ஆயுதம்செய்தல் -கடிதம்

m777-18-1495100864

 

ஆயுதம் செய்தல்

ஆயுதம் -கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ.,
ஆயுதம் செய்தல் மற்றும் அதற்கு வந்த ஒரு பின்னூட்டமும் படித்தேன். நீங்கள் வழக்கமாகச் செல்லும் சிந்தனை ஆழத்துக்குச் செல்லாமல் கட்டுரையை முடித்துக் கொண்டதுபோல் தோன்றியது. இது பற்றி எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்.

இப்போதுள்ள நிலைமைக்கு ஆயுதம் தேவைதான். எத்தனை அலாவுதீன் கில்ஜிகளும், நாதிர் ஷாக்களும், மாலிகாப்பூர்களும் டல்ஹெளசிகளும் இங்குள்ள வளத்தைச் சூறையாடிவிட்டுப் போயிருக்கிறார்கள்.. எத்தனைப் பெண்கள், குழந்தைகள் அதனால் பலியானார்கள்…!  இனி வரும் எந்தக் காலத்திலும் நாட்டின் எந்தவொரு மூலையிலும் அப்படியொரு பாதகம் நடக்கும் வாய்ப்பு வர‌ விடலாமா ?

தன்வசம் இருநூறுக்கும் மேற்பட்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய அணு ஏவுகணைகள் வைத்திருக்கும் பிரிட்டனை விட, ஆறேழு ICBM-வகை அணு ஏவுகணைகளே வைத்திருக்கும் வடகொரியாவையே அமெரிக்கா தனக்கு ஒரு அச்சுறுத்தல் என‌க் கருதுவதற்குக் காரணம், வடகொரியாவுக்கு அமெரிக்காவைத் தாக்கும் நோக்கம் (intent) உண்டு என்பதால் தான். இந்தியாவை நேரடியாகவோ, கூட்டு சேர்ந்தோ தாக்கும் நோக்கம் இல்லாத அண்டை நாடுகள் எத்தனை ?  போரென்று வந்தால் ஒதுங்கக் கூடியவை எவை ? கை கொடுக்கக் கூடியவை எவை ?

பொருளாதாரம் உலக மயமாகி விட்ட இந்த நாட்களில் சகநாடுகள் என்று ஒரு ஆதரவு வட்டம் தேவையாகிறது. நேப்பாளம், வியட்னாம் போன்ற நாடுகள் நம்முடன் ஒப்பு நோக்கத்தக்க அச்சுறுத்தல்கள் கொண்டவையாக இருந்தால் அவர்களின் பாதுகாவலுக்கு ஆயுதம் விற்பதன் மூலமும், உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலமும் நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம்..

எத்தனை வருடங்களாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுமத்தில் நம் நாட்டைச் சேர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் சீனா மற்றும் பாகிஸ்தானானின் எதிர்ப்பு வாக்குகளால் தோல்வி கண்டு வருகிறோம் என்று செய்தித்தாள் படிப்பவர்க்குத் தெரியும். வளர்ந்த நாடுகளுக்கு நேட்டோ,  ஜி-7 போன்ற ஒருங்கிணைப்பு அமைப்புகள் உள்ளன; முஸ்லீம் நாட்டவர்க்கு ஒற்றுமையாக உலக அரங்கில் செயல்பட‌  ஓஐஸி, ஜிஸிஸி (OIC, GCC) போன்றன உள்ளன; எண்ணை வளமிக்க நாட்டினர்க்கு ஓபெக் (OPEC) குழுமம்… இந்தியாவுக்கென்று எதைச் சொல்வது ? அடிக்கடி நமக்கு எதிரிகளாகச் செயல்படும் சீனா மற்றும் பாக்கிஸ்தானின் செல்வாக்கு இல்லாத, நமக்குச் சாதகமாகச் செயல்படக்கூடிய, எந்தக் குழுமம் இருக்கிறது ?

நமக்கு ஆதரவாக வளர்ந்த நாடுகளிடையே பிரிட்டனைச் சொல்லலாம். இந்திய‌ நாடாளுமன்றம் பாக்கிஸ்தானியத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போது “இவ்வளவு ஆத்திரமூட்டும் செயலுக்கு பதிலடியாக‌ நீங்கள் பாக்கிஸ்தான் மீது படையெடுக்க முழு உரிமையும் உங்களுக்கு உண்டு” என்கிற விதமாக டோனி ப்ளேரின் அரசு அன்று சொன்னது.

எண்ணை வாங்குகிறோம் என்பதால் அவ்வப்போது ஈரான் நமக்குச் சாதகமாகச் செயல்படும் என்றாலும் அவர்கள் முன்னுரிமை தருவது OIC நாடுகளுக்கும், (ருஷ்யா, வெனிசுவேலா, வடகொரியா, சீனா வகையறா) ‘அமெரிக்க எதிர்ப்பு’ நாடுகளுக்கும்தான். அவர்கள் வாங்கும் திறனுக்கும், அவர்களுக்கு இருக்கும் (அல்லது இருப்பதாக உணரும்) அச்சுறுத்தல்களுக்கு ஏற்ற ஆயுதங்களைத் தயாரிக்கும் நிலையில் நாமில்லை. அதை ருஷ்யாவும் சீனாவும் பெருமளவு பூர்த்தி செய்து வருகிறன. ஓரளவு, தானே ஏவுகணை மற்றும் ஆளற்ற விமான (ட்ரோன்) தொழில்நுட்பங்களையும் வளர்த்து வருகிறது. பாகிஸ்தானும் வடகொரியாவும் அதில் உதவுவதால் நேட்டோ நாடுகளின் கோபத்துக்கு ஆளாயின‌. மேலும், இஸ்ரேலை அழிப்பது எங்கள் தலையாய கடமை என்று வெளிப்படையாகச் சபதமிடும் ஒரு நாட்டுடன் உறவு வைத்துக் கொள்வது என்பது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு அழகல்ல.

இன்றைய உலகில் போர் என்றால் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் மூலம் நிகழ்த்தப்படும் போர் மட்டுமல்ல: Economic war எனப்படும் பொருளாதார சீரழிப்புப் போர், நெடுங்கால கலாச்சாரச் சீரழிப்பு என‌ இன்னும் பல நுணுக்கமான, எளிதில் புலனாகாத‌ திரைமறைவுச் சவால்களை நாடுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  இதில் cyber war எனப்படும் இணையப் போர்முறை, பொருளாதார சீரழிப்புப் போர் வகையின் கீழ் வரும் எனக் கொள்ளலாம்.

பொருளாதார சீரழிப்புப் போரின் முக்கிய அம்சம், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தடுப்பது. செளதி அரேபியாவை மிஞ்சும் அள‌வுக்கு எண்ணை வளம் கொண்ட‌ வெனிசுவேலாவில் இன்று மக்கள் அன்றாட‌ உணவுக்குப் பரிதவிக்கும் நிலை நிலவுவதற்கு ஒரு காரணம், அந்தக் கச்சா எண்ணையை வெளிக்கொணர்ந்து லாபகரமாகச் சுத்திகரித்து விற்கும் தொழில் நுட்பம் இல்லாமலாகியதுதான். அந்நாட்டு அதிபர்கள் (முன்பு சாவேஸ், இன்று மாடுரோ) அமெரிக்காவைப் பகைத்துக் கொண்ட பின், அங்கே எண்ணை எடுத்துச் சுத்திகரிக்கும் பணிகளைச் செய்து வந்த ஹாலிபர்ட்டன், ஷ்லம்ப்ர்கர், ஷெல் போன்ற மேற்கத்திய‌ நிறுவனங்கள் வெளியேறின. அவற்றின் அலுவல்கள் அரசுடமையாக்கப் பட்டாலும், நாளடைவில் இயக்கும் திறனற்று ஓய்ந்து போயின. கச்சா எண்ணை நல்ல விலைக்கு விற்ற காலத்தில் வந்த பணத்தை சாவேஸ் அரசு விரயம் செய்ததால் இன்று அத்தியாவசியப் பொருள் உற்பத்தியின்றி பண மதிப்பு வீழ்ச்சியினால் இறக்குமதியும் செய்து கொள்ள முடியாமல் மக்கள் தெருவுக்கு வந்து கும்பலாகக் கடைகளைச் சூறையாடும் நிலையில் அந்நாடு இருக்கிறது.

இந்த நிலையின் முனை வரை ஈரானும் தள்ளப்பட்டு, தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது  (ஜான் போல்ட்டன் எப்படிக் குழப்பப் போகிறார் என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும்). இந்த மீட்சிக்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதுதான்.

சீனர்கள் Belt and Road Initiative என்ற ஒரு உலகளாவிய‌ வர்த்தகத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். அதன் வரைபடத்தைப் பார்த்தால் அதன் உள்நோக்கு புரிபடும்: இந்தியாவைச் சுற்றியுள்ள சிறியதும் பெரியதுமான‌ நாடுகளில் வர்த்தகத்தின் பெயரில் பெருங்கடன் கொடுக்கப்பட்டு துறைமுகங்களும் நெடுஞ்சாலைகளும் கட்டப்பட்டு வருகின்றன. முக்கால்வாசி நாடுகள் அந்த‌க் கடனைத் திருப்பிக் கட்டும் சாத்தியம் குறைவு. அந்த‌ச் சாக்கில் சீனப் போர்க்கப்பல்களும் தளவாடங்களும் நின்று செல்லும் உரிமை பெறப்படும். இதற்குக் கண்முன் நிகழும் உதாரணம் இலங்கையிலுள்ள ஹம்பன்தோட்ட துறைமுகம். மும்பை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் நன்கு இயங்குவதால் இங்கு சரக்குப் போக்குவரத்து இல்லாமல் இருக்கிறது. நிர்வாகமும் இலங்கை அரசும் கடனைத் திருப்பிக் கட்ட இயலாத நிலையில், அதற்கு ஈடாக அத்துறைமுகத்தைக் கட்டிய சீன அரசு நிறுவனம், துறைமுகத்துக்கான‌ 99 வருட குத்தகையைக் கோரிப் பெற்று தன்னதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விட்டது.

சில வாரங்களுக்கு முன்தான் இந்திய அரசு ஒரு சீனப் போர்க்கப்பல் இங்கு வந்து சென்றதால் கண்டனம் தெரிவித்தது.  ராஜபக்ஷ அதிபராக இருந்திருந்தால்  இந்நேரம் இத்துறைமுகம் முழுவதும் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்; மைத்ரிபால இந்தியாவின் விசாரங்களுக்கும் சற்று செவிம‌டுப்பவர் என்பதால் அவ்வாறு நடக்காமல் தினசரி செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறது.

இதேவகையில் இன்னும் பாக்கிஸ்தானின் க்வடார் துறைமுகம், மாலத்தீவுகள், பங்களாதேஷில் டாக்கா-ஜெஸ்ஸூர் மூலமாக கோல்கட்டா வரை நீளும் சீன நெடுஞ்சாலைகள் என்று பலவற்றைச் சொல்லலாம். எல்லாமே இந்தியாவைச் சுற்றி வளைக்கும் அல்லது தனிமைப்படுத்தும் “முத்துமாலை”யின் (string of pearls) அங்கம். தேவையிருப்பின் கழுத்தை இறுக்கவும் கூடியது.

சீனா பலமுறை பல விதமாக ஜப்பான் மேல் சில்லறை வர்த்தகப் போர் நடத்தியிருக்கிறது. Rare Earth Metals எனப்படும் ‘லாபகரமாகப் பிரித்தெடுக்க முடியாத’ உலோகங்கள், ஏற்றுமதி செய்யப்படக்கூடிய‌ மின்னணுப் பொருட்கள் மற்றும் நவீன ஏவுகணைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் போன்றவற்றுக்கான‌ சிறிய ஆனால் இன்றியமையாத பாகங்களைச் செய்வதற்குத் தேவை. இதில் நவீன அலைபேசிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கணிணிகளின் தயாரிப்பும் அடங்கும் . இந்த வகை உலோகங்கள் இன்று தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல் சீனாவிலிருந்துதான் உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பானுடன் ஏற்ப்பட்ட ஒரு வர்த்தகத் தகராறில் சீனா சுரங்கங்களால் தன் சுற்றுச் சூழல் மாசடைவதாக‌க் காரணம் கூறி அவற்றின் ஏற்றுமதி அளவைக் குறைத்தது. ஸோனி போன்ற‌ ஜப்பானியப் பெருநிறுவனங்களின் தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்பு அதனால் ஸ்தம்பித்துப் போனது; சீனர்களின் தயாரிப்போ தொடர்ந்து நடந்தது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளில் லாபமற்றதாக‌க் கருதி மூடப்பட்ட ‘லாபகரமாகப் பிரித்தெடுக்க முடியாத’ உலோகங்களின் சுரங்கங்களை மீண்டும் திறந்திட அந்நாட்டு அரசுகள் தீவிரமாக‌ முனைந்தன. தனிம வளம் அதிகமற்ற ஜப்பான் கடலடி மண்ணிலிருந்து இத்தகைய உலோகங்களைப் பிரித்தெடுக்கும் உத்தியை ஆராய்ச்சி செய்து வளர்த்து வருகிறது.

சீனாவால் எப்படி இந்தத் தனிமங்களின் உற்பத்தியில் ஏகபோக அதிகாரம் அடைய முடிந்தது என்று அந்நாட்டு அரசுகள் ஆராய்ந்து பார்த்ததில் சில உண்மைகள் வெளிவந்தது.    சீன அரசின் மறைமுகக் கட்டுப்பாடில் இருக்கும் சில நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் இத்தகைய சுரங்கங்களை வாங்கிப் பதினைந்து இருபது வருடங்களுக்குப் பின் அவற்றை முடக்கி வைத்தோ அல்லது நஷ்டத்தைக் காரணம் காட்டி மூடிவிடவோ செய்திருக்கிறன. இதற்கு அடிகோலும் விதத்தில் சீன நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் இவ்வுலோகங்களின் விலையை சர்வதேசச் சந்தைகளில் குறைப்பதன் மூலம் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத சுரங்க நிறுவனங்களின் வருவாயும் குறைந்து, காலப்போக்கில் அவை லாபமில்லாத‌தால் புது முதலீடின்றி தானாக முடங்கிப் போயின.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் சீன எஃகு மேல் விதித்த ‘மேலதிக வரி’ (tariff) எஃகு உற்பத்தியிலும் இதே விதத்தில் அமெரிக்கர்களின் தன்னிறைவைக் மீட்கும் உபாயமாக அந்நாட்டு அரசால் வர்ணிக்கப்பட்டது.

எனக்குத் தெரிந்து இரண்டு முறை வெவ்வேறு அமெரிக்கத் துறைமுகங்களை சீன நிதி நிறுவனங்கள் அடங்கிய நிதிக்குழுமங்கள் வாங்கவிருந்தது அமெரிக்க‌ அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அமெரிக்காவில் சீன அரசு நடத்திகொண்டிருக்கும் தொழில்துறை உளவு (industrial espionage) பல முறை செய்தியில் வந்திருக்கிறது. டு பான்ட் (du Pont) நிறுவனத்தின் பயோனிர் வகை வீரிய விதைகள் சோதனை முறையில் விதைக்கப்பட்ட வயல்களில் இரவில் புகுந்து மாதிரிச் செடிகளை திருடி சீனாவுக்கு அனுப்பும் பொருட்டு வந்த ஒருவனை ஏழெட்டு வருடங்களுக்கு முன் கைது செய்தார்கள்.

அதேபோல் டெள (Dow Chemicals) நிறுவனத்தின் டைட்டானியம் டயாக்ஸைடு கொண்டு வெள்ளைப் பெயிண்ட் நிறமி (pigment) தயாரிக்கும் தொழில் ரகசியத்தை அந்த நிறுவனத்தின் அமெரிக்க அலுவலகத்தில் பல வருடம் வேலை பார்த்த சீன நாட்டவன் திருடிக்கொண்டு போய் சீனாவில் அரசு சார் நிறுவனத்துடன் சேர்ந்து அதையே தயாரிக்கத் தொடங்கினான். வேறொரு சமயம் அமெரிக்காவுக்குப் பயணமாக வந்தபோது கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.

சீனாவின் அதிநவீனப் போர் விமானமான செங்டு J-20யின் ‘ரேடாருக்குப் புலப்படாமல் பறக்கும்’ ஸ்டெல்த் திறன் அமெரிக்கப் போர் விமான நிறுவனமான‌ லாக்ஹீட் மார்ட்டினிடமிருந்து திருடப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்தத் திருட்டைச் செய்வதற்குத் திறவுகோலாக, ஆர் எஸ் ஏ (RSA) எனப்படும் பிரபல மென்பொருள் பாதுகாப்பு நிறுவனத்தின் கடவு எண் சூத்திரம் முதலில் திருடப்பட்டது. அதனைக் கொண்டு லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் மின்வலைப் பாதுகாப்புகளைக் கடந்து அத்துமீறி நுழைய எத்தனித்ததாக‌ அதன் மின் தடயவியலாளர்கள் ஊகித்திருக்கிறார்கள். லாக்ஹீடின் புதிய‌ F-35 போர் விமானத்துக்கான பிரத்யேக‌த் தொழில் நுட்பங்கள் சில‌ J-20யில் ஏற்கனவே இருப்பது குறித்துப் போர்த் தொழில் நுட்பம் பற்றிய‌ பல பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.

முகநூல் மூலமாக அமெரிக்க அதிபர் தேர்தலும் கருதுகோள்களும் எவ்வாறு திரளாக‌ ரஷ்யாவால் திசை திருப்பப்பட்டன என்பது அண்மைய‌ ஊடகப் பரபரப்பு. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த‌ காலத்தில், “ஓட்டுப் போடாதே, புரட்சி செய்” என்று அப்போது நடக்கவிருந்த‌ பாராளுமன்றத் தேர்தல் குறித்த‌ மகஇக செய்த‌ சுவரெழுத்துப் பிரச்சாரம் நினைவுக்கு வருகிறது. இந்திய மக்களுக்கு ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் இத்தகைய முயற்சிகளும், அருந்ததி ராய் போன்றோரின் பிரச்சாரங்களின் உள்நோக்கம் குறித்து நீங்கள் எழுதிய குறிப்புகளும் நீண்ட கால கலாச்சாரச் சீரழிப்பு உத்திகளுக்கு உதாரணம்.

இதையெல்லாம் மனதில் கொண்டு தன் நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுபவன் எவனும் இந்தியா ஆயுதம் செய்து விற்கக் கூடாதென்று சொல்ல மாட்டான். எங்கோ படித்தது: “என்றோ ஒரு நாள் உலகத்திலுள்ள அனைவரும் ஒரே குடும்பமாக வாழும் நிலை வரும்; அது வரும் வரை என் வீட்டைச் சுற்றியும் என் நாட்டைச் சுற்றியும் பாதுகாப்பு அமைத்து வைத்திருப்பேன்.”

அன்புடன்,
சுப்பிரமணியன்

முந்தைய கட்டுரைபுதுவை கம்பன் உரை
அடுத்த கட்டுரைஉள அழுத்தம் -கடிதங்கள்