கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி
வணக்கம். நலம் விழைகிறேன். இதைத் தட்டச்சு செய்கையில் விரல்கள் என் மனவோட்டத்தைத் தாண்டிச் செல்ல முடியாமல் திணறுவதை நானே உணர்கிறேன்.
முதலில் உங்களின் பேருரைப் பற்றி.. கம்பனை சூப்பர் ஹீரோவாக்கி அல்லது கதறக் கதற அழவைக்கும் சீரியல் இயக்குநராக்கி, மூச்சு விடாமல் பாடல்களை உரக்க ஒப்புவித்து பொதுமக்களின் கைத்தட்டலின் போது பெருமை பொங்க பார்க்கும் கம்பராமாயணப் பேச்சாளர்கள் பலரையும், கம்பனில் ஆழங்காற்பட்ட, இலக்கியச்சுவையில் கம்பனின் பெருவடிவை, வீச்சை எடுத்தியம்பும் சில நல்ல பேச்சாளர்களையும் பார்த்த அம்மேடை, நேற்று முற்றிலும் புதியதான ஒரு அனுபவத்தைக் கண்டிருக்கும்.
மேலை நாடு வகுத்தச் செவ்வியற் கூறுகளைத் தன்னகத்தே கொள்ளாமல்,கம்பராமாயணம் தனக்கான செவ்வியற் தன்மையை அடைந்த விளக்கம், கம்பனுக்கான இன்னொரு வாயிலைத் திறந்துவிட்டது. போர்ப்படலத்தைக் கொண்டு நிகழ்த்திய விவரணைகளும் சோழப் பேரரசின் அமைப்பியல் குறித்த விவரங்களும் நிறைய விவாதங்களுக்கு வித்திடும் என நம்புகிறேன்.
வெறும் கைத்தட்டல்களுக்காக மட்டுமே உங்களது உரை அமையக்கூடாது என்று கொண்ட சீரிய முடிவுக்கும், இடையிடை வந்து தங்கள் கவனத்தைக் களைத்த “மனு” வாங்கும் படோபடத்தை மேடையிலேயே கண்டித்த அந்த அறிவுச் செருக்குக்கும் (மிகப்பின்வரிசையில் இருந்து எழுந்து நின்று ஒலித்த, கணத்தக் கைத்தட்டலை உங்களிடத்திலிருந்து கேமரா மறைத்திருக்கும்) மிகப்பெரும் நன்றிகள்.
இரவு நடந்த உரையாடல் என்னை உங்களுக்கு இன்னும் அணுக்கனாகியது. அதுவரை எட்ட நின்று வியந்துகொண்டிருந்த என் கூச்சத்தைப் புரிந்துகொண்டீர்களோ என்னவோ, முகம் பார்த்து நீங்கள் பேசியவுடன் நான் இயல்பானேன். மற்ற அன்பர்களின் நேரத்தை நிறைய எடுத்துக்கொண்டதற்கு என்னை மன்னிக்கவும்.
குழாத்துடனிருந்த உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்த முயன்று, பின் முடியாமல் ஆழத் துயிற் கொண்ட நண்பர் கடலூர் சீனுவுக்கு அன்பும் நன்றியும். உங்களிடம் பேசுவதற்கு முன் சீனுவிடம் தான் முதலில் இயல்பானேன்.
இறுதியாக, வெகுதொலைவில் இருந்து, ஒரு சிறு நுனி வேர், தன் தலைதூக்கி, அதன் பெரும் ஆல மரத்தைத் தரிசித்துக் கொண்டது.
பேரன்பும் நன்றியும்.
சங்கர் கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
உங்கள் பாண்டிச்சேரி கம்பன் உரைக்கு வந்திருந்தேன். எட்டு ஆண்டுகளாக நான் அவ்விழாவை தொடர்ந்து கேட்டுவருகிறேன். திரும்பத்திரும்ப ஒரேமாதிரியான உரைகள்தான் நிகழும். கதைகள், நகைச்சுவைகள், கூடவே சில பாட்டுக்கள். ஆனால் கலந்துகொள்வது எதற்காக என்றால் இந்த அவசர வாழ்க்கையிலே கம்பனைத்தேடிப் படிப்பதற்கெல்லாம் நேரமில்லை. அங்கே காதில்விழும் சில பாடல்களின் சுவை வழியாகவே கம்பனை அறிந்துகொண்டிருக்கிறேன். அன்றைக்கெல்லாம் பாண்டிச்சேரியில் சில ரெஸ்டாரெண்டுகளில் கடலின் நுரை உள்ளே தெறிக்கும். அது ஒரு அனுபவம். அதேமாதிரித்தான் கம்பனை அறிகிறோம். ஆகவே சென்று கேட்பது வழக்கம். உங்கள் உரை எனக்கு கடினமானதாகவே இருந்தது. ஆனால் வீட்டுக்குச் சென்று யோசிக்கவைத்தது. இரண்டுநாட்களில் ஒரு சித்திரம் உண்டுபண்ணிக்கொண்டேன். முதலில் கம்பன் உருவான பின்னணி, அதன் காவியத்தன்மை போயட்டிக்ஸ் ஆகியவற்றைப் பேசினீர்கள். அதற்கும் பிரிமிட்டிவ் கிளாஸிக் என்று சொல்லப்படுவதற்குமான வேறுபாட்டைச் சொன்னீர்கள். அதன்பின்னர் அதன் உச்சங்களில் உள்ள கிளாசிக் பேலன்ஸ் என்ன என்று சொல்லிவிட்டு அதன் அணிகளை ரசிப்பதைப்பற்றிச் சொன்னீர்கள். நல்ல ஒரு திறப்பாக அமைந்தது உரை. நன்றி
செந்தில்குமார்