸ்தா மனப்போக்கையும்  பயிற்றுவிக்கும், நவீனக் கல்வி தொடர்பான எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும்,  கற்று வெளிவரும் கல்லூரி மாணவனின் தொழிலின்  தெரிவுப் பட்டியலை பலமடங்காக்கியதை பெரும் கொடையாகத்தான் பார்க்கிறேன். என் தாத்தாவின் தொழில் தெரிவுப் பட்டியலை விட என் அப்பாவிற்கு பெரியது, அதை விட என் தலைமுறைக்கு பெரியது. என் மகனுக்கும் வாய்ப்புகளும், தெரிவுகளும் அதிமடங்காக வேண்டும் என்பதே என் எண்ணம். என் அடுத்த தலைமுறைக்கான தொழில் தெரிவை விரிவாக்குவதே என் கடமை .

 

 

என்றும் அன்புடன்,

 

சிவமணியன்

 

அன்புள்ள ஜெ

 

உள அழுத்தம் பற்றிய கட்டுரை வாசித்தேன். அக்கட்டுரையிலும் அதன் மீதான வெளிப்பாடுகளிலும் பேசப்படாத ஒன்று உண்டு. இப்போதெல்லாம் நம் வாழ்க்கை மிகவும் மூளைசார்ந்ததாக ஆகிவிட்டது. நாம் ‘செய்வது’ ரொம்பக் கம்மி. வேலைகூட மூளை உழைப்புதான். உடலுழைப்பு உடல்பயிற்சி உடலால் செய்யும் பயணம் முதலியவை உள அழுத்தத்தைக் குறைப்பதை கண்கூடாகவேக் காணலாம். ஒரு விளையாட்டை விளையாடினாலே பெரும்பாலான மனச்சிக்கல்கள் போய்விடும். சென்றகாலத்தில் உளச்சிக்கல்கள் கம்மியாக இருந்ததுக்குக் காரணம் அன்று உடலால் வாழ்ந்தார்கள் என்பதுதான்

 

லட்சுமணப்பெருமாள்

 

அன்புள்ள ஜெ

 

உள அழுத்தம் கட்டுரை, எதிர்வினைகள் வாசித்தேன்.

 

ஒரே விதி, அதைமட்டும் சொல்கிறேன் [நான் உளவியல் படித்தவன்] கூர்மையான மூளை கொண்டவர்கள் கூடவே அழகுணர்வும் கொண்டிருந்தால் உணர்ச்சிக்கொந்தளிப்பு கொள்ளாமலிருக்க முடியாது. அவர்கள் டிப்ரஷன் தவிர்க்கவும் முடியாது. அவர்கள் அதை தவிர்க்க ஒரே வழி ஸ்பிரிச்சுவலாகச் செல்வது மட்டும்தான். இல்லாவிட்டால் வெறுமை உண்டு. ஏதேனும் செயல்கள் வழியாக ஆன்மிகமாக ஃபுல்ஃபில்மெண்ட் அடைந்தாலொழிய டிப்ரஷனைத் தவிர்க்கமுடியாது

 

செல்வன்

 

 

செய்திதுறத்தல்

உள அழுத்தம் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைஆயுதம்செய்தல் -கடிதம்
அடுத்த கட்டுரைபாண்டிச்சேரி,காவிய இயல் -கடிதங்கள்