கெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள்

Susa

கெடிலநதிக்கரை நாகரீகம்

 

அன்பின் சீனு,

 

’’கெடிலக்கரை நாகரிகம்’’ நூலை வாசித்தேன். அதன் இணைப்பை அளித்ததற்கு மிக்க நன்றி.

 

 

ஒரு சிறு நதியை இவ்வளவு நுட்பமாய்ப் பின் தொடர ஒரு படைப்பு மனத்தால் மட்டுமே முடியும். மூன்று தாலுக்காக்களுக்குள் உற்பத்தியாகி ஓடி கடலுடன் சங்கமிக்கும் ஒரு ஆற்றை முகாந்திரமாய் கொண்டு அப்பிரதேசத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் மிக நுட்பமாக எழுதியுள்ள சுந்தர சண்முகனார் போற்றுதலுக்குரியவர்.

 

 

பண்பாட்டின் வெவ்வேறு முகங்களை கல்வெட்டுக்கள் மூலமாகவும் சமய இலக்கியங்கள் மூலமாகவும் அரசுரிமை மாற்றங்கள் மூலமாகவும் வணிகப் பரவல் வழியாகவும் அடிப்படை கட்டுமானங்கள் உருவாக்கப்படுவதன் சித்திரங்கள் வழியாகவும் ஆர்வமூட்டக்கூடிய சரளமான மொழியில் எழுதியிருக்கிறார் சுந்தர சண்முகனார்.தளத்தில் தங்கள் கடிதம் வெளியான அன்றே நூலை தரவிரக்கம் செய்து கொண்டேன்.  மறுநாள்  காலை வாசிக்கத் தொடங்கி அன்று மாலையே வாசித்து முடித்தேன். அந்நூலின் வழியே பல அறிவுத்துறைகளை அணுகி வாசித்த அனுபவம் வாய்த்தது.

 

 

‘’கெடிலக்கரை நாகரிகம்’’ பலரால் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாலாவது.

 

 

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

 

 

அன்புள்ள ஜெ

 

கெடிலக்கரை நாகரீகம் முக்கியமான நூல். நீங்கள் சொன்னபிறகே கேள்விப்படுகிறேன். என் சொந்த ஊர் கடலூர்தான். ஆனால் ஊருடன் தொடர்பு இல்லை. வாசித்ததுமே ஒரு பெருமிதம் வந்தது. கூடவே இதுவரை இந்த அறிஞர் பெயரை அறியாமலேயே இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியும் வந்தது.

 

மிகத்தெளிவான நடையில் மிகையே இல்லாமல் வரலாற்றுச் சித்திரத்தை அளித்திருக்கிறார். திராவிட இயக்கத்தவர் என்கிறீர்கள். அவர்கள் சொல்லும் முதற்குரங்கு தமிழ்க்குரங்கு என்னும் மனநோய் எல்லாம் கிடையாது. அறிவியல்நோக்கு இருக்கிறது. முடிவுகளை தான் சொல்லக்கூடாது, தான் தொகுப்பாளர் மட்டுமே என்னும் அடக்கம் உள்ளது. தமிழுக்கு ஒரு கொடை இந்த நூல். அறிமுகம் செய்தமைக்கு நன்றி

 

கோவிந்தராஜன்

முந்தைய கட்டுரைசெல்லம்மாள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகண்ணகியும் மாதவியும்