செல்லம்மாள் -கடிதங்கள்

புதுமைப்பித்தன்

 

செல்லம்மாள் – ஒருவாசிப்பு

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

புதுமைப்பித்தனின்  செல்லம்மாள்  சிறுகதையில் – காதலுமில்லை,  கத்தரிக்காயும்  தென்படவில்லை.  இச்சிறுகதை  ஒரு உளவியல்  த்ரில்லர் என்றே  தோன்றுகிறது.  தென்தமிழகத்திலிருந்து  செல்லம்மாள்  எனும் செடியை  வேரோடு  பிடுங்கி  சென்னையில்  நடுகிறார் பிரமநாயகம்.  அந்த  செடிக்கு  தேவையான  ஒளி,  நீர்,  காற்று,  உரம்   எதுவும் தரப்படவில்லை.  அவர் அழைத்து  வரும் வைத்தியர்களும் படு மோசம்.

பொருளாதார  வசதியற்ற குடும்பங்களில்  பெண்கள் வேலைக்கு செல்வது  நடைமுறை.  அதிகாலை  வேலைக்குபுறப்படும்  பெண்களின் குறிப்பு  கதையில் வருகிறது.  பூ தொடுக்கலாம்.  இட்லி சுட்டு விற்கலாம்.  அதற்கானசாத்தியங்கள்  செல்லம்மாளுக்கு கிடைத்ததா?  செல்லம்மாளின்  நோயால்  பிரமநாயகம்  நசிகிறாரா அல்லது பிரமநாயகத்தின்  இயலாமையால்  செல்லம்மாள்  சீரழிகிறாளா  என்றொரு சிக்கல்  வருகிறது.  ஒரு வேளை மீண்டும் பிறந்த ஊருக்கே  போயிருந்தால்  செல்லம்மாள்  குணமடைந்திருக்கலாம்.

ஜாக்ரதம்,  ஸ்வப்னம், சுஷுப்தி  என மூன்று நிலைகள்.  ஜாக்ரதத்தில்  செல்லம்மாள்  ஒரு அற்புத மனைவியாக இருக்கிறாள்.  உடல் நலமில்லை யென்றாலும்  எழுந்து கணவனுக்காக  தோசை வார்க்கிறாள்.  தந்தி  கொடுத்தால் காசு அதிகம்,  கடுதாசி போடுங்கள்  என்று  கூறி கணவனின்  செலவை  குறைக்க  விரும்புகிறாள்.  ஆனால் ஸ்வப்னத்தில்  அவளது  ஆசைகள்,  அழுத்தி  வைக்கப்பட்ட  உணர்வுகள்  வெளிப்படுகின்றது.  பாதி தூக்கத்தில் கணவனை  துரோகி துரோகி என அவளது  ஆழ்மனம்  சொல்லிவிடுகிறது.

செல்லம்மாளின்  தாய்  இறந்த செய்தி  செல்லம்மாளுக்கு  சரியான நேரத்தில்  கிடைத்ததா?  அவளது தாயின் இறுதி சடங்குகளுக்கு அவளால்  போக முடிந்ததா?  செல்லம்மாளின் தாய்  உயிருடன் இருப்பதாக  அவள்நம்புகிறாள். அவளது  பிறந்த மண் என்பது  அவளுக்கொரு நம்பிக்கை.  செல்லம்மாளின்  நம்பிக்கைகள்  சிதையும்பொழுது  அவளது  உடல் நோய்,  மன நோயாகவும்  தன்னை விஸ்தரிக்கிறது.  செல்லம்மாள்  பிளவுகொண்ட ஆளுமையாகிவிடுகிறாள்.  பிரமநாயகத்துக்கு  அனைத்தும் தெரிந்தும்  அரிதாரம்  பூசிக்கொண்டு  பாவனைகள் காண்பிக்கிறார்.

ஆங்கிலத்தில்  ஸ்டாக்ஹோல்ம் சிண்ட்ரோம்  என்பார்கள். கடத்தல்  குற்றவாளியிடம்  சிக்கிய  பணயக்கைதி  ஒருகட்டத்தில்  குற்றவாளியின்  சித்தாந்தத்தில்  இணைந்து  நம்ப ஆரம்பித்து விடுவார்கள்.  பிரமநாயகம் செல்லம்மாளை  கொஞ்சம்  கொஞ்சமாய்  அழித்து , கொலை செய்து,  கடைசியில்  அவரே  பாடை  கட்டிவிடுகிறார்.  வருத்தமற்ற  ஒப்பாரிகளும்,  இரட்டைச்  சங்கு எழுப்புகின்ற  ஒலியும் , இக்கதையில் நடக்கும் வேஷங்கள் ,  பாவனைகள் , இரட்டை  நிலைகள்  அனைத்தையும்  அம்பலப்படுத்தி  முடித்து  வைக்கிறது.

இன்னும்  பல  வருடங்கள்  கழித்தும்,  புதுமைப்பித்தனின்  இந்த  கதையை  பற்றி  பேசுவதற்கு  பல விஷயங்கள் புதைந்துள்ளன.

நன்றி. அன்புடன்,

ராஜா.

 

அன்புள்ள ஜெ

பொதுவாக இலக்கிய விமர்சனத்திற்கு என்ன பயன் என்ற எண்ணம் எனக்கு உண்டு. பயனில்லை என்று சொல்லி வருவேன். ஆனால் செல்லம்மாள் பற்றிய கட்டுரை அந்த எண்ணத்தை மாற்றியது. அக்கதை எனக்குப்பிடித்தமானது. ஆனால் அந்த நுட்பத்தை நான் இதுவரை வாசிக்கவில்லை. ஒரு மேம்பட்ட வாசகரின் உதவி என்ற அளவில் இலக்கியவிமர்சனம் மிக அவசியமானது என்ற எண்ணம் ஏற்பட்டது

சந்திரசேகர்

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-53
அடுத்த கட்டுரைகெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள்