இரு முதற் கடிதங்கள்

1469749_475149795931405_1931321358_n (1)

 

அன்புள்ள ஜெயமோகன் சார்!

 

வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் வலைப்பக்கத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் தளத்தில் வௌியான அனேகக் கட்டுரைகளை படித்திருப்பேன். ‘ஏழாம் உலகம்’ நாவல் வாசித்திருக்கிறேன். ‘சோற்றுக்கணக்கு’, ‘நூறு நாற்காலிகள்’, ‘யானை டாக்டர்’ போன்றவை எனக்குள் மிக பாதிப்பை ஏற்படுத்திய சிறுகதைகள். நானும் குமரிக்காரன் தான். படந்தாலுமூடு. அந்தவகையில் எனக்கு ஓர் பெருமிதம் உண்டு. நம் ஊரிலிருந்து நீங்கள் இலக்கியத்தில் இத்தகைய சாதனை நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் கண்டு.

 

நீங்கள் பேஸ்புக் வருவதில்லை என்பது தெரியும். உங்கள் கட்டுரைகளின் இணையதள சுட்டியை மட்டும் உங்களின் பேஸ்புக் பக்கதில் பகிர்ந்து வருகிறீர்கள். பேஸ்புக்கில் எழுதப்படும் குறிப்புகள் ‘நாளையற்றவை’ என்று ஒருமுறை எழுதியிருந்தீர்கள். அதுதான் என் எண்ணமும். என்றாலும் எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லாததால் அங்கே புழங்குவதுண்டு. ஏதாவது கிறுக்கிப் போடுவதும் உண்டு. பேஸ்புக்கில் உங்களை இந்துத்துவவாதி என்று அடிக்கடி சிலர் விமர்சிப்பார்கள். அதை நிறுவுவதற்கு ஆதாரமாக அவர்கள் தூக்கிக் கொண்டு வரும் வாதங்களைப் பார்த்தால் சிரிப்பு வரும். ஒரு விஷயத்தை தர்க்கபூர்வமாக விளக்கி நீண்ட கட்டுரை எழுதியிருப்பீர்கள். அதிலிருந்து ஒன்றிரண்டு வரிகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். பரிதாபத்திற்குரியவர்கள் என தோன்றும். கூடவே ‘அவை நாளையற்றவை’ என்ற உங்களின் வரியும் நினைவுக்கு வரும்.

 

உங்கள் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கிய குறுகிய காலத்தில் உங்களுடன் முரண்பட்ட தருணங்களும் இருக்கின்றன. பணமதிப்பிழப்பு, ஜக்கி வாசுதேவ், கார்ப்பரேட் சாமியார்கள் பற்றி நீங்கள் எழுதியவற்றில் எனக்கு சில மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆனால், உங்களை இந்துத்துவாதி என்று ஒருவர் சொல்வார் என்றால் அவரை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது. சில முரண்கள் இருந்தாலும் உங்களிடம் இதுவரை எனக்கு விலக்கம் ஏற்பட்டதில்லை. உங்கள் எழுத்துகளால் இன்னும் அணுக்கமாகிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களின் கட்டுரைகள் தினமும் நள்ளிரவு 12 மணிக்கு உங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும். இப்போதெல்லாம் பெரும்பாலும் நள்ளிரவில் உங்கள் தளத்தை ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிடுவேன். இல்லையேல் காலையில் கட்டாயம் படித்துவிடுவேன். சமீபத்தில் இணையத்துக்கு ஓய்வளித்துவிட்டு இமையமலை பயணம் போனபோது, வெறுமையில் அலைபாய்ந்த மனங்களில் எனனுடையதும் ஒன்று. செய்திகளை வாசிப்பதை, பார்ப்பதை நிறுத்துவது பற்றி நீங்கள் சமீபத்தில் எழுதிய ‘செய்தி துறத்தல்’ கட்டுரை முக்கியமானது. அதில் இறுதி வரிகளை இப்படி முடித்திருப்பீர்கள்: “சமகாலம் என்பது இந்த அரசியல் மட்டுமல்ல. வௌியே இளவெயில். நாளை மெலட்டூர் மேளா. இவையும் சமகாலம் தான்.” மிகக் கவர்ந்த வரிகள்.

 

உங்களின் ‘இந்து என்றால் இந்துத்துவவாதியா’ (தலைப்பு சரியா எனத் தெரியவில்லை. மறந்துவிட்டது. மன்னிக்கவும்) என்ற கட்டுரையும் எனக்கு மிகப்பெரும் திறப்பைக் கொடுத்த கட்டுரைகளில் ஒன்று. பெரியார் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவே என் எண்ணமாகவும் இருக்கிறது. ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ உரை மற்றும் இந்தியாவில் பிரிட்டிஷார் ஏற்படுத்திய பஞ்சம் பற்றியும், அவர்கள் உருவாக்கிய மாபெரும் வேலி  பற்றியும் சுதந்திர தினத்தில் நீங்கள் நிகழ்த்திய உரையை யூ ட்யூபில் கேட்டு உங்கள் வரலாற்றறிவை எண்ணி மெய் சிலிர்த்திருக்கிறேன். இதற்கான வாசிப்பிற்கு நீங்கள் எவ்வளவு உழைப்பை அளித்திருக்க வேண்டும், நேரத்தை செலவிட்டிருக்க வேண்டும் என்பதை நினைக்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.

 

இந்நிலையில், உங்களின் ‘ஊமை செந்நாய்’ குறுநாவலை சமீபத்தில் படித்தேன். அது காடுகள் பற்றிய ஒரு பிரம்மாண்ட தரிசனத்தை எனக்களித்தது. நான் இதுவரை காடுகளுக்குச் சென்றதில்லை. என்றாலும் காட்டிற்குச் சென்று தங்கிய அனுபவம் இல்லாத ஒருவரால் இதை எழுதியிருக்க முடியாது என்பதை என்னால் திண்ணமாகச் சொல்ல முடியும். அவ்வளவு நுண்மையான சித்தரிப்புகள் இதிலுள்ளன. நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் வாழ்க்கையை இதில் சமைத்துள்ளீர்கள். தேக்கிலையில் இறைச்சி, கமுகுபாளை, காந்தாரி மிளகு, சங்குபுஷ்பம், பச்சிலை… என்று இதில் வரும் விஷயங்கள் குமரி மக்களின் வாழ்க்கையோடு இப்போதும் பின்னிப்பிணைந்தவை. இவை ஊமை செந்நாயை எனக்கு இன்னும் அணுக்கமாக ஆக்கின. ஒரே ஒரு கேள்வி. இதை எந்தக் காட்டை மனதில் வைத்து எழுதினீர்கள் என்பதை அறிந்து கொள்ள இயலுமா? தங்களுக்கு இசைவு இருந்தால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?.

 

 

அன்புடன்…

பிரதீப்.

 

அன்புள்ள பிரதீப்

 

நன்றி.

ஆனால் குமரிமாவட்டம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நான் சமீபத்தில் விளவங்கோடு கல்குளம் வட்டங்களில் சுற்றியபோது உணர்ந்தது இவ்விரு பகுதிகளுக்கும் உள்ள பண்பாட்டுத்தனித்தன்மை மழுங்கிவிட்டது என்பதுதான். நவீன ஊடகத்தின் முதன்மைக்குணம் அனைத்தையும் ஒன்றே என ஆக்குவது. தொலைக்காட்சி தமிழகத்தை ஒன்றுபோல ஆக்கியது. இணையம் உலகம் முழுவதையும் அப்படி ஆக்குகிறது.

 

எழுத்து என்பது அதற்கு எதிராக தனித்தன்மையை தக்கவைப்பதற்கான ஒரு முயற்சி என நினைக்கிறேன்.

 

ஜெ

 

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

என் பெயர் ஜனனி.நான் கட்டடவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.கடந்த ஒரு ஆண்டு காலமாக நான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகமாக்கி கொண்டேன். பள்ளிக்கு செல்லும் நாட்களில் ஒரு புத்தகம் கூட நான் வாசித்தது இல்லை.+2 பொதுத்தேர்வு விடுமுறையில் தான்  எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.இன்று முதல் முறையாக உங்களுடைய அறம் நூலை படித்து முடித்து விட்டேன். இந்த நூலை பற்றி என் இயற்பியல் பேராசிரியர் கூறினார்.

 

நான் பொதுவாக ஒரு நூலை படிக்கும் போது ஒரு நாளில் ஒரு அரைமணி நேர இடைவேளை எடுத்துக் கொள்வேன்.ஆனால் இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கதையையும் படிக்க  ஒரு நாள் என்று முடிவு செய்தேன்.மொத்தமாக 12 நாட்கள்.ஒவ்வொரு கதையும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.12 நாட்கள் நான் ஒரு தியான நிலையில் இருந்தது போலவே இருந்தது. ஒரு புதுமையான அனுபவம் என்றே சொல்லலாம். இந்த நூலை வாசித்தவுடன் உங்களுடைய வலைத்தளத்தில் உள்ள வெண்முரசு பதிவையும் படிக்க தொடங்கி விட்டேன். இனி வரும் விடுமுறை நாட்களில் உங்களுடைய நூல்களை  வாசிக்க போகிறேன். அறம் எனக்கு ஒரு அறிமுகமாக இருந்தது.

இப்படிக்கு,

 

 

ஆர்.ஜனனி,

பொள்ளாச்சி.

 

அன்புள்ள ஜனனி

 

இலக்கியம் என்றல்ல எந்த ஒரு கலைக்குள்ளும் நுழையும் காலகட்டம் அற்புதமானது. எல்லாமே இனிதாக வியப்பிற்குரியதாகத் தோன்றும். இப்போது தொடங்கியிருக்கிறீர்கள், மேலே செல்ல வாழ்த்துக்கள். எப்போதும் வாசிப்பவை ஒரு சவாலை அளிப்பதாக, உங்கள் கற்பனையால் அச்சவாலை சந்திக்கக்கூடியதாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்

 

ஜெ

முந்தைய கட்டுரைபாவண்ணனைக் கொண்டாடுவோம்!
அடுத்த கட்டுரைமுடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை