இலக்கியமும் மொழியும்

 kuri[குறிஞ்சிவேலன்]

வணக்கம் திரு ஜெயமோகன்

நான் படித்த முதல் மொழியாக்க நூல் சுந்தர ராமசாமி தமிழில் மொழியாக்கம் செய்த தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன். பிறகு ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழி நூல்களை ஆங்கில மொழியாக்கத்தில் படித்திருக்கிறேன். தற்போது அன்னா கரேனினா படித்துமுடித்தவுடன் ஒரு சந்தேகம் .

டால்ஸ்டாயின் நூல்களின் மூலம் ஒரு ரஷ்யனின் வாழ்க்கை முறையையும் அவன் எண்ணங்களையும் வழக்கங்களையும் என்னால் அறிய முடிகிறது. ரஷ்ய மொழியில் ஒரு வார்த்தை கூட எனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தின் மூலம். இவ்வாறிருக்கையில் கதை சொல்லலை தவிர ஒரு மொழியின் வேலை இலக்கியத்தில் என்ன?

sukumaran3
சுகுமாரன்

அந்த மொழியின் கவித்துவத்தையும் குறியீடுகளையும் பிற மொழிகளினால் என்னால் அறிய முடியும் என்றால் மூல மொழியின் செயலும் தேவையும் என்ன? இலக்கியம் ஒரு பொது மொழியில் இயங்க கூடுமென்றால் அதற்கு தனி மொழிகள் தருவது என்ன? தேர்ந்த மொழியாக்கத்தின் வழியே மட்டும் ஜெர்மனி அல்லது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு(இந்திய வரலாறு மற்றும் புராண தகவல்கள்  தெரிந்தோ அல்லாமலோ இருப்பவருக்கு) வெண்முரசின்அம்பையையும் பால்ஹிகரையும் புரிய வைக்க கூடுமோ?

ஸ்ரீராம்

பி.கு. https://ramblingering.wordpress.com/2018/05/07/mere-oblivion-or-grit-and-determination/

kulachal-yusuf1
குளச்சல் மு யூசுப்

அன்புள்ள ஸ்ரீராம்

நான் வாசித்த மூலநூல்களைக் கொண்டு இதைச் சொல்லமுடியும், ஆங்கிலத்தில் நடையழகை என்னால் ரசிக்கமுடிவதில்லை. அது நான் உழைத்து வாசிக்கும் மொழியாகவே எனக்கு உள்ளது. ஏனென்றால் நான் ஆங்கிலம் செவியில் ஒலிக்கும் சூழலில் வாழவில்லை. ஆங்கிலத்தைப் பேசிப் புழங்கவுமில்லை. ஆனால் மலையாளம் என் அகத்தில் நிகழும் மொழி.

மலையாளத்திலிருந்து நிர்மால்யா, குளச்சல் மு யூசுப், யூமா வாசுகி, குறிஞ்சிவேலன் , சிற்பி, இளம்பாரதி, ஆ.மாதவன், நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி, குமாரி சி.எஸ்.விஜயம், எம்.எஸ், கே.வி.ஷைலஜா, கே.வி.ஜெயஸ்ரீ போன்ற பலர் மொழியாக்கங்களைச் செய்திருக்கிறார்கள். நான் மூலத்தில் ரசித்த ஆக்கங்களை இந்த மொழியாக்கங்களில் வாசிக்கையில்தான் எவ்வளவு ஒழுகிச்சென்றுவிடுகிறது என உணர்கிறேன். இவ்வளவுக்கும் இவற்றில் பல மிகச்சிறந்த மொழியாக்கங்கள்.

jeya
கே வி ஜெயஸ்ரீ

சொற்றொடரை ஒரு குறிப்பிட்டவகையில் அமைப்பதனூடாக வரும் அழகும் நுட்பமுமே நடை எனப்படுகிறது. அந்த ஆசிரியனின் கைரேகை அளவுக்கு அது அவனுக்கே உரியது.அதோடு அந்த மொழிமாறுபாடுகளின் சுவைதான் இலக்கியத்தில் வட்டாரவேறுபாடுகளை உருவாக்குகிறது. ஒரு அமெரிக்கருக்கு தோசை ஓர் உணவுதான். நமக்கு நெல்லைத் தோசைக்கும் மதுரைத் தோசைக்குமான வேறுபாடு முக்கியமானது. அதில்தான் பண்பாடே உள்ளது.

யூமா வாசுகி
யூமா வாசுகி

அந்த வேறுபாடு இம்மொழியாக்கங்களில் இல்லாமலாகிவிடுகிறது. மலையாளம் பாதிப்பங்கு தமிழேதான். இருந்தும் அழகுகளும் நுட்பங்களும் தவறிவிடுகின்றன. இந்தியமொழி படைப்புக்களை ஆங்கிலத்தில் வாசிப்பது மிகப்பெரிய வதை. வண்ணதாசனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் அந்த மென்மை, காட்சிச் சித்தரிப்பு, உணர்ச்சிகரமான கனவுத்தன்மை, பூடகமான உறவுச்சிக்கல்கள் எல்லாம் கொண்டுவரப்படும். நெல்லைச்சுவை என ஒன்றை அவர் ஆக்கங்களில் உணர்கிறோமே அது மறைந்துவிடும்.

ஆகவே மொழியாக்கம் என்பது ஒருமொழியின் ஆக்கங்களில் எவை இன்னொன்றுக்குச் செல்லக்கூடுமோ அவற்றை மட்டும் கொண்டுசெல்வதுதான். முழுமையாகக் கொண்டுசெல்லவே இயலாது. கவிதைகளில் சொல்லவே வேண்டாம், மூலக்கவிதையின் ஒரு தொலைநகல்தான் மொழியாக்கம். அல்லது பலசமயம் அது இன்னொரு தனிக்கவிதை.

A.Madhavan
ஆ மாதவன்

உண்மையில் இலக்கியங்கள் நம் கற்பனையில் நிகழ்கின்றன. மொழி என்பது கற்பனை வழிந்தோடுவதற்கான தடம். கற்பனையைத் தொடங்கி வைக்கும் அசைவு. ஆகவே அளிக்கப்பட்ட மொழியிலிருந்து கற்பனையால் எழுந்து மொழியை மிக விரைவிலேயே மறந்து முழுமையான ஆக்கத்தை நம்முள் நிகழ்த்திக்கொள்ளத் தொடங்குகிறோம். நாம் வாசித்திருக்கும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் அவ்வகையில் பாதிக்குமேல் நம் உருவாக்கங்கள். மூலமொழி அறிந்தவர் உள்ளத்தில் இருக்கும் சித்திரத்தை நம்மால் அடையமுடியாது

உதாரணமாக இந்தியாவில் எங்கும் துர்கனேவுக்கு பெரிய இடமில்லை. ஆனால் ரஷ்யர்கள் பலர் அவருக்கு பிறரை விட இடமளிப்பார்கள். ஏனென்றால் தல்ஸ்தோய். தஸ்தயேவ்ஸ்கி இருவரிடமும் இல்லாத நுண்ணிய நடையழகு கொண்டவர் துர்கனேவ். அவருடைய சொல்லாட்சிகள் நவீன ருஷ்யமொழியை உருவாக்கியவை, இன்றும் உயிருடன் உள்ளவை. நமக்கு அந்த துர்கனேவ் கிடைப்பதேயில்லை

எம்.எஸ். [நன்றி மின்னம்பலம்]
எம்.எஸ். [நன்றி மின்னம்பலம்]

இலக்கியம் வெறும் மொழியனுபவம் அல்ல. அது கருத்துக்களில் பார்வைகளில் உருவாக்கும் மாற்றமே முக்கியமானது. ஆனால் அந்த மாற்றத்தை உருவாக்க அதன் மொழியே கருவி. மொழியிலிருந்து இலக்கியத்தை முழுமையாகப் பிரிக்கமுடியாது. பெயர்த்தெடுத்த இடத்தில் எஞ்சுவது மிக முக்கியமானது. அதைவிட அதை எந்த மொழிகளில் எப்படி மொழியாக்கம் செய்தாலும் முதல்மொழியின்அழகையும் நறுமணத்தையும் நுட்பமாக தன்னுள்கொண்டிருக்கும்.

ஜெ

மலையாள இலக்கியம்
மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.
முந்தைய கட்டுரைகாஞ்சனையும் மகாமசானமும்
அடுத்த கட்டுரைஅஞ்சலி பாலகுமாரன்