அமைதிப் பிரதேசத்தின் முயல்  :    ஹஸ்ஸான் ப்ளாஸிம்

hasan

முட்டை தோன்றுவதற்கு முன், நான் இரவில் சட்டப் புத்தகமோ அல்ல மதம் சார்ந்த புத்தகம் ஒன்றையோ படித்துவிட்டு உறங்கச் செல்வது வழக்கம். என் முயலைப் போலவே நான் அதிகாலையிலும் பொழுது சாயும் வேளையிலும்தான் அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவேன். சல்சால் அதற்கு நேர்மாறாக இரவு வெகுநேரம் விழித்திருந்து நடுமதியத்தில்தான் தூங்கி விழிப்பான். படுக்கையிலிருந்து எழாமலேயே தன் மடிக்கணினியை விரித்து முகநூலுக்குள் நுழைந்து நேற்றிரவு நடத்திய விவாதங்களுக்கு புதிதாக வந்திருக்கும் பின்னூட்டங்களை ஆய்ந்துவிடுவான், பிற்பாடுதான் குளியல் எல்லாம். அதற்குப் பிறகு சமையலறைக்குள் சென்று ரேடியோவை கிளப்பி முட்டையை பொறித்து கொஞ்சம் காஃபியை தயாரித்தபடியே செய்திகளைக் கேட்பான். தன் காலையுணவை தூக்கிக் கொண்டு தோட்டத்திற்குள் செல்வான். குடையின் கீழ் அமைந்த மேஜையில் அமர்ந்து உண்டு, குடித்து,  புகைத்துக் கொண்டே என்னை கவனிப்பான்.

“காலை வணக்கம், ஹஜ்ஜார். மலர்களைப் பற்றிய செய்திகள் ஏதாவது?”

“வெப்பம் தகிக்கும் ஆண்டாக இது இருப்பதால், அவை செழிப்பாக வளரப்போவதில்லை,” ரோஜாச் செடியின் கிளைகளை நறுக்கிக் கொண்டே அவனிடம் சொன்னேன்.

சல்சால் மற்றொரு சிகரெட்டை பற்ற வைத்து என் முயலை பார்த்து கேளியாக புன்னகைத்தான். முயலை கண்டு அவன் ஏன் எரிச்சலுறுகிறான் என்பதை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. வயதான பெண்மணி ஊம் டீஆலாதான் அதை கொண்டு வந்தார். பூங்காவில் அதை கண்டெடுத்ததாகச் சொன்னார். ஊம் டீஆலா அதன் உரிமையாளரை கண்டுபிடிக்கும் வரை நாங்களே வைத்துக் கொள்வதாக முடிவெடுத்தோம். இந்த முயல் எங்களோடு ஒரு மாதமாக இருக்கிறது, நான் ஏற்கனவே சல்சாலோடு இரண்டு மாதங்களை அமைதிப் பிரதேசத்தின் வடக்கு பக்கமாக உள்ள இந்த ஆடம்பரமான மாளிகையில் கழித்துவிட்டேன். உயரமான சுற்றுச் சுவர்களும் அதி நவீன மின்னணு பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்ட வாயிற்கதவுடன் அமைந்த தனித்து நிற்கும் மாளிகை இது. இறுதி கணம் எப்போது வருமென்று எங்களுக்கு தெரியாது. சல்சால் ஒரு தொழில்முறையாளன் ஆனால் எனக்கோ இதுதான் முதல் பணி, அதனாலேயே அவர்கள் என்னை வாத்துக் குஞ்சான் என்று அழைத்தார்கள்.

திரு.சல்மான் வாரத்திற்கு ஒருமுறை வந்து நாங்கள் எப்படியிருக்கிறோம், எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்வார். திரு.சல்மான் எங்களுக்கு சில சாராய பாட்டில்களும் கொஞ்சம் கஞ்சாவும் கொண்டு வருவார். எப்பவும் ஏதாவது அரசியல் ஜோக்குகளை எங்களிடம் சொல்லிவிட்டு எங்களுக்கு இடப்பட்ட பணி எவ்வவளவு ரகசியமானதும் முக்கியமானதும் என்பதை எங்களுக்கு நினைவுறுத்துவார். இந்த சல்மானும் சல்சாலாவும் ஒரு கூட்டு, என்னிடம் பல ரகசியங்கள் சொல்வதேயில்லை. என்னுடைய அனுபவமின்மையையும் உடற் பலவீனத்தையும் இருவரும் பயன்படுத்திக் கொண்டார்கள். நான் அவர்களை அதிகம் பொருட்படுத்துவதில்லை. நான் என் வாழ்வின் கசப்புகளில் மூழ்கிப் போயிருந்தேன், இந்த உலகமே ஒரே வீச்சில் அழிந்துவிடவேண்டுமென்ற விருப்பம் கொண்டிருந்தேன்.

ஊம் டீஆலா வாரத்திற்கு இரண்டு முறை வருவார். எங்களுக்கு சிகரெட்டுகளை கொண்டு வருவார், வீட்டை சுத்தம் செய்து விடுவார். ஒருமுறை சல்சால் அவருக்கு தொந்தரவு கொடுத்தான். அவர் டோல்மா சமைத்துக் கொண்டிருந்தபோது அவரின் பின்பகுதியை தடவினான். கரண்டியால் அவன் மூக்கை உடைத்து ரத்தம் வரச் செய்தார். அதற்கு பிறகு அவரிடமிருந்து விலகியே இருந்தான், பேசுவதையும் நிறுத்திவிட்டான்.  தன் ஐம்பதுகளில் இருக்கும் ஆற்றல் மிக்க பெண் இவர், ஒன்பது குழந்தைகள் கொண்டவர். ஆண்கள் உபயோகமற்றவர்கள், சுயநலவாதிகள் என்பார், ஆண்களை வெறுப்பதாக சொன்னார். அவர் கணவர் தேசிய மின்சார நிறுவனத்தில் வேலை பார்த்தார், ஆனால் விளக்கு கம்பத்தின் உச்சியிலிருந்து விழுந்து இறந்து போனார். தன் கணவரை அவர் சாராய கொறித்துண்ணி என்றே அழைப்பார், பெரும் குடிகாரர்.

தோட்டத்தின் ஒரு மூலையில் முயலுக்கு தனி குடிசை கட்டி வைத்து அவனை நன்றாக பார்த்துக் கொண்டேன். முயல்கள் அதிக கூச்சமுடைய பிராணிகள் என்று எனக்கு தெரியும், அவற்றை நன்கு பராமரித்து நல்ல உணவூட்டி வளர்க்க வேண்டும். என் இரண்டாம் நிலை பள்ளி காலத்தில் இதை படித்து தெரிந்துக் கொண்டேன். என் பதிமூன்றாம் வயதில் வாசிப்பதற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். தொடக்கத்தில் புகழ்பெற்ற அரேபிய கவிதைகளையும் ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நிறைய கதைகளையும் வாசித்தேன். ஆனால் சீக்கிரமே நான் சலிப்படைந்துவிட்டேன். எங்கள் அண்டை வீட்டுக்காரர் வேளாண் அமைச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். ஒருநாள் அவர் மகன் சலாமோடு அவர்கள் வீட்டு கூரை மீதேறி விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு பெரிய மரப் பெட்டியை கண்டோம் அதன் மீது பல வகையான குப்பைகள் குவிந்திருந்தது. அப்பெட்டிக்குள் பயிர்கள், பாசன முறைகள் பற்றிய புத்தகங்களும் செடிகள் பூச்சிகள் பற்றிய எண்ணற்ற களஞ்சியங்களும் அடைத்து நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. அப்புத்தகங்களுக்கு அடியில் ஏராளமான பாலியல் சஞ்சிகைகளும் துருக்கி நடிகைகளின் படங்களும் இருந்தன. சலாம் என்னிடம் ஒரு பத்திரிக்கையை கொடுத்தான் ஆனால் நான் கிராமங்களில் வளரும் பனை மர ரகங்களைப் பற்றிய புத்தகத்தையும் கூடவே எடுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு எனக்கு சலாம் தேவைப்படவில்லை. எங்கள் வீட்டிலிருந்தே யாருமறியாமல் அவர்கள் மாடியிலிருந்த மரப் பெட்டி நூலகத்திற்கு சென்று விடுவேன். நான் ஒரு புத்தகத்தையும் ஒரு பத்திரிக்கையையும்  எடுத்துக் கொண்டு ஏற்கனெவே எடுத்துச் சென்றிருந்தவற்றை திரும்ப வைத்துவிடுவேன். விலங்குகள் மற்றும் செடிகள் பற்றிய புத்தகங்களின் மீது அதன் பின் காதலில் விழுந்தேன். புத்தகக் கடைக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் தேடிப் பிடித்து விடுவேன், என்னை ராணுவத்தில் கட்டாயபடுத்தி சேர்க்கும்வரை.

எனினும், புத்தகங்கள் வாசிப்பதில் நான் அடைந்த இன்பம் குழப்பகரமானது. ஒரு சிறிய புதுத் தகவல் கூட என் ஆவலை பன்மடங்காக்கிவிடும். ஒரு குறிப்பிட்ட விவரத்தில் என்னை இருத்திக்கொண்டு அதைப் பற்றிய குறிப்புகளையும் பிற எழுத்துகளில் அதன் வேறுபட்ட மற்ற பதிவுகளையும் தேடத் தொடங்கிவிடுவேன். உதாரணமாக, எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது, கொஞ்ச காலம் முற்றிலுமாக நான் பின் தொடர்ந்து சென்ற தலைப்பு ‘முத்தம்’. நான் அதைப் பற்றி படித்துப் படித்து தலை கிறுகிறுத்துப் போனேன், மனோவசிய பழமொன்றை உண்டுவிட்டதைப் போல. சிம்பன்ஸிக்கள் தன் குழுவினரிடையே பதட்டம், சோர்வு, பயம் போக்கும்  செயல்பாடுதான் முத்தம் என்பதை பல பரிசோதனைகள் நமக்கு காட்டுகிறது. பெண் சிம்பன்ஸிக்கள் அந்நியர்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக உணர்ந்தால், விரைந்து தன் இணையை தேடிச் சென்று, கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு நான் வேறு வகையான முத்தம் ஒன்றயும் கடந்து வந்தேன், ஒரு நீளமான வெப்ப முத்தம். அரை மணியோ அல்ல அதற்கும் மேலோ இடைவிடாமல் முத்தம் கொடுக்கும் ஒருவகை நன்னீர் மீன்களின் முத்தம் பற்றியது அது. தடைகள் பிறப்பிக்கப்பட்ட இருளில் மூழ்கிய ஆண்டுகளை பற்றி என் நினைவில் இருப்பதெல்லாம் நான் புத்தகங்களை விழுங்கித் தள்ளியதுதான். குறிப்பாக, அமெரிக்கா பிரதமர் மாளிகைகளின் மீது வரிசையாக வான் தாக்குதல்கள் நடத்திய பிறகு ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வரை கூட மின்சாரம் இல்லாமல் போகும். நான் படுக்கைக்குள் அமிழ்ந்துக் கொண்டு நள்ளிரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சென்று விழுவது இன்னொரு உயிரினத்தின் முத்ததில் : ரெடூவியஸ், முகமூடி வேட்டையன் எனும் பூச்சியினம், அவை உண்மையில் ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொள்வதில்லை. அவற்றுக்கு தூங்கும் மனிதர்களின் வாயின் மீதுதான் விருப்பம். முகத்தின் மீது ஊர்ந்து வாயின் ஓரத்தை வந்தடைந்து அங்கேயே நிலைத்து முத்தமிடத் தொடங்கும். முத்தமிடும்போது நுண்ணிய துளிகளாய் நஞ்சை சுரக்கும், உறங்கிக் கொண்டிருக்கும் நபர் நல்ல உடல்நிலையில் இயல்பான தூக்கத்தில் இருப்பாரென்றால், நான்கு மழைத் துளிகளின் அளவில் தன் வாயில் விஷ முத்தத்தோடு விழிப்பார்.

ராணுவச் சேவையிலிருந்து ஓடி வந்துவிட்டேன். அங்கே நிகழ்த்தப்படும் அவமதிப்புகளை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. இரவுகளில் ஒரு அடுமனையில் வேலை பார்த்தேன். என் அம்மாவையும் ஐந்து தம்பிகளையும் நான்தான் பேண வேண்டும். வாசிப்பதற்கான உந்துதலை இழந்தேன். எனக்கு இந்த உலகம் புரிந்துக் கொள்ள முடியாத புராண மிருகமொன்றென மாறியது. நான் ஒடி வந்த ஒரு வருடத்தில் ஆட்சி கவிழ்ந்தது, முந்திக்கொண்டு ராணுவத்திலிருந்து விலகி வந்ததற்கான தண்டனை பெறும் பயத்திலிருந்து விடுதலையானேன். புதிய அரசாங்கம் ராணுவத்திற்கு கட்டாய ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளை கைவிட்டது. அடுத்த வன்முறை சுழற்சி தொடங்கி பிரிவினைவாதிகள் தலைகளை கொய்யத் தொடங்கியபோது, நான் இங்கிருந்து ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்றுவிட திட்டமிட்டேன், ஆனால் அவர்கள் மீதமிருந்த என் இரண்டு தம்பிகளையும் படுகொலை செய்தனர். பெண்களின்  காலணிகள் செய்யும் உள்ளூர் தொழிற்சாலை ஒன்றில் வேலை முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர். டேக்ஸி ஓட்டுனர் அவர்களை போலி செக்போஸ்டில் கையளித்து விட்டான். அல்லாஹ்ஹூ அக்பர் போராளிகள் அவர்களை யாருமறியாத இடத்திற்கு எடுத்துச் சென்றனர். மின் துளைப்பானை கொண்டு அவர்களின் உடள்களில் ஓட்டை போட்டனர், பின்னர் அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. ஊரின் மூலையில் உள்ள குப்பை கிடங்கில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

நான் உருக்குலைந்து போனேன், வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த வாழ்விலிருந்து இனி எனக்கு என்ன வேண்டும் என்பது தெரியாமல் தொலைந்து போனவனாக உணர்ந்தேன். ஒரு அழுக்கடைந்த விடுதி அறையில் தங்கியிருந்தேன், என் மாமா என்னை சந்தித்து அவரின் போராட்டக் குழுவில் இணைந்துக் கொள்ளச் சொன்னது வரை. நேரடியான பழிவாங்குதல்.

கோடை நாட்கள் மிகவும் நீளமானது மனச்சோர்வூட்டுவது. தங்கியிருக்கும் மாளிகை வசதியானதுதான், நீச்சள் குளமும் நீராவிக் கூடமும் கொண்டது. ஆனால் எனக்கு அது ஒரு தெய்வீக மாயை போலத் தோன்றியது. சல்சால் இரண்டாம் மாடியில் தனியறையை எடுத்துக் கொண்டான், எனக்கு பெரிய புத்தக அலமாரி நிற்கும் கூடத்தின் மையத்தில் உள்ள நீண்ட சாய்விருக்கையில்  தலையணையும் போர்வையும் போதுமானதாக இருந்தது.  எதிர்பாராதது எதுவும் நிகழ்ந்துவிடலாமென்று தோட்டத்தின் மீதும், வெளி வாயிற்கதவின் மீதும் ஒரு கண் வைத்திருக்க விரும்பினேன். கூடத்திலிருந்த புத்தக அலமாரியின் அளவு என்னை வியப்பில் ஆழ்த்தியது. மதம் மற்றும் உள்ளூர் வெளிநாட்டு சட்டங்களைப் பற்றிய பல தொகுதிகள் அங்கே இருந்தன. அலமாரிகளில் தேக்கில் செய்யப்பட்ட மிருகங்கள் ஆப்பிரிக்க குலமரபுச் சின்னங்களை நினைவுறுத்தும் அசைவுகளில்  வடிவங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அம்மிருகங்கள் மதப் புத்தகங்களையும் சட்டப் புத்தகங்களையும் பிரித்திருந்தன. இருள் கவியத் தொடங்கியதும், கொறிப்பதற்கு எதையாவது எடுத்துக் கொண்டு சோஃபாவில் என்னை ஒப்பு கொடுத்து, என் வாழ்வின் நிகழ்வுகளைஅசைபோட்டவாறே ஒரு புத்தகத்தை வெளியே எடுத்து மேலோட்டமாக படிப்பேன். என் தலைக்குள் இருக்கும் உலகம் மயங்கிய நீண்ட முனகலை எழுப்பும் சிலந்தி வலையைப் போன்றது, வாழ்வின் முனகல் அடங்கப்போகிறது, மூச்சுகளை இறுகப் பிடித்து. நுண்மையான, கோரமான சிறகுகள் கடைசியாக ஒருமுறை படபடக்கின்றன.

திரு.சல்மான் கடைசியாக வந்துவிட்டு போனதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் நான் முட்டையை கண்டெடுத்தேன். ஒரு நாள் வழக்கம் போல் அதிகாலையில் விழித்தேன். சுத்தமான நீரையும் உணவையும் எடுத்துக் கொண்டு என் தோழனான முயலை சந்திக்கச் சென்றேன். நான் குடிசையை திறந்தவுடன் அவன் துள்ளி தோட்டத்திற்குள் ஓடிவிட்டான். குடிசைக்குள் ஒரு முட்டை இருந்தது. அதை எடுத்து சோதித்துப் பார்த்தேன், இந்த அபத்தத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில். ஒரு கோழி முட்டையை விடவும் சிறியதாக இருந்தது. படபடப்பு அதிகரிக்க நான் நேராக சல்சாலின் அறைக்குச் சென்றேன். அவனை எழுப்பி இதைப் பற்றி அவனிடம் சொன்னேன். சல்சால் முட்டையை ஏந்தி சிறிது நேரம் உற்று பார்த்து பின்னர் ஏளனமாகச் சிரித்தான்.

“ஹஜ்ஜார், என்னிடம் இந்த விளையாட்டையெல்லாம் வெச்சுக்காதே”, விரல்களை என் கண்களுக்கு நேராக சுட்டி அவன் சொன்னான்.

“என்ன சொல்ற? இந்த முட்டையை இட்டது நானில்லை!”, நான் திடமாகச் சொன்னேன்.

சல்சால் கண்களை கசக்கினான், சடாரென பித்து பிடித்தவனைப் போல என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டே படுக்கையிலிருந்து குதித்து வெளியேறினான். நாங்கள் மாளிகையின் வாயிற் கதவிற்குச் சென்று பாதுகாப்பு கருவிகளை பரிசோதித்தோம். சுற்றுச் சுவர்கள், தோட்டம், அத்தனை அறைகளையும் ஒருமுறை பரிசோதித்தோம். வழக்கத்திற்கு மாறாக எதுவும் நடந்ததற்கான அறிகுறி இல்லை. ஆனால் முயல் குடிசைக்குள் ஒரு முட்டை. எங்களோடு தந்திரமாக யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, ரகசியமாக மாளிகைக்குள் நழுவி வந்து முயலுக்கு பக்கத்தில் முட்டையை வைத்திருக்க வேண்டும்.

“ஒருவேளை அந்த வேசிமகள் ஊம் டீஆலா தான் இந்த அற்ப வித்தையை செய்திருக்க வேண்டும். நீயும் உன் முயலும் நாசமாக போங்கள்.” என்று சொன்னான் சல்சால், ஆனால் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

எங்கள் இருவருக்குமே ஊம் டீஆலா உடல் நலம் குன்றியிருக்கிறார் என்று தெரியும், ஒரு வாரமாக அவர் வரவில்லை. எங்களின் பயம் இரண்டு மடங்கானதற்கு காரணம் வீட்டில் எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை. எங்கள் திட்ட நாள் வரை நாங்கள் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. இது அமைதிப் பிரதேசம் என்பதாலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் இங்குதான் வாழ்கிறார்கள் என்பதாலும் எப்போது வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி சோதனை நடக்கலாம் என்று அவர்கள் கவலைப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் நாங்கள் இந்த மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். சல்சாலுக்கு மேலதிகமாக கோபம் கிளர்ந்தெழுந்து முயலை கொன்று தள்ளும்படி என்னிடம் கத்தினான், ஆனால் நடந்ததிற்கும் முயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்துவிட்டேன்.

“உன் பாழாய்ப் போன முயல் தானே அந்த முட்டையை இட்டது”? கோபமாக எழுந்து அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.

நான் காஃபி எடுத்துக் கொண்டு முயலை பார்த்தபடி தோட்டத்தில் அமர்ந்தேன். அவன் தன்னுடைய கழிசல்களையே தின்றுக் கொண்டிருந்தான். அவற்றின் குடலிலிருக்கும் நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்யும் வைட்டமின் பி அதன் எச்சங்களில் இருப்பதாக சொல்கிறார்கள். சிறிது நேரம் கழித்து சல்சால் தன்னுடைய மடிக் கணினியை தூக்கிக் கொண்டு திரும்ப வந்தான். அவன் தனக்குத் தானே முனுமுனுத்துக் கொண்டு அவ்வப்போது திரு. சல்மானையும் திட்டிக் கொண்டிருந்தான். தன் முகநூல் பக்கத்தை பார்த்து நாம் 24/7 விழிப்புடன் இருப்பது அவசியம் என்று சொன்னான். இரவில் தன்னறையிலேயே தங்கும்படி கேட்டான், அங்கிருந்தே வாயிற்கதவையும் மாளிகையின் சுற்றுச் சுவர்களையும் நன்கு கண்காணிக்க முடியுமென்றான்.

அத்தனை விளக்குகளையும் அணைத்துவிட்டு , சல்சால் அறையில் அமர்ந்திருந்தோம். ஆளுக்கொருமுறை மாறி மாறிச் சென்று மாளிகையை கண்காணித்துவிட்டு வருவோம்.

சந்தேகத்திற்கு இடமளிக்கும் எதுவும் நடந்தேறாமல் இரண்டு நாட்கள் கழிந்தது. மாளிகை அமைதியாக நிசப்தத்தில் மூழ்கி சாந்தமாக இருந்தது. நான் சல்சால் அறையில் தங்கியிருந்தபோதுதான் அறிந்துக்கொண்டேன் அவன் முகநூலில் “போரும் அமைதியும்” என்ற புனைப்பெயரில் பதிந்திருக்கிறான், முகப்புப் படமாக கரித்துண்டில் தீட்டிய டால்ஸ்டாயின் முகத்தை வைத்திருக்கிறான். அவனுக்கு ஆயிரத்திற்கும் மேலான முகநூல் நண்பர்கள் உண்டு, பெரும்பாலும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறிஞர்கள். அவன் அவர்களின் கருத்துகளோடு விவாதம் செய்வான், அறிவார்ந்த ஆர்வலனாக தன்னைக் காட்டிக் கொள்வான். அவன் தன்னுடைய கோட்பாடுகளையும் நாட்டில் நிகழும் வன்முறைகளையும் பணிவாகவும் மதிநுட்பத்துடனும் பகுத்தாய்ந்து வெளிப்படுத்துவான். என்னிடமே கூட அதை அவன் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தான், கலாச்சார துணை அமைச்சரின் நற்குணங்களைப் பற்றிய பிதற்றல்கள். எவ்வளவு பண்பான, மனிதநேயமிக்க, தனித்துவமான புத்திசாலி அவர் என்று. அச்சமயத்தில் கலாச்சார துணை அமைச்சரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு ஆர்வம் இல்லை. நான் அவனிடம் நம்மைப் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்கள் இணைய அரட்டைகளிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென்று சொன்னேன். அவனுக்கு மட்டுமே உரித்தான பரிகாச பார்வையை என்னிடம் காட்டி சொன்னான், “நீ போய் உன் முட்டையிடும் முயலை கவனித்துக் கொள், ஹஜ்ஜார்.”

திரு. சல்மான் ஒருவழியாக எங்களை சந்திக்க வந்தபோது அவர் முன்னால் சல்சால் கோபத்தில் வெடித்தேவிட்டான், முயலின் முட்டையப் பற்றி சொன்னான். திரு. சல்மான் எங்கள் கதையை கேலி செய்து, ஊம் டீஆலா மீதான எங்கள் சந்தேகத்தை ஏற்க மறுத்தார். அந்தப் பெண் நேர்மையானவர் என்றும் பல வருடம் அவருக்காக வேலை பார்த்தவர் என்றும் உறுதியாக சொன்னார். ஆனால் சல்சாலால் அவரின் மீதே துரோகப் பழி சுமத்தினான், இருவரும் வாதிக்க தொடங்க நான் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்தேன். இந்த விவாதத்திலிருந்து நான் புரிந்துக் கொண்டதெல்லாம், பிரிவினைவாதிகள் மற்றும் அரசியல் படுகொலைகளின் உலகில் மக்கள் மேலதிக பலாபலன்களுக்காக காட்டிக்கொடுக்கப்படுவார்கள் என்பதுதான். பல சந்தர்பங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவோ, பெரும் ஊழலை மறைப்பதற்காகவோ வாடகைக் கொலையாளிகளை கைமாற்றி சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். ஆனால் திரு.சல்மான் சல்சாலாவின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். நாங்கள் கொலையை நிகழ்துவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் எங்களை அமைதியாக இருக்கும்படி சொன்னார். நாங்கள் சமையலறையில் அமர்ந்தோம், சல்மான் திட்டத்தை எங்களிடம் விளக்கமாகச் சொன்னார். பின்னர் பையிலிருந்து ஓசையடைப்பான் பொருத்திய இரண்டு சுழற் துப்பாக்கிகளை எடுத்தார். காரியம் முடிந்ததும் எங்களுக்கு பணம் தருவதாகவும் பின்னர் நாங்கள் தலைநகரின் எல்லைக்கு மாற்றப்படுவோம் என்றும் சொன்னார்.

“முயல் இட்ட முட்டை. ஹா, வாத்துப்பயலே. நீ உண்மையிலேயே கோமாளியாக மாறிவிட்டாய் இப்போது,” வெளியேறும்முன் சல்மான் என் காதுகளில் முனுமுனுத்தார்.

கடைசி இரவில் நான் சல்சாலாவோடு வெகு நேரம் விழித்திருந்தேன். முயலைப் பற்றி கவலையாயிருந்தது, ஊம் டீஆலா நீண்ட விடுப்பில் சென்று விட்டதாக தெரிகிறது. பசியிலும் தாகத்திலும் தவித்து முயல் இறந்தேவிடும். சல்சால் வழக்கம்போல் முகநூலில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தான். நான் ஜன்னலுக்கருகில் அமர்ந்து தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கலாச்சார துணை அமைச்சருடன் பிரிவினைவாதிகளின் வன்முறை மற்றும் அதன் வேர்களைப் பற்றி கலந்தாரய்ந்துக் கொண்டிருப்பதாக சொன்னான். இந்த அமைச்சர் சதாம் உசைனின் காலத்தில் நாவலாசிரியராக இருந்தவறென்றும் சூஃபியை சார்ந்து மூன்று நாவல்களை எழுதியவர் என்றும் சல்சால் சொல்லி தெரிந்துக்கொண்டேன். ஒருநாள் அவரும் அவர் மனைவியும் கேளிக்கை விருந்தொன்றில் கலந்துக் கொள்வதற்காக டைக்ரீஸ் நதியை நோக்கி அமைந்திருக்கும் பணக்கார கட்டிடக் கலைஞர் ஒருவரின் வீட்டிற்கு சென்றனர். அவர் மனைவி வசீகரமானவர், திகைப்பூட்டும் வகையில், கனவரைப் போலவே பண்பானவர். முற்காலத்திய இசுலாமிய கையெழுத்துப் பிரதிகளின் மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர். பிரதமரின் உறவினரான தேசிய பாதுகாப்பு இயக்குனர்தான் அன்றைய இரவின் முக்கிய விருந்தினர். விருந்து முடிந்ததும், முதன்மை பாதுகாப்பு அதிகாரி நமது நண்பரின் நாவல்களை வாசிக்க கண்காணிப்பு பிரிவின் கீழ் உத்தரவை பிறப்பித்தார். சில நாட்கள் கழித்து தேசத்திற்கும் கட்சிக்கும் எதிராக எழ தூண்டினார்  என்று அவரை சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு இயக்குனர் நாவாலாசிரியனின் மனைவியை அவள் கணவன் விடுதலைக்கு பேரம் பேசினார். அவர் மறுத்தபோது, பாதுகாப்பு தலைமையதிகாரி அவர் ஆட்களில் ஒருவனை விட்டு அப்பெண்ணை தன் கணவன் முன்னால் வன்புணரச் செய்தார். அதற்குப் பிறகு அப்பெண் ப்ரான்ஸுக்குச் சென்று காணாமல் போனார். 90களின் மத்தியில் நாவலாசிரியர் விடுவிக்கப் பட்டதும், தன் மனைவியை தேடி ப்ரான்ஸுக்குச் சென்றார். ஆனால், அவரால் தன் மனைவியின் தடத்தை தொடர முடியவில்லை. சர்வாதிகாரியின் ஆட்சி கவிழ்ந்ததும், வீடு திரும்பிய அவர் கலாச்சார துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். நாவலாசிரியரின் கதை பாலிவுட் படங்களை ஒத்திருந்தது, ஆனால் இம்மனிதனின் வாழ்க்கையின் விவரங்கள் எந்த அளவுக்கு சல்சாலாவுக்கு தெரிந்திருக்கும் என்று வியக்கிறேன். அவரின் ஆளுமையையும் உலகியல் பண்புகளையும்தான் அவன் அதிகம் ரசிக்கிறான் என்று தோன்றியது. நான் அவர் எந்த பிரிவைச் சேர்ந்தவர் என்று அவனிடம் கேட்டேன். என் கேள்வியை உதாசீனப்படுத்தினான். பின்னர் அவனிடமிருந்து எங்கள் இலக்கு யார் அவரின் அடையாளங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் சல்சால், என்னைப் போன்ற வாத்துக் குஞ்சான்களுக்கு அதெல்லாம் தெரிந்து கொள்ள அனுமதியில்லை என்று பதிலளித்தான். என்னுடைய ஒரே வேலை கார் ஓட்டுவது, சல்சால்தான் ஓசையற்ற துப்பாக்கியால் சுடப்போகிறவன்.

அடுத்த நாள் காலை நகர் மைய கட்டிடத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு முன்னால் காத்திருந்தோம். எங்கள் இலக்கானவர் சிவப்பு டொயோடா கிரெளன் காரில் வந்து நுழைந்ததும் சல்சாலால் எங்கள் காரிலிருந்து இறங்கி, அவரை பிந்தொடர்ந்து சென்று சுடுவான். பின்னர் நாங்கள் தலைநகரின் எல்லையில் இருக்கும் எங்கள் புதிய இடத்திற்கு காரில் தப்பிச் சென்றுவிடுவோம். அதனாலேதான் நான் முயலை என் கூடவே கொண்டு வந்து காரின் பின் பெட்டியில் வைத்திருக்கிறேன்.

சல்சாலின் செல்பேசிக்கு ஒரு குருஞ்செய்தி வந்ததும் அவனின் முகம் வெளிறிப் போனது. நாங்கள் எங்கள் இலக்கிற்காக பத்து நிமிடத்திற்கு மேலாக காத்திருக்கக் கூடாது. நான் அவனிடம் எல்லாம் சரிதானே என்று கேட்டேன். கெட்ட வார்த்தைகளில் கத்தி தன் தொடையை ஓங்கி அறைந்தான். நான் கலக்கமுற்றேன். சிறிய தயக்கத்திற்குப் பிறகு அவன் தனது செல்பேசியை தூக்கி பிடித்து அதிலிருந்த படமொன்றை காட்டினான், முட்டையின் மீது அமர்ந்திருக்கும் ஒரு முயல். கணினியில் கோர்த்த அற்பமான புகைப்படம்தான். “இதை அனுப்பியிருப்பது யாரென உனக்கு தெரியுமா?” அவன் கேட்டான்.

இல்லையென்று தலையசைத்தேன்.

“கலாச்சார துணையமைச்சர்”, என்று சொன்னான்.

“என்ன!!?”

“அவர்தான் நம் இலக்கு, ஹஜ்ஜார்.”

சல்சாலின் முட்டாள்தனத்தினாலும் இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் பைத்தியக்காரத்தனத்தினாலும் என் இரத்தம் கொதித்தது, காரை விட்டு வெளியே வந்தேன். கால் மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் எங்கள் இலக்கு வருவதாக தென்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து பின் வாங்குவதாக நான் சல்சாலாவிடம் சொன்னேன். அவனும் காரை விட்டு வெளியேறி என்னை நிதானமாக இருக்க சொன்னான். இருவருமே இப்போது ஆபத்தில் இருப்பதால் இன்னும் கொஞ்ச நேரம் இங்கே காத்திருக்கலாமென சொன்னான். அவன் மீண்டும் காருக்குள் சென்று சல்மானை தொடர்புகொள்ள முயற்சி செய்தான். நான் சிகரெட் பெட்டி வாங்க அருகிலிருந்த கடைக்கு நடந்து சென்றேன். என் இதயம் கோபத்தில் தாறுமாறாக துடித்தது. நான் கடையை சென்றடைந்ததும் எனக்கு பின்னால் கார் வெடித்துச் சிதறி தீ பற்றிக்கொண்டது, முயலும் சல்சாலும் எரிந்து தழல்களாயினர்.

https://www.wordswithoutborders.org/article/the-green-zone-rabbit

தமிழில் – நரேன்

முந்தைய கட்டுரைமொழியாக்கம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாடு -கடிதம்