ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்-     யியூன் லீ

yin

“நானொரு ராக்கெட் சயிண்டிஸ்ட்”, மிஸ்டர்.ஷீ தன் தொழிலைப் பற்றி  கேட்பவர்களிடம்  சொல்வார். அவர்கள் மலைப்பாய் பார்க்கையில், “ஓய்வுபெற்றவன்” என்று பிற்பாடு சேர்ப்பார்,  தன்னடக்கத்தோடு. மிஸ்டர்.ஷீ இந்தச் சொற்றொடரையே இணைப்பு விமானத்திற்காக  டெட்ராய்ட்டில் காத்திருந்தபோது ஒரு பெண்ணிடம், தன் வேலை என்ன என்பதை விளக்கும்  முயற்சியில் ஆங்கிலம் இவரை கைவிட, படம் வரைந்து  காட்டி கற்றுக்கொண்டார். அவள் வாய்விட்டுச் சிரித்து “ராக்கெட் சயிண்டிஸ்ட்” என்று கூவினாள்.

அவர் அமெரிக்காவில் சந்தித்த மனிதர்கள் பொதுவாகவே நட்பானவர்கள்தான்  என்றாலும், அவர் தொழில் என்ன என அறிந்ததும்  மேலும் அன்பு காட்டுவதால்  அவ்வார்த்தைகளை அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திரும்பச் சொல்ல விரும்புவார். தன் மகளைப் பார்க்க இந்த வடமத்திய மாநில நகருக்கு அவர் வந்து சேர்ந்த ஐந்து நாட்களிலேயே சொல்லிக்  கொள்ளுமளவு அறிமுகங்களை செய்துக் கொண்டார். குழந்தைகளை கைவண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் தாய்மார்கள் இவரைப் பார்த்து கையசைப்பர்.  ஒரு வயதான தம்பதி, சூட் அணிந்த கணவரின் கரங்களைப் பற்றியபடி பாவாடையணிந்த மனைவி இந்த பூங்காவிற்கு தினமும் காலை 9 மணிக்கு தோன்றி இவருக்கு வணக்கம் செலுத்துவர். கணவர் மட்டும்தான் எப்போதும் பேசுவார், மனைவி புன்னகைத்துக் கொண்டிருப்பார். அடுத்த தொகுதியில் இருக்கும் ஒரு ஒய்வுக்கால விடுதியில் வாழும் பெண்மணி இவரிடம் பேச வேண்டியே தொடர்ந்து வருவார். அந்தம்மாவிற்கு 77 வயது, இவரைவிட இரண்டு வயது மூத்தவர், ஈரானை பூர்வீகமாக கொண்டவர். இருவருக்குமே ஆங்கிலம் மிகக் குறைவாகத்தான் பேச வரும் என்றாலும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, நண்பர்களாவதற்கும் அதிக நேரம் பிடிக்கவில்லை.

“அமெரிக்கா நல்ல நாடு,” அந்தம்மா அடிக்கடி சொல்வார். “மகன்கள் நிறைய பணம் பண்ணுகிறார்கள்.”

அமெரிக்கா நிஜமாகவே நல்ல நாடுதான். மிஸ்டர். ஷீயின் மகள் கல்லூரி நூலகத்தில் கிழக்காசிய பிரிவின் நூலகராக பணிபுரிகிறாள், இருபது வயதில் இவர் பார்த்ததைவிட அதிகம் சம்பாதிக்கிறாள்.

“என் மகள், அவளும் அதிக பணம் பண்ணுகிறாள்.”

“ஐ லவ் அமெரிக்கா. எல்லோருக்கும் இது நல்ல நாடு.”

“அமாம், ஆமாம்.  ராக்கெட் சயிண்டிஸ்ட் நான் சீனாவில். ஆனால் ரொம்ப ஏழை. ராக்கெட் சயிண்டிஸ்ட், உங்களுக்கு தெரியுமா?”

“ஐ லவ் சீனா. சீனா ஒரு நல்ல நாடு, ரொம்ப பழசு,” அந்தம்மா சொன்னார்.

“அமெரிக்கா இளமையான நாடு, இளமையான ஆட்களைப் போன்றது.”

“அமெரிக்கா சந்தோஷமான நாடு.”

“இளமையானவர்கள் வயதானவர்களைவிட அதிக சந்தோஷமாக இருக்கிறார்கள்,” மிஸ்டர்.ஷீ சொன்னார், உடனேயே இது ஒரு அபத்தமான தீர்மானம் என்பதையும் உணர்ந்தார். அவருக்கே கூட தன் வாழ்வில் நினைவு தெரிந்து முன்னெப்போதையும்விட இப்போதுதான் அதிக சந்தோஷமாக இருப்பதாகப் படுகிறது. அவர் முன்னே இருக்கும், நல்ல காரணத்தோடோ இன்றியோ அனைத்தையும் நேசிக்கும், இந்தப் பெண்மணியும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்.

சிலசமயங்களில் அவர்களிடமிருந்த ஆங்கிலம் தீர்ந்து போய்விடும். அப்பெண்மணி பெர்ஷியனுக்கு மாறிவிடுவார், ஒருசில ஆங்கில வார்த்தைகளை சேர்த்துக் கொண்டு. மிஸ்டர். ஷீக்கு அவரிடத்தில் சீனமொழியில் பேசுவதற்கு கடினமாக இருக்கிறது. அதற்குப் பின் பத்து அல்ல இருபது நிமிடங்களுக்கு தொடர்ந்து பேசுவது அந்த அம்மாதான். இவர் பீறிடும் புன்னகையோடு தலையசைப்பார். அதில் பெரிதாக இவருக்கு எதுவும் புரிவதில்லையென்றாலும், அவரிடம் பேசுவதில் அந்த அம்மாள் அடையும் ஆனந்தத்தை இவர் உணர்ந்தார், கவனிப்பதில் இவர் அடையும் அதே பேரானந்தம்.

மிஸ்டர்.ஷீ பூங்காவில் வந்தமர்ந்து அவரின் வருகைக்காக காத்திருக்கும் காலை நேரங்களை எதிர்நோக்கத் தொடங்கினார். “மேடம்” என்றுதான் அழைப்பார், பெயரை இதுவரை கேட்டதில்லை. மேடம் அணியும் வண்ணங்களையெல்லாம், சிவப்பு ஆரஞ்சு ஊதா மஞ்சள்,  இந்த வயதில் ஒரு பெண்மணியோ இல்லை அவரின் பூர்வீக நட்டிலோ அணிவார்கள் என்று இவர் கற்பனை கூட செய்ததில்லை. மேடத்திடமிருந்த உலோகத்தாலான ஒரு ஜோடி சிகை பட்டை, ஒரு வெள்ளை யானையும் பச்சிள நீலத்தில் ஒரு மயிலும், மெல்லிய தலைமுடியை தழுவிக் கொண்டு நிலையற்று ஆடிக் கொண்டிருப்பதை பார்க்கையில் இவருக்கு தன் மகளின் சிறு வயது ஞாபகத்திற்கு வரும் – முடி முழுதாக வளர்வதற்கு முன்னால் ப்ளாஸ்டிக் பட்டாம்பூச்சி கட்டின்றி முன்நெற்றியில் தொங்கிக் கொண்டிருக்கும். ஏதாவதொரு தருணத்தில் மிஸ்டர்.ஷீ, தன் மகளின் சிறு வயது நாட்கள், வாழ்வு மிகவும் நம்பிக்கையுற்றதாக இருந்த காலங்களை நினைத்து ஏங்குவதை மேடத்திடம் சொல்லிவிட விழைந்தார். ஆனால் உறுதியாக தெரியும், சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே ஆங்கிலம் ஏமாற்றிவிடும். அதுமட்டுமில்லை, கடந்த காலங்களைப் பற்றி பேசுவது இவரின் பழக்கமுமல்ல.

மாலையில், தன் மகள் வீடு திரும்பும்போது, திரு.ஷீ இரவுணவை தயாரித்து வைத்திருப்பார். சில வருடங்களுக்கு முன்னர், தன் மனைவி இறந்த பிறகு சமையல் வகுப்புகளில் சேர்ந்ததிலிருந்து, கல்லூரி நாட்களில் கணக்கையும்  பெளதிகத்தையும் படித்த அதே உற்சாகத்தில் சமையற்கலையையும் பயின்று வருகிறார். “எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக் கொள்ள முடியாத பல திறமைகளோடு ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்,” இரவுணவின்போது அவர் சொன்னார். “ஒருநாளும் நான் சமையலை கைக்கொள்வேன் என்று கற்பனை செய்ததேயில்லை, ஆனால் இப்போதிங்கே நான் எண்ணியதைவிடவும் சிறப்பாகவே அதில் தேர்ந்திருக்கிறேன்.”

“அமாம், மிகவும் வியப்புக்குறியதுதான்,” அவர் மகள் சொன்னாள்.

“அது போலவே” – மிஸ்டரி ஷீ தன் மகளை ஒரு கணப் பார்வை பார்த்து – “வாழ்க்கை நாம் என்றும் அறிந்திராத சந்தோஷங்களையும் கொடுக்கும். அதை கண்டடைய நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் மகள் பதில் பேசவில்லை. தன் சமையல் மீதான அவரின் பெருமைகளும் அதற்கு அவளின் பாராட்டுகளுமென இருந்தாலும் அவள் மிகக் குறைவாகவும் கடமைக்காகவும் தான் உண்பாள். இது அவரை கவலை கொள்ளச் செய்யும், அவள் தன் வாழ்வின் மீது காட்டவேண்டிய ஆர்வம் குறைந்து இருக்கிறாள். உண்மைதான், அதற்கு அவளுக்கு காரணம் உண்டுதான், ஏழு வருட திருமண வாழ்விலிருந்து மிகச் சமீபத்தில் பிரிவை ஏற்றவள். மிஸ்டர். ஷீக்கு க்கு அவர்களின் இல்லறப் படகு எந்த புலப்படாத பாறையின் மீது மோதியுடைந்தது என்று தெரியாது, ஆனால் காரணம் எதுவாகயிருந்தாலும், அது அவளுடைய தவறாக இருக்காது. அவள் சிறந்த மனைவியாக இருப்பதற்காகவே ஆனவள், மெல்லிய குரலும் கனிந்த இதயமும், பணிவும் அழகும், அவள் அம்மாவின் இளவயதுப் பிரதி. அவர் மகள் விவாகரத்தைப் பற்றி சொல்ல இவரை அழைத்தபோது, மிஸ்டர்.ஷீ அவள் தாங்கொணா வலியில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவள் மீள உதவும் பொருட்டு அமெரிக்கா வருவதற்காக கேட்டார். அவள் மறுத்தாள். அவர் தினமும் அழைத்து, தன் ஒரு மாத பென்ஷன் பணம் தொலைதூர அழைப்பிற்காகவே செலவழித்து, வாதாடினார். அவர் தன்னுடைய எழுபத்தைந்தாவது பிறந்தாநாளின் விருப்பமாக அமெரிக்காவை சுற்றி பார்ப்பதுதான் என்று அறிவித்தபோது அவள் கடைசியாக ஒப்புக்கொண்டாள். அது ஒரு பொய், ஆனால் அதுவே ஒரு நல்ல காரணமாக மாறியது. சுற்றிப் பார்க்க தகுதியான இடம்தான் அமெரிக்கா; அதை விடவும், அமெரிக்கா அவரை புது மனிதனாக்கும், ஒரு ராக்கெட் சயிண்டிஸ்ட், ஒரு நல்ல உரையாடல்காரர், அன்பான அப்பா, சந்தோஷமான ஆண்.

இரவுணவுக்குப் பின், மிஸ்டர்.ஷீ யின் மகள் தன் படுக்கையறைக்கு புத்தகத்தோடு ஒதுங்கிவிடுவார் அல்லது வெளியே வண்டியோட்டிச் சென்று பின்னிரவில் வீட்டுக்கு திரும்பி வருவார். மிஸ்டர். ஷீ அவளோடு துணைக்கு தானும் வருவதாக கேட்பார், அவர் கற்பனையில் தன் மகள் தனியே சினிமா பார்க்கச் செல்கிறாள். அவள் நயமாக ஆனால் உறுதியாக மறுத்துவிடுவாள். சர்வ நிச்சயமாக ஒரு பெண்ணுக்கு இது ஆரோக்கியமானதல்ல, குறிப்பாக சிந்தனாராய்ச்சியிலேயே இருக்கும் தன் மகளைப் போன்ற பெண்கள் தனியாக இருப்பது. அவள் தனிமையை எதிர்த்து போராடும் விதமாக அதிகம் பேசத் தொடங்குவார், தான் காணக் கிடைக்காத அவள் தின வாழ்வின் பக்கங்களைப் பற்றிய கேள்விகளோடு. அவளுடைய அன்றைய வேலை எப்படியிருந்தது என்று கேட்பார், நன்றாயிருந்தது என்று சோர்வாகச் சொல்வாள். சற்றும் மனம் தளராமல், அவளுடன் பணி புரிபவர்களைப் பற்றி கேட்கத் தொடங்குவார், ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருக்கின்றனாரா, அவர்களின் வயது என்ன, திருமணமானவர்களா? குழந்தைகள் உண்டா? தொடர்ந்து கேட்பார், அவளின் மதிய உணவு என்ன, எந்த வகையான கணினியை உபயோகிக்கிறாள், என்னென்ன புத்தகங்களை வாசிக்கிறாள்? அவளின் பழைய பள்ளிக் கால நண்பர்களைப் பற்றி கேட்பார், விவாகரத்தான அவமானத்தால் அவர்களின் தொடர்புகளை இவள் துண்டித்திருப்பாள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார். அவளின் எதிர்கால திட்டங்களைப் பற்றி கேட்பார், சூழ்நிலையின் அவசரத்தை அவள் புரிந்துக் கொண்டிருப்பாள் என்ற எதிர்பார்ப்பில். பெண்கள் அவர்களின் திருமண வயதான இருபதுகளிலும் முப்பதுகளின் தொடக்கத்திலும் மரத்திலிருந்து பறிக்கப்பட்ட லீய்ச்சீ பழங்களைப் போல; கடந்து செல்லும் நாள் ஒவ்வொன்றும் அவற்றை மலர்ச்சியற்றதாக யாரும் வேண்டாதனவாக மாற்றி சீக்கிரத்திலேயே அதன் மதிப்பும் இழந்து விற்பனை விலைக்கே அகற்றப்பட வேண்டியிருக்கும்.

மிஸ்டர். ஷீக்கு விற்பனை விலை என்றெல்லாம் எதுவும் குறிப்பிடக் கூடாது என்றளவுக்கு தெரியும். இருந்தும் வாழ்வின் கனிகளைப் பற்றி அவரால் பாடம் எடுக்காமல் இருக்க முடியவில்லை.  அவர் மேலும் பேசப் பேச அவரின் நிதானம் அவரையே கலங்க வைத்தது. அவர் மகளிடமோ எந்த மாற்றமும் இல்லை. நாளுக்கு நாள் அவள் குறைவாக உண்டு மேலும் அமைதியடைந்துக்  கொண்டிருந்தாள். அவர் இறுதியாக வாழ்வை வேண்டிய அளவு நீ கொண்டாடவில்லை என்று அவளிடமே சுட்டிக் காட்டியபோது அவள் திருப்பிக் கேட்டாள், “இந்த முடிவிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? சரியானபடிதான் நான் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் அது பொய். சந்தோஷமான மனிதர் யாரும் இவ்வளவு அமைதியாக இருக்க மாட்டார்கள்!”

அரிசிக் கிண்ணத்திலிருந்து பார்வையை மேல் தூக்கி பார்த்தாள். “அப்பா, நீங்கள் முன்பெல்லாம் அமைதியாக இருப்பதுதான் வழக்கம், ஞாபகமிருக்கிறதா? நீங்கள் அப்போது வருத்தமாக இருந்தீர்களா என்ன?”

தன் மகளிடமிருந்து இப்படியானதொரு நேரடி கேள்விக்கு தயாராகவில்லை,   மிஸ்டர்.ஷீயால் பதில் சொல்ல இயலவில்லை. தன்னிடம் மன்னிப்பு கேட்டு வேறு விஷயத்தைப் பேசுவாள் என்று காத்திருந்தார், நன்னடத்தை கொண்ட எவரும் தன் கேள்வியால் ஒருவரை தர்மசங்கடப்படுத்தி விட்டால் அதுதானே செய்வார்கள்? ஆனால் அவள் அவரை விடுவதாக இல்லை. மூக்குக்கண்ணாடியின் பின்னால் அவளின் கண்கள் அகல விரிந்து அசைவற்று அவரை பார்ப்பது அவருக்கு அவளின் சிறுவயதை ஞாபகப்படுத்தியது. நான்கு அல்ல ஐந்து வயதிருக்கும்போது கிடைத்த வாய்ப்பிலெல்லாம் பின்னடியே வந்து கேள்விகள் கேட்டு பதில் வேண்டி வற்புறுத்தி நிற்பாள். அந்த கண்கள் அவளின் அம்மாவையும் ஞாபகப்படுத்தியது; அவர்கள் இல்லறத்தில் ஒருமுறை, இதேபோன்றதொரு வினவும் பார்வையில் இவரை உற்று நோக்கியபடி இவரிடம் இல்லாத பதிலுக்காக காத்திருந்தாள்.

பெருமூச்சு விடுத்தார். “என்ன சந்தேகம், நான் எப்போதுமே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.”

“சரியாக சொன்னீர்கள் அப்பா. நாம் அமைதியாக இருந்துக்கொண்டே சந்தோஷமாகவும் இருக்கமுடியும் இல்லையா?”

“நீ ஏன் உன்னுடைய மகிழ்வான தருணங்களைப் பற்றி என்னிடம் பேசக் கூடாது?” மிஸ்டர்.ஷீ சொன்னார். “உன் வேலையைப் பற்றி மேலதிகம் சொல்லேன்.”

“நீங்களும் கூட உங்கள் வேலையைப் பற்றி எதுவும் சொன்னதில்லை, நினைவிருக்கிறதா? நான் கேட்டபோது கூட.”

“ஒரு ராக்கெட் சயிண்டிஸ்ட் என்றால் என்னவென்று தெரியும்தானே உனக்கு. என் வேலை ரகசியமானது.”

“நீங்கள் எதைப்பற்றியுமே அதிகம் பேசியதில்லை,” அவர் மகள் சொன்னாள்.

மிஸ்டர். ஷீ பேசுவதற்கு வாய் திறந்தும் வார்த்தைகள் எதுவும் வெளிவிடவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொன்னார், “இப்போது அதிகம் பேசுகிறேனே. நான் திருந்தியிருக்கிறேன் தானே?”.

“கண்டிப்பாக,” அவர் மகள் சொன்னாள்.

“அதுதான் நீயும் செய்ய வேண்டியது. நிறைய பேசு,” மிஸ்டர்.ஷீ சொன்னார். “அதை இப்போதே தொடங்கு”.

அவர் மகள் மாறாக உற்சாகமிழந்திருந்தாள். வழக்கம் போல் மெளனமாய் உணவை முடித்து அவர் சாப்பிடுக்கொண்டிருக்கும்போதே வெளியே கிளம்பிச் சென்றாள்.

அடுத்த நாள் காலை, மிஸ்டர்.ஷீ  மேடத்திடம் உண்மையை ஒப்புக்கொண்டார், “என் மகள் மகிழ்ச்சியாக இல்லை.”

“மகள்கள் இருப்பது மகிழ்வான விஷயம்,” மேடம் சொன்னார்.

“அவள் விவாகரத்தானவள்.”

மேடம் தலையசைத்து பின் பெர்ஷியனில் பேசத் தொடங்கினார். விவாகரத்தென்றால் என்னவென்று மேடம் அறிவாரா என மிஸ்டர்.ஷீ க்கு உறுதியாகத் தெரியவில்லை. இவரைப் போன்று உலகத்தின் மீது துணிவுடன் இவ்வளவு காதலாய் இருக்கும் ஒரு பெண் வாழ்வின் எந்தக் கசப்பிலிருந்தும் காக்கப்பட வேண்டும், அவர் கணவனாலோ அல்ல ஒருவேளை, மகன்களாலோ. மிஸ்டர்.ஷீ மேடத்தைப் பார்த்தார், பேசுவதிலும் சிரிப்பதிலும் அவர் முகத்தில் பிரகாசம் கூடிக்கொண்டேயிருந்தது, நாற்பது வயது குறைவான தன் மகளால் இவரின் உற்சாகத்தைக் கொள்ள முடியவில்லையே என லேசான பொறாமையும் கொண்டார். அன்றைய நாளுக்கு மேடம் அணிந்திருந்த பளபளப்பான ஆரஞ்சு ரவிக்கையில் ஊதா நிறத்தில் குரங்குகள் அச்சிடப்பட்டிருந்தது, அத்தனையும் உருண்டு புரண்டும் பல்லிளித்துக் கொண்டுமிருந்தன; தலையில் அதே தோரணியில் துண்டு ஒன்றை சுற்றியிருந்தார். ஒரு இடம்பெயர்ந்த பெண்மணி இவர், ஆனால் சந்தேகமேயில்லை மகிழ்வுடன் இடம்பெயர்ந்தவர். மிஸ்டர்.ஷீ ஈரானைப் பற்றியும் அந்நாட்டின் சமீபத்திய வரலாற்றைப் பற்றியும் தனக்கு என்ன தெரியும் என நினைவுகூற முயற்சித்தார்; தன்னுடைய குறைந்த அறிவிலிருந்து அவர் தேர்ந்த முடிவானது மேடம் ஒரு அதிர்ஷ்டசாளி என்பதுதான். அவரும் அதிர்ஷ்டசாளிதான், எல்லா பெரிய சிறிய குறைபாடுகளோடு அவர் இருந்தபோதிலும். எவ்வளவு அசாதாரணமானது இது, மிஸ்டர்.ஷீ யோசித்தார், மேடமும் அவரும் வேறு வேறு உலகங்களிலிருந்து வந்து, வெவ்வேறு மொழியோடு, இலையுதிர்காலத்து  சூரிய ஒளியின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பை பெறுவது.

“சீனாவில்  நாங்கள் ஷீஈயூ பாய்யீ ஷேய்ர் கே டாங்க் ஸ்ஹொஉ என்று சொல்லுவோம்” மேடம் நிறுத்தியபோது மிஸ்டர்.ஷீ சொன்னார். ஒரே படகில் ஒருவரோடு ஆற்றை கடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு முந்நூறு வருட பிரார்த்தனைகள் தேவைப்படுகிறது, இதை மேடத்திடம் ஆங்கிலத்தில் விளக்கலாமென அவர் நினைத்தார், பின், மொழிகளுக்குள் என்ன வேறுபாடு? மேடம் அவரை புரிந்துக்கொள்வார், மொழிபெயர்த்துச் சொன்னாலும் இல்லாவிட்டாலும். “நாமிருவரும் இங்கே சந்தித்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறோம் – இங்கு வந்தடைவதற்கு நீண்ட காலத்திய          நற்பிரார்த்தனைகள் தேவைப்பட்டிருக்கும்,” அவர் சீன மொழியில் மேடத்திடம் சொன்னார்.

மேடம் ஆமோதித்து புன்னகைத்தார்.

“எல்லா உறவுகளுக்கும் ஒரு காரணமிருக்கிறது, அதைத்தான் இந்தப் பழமொழி சொல்கிறது, கணவன் மனைவி, பெற்றொர் குழந்தைகள், நண்பர்கள் எதிரிகள், தெருவில் நீங்கள் சந்திக்கும் அந்நியர்கள். முன்னூறு வருடப் பிரார்த்தனைகளுக்குப் பிறகுதான் நீங்கள் நேசிக்கும் ஒருவரோடு ஒரே தலையணையில் அருகருகே தலை வைக்க முடியும். அப்பாவிற்கும் பெண்ணுக்குமெனில்? ஆயிரம் வருடங்களாக இருக்கலாம். தொடர்பின்றி யாரும் அப்பாவும் பெண்ணாகவும் பிறப்பதில்லை, அதுமட்டும் நிச்சயம். ஆனால் மகள், அவள் அதை புரிந்துக்கொள்வதில்லை. நானொரு தொல்லையென அவள் நினைக்கக்கூடும். நான் வாய்மூடிக் கொண்டிருப்பதைத்தான் அவள் விரும்புகிறாள், அப்படித்தான் அவள் என்னை அறிந்திருக்கிறாள். நான் அப்போது ராக்கெட் சயிண்டிஸ்டாக இருந்ததால் அவளோடும் அவள் அம்மாவோடும் நான் அதிகம் பேசவில்லை என்பதை அவள் புரிந்துக் கொள்ளவில்லை. எல்லாக் காரியங்களும் ரகசியமானது. நாங்கள் நாள் முழுக்க வேலை பார்ப்போம் மாலை வந்ததும் பாதுகாப்பு காவலர்கள் எங்களிடமிருந்து நோட்டுப் புத்தகங்களையும் எழுதிய காகிதத் தாள்களையும் சேகரித்துச் சென்றுவிடுவார்கள். எங்களின் அன்றாட வேலைகளின் காப்பகக் கோப்பின் மீது கையெழுத்திடுவோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை குடும்பத்தினரிடம் சொல்ல அனுமதியில்லை. பேசாமலிருப்பதற்கு நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.

இரண்டு கைகளையும் இதயத்தின் மீது மடக்கி வைத்து மேடம் கேட்டுக் கொண்டிருந்தார். தன் மனைவி இறந்த பிறகு தனதொத்த வயதுப் பெண்மணியிடம் இதுவரை இவ்வளவு நெருக்கமாக அவர் அமர்ந்ததில்லை; அவர் மனைவி உயிருடன் இருந்தபோதும் இவ்வளவு அதிகமாகப் பேசியதில்லை. அவர் கண்கள் கனத்தது. பாதி உலகைச் சுற்றி தன் மகளிடம் அவள் இளவயதில் பேச மறுத்ததிற்கெல்லாம் ஈடு செய்ய வந்து கண்டதென்னவோ அவர் வார்த்தைகள் மீது மகளுக்கு ஆர்வமிலை என்பதைத்தான். ஆனால் மேடம், மொழி தெரியாத புதியவர் அதிகப் புரிதலோடு இவர் பேசுவதை கவனமாகக் கேட்கிறார். மிஸ்டர்.ஷீ தன் கட்டை விரல்களால் கண்களை வருடிக் கொடுத்தார். இவர் வயதுடையவர்கள் ஆரோக்கியமற்ற உணர்வுகளுக்கு தன்னை ஈடுகொடுக்கக் கூடாது. நீண்ட மூச்சுகள் இழுத்து பின் லேசாக சிரித்தார். “ஆனால், ஆரோக்கியமற்ற உறவுகளுக்கும் ஒரு காரணம் இருக்கும்தான்என் மகளுக்காக நான் ஆயிரம் வருடங்களாக அரை மனதோடுதான் பிரார்த்திக்கிறேன் போலும்.

மேடம் ஆழமாக தலையசைத்தார். அவரை மேடம் புரிந்துக்கொள்கிறார் என்று அவருக்கும் தெரியும், இருந்தும் தன் சிறிய வருத்தங்களை அவர் மீது பாரமாக்க விரும்பவில்லை. கைகளை தேய்த்துக் கொண்டார், ஞாபகத் தூசியை தட்டிவிடுவது போல். “பழங்கதைகள்,” அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னார். “பழங்கதைகள் அவ்வளவு உற்சாகம் தருவதில்லை.”

“எனக்கு கதைகள் பிடிக்கும்,” மேடம் சொன்னார், பின் பேசத் தொடங்கினார். மிஸ்டர்.ஷீ கவனிக்க மேடம் எந்நேரமும் புன்னகைத்துக் கொண்டிருந்தார். வெடித்துச் சிரிக்கும்போதெல்லாம் தலையில் இளித்துக் கொண்டிருக்கும் குரங்குகள் மேலும் கீழும் ஓடுவதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அதிர்ஷ்டக்காரர்கள் நாம்,” மேடம் பேசி முடித்ததும் அவர் சொன்னார். “அமெரிக்காவில் நாம் எதுவேண்டுமானாலும் பேச முடிகிறது.”

“அமெரிக்கா நல்ல நாடு,” மேடம் தலையசைத்துச் சொன்னார். “ஐ லவ் அமெரிக்கா.”

அன்று மாலை, மிஸ்டர். ஷீ தன் மகளிடம் “நான் இந்த ஈரானியப் பெண்மணியை பூங்காவில் சந்தித்தேன். நீ அவரை சந்தித்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

“இல்லை.”

“நீ எப்பொழுதாவது அவரை சந்திக்க வேண்டும். அவர் மிகவும் நேர்மறையானவர். உன்னுடைய இந்தச் சூழ்நிலைக்கு வெளிச்சம் பாய்ச்சுவதைப் போல இருக்கும்.”

“என்ன என்னுடைய சூழ்நிலை?” அவர் மகள் உணவிலிருந்து தலையை தூக்காமலேயே கேட்டார்.

“நீயே அதை சொல்,” மிஸ்டர்.ஷீ சொன்னார். அவர் மகள் இவ்வுரையாடலை தொடர ஒரு அசைவும் காட்டாதபோது சொன்னார், “நீ இப்போது இருண்ட காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.”

“அந்தப் பெண்மணி என் வாழ்வை துலங்கச் செய்வார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?”

மிஸ்டர்.ஷீ ஏதோ சொல்ல வாய் திறந்து, பின் பதில் கிடைக்காமல் நின்றார். அவரும் மேடமும் வெவ்வேறு மொழிகளில் பேசிக் கொள்கிறார்கள் என்று அவள் அறிந்தால் தன்னை மனங் கலங்கிய வயதானவன் என்று நினைத்துக் கொள்வாள் என்று பயந்தார். ஒரு கணத்தில் அர்த்தம் நிறைந்ததாய் தோன்றியவையெல்லாம் வேரொரு வெளிச்சத்தில் அபத்தமாகத் தெரிந்தது. தன் மகளின் மீது அவருக்கு ஏமாற்றமாய் இருந்தது, ஒரே மொழியை பகிர்ந்துக் கொள்ளும் அவளிடம் தனக்கு மிக நெருக்கமான ஒரு தருணத்தை இனி பகிர்ந்துக் கொள்ள முடியாது. நீண்ட இடைவெளி விட்டு அவர் சொன்னார், “தெரிந்துக்கொள், ஒரு பெண் இப்படி நேரடியான கேள்விகளை கேட்கக்கூடாது. ஒரு நல்ல பெண் இணக்கமாக நடந்து மற்றவர்களை பேச வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.”

“நான் விவாகரத்தானவள், அதனால் கண்டிப்பாக உங்கள் மதிப்பின்படி நான் நல்ல பெண் இல்லை.”

மிஸ்டர்.ஷீ, தன் மகளின் கிண்டலில் நியாயமில்லை என்று தோன்றியதால் அதை உதாசீனப்படுத்தினார். “உன் அம்மா ஒரு நல்ல பெண்ணிற்கு உதாரணம்.”

“அவரால் உங்களை பேச வைக்க முடிந்ததா?” அவர் அறிந்திறாத கடுமையில் அவர் கண்களை நேரே நோக்கி மகள் கேட்டாள்.

“உன் அம்மா இப்படி நேருக்கு நேர் நின்று சண்டை போடமாட்டாள்.”

“அப்பா..முதலில் நான் ரொம்பவும் அமைதியாக இருப்பதாக குற்றம் சாட்டினீர்கள். நான் பேசத் தொடங்கினால், நான் தவறாகப் பேசுகிறேன் என்கிறீர்கள்”

“பேசுவதென்பது கேள்வி கேட்பது மட்டுமல்ல. அடுத்தவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று சொல்வதும், அவர்கள் உன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்ல விடுவதும் பேசுவதுதான்.”

“அப்பா, எப்போதிருந்து நீங்கள் மனநல ஆலோசகராக மாறினீர்கள்?”

“நான் உனக்கு உதவத்தான் இங்கிருக்கிறேன், என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்”, மிஸ்டர்.ஷீ சொன்னார். “உனக்கு ஏன் விவாகரத்து ஆனதென்று எனக்குத் தெரிய வேண்டும். எங்கு தவறு நடந்தது என்று தெரிந்தால்தான் நீ அடுத்து சரியான ஆளை தேர்ந்தெடுக்க என்னால் உதவ முடியும். நீ என் மகள், நீ மனநிறைவோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நீ இரண்டாம் முறையும் தவறி விழுவதை நான் விரும்பவில்லை.

“அப்பா, உங்களிடம் நான் இதை முன்னரே கேட்கவில்லை, ஆனால் எவ்வளவு காலம் நீங்கள் அமெரிக்காவில் தங்குவதாக திட்டம்” அவர் மகள் கேட்டாள்.

“நீ திரும்ப மீளும் வரை.”

நாற்காலியின் கால்கள் தரையில் உரச, அவள் எழுந்து நின்றாள்.

“நமக்கு குடும்பமென்றிருப்பது இப்போது நீயும் நானும் மட்டும்தான்” மிஸ்டர்.ஷீ கெஞ்சலாய் சொன்னார், ஆனால் மேலும் அவர் வேறெதுவும் சொல்லும் முன்னர் அவள் படுக்கையறையின் கதவை சாத்தி விட்டாள். மிஸ்டர்.ஷீ  தன் மகள் தொடாமல் விட்ட உணவுகளைப் பார்த்தார், நறுக்கிய காளான்களை அடைத்து வைத்த டோஃபு கட்டிகள், இறாலும் இஞ்சியும், மூங்கில் தண்டு குவியல், சிவப்பு மிளகு, பட்டாணிகள்.. ஒவ்வொரு மாலையும் அவர் மகள் அவரின் சமையலை மெச்சிப் பேசினாலும், அது அரை மனதோடு இருப்பதாக அவருக்குத்  தோன்றும். அவளுக்குத் தெரியாது சமையல் அவருக்கு பிரார்த்தனையாக மாறிக் கொண்டிருக்கிறதென்று, அவள் அவ்வேண்டுதல்களுக்கு பதிலளிப்பதில்லை.

“மனைவி என் மகளை ஆறுதல்படுத்தும் வேலையை சிறப்பாகச் செய்திருப்பாள்,” மிஸ்டர்.ஷீ அடுத்த நாள் காலை மேடத்திடம் சொன்னார். சீனமொழியிலேயே பேசிவிடுவது அவருக்கு இப்போது சிக்கலில்லாததாகப் படுகிறது. “அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். அவர்களோடு எனக்கு நெருக்கமில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் நீங்கள் ஒரு ராக்கெட் சயிண்டிஸ்டாக இருந்தாள் இப்படித்தான் நடக்கும். பகலெல்லாம் கடினமாக வேலை செய்தேன், இரவில் அவ்வேலையைப் பற்றி சிந்திப்பதை என்னால் நிறுத்தவே முடியவில்லை. எல்லாமே பரம ரகசியமென்பதால் நான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை என் குடும்பத்திடம் சொல்ல முடியாது. ஆனால் உலகிலேயே பெண்களில் அதிகம் புரிந்துக் கொள்ளும் திறன் கொண்டவள் என் மனைவிதான்நான் என்னை மறந்து என் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன் என்று என் மனைவிக்குத் தெரியும், என் சிந்தனைகளில் குறுக்கிடமாட்டாள், மகளையும் அனுமதிக்க மாட்டாள். ஆனால் அது என் மகளுக்கு அவ்வளவு அரோக்கியமானதாக இல்லை என இப்போது தெரிகிறது. நான் என் வேலை செய்யும் பாதியை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். அதை புரிந்துக்கொள்ளும் வயதும் இல்லை அப்போது. என் மகளுக்கு இப்போது என்னிடம் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

நிச்சயம் அது அவரின் தவறுதான், தன் மகளோடு பேசும் பழக்கத்தையே அவர் உருவாக்கிக் கொள்ளாமல் விட்டது. ஆனால், அவர் பக்கத்தின் நியாயமாக அவர் வைப்பது – அவரின் காலத்தில், அவரை போன்ற ஒருவர், உயரிய நோக்கத்திற்காக வேலை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், குடும்பத்தை விடவும் தன் வேலைக்காகத்தான் அதிகம் உழைக்க வேண்டும். கெளரவமும் வருத்தமும், ஆனால் வருத்தத்தைவிட கொஞ்சம் கூடுதலாய் கெளரவம்.

அன்றிரவு உணவின்போது மிஸ்டர்.ஷீ யின் மகள் அவரிடம் தானொரு சீன மொழி பேசும், கிழக்குக் கரையிலிருந்து மேற்கு வரை சுற்றுலாக்களை நடத்தும், பயண நிறுவனமொன்றை பிடித்துள்ளதாகச் சொன்னாள். “சுற்றிப் பார்க்கத்தான் நீங்கள் அமெரிக்கா வந்திருக்கிறீர்கள். குளிர்காலம் தொடங்கும் முன்னரே நீங்கள் ஒன்றிரண்டு பயணங்கள் போய் வருவதுதான் நல்லது.”

“அதிகச் செலவு ஆகுமா?”

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன் அப்பா. உங்கள் பிறந்த நாளுக்கு நீங்கள் இதைத்தான் ஆசைப்பட்டீர்கள் இல்லையா?”

எப்படியானாலும் அவள் அவரின் மகள்; அவரின் விருப்பத்தை அவள் நினைவில் வைத்திருந்து அதற்கு மதிப்பளிக்கிறாள். ஆனால் அவள் சந்தோஷமாக திருமண வாழ்வை நடத்தும் ஒரு நாடுதான் அவர் பார்க்க விரும்பும் அமெரிக்கா என்பதை அவள் புரிந்துக் கொள்ளவில்லை. அவர் காய்களையும் மீனையும் கரண்டியில் அள்ளி அவள் கிண்ணத்தில் வைத்தார். “நீ இன்னும் அதிகமாக சாப்பிட வேண்டும்,” மெல்லிய குரலில் சொன்னார்.

“அதனால் நான் அவர்களை காலையில் அழைத்து உங்கள் சுற்றுப் பயணங்களை உறுதி செய்யப் போகிறேன்,” அவர் மகள் சொன்னாள்.

“ஒருவகையில், நான் இங்கேயே இருப்பதுதான் எனக்கு நல்லது, தெரியுமா? அதிக வயதானவன் நான், பயணங்கள் அவ்வளவு நல்லதில்லை எனக்கு.”

“இங்கே பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லையே.”

“ஏன் இல்லை? நான் பார்க்க விரும்பிய அமெரிக்கா இதுதான். கவலைப்படாதே, எனக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள். நான் உனக்கு அதிக தொந்தரவாய் இருக்க மாட்டேன்.”

அவள் பதில் சொல்லும் முன்னரே தொலைபேசி மணி அடித்தது. அவள் கையிலெடுத்துக் கொண்டு தானாகவே தன் படுக்கையறைக்குள் சென்றாள். அவர் கதவடைக்கும் சப்தத்திற்காக காத்திருந்தார். அவள் அவர் முன்னால் எந்த அழைப்பையும் எடுப்பதில்லை, தொலைபேசியிலேயே எதையாவது விற்க முயற்சிக்கும் முகமற்றவர்களின் அழைப்பை கூட. சில மாலை நேரங்களில் அவளின் நீண்ட உரையாடல்கள், குசுகுசுப்பான குரலை கதவின் மேல் காது வைத்து கேட்காமலிருக்க கடும் போராட்டம் மேற்கொள்வார். இந்த மாலை, அதற்கு மாறாக, அவளுக்கு வேறேதோ எண்ணம் இருந்திருக்கலாம், கதவை திறந்தே வைத்திருந்தாள்.

அவள் தொலைபேசியில் ஆங்கிலத்தில் உரையாடுவதை அவர் கேட்டார், அவர் முன்னெப்போதும் அறிந்ததை விடவும் துளைக்கும் கீச்சொலியில் பேசுகிறாள். அவள் வேகமாக பேசுகிறாள் அடிக்கடி சிரிக்கிறாள். அவளின் வார்த்தைகள் அவருக்கு புரியவில்லை ஆனால் அதற்கும் மேலாக அவளின் நடத்தை புரியவில்லை. அவளின் குரல், மிகக் கூர்மையாக, அதிக சத்தமாக, சற்றும் அடக்கமின்றி, அவ்வளவு இனிமையற்றதாய் அவர் காதுகளில் விழுந்ததில் ஒரு கணம், தவறுதலாய் அவளின் நிர்வாணத்தை கண்டு விட்டதைப் போல் உணர்ந்தார், அவரறிந்த மகளல்ல அவள், முற்றிலும் புதியவள்.

அவள் அறையை விட்டு வெளிவரும்போது முறைத்துப் பார்த்தார். எதுவும் பேசாமல் அவள் மேசையில் அமர்ந்தாள். அவள் முகத்தை ஒருதரம் பார்த்து பின் கேட்டார், “தொலைபேசியில் இருந்தது யார்?”

“ஒரு நண்பர்.”

“ஆண் நண்பனா, பெண்ணா?”

“ஆண்.”

அவள் அதற்கான விளக்கமும் கொடுப்பாள் என்று காத்திருந்தார், ஆனால் அவளுக்கு அப்படியொரு எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து கேட்டார், “இந்த ஆள் – அவர் உனக்கு முக்கிய நண்பனா?”

“முக்கியமானவரா? ஆமாம்.”

“எவ்வளவு முக்கியமானவர்?”

“அப்பா, ஒருவேளை இது உங்களுக்கு என் மீதான கவலைகளை குறைக்கலாம் – ஆமாம், அவர் எனக்கு அதி முக்கியமான ஒருவர். நண்பரை விட ஒரு படி மேலானவர்,” மகள் சொன்னாள். “என் காதலர். நீங்கள் நினைத்ததைப் போல என் வாழ்வு ஒன்றும் அவ்வளவு துயர் மிகுந்தது இல்லை என்பது உங்களுக்கு நிம்மதியை கொடுக்கிறதா?”

“அவர் அமெரிக்கரா?”

“இப்போது அமெரிக்கன், ஆமாம். ஆனால் அவர் ரோமேனியாவிலிந்து வந்தவர்.”

குறைந்தபட்சம், அம்மனிதர் ஒரு கம்யூனிச நாட்டில் வளர்ந்திருக்கிறார், மிஸ்டர்.ஷீ இதை தனக்கு சாதகமானதொன்றாக்கிக் கொள்ளும் முயற்சியில் சிந்தித்தார். “உனக்கு அவரை நன்றாகத் தெரியுமா? அவர் உன்னை புரிந்து கொள்கிறாரா – நீ எங்கிருந்து வருகிறாய், உன் கலாச்சாரமென்ன – இதெல்லாம்? ஞாபகமிருக்கட்டும், ஒரே தவறை இருமுறை செய்யக் கூடாது. நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.”

“எங்களை ஒருவருக்கொருவர் நீண்ட காலமாகத் தெரியும்.”

“நீண்ட காலமா? ஒரு மாதெமென்பது நீண்ட காலம் அல்ல.”

“அதைவிட அதிகம் அப்பா”

“ஒன்றரை மாதங்கள் இருக்குமா, அதிகபட்சம்? இங்கே கவனி, நீ வலியில் இருப்பது எனக்கு தெரியும், ஆனால் ஒரு பெண் அவசரப்படக் கூடாது, குறிப்பாக உன் நிலையிலிருப்பவள். கைவிடப்பட்ட பெண்கள் – தனிமை அவர்களை தவறிழைக்க வைத்துவிடும்.

அவர் மகள் மேலே நோக்கினாள். “நீங்கள் நினைத்ததைப் போல என் திருமண வாழ்க்கை அமையவில்லை. நான் கைவிடப்பட்டவள் அல்ல.”

மிஸ்டர் ஷீ தன் மகளைப் பார்த்தார், அவள் கண்கள் தெளிவாக, சுமையற்று தீர்க்கமாக இருந்தது. ஒரு நொடி அவள் வேறெந்த விவரங்களையும் தன்னிடம் சொல்லாமல் விட்டுவிட வேண்டுமென்று விரும்பினார், ஆனால் அவள் பேச ஆரம்பித்ததும் அவரால் தடுக்க முடியவில்லை. “அப்பா, நாங்கள் விவாகரத்து வாங்கி பிரிந்ததே இந்த மனிதரால்தான். நான் தான் கைவிட்டவள், உங்கள் வார்த்தையிலேயே சொல்ல வேண்டுமென்றால்.”

“ஆனால் ஏன்?”

“திருமணங்கள் தவறாக போலாம் அப்பா.”

“கணவனும் மனைவியுமாக படுக்கையில் கழியும் ஓர் இரவு அவர்களை நூற்றாண்டு காலம் காதலில் திளைக்கச் செய்யும். நீ ஏழு வருடங்களாக இத்திருமண உறவில் இருந்தாய்! உன் கணவருக்கு இதை செய்ய உன்னால் எப்படி முடிந்தது? எதெப்படியோ, இந்தச் சிறிய மீறிய உறவைத் தவிர வேறென்ன பிரச்சினை இருந்தது உனக்கு?” மிஸ்டர்.ஷீ கேட்டார். விசுவாசமற்ற பெண்ணாக அவர் தன் மகளை வளர்க்கவில்லை.

“அதைபற்றி பேசுவதில் இப்போது ஒரு அர்த்தமும் இல்லை.”

“நான் உன்னுடைய தந்தை. இதை தெரிந்துக் கொள்ளும் உரிமை எனக்கு உண்டு,” மேஜையை ஒங்கி கையால் தட்டி மிஸ்டர்.ஷீ சொன்னார்.

“ நான் வேண்டிய அளவு என் கணவரோடு பேசவில்லை என்பதுதான் எங்களுக்குள்ளான பிரச்சினை. நான் அமைதியாக இருந்ததால் நான் அவரிடம் இருந்து எதையோ மறைக்கிறேன் என்று எப்போதும் சந்தேகப்பட்டார்.”

“நீ அவரிடமிருந்து ஒரு காதலனை மறைத்து வைத்திருந்தாய்.”

மிஸ்டர்.ஷீ யின் மகள் அவ்வார்த்தைகளை பொருட்படுத்தவில்லை. “அவர் என்னை பேசச் சொல்லி அதிகம் வற்புறுத்த நான் அதிகம் தனிமையில் அமைதியாக இருக்க விரும்பினேன். நீங்கள் சுட்டிக் காட்டியபடி நான் நல்ல உரையாடல்காரியும் அல்ல.”

“ஆனால் அது பொய். நீ இப்போதுதான் தொலைபேசியில் அவ்வளவு  அடக்கமில்லாமல் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்திருக்கிறாய். நீ பேசிக்கொண்டேயிருந்தாய், சத்தம் போட்டு சிரித்தாய், ஒரு விபச்சாரியைப் போல!”

மிஸ்டர்.ஷீ யின் மகள், அவ்வார்த்தைகளிலிருந்த கடுந்தீவிரத்தில் அதிர்ந்துபோய், நீண்ட பார்வையில் அவரைப் பார்த்தாள், மெல்லிய குரலெடுத்து பதில் சொல்லும்முன். “இது வேறு விஷயம் அப்பா. நாங்கள் ஆங்கிலத்தில் பேசுகிறோம், அது சுலபமாக இருக்கிறது. எனக்கு சீன மொழியில் சரளமாகப் பேச வராது.”

“இது ஒரு முட்டாள்தனமான காரணம்.”

“அப்பா, உங்களுக்கு சொந்தமான ஒரு மொழியை உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த நீங்கள் என்றுமே உபயோகப்படுத்தியதில்லையென்றால், வேறொரு மொழியை எடுத்துக் கொண்டு அதில் உரையாடுவதுதான் சுலபமாக இருக்கும். அது உங்களை புதிய மனிதராக்கும்.”

“உன் ஒழுக்கக்கேட்டிற்கு என்னையும் உன் அம்மாவையும் குற்றம் சொல்கிறாயா?”

“நான் அப்படி சொல்லவில்லையே, அப்பா!”

“ஆனால் நீ சொன்னதற்கு அதுதானே அர்த்தம்? நாங்கள் உன்னை சீன மொழியில் ஒழுங்காக வளர்க்கவில்லை அதனால் நீ உன் கணவரோடு மனம் திறந்து பேச முடியாமல் போனதால் ஒரு புது மொழியை தேர்ந்தெடுத்து அதிலொரு புது காதலரையும் தேடிக்கொண்டாய்.”

“நீங்கள் எப்போதுமே பேசியதில்லை.. உங்கள் மணவாழ்வே சிக்கலில் இருக்கிறெதென்பதை நீங்கள் இருவரும் உணர்ந்தபோது அம்மாவும் பேசுவதை நிறுத்திவிட்டார். நானும் பேசாமலிருக்கக் கற்றுக் கொண்டேன்.”

“எனக்கும் உன் அம்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. நாங்கள் அமைதியானவர்கள். அவ்வளவுதான்.”

“அது பொய்”

“இல்லவே இல்லை.. நான் என் வேலையிலேயே என்னை மறந்து போனது நான் செய்த தவறு என்று எனக்குத் தெரியும் ஆனால் நான் அதிகம் பேசாமலிருந்தது என் தொழிலால்தான் என்பதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும்.”

“அப்பா,” மிஸ்டர்.ஷீ யின் மகள் சொன்னாள், இரக்கம் நிரம்பிய கண்களோடு. “அதுவும் பொய்தான் என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் ஒரு ராக்கெட் சயிண்டிஸ்ட் கிடையாது. அம்மாவிற்கு தெரியும். எனக்கு தெரியும். எல்லோருக்கும் தெரியும்.”

மிஸ்டர்.ஷீ தன் மகளை நீண்ட நேரம் முறைத்துப் பார்த்தார். “நீ சொல்வது எனக்கு புரியவில்லை.”

“ஆனால் உங்களுக்கு தெரியும் அப்பா. உங்கள் வேலையைப் பற்றி நீங்கள் எதுவும் பேசியதில்லை, உண்மைதான். ஆனால் மற்றவர்கள் – அவர்கள் உங்களைப் பற்றி பேசிக் கொண்டார்கள்.”

மிஸ்டர்.ஷீ தன் தற்காப்பிற்கு வார்த்தைகள் தேட முயற்சி செய்தார், ஆனால் ஒரு சப்தமும் எழுப்பாமல் அவர் உதடுகள் நடுங்கியது.

“அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். உங்களை புண்படுத்தும் நோக்கத்தில் நான் அப்படி சொல்லவில்லை.”

மிஸ்டர்.ஷீ நீண்ட மூச்சுகளை இழுத்து தன் கெளரவத்தை காத்துக் கொள்ள முயற்சி செய்தார். அதைச் செய்வதொன்றும் அவருக்கு அவ்வளவு கடினம் அல்ல, அனைத்துக்கும் மேல், அவர் தன் வாழ்வு முழுவதும் சந்தித்த எல்லா பேரிடர்களையும் அமைதியாக கடந்து வந்தவர்தான். “நீ என்னை புண்படுத்தவில்லை. நீ சொன்னது போல், உண்மையைத்தான் பேசினாய்,” என்று சொல்லி எழுந்தார். அவர் தன் விருந்தினர் அறைக்குச் சென்று அடையும்முன் அவருக்கு பின்னால் அவள் நிதானமாகச் சொன்னாள், “அப்பா, உங்கள் பெயரை சுற்றுலாக்களுக்கு நாளை பதிந்து விடுகிறேன்.”

மிஸ்டர்.ஷீ பூங்காவில் அமர்ந்து மேடத்திடம் பிரியாவிடை சொல்வதற்காக காத்திருந்தார். அமெரிக்க சுற்றுப் பயணம் முடிவடையும் சான் ப்ரான்ஸிஸ்கோவிலிருந்து அப்படியே தன் ஊருக்கு கிளம்ப ஏற்பாடுகளை செய்யுமாறு தன் மகளிடம் கேட்டிருந்தார். அவர் புறப்படுவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறதென்றாலும், மேடத்திடம் ஒருமுறை பேசுவதற்கு மட்டுமே அவருக்கு தைரியம் இருக்கிறது, அவரை பற்றிய அத்தனை பொய்களையும் விளக்கி சொல்லிவிட வேண்டும். அவர் ராக்கெட் சயிண்டிஸ்ட் அல்ல. ஆனால் அவர் அதற்கான பயிற்சி பெற்று அப்பதவியில் மூன்று வருடங்கள் வேலை செய்தார், அந்த நிறுவனத்தில் பணி புரிந்த மொத்த முப்பத்தியெட்டு வருடங்களில். ஒரு இளைஞனாக தன் வேலையை பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது எளிதல்ல. மிஸ்டர்.ஷீ தன் மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டார். ஒரு இளம் ராக்கெட் விஞ்ஞானி, அவ்வளவு பெருமையும் புகழும். அந்தக் கிளர்ச்சியை யாரிடமாவது நீங்கள் பகிர்ந்துக் கொள்ள விரும்புவீர்கள். 

மிஸ்டர்.ஷீ க்கு அந்த யாரோ – இருபத்தைந்து வயதான, நாற்பது வருடங்களுக்கு முன்னால் – வரவு அட்டை பொறிக்கும் கருவியில் வேலை பார்த்தவள். பொறிப்பாளர்கள் என்று அழைப்பார்கள் அவர்களை அப்போது, நவீன கணினிகள் காணாமல் போகச் செய்த வேலைகளில் ஒன்று,  ஆனால் தன் வாழ்வில் காணாமல் போன வேறெதையும் விட இந்த அட்டை பொறிப்பாளர்கள் இல்லாமல் போனதுதான் பெரும் குறையாகத் தோன்றும் அவருக்கு. குறிப்பாக அவரின் அட்டை பொறிப்பாளர். “பெயர் யீலான்,” மிஸ்டர்.ஷீ காற்றில் சத்தம் போட்டு சொன்னார், யாரோ அந்தப் பெயருக்கு ஒரு பதில் வணக்கம் சொன்னார்கள். மேடம்  இவரை நோக்கி ஒரு கூடையில் உதிர்ந்த சருகுகளோடு வந்தார். அதில் ஒன்றை எடுத்து மிஸ்டர்.ஷீ யிடம் கொடுத்து “ப்யூட்டிஃபுள்” என்றார்.

மிஸ்டர்.ஷீ இலையை ஆய்ந்து பார்த்தார், சின்னஞ்சிறிய கிளைகளை சென்று தொடும் நரம்புகள், மஞ்சள் ஆரஞ்சு நிறங்களின் வெவ்வேறு சாயைகள். இவ்வளவு நுணுக்கமாக அவர் இதற்கு முன் உலகை பார்த்ததில்லை. வழக்கம் போல் அவர் மிருதுவான முனைகளும் மங்கலான வண்ணங்களையும்தான் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சித்தார், ஆனால் கண்புரை நீங்கிய நோயாளியைப் போல, அவருக்கு இப்போது எல்லாம் துல்லியமாகவும் பிரகாசமாகவும் தெரிந்தது. மிரட்சியாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருந்தது. “நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்,” என்று மிஸ்டர்.ஷீ சொன்னதும் ஆர்வத்தில் புன்னகை  ஒன்றை தெறித்தார். மிஸ்டர்.ஷீ பெஞ்சில் அமர்ந்து ஆங்கிலத்தில் சொன்னார், “நான் ராக்கெட் சயிண்டிஸ்ட் இல்லை.”

மேடம் அழுத்தமாக தலையசைத்தார். மிஸ்டர்.ஷீ அவரைப் பார்த்தார், பின் பார்வையை விலக்கிக் கொண்டார். “நான் ஒரு பெண்ணால்தான் ராக்கெட் சயிண்டிஸ்டாக இருக்க முடியாமல் போனது. பேசிக்கொண்டது மட்டும் தான் நாங்கள் செய்தது. பேசிக் கொள்வதில் தவறொன்றும் இல்லை என்று நீங்கள் யோசிக்கலாம், ஆனால் அப்படியில்லை, திருமணமான ஒரு ஆணும், திருமணமாகாத ஒரு பெண்ணும் பேசிக்கொள்வது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அப்படித் துன்பமிக்கதாக எங்களின் அந்நாட்கள் இருந்தது.” ஆமாம், துன்பம் தான் சரியான வார்த்தை. அந்நாட்களைப் பற்றி இளவயதுக்காரர்கள் பேசிக்கொள்வதை போல் கிறுக்குத்தனம் அல்ல. “பேசாமல் இருப்பது எங்கள் பயிற்சியின் ஒரு பகுதி என்றாலும் பேச வேண்டும் என்ற விழைவு எப்போதும் இருக்கும்.” மேலும் பேசிக்கொள்வது எவ்வளவு பொதுவான விஷயம், ஆனால் எப்படி மக்கள் அதற்கு அடிமையாகியிருக்கிறார்கள்! அவர்களின் பேச்சு அலுவலுகத்தில் ஐந்து நிமிட இடைவெளிகளில் தொடங்கி, பின்னர் உணவிடுதியில் மதிய உணவு நேரம் முழுதும் பேசுவதாக மாறியது. அவர்களின் பேச்சு இம்மாபெரும் சரித்திரத்தில் பங்கு கொள்வதில் இருக்கும் நம்பிக்கையும் மனயெழுச்சியும் பற்றி  இருந்தது, தனது கம்யூனிச அன்னைக்காக முதல் ராக்கெட்டை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

“ஒருமுறை பேசத் தொடங்கிவிட்டால், நீங்கள் மேலும் மேலும் பேசிக்கொண்டே போவீர்கள். வீட்டிற்குச் சென்று மனைவியிடம் பேசுவதிலிருந்து இது வித்தியாசமானது, எதையும் மறைக்கத் தேவையில்லை. எங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியும்தான் பேசினோம். பேசுவதென்பது கடிவாளமற்ற குதிரையில் சவாரி செய்வதைப் போன்றது எங்கு சென்று நிற்கும் என்று தெரியாது அதை பற்றி கவலைப்படவும் தேவையிருக்காது. எங்களுடைய பேச்சும் அப்படிதானிருந்தது, அவர்கள் சொன்னதைப் போல எங்களுக்குள் வேறெந்த உறவும் இல்லை. நாங்கள் காதலிக்கவில்லை.” மிஸ்டர்.ஷீ இப்படி சொல்லியதும் ஒரு சிறுகணம் தன் வார்த்தைகளாலேயே குழம்பிப் போனார். எந்த வகையான காதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்? நிச்சயம் அவர்களுக்குள் காதல் இருந்தது, ஆனால் அவர்கள் சந்தேகப்பட்டது போல் அல்ல – அவர் எப்போதுமே அவர்களுக்குள் ஒரு இடைவெளியை வைத்திருந்தார், அவர்களின் கைகள் தொட்டுக் கொண்டதில்லை. அவர்கள் மனம் திறந்து பேசிய காதல், அவர்கள் மனங்கள் இணைந்த காதல் – அதுவும் காதல் தானே? அப்படித்தானே அவர் மகளும் தன் திருமண உறவை முறித்துக் கொண்டார் – வேறொரு ஆணோடு அவள் நிகழ்த்திய உரையாடல்களால்தானே? மிஸ்டர்.ஷீ பெஞ்சில் தள்ளி அமர்ந்தார், அக்டோபர் மாத குளிர் காற்றையும் மீறி அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. அவர்களின் உறவின் மீது குற்றம் சுமத்தப்பட்டபோது அதை அவர்  விடாப்பிடியாக மறுத்தார்; மாகாணத் தலைநகருக்கு அவள் அணுப்பப்பட்டபோது அவளுக்காக அவர் மன்றாடினார். அவள் ஒரு சிறந்த பொறிப்பாளர் ஆனால் சுலபமாக புதியவர் பயின்றுக் கொள்ளக் கூடிய வேலை அது. அவருக்கோ தன் காதல் விவகாரத்தை பகிரங்கமாக தன் தவறென ஒப்புக் கொண்டால் அவர் தன் பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அது நியாமற்றது என்று அவர் நம்பியதால் மறுத்துவிட்டார். “என்னுடைய முப்பத்தி இரண்டு வயதில் நான் ராக்கெட் சயிண்டிஸ்டாக இருந்தது முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு நான் எந்த ஆராய்ச்சியிலுமே ஈடுபடவில்லை, ஆனாலும் வேலையிடத்தில் நிகழும் எல்லாமே ரகசியமாக காக்கப்படவேண்டுமென்பதால் என் மனைவிக்கு எதுவும் தெரியாது.“ அப்படித்தான் அவர் எண்ணியிருந்தார் நேற்று இரவு வரை. அவரளவு பயிற்சி பெற்ற ஒருவருக்கு பொருத்தமற்ற எடுபிடி வேலைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டது – தலைவர் மாவோ மற்றும் அவர் கட்சியினரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு அலுவலகத்தை அலங்காரப்படுத்துவது; ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து இன்னொன்றுக்கு நோட்டுப் புத்தகங்களையும் காகிதங்களையும் வண்டியில் வைத்து தள்ளிச் செல்வது; மாலையில் உடன் பணிபுரிபவர்களிடமிருந்து எழுதிய காகிதங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் வாங்கி சேகரித்து, ஒன்றாக கட்டி, இரண்டு பாதுகாவலர்கள் முன்னிலையில் தனியறையில் வைத்து பூட்டுவது. வீட்டிற்கு தன் மனைவியிடம் எண்ணங்களில் மூழ்கிப்போன ராக்கெட் சயிண்டிஸ்டாக திரும்பிச் செல்வார். மனைவியின் பார்வையில் எழும் கேள்விகளை அது ஒரு நாள் மறைந்து போகும் வரை தவிர்த்து வந்தார்; தன் மகளும் தன் மனைவியைப் போலவே அமைதியாகவும் புரிதலோடும் வளர்வதைப் பார்த்தார், நல்ல குழந்தை அவள், நல்ல பெண். அவரின் அலுவலக வாழ்வில் மொத்தம் முப்பத்தியிரண்டு பாதுகாவலர்கள் மாறினர், இளம் வீரர்கள் சீருடையில் தன் இடுப்பில் காலியான துப்பாக்கி உறையோடு, ஆனால் அவர்கள் கைகளில் வைத்திருந்த குழல் துப்பாக்கியின் கத்தி முனை உண்மையானது.

அதற்குப் பிறகு அவருக்கு வேறு வழியில்லை. அவர் எடுத்த முடிவு அவர் மனைவிக்கும் அந்தப் பெண்ணுக்கும் நியாமனதுதானே? அப்பழியை ஏற்றுக் கொண்டு, தன் நல்ல மனைவியை காயப்படுத்தி சுயநலமான ராக்கெட் சயிண்டிஸ்டாக வாழ முடியுமா? – அல்ல, மேலும் சாத்தியமற்ற ஒரு முடிவு, வேறொரு பெண்ணோடு வாழும் விருப்பமேயில்லாதபோதும், வேலையை விட்டு, மனைவியையும் இரண்டு வயது மகளையும் விட்டு பிரிவது? “நாம் எதை துறக்கிறோமோ அதுதான் வாழ்வை அர்த்தமுடையதாக ஆக்குகிறது” – மிஸ்டர்.ஷீ தன் பயிற்சியின்போது பழக்கப்பட்ட வரியை இப்போது மீண்டும் சொல்லிப் பார்த்தார். தலையை வேகமாக குலுக்கினார். அந்நிய நாடு அந்நியமான எண்ணங்களை கொடுக்கிறது என்று நினைத்தார். இவரைப் போல வயதான ஒருவருக்கு கடந்த கால நினைவுகளில் உலவுவது நல்லதல்ல. ஒரு நல்ல மனிதன் அந்த கணத்தில்தான் வாழ வேண்டும், இந்த மேடத்தோடு, அருகில் அமர்ந்து ஒரு பூரணமான தங்க விசிறியிலையை இவர் பார்க்க வேண்டி சூரியனை நோக்கி பிடித்திருக்கும் அன்புக்குரிய தோழியோடு.

தமிழில்: நரேன்

முந்தைய கட்டுரைஊட்டி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅன்னா கரீனினா -செந்தில்