ரகசியப்பேய்

kupara[6]

 

கு.ப.ராஜகோபாலன்

’காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?” என்ற பாட்டு இன்றும்கூட அடிக்கடி காதில் விழுந்துகொண்டிருக்கிறது. கணவனைப் பிரிந்த மனைவி அவனுடன் சேரும் ஏக்கத்துடன் பாடும் கண்ணீர் பாடல் அது. “கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா” என அவள் ஏங்குவாள். இந்த உணர்வுநிலை கொண்ட ஏராளமான பாடல்கள் அன்று வெளிவந்தன. “கண்கள் இரண்டும் என்று உன்னைக்கண்டு பேசுமோ” இன்னொரு பெரும்புகழ் பெற்ற பாடல்

நான் தமிழ்சினிமாவின் அன்றைய பிரமுகர் ஒருவரிடம் அதைப்பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார் “சினிமா என்பது மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அளிப்பது. ஒரு சின்ன ஊருக்குள் சென்று அங்குள்ள ஓட்டலில் அமர்ந்தால் அந்த மக்களின் சுவை தெரியும். தொடர்ச்சியாக மக்கள் கருத்தை கவனித்து எது விரும்பப்படுகிறதோ அதைச் சேர்த்துக்கொண்டே இருப்போம். அப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டதுதான் கணவனைப் பிரிந்த பெண்ணின் துக்கம். அன்றெல்லாம் ஒரு வீட்டில் எப்படியும் ஒரு பெண் கைம்பெண்ணாகவோ, கணவனால் கைவிடப்பட்டவளாகவோ, திருமணமாகாத முதிர்கன்னியாகவோ இருப்பாள். அவர்களுக்கு இந்தவகையான பாட்டுக்கள் மிகவும் பிடிக்கும்”

“அவர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாபார்க்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் துக்கத்தை மற்றபெண்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். உள்ளூர அந்தநிலைபற்றிய பயம் அத்தனை பெண்களிடமும் இருக்கும். ஆகவே அந்தப்பாடல்களை பெண்கள் ஒருவகையான உணர்ச்சிக்கொந்தளிப்புடன்தான் கேட்பார்கள்” என்றார் அந்தமூத்த சினிமாக்காரர். “அன்றைய வினியோகஸ்தர்கள் அத்தகைய பாடலை வைக்கும்படி கேட்பார்கள். அன்று வானொலியில் ஒருபாடல் அடிக்கடி ஒலிபரப்பாவதுதான் மிகப்பெரிய விளம்பரம். படங்கள் இரண்டு வருடம் வரை திரையரங்குகளில் இருக்கும். வானொலிக்கு பாடலை ஆறுமாதம் முன்னரே கொடுத்து பிரபலமாக்கிய பின்னர்தான் படமே வெளிவரும்”

அது உண்மை என எனக்கு உடனே தெரிந்தது. சினிமாவுக்கு முந்தைய கலைவடிவம் என்றால் தெருக்கூத்து. அதில் மிகப்புகழ்பெற்ற கதைகள் நல்லதங்காள், அரிஅசந்திரன், சீதை வனவாசம். மூன்றுமே பெண்களின் நிராதரவான நிலையைப்பாடுபவை. அரிச்சந்திரன் கதையில் சந்திரமதி புலம்பல் காட்சியை அன்றெல்லாம் பலமணிநேரம் பாடுவார்கள். பெண்களெல்லாம் கேட்டுக் கதறி அழுவார்கள்.

அதற்கான சமூகச்சூழலை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். அன்றுதான் காசநோய் , டைஃபாய்டு போன்ற எளிதில்பரவும் நோய்கள் இந்தியாவில் அதிகமாக வரத்தொடங்கின. அதே காலகட்டத்தில்தான் மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் பள்ளி, ரயில்,பஸ், அலுவலகம், நாடகக்கொட்டகை  போன்ற இடங்களும் அறிமுகமாயின. அதற்குமுன்பு பலவகையான மக்கள் ஒன்றுகூடும் தருணம் என்பது நம் சமூகவாழ்க்கையில் மிகமிகக்குறைவு. கோயில்திருவிழாக்கள், போர்கள் மட்டுமே அத்தகைய சந்தர்ப்பங்கள்.

அன்று அதிகமாக வெளியே சென்றவர்கள் ஆண்கள். ஆகவே ஆண்கள் அதிகமாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி இளவயதிலேயே உயிரிழந்தார்கள். குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் பையன்கள் இளவயதில் காசநோய்க்கு ஆளாகி உயிரிழப்பது மிக அதிகம். காரணம் நமக்கு பொது இடங்களில் துப்புவதில் தயக்கம் அன்றும் இன்றும் இல்லை என்பது. அந்தக்கால கதைகளில் சிறுவர்கள் இளவயதில் காசநோய், டைபாய்ட் வந்து இறப்பது அடிக்கடி வருவது இதனால்தான்

ஆனால்  பெண்கள் அதிகமும் வீட்டுக்குள் இருந்தார்கள், ஆகவே அவர்கள் நோய்த்தொற்றி இறப்பது ஒப்புநோக்க குறைவு.ஆகவே ஆண்களின் எண்ணிக்கை அன்று பெண்களுடன் ஒப்பிட மிகக்குறைவு. ஆண்கள் மிக அரிய பொருளாக கருதப்பட்டு பெண்ணைப்பெற்றவர்களால் ‘விலைக்கு’ வாங்கப்பட்டனர். வரதட்சிணை, எதிர்ஜாமீன், மஞ்சக்காணி என்றெல்லாம் சொல்லப்பட்ட அந்த முறையால் பெண்களுக்குத் திருமணமாவதே அரிதாக இருந்தது. பெண்கள் திருமணமாகாமலேயே வீட்டுக்குள் இருந்துமுதிர்ந்து மடிவது சாதாரணம்

அன்று  பையனைப்பெற்றவர்களின் அநீதியும்  ஆர்ப்பாட்டமும் உச்சகட்டத்தில் இருந்தன. பெண்ணைப்பெற்றவர்கள் ‘சம்பந்திகளிடம்’ அடிமைகள்போலத்தான் நடந்துகொண்டனர். ஏனென்றால் பெண்ணின் தலையெழுத்தே அவர்களின் கையில் இருந்தது. சிறியகாரணத்திற்காகக்கூட பெண்களை கைவிட்டு  வேறுபெண்களை பையன்களுக்குத் திருமணம் செய்துவைத்தனர். அதோடு வரதட்சிணைக்கு ஆசைப்பட்டு பெண்ணை திரும்பக்கொண்டு விட்டுவிடுவதும் அதிகம்.  வாழாவெட்டி என்ற சொல் தமிழில் புழக்கத்திற்கு வந்தது. அந்தப்பெண் அப்படியே வீட்டுக்குள் இருட்டில் வாழ்ந்து உளுத்து செத்துப்போவாள்.

தமிழகத்தின் பலசமூகங்களில்  பெண்களுக்கு ஆண்கள் பணம்கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது. இது பரிசம் போடுதல் என அழைக்கப்பட்டது. முஸ்லீம்கள் மஹர் எனப்படும் பணத்தைக்கொடுத்து பெண்ணை பெற்றுக்கொண்டனர். ஆனால் இக்காலகட்டத்தில் அவர்களிலும் வரதட்சிணை முறை ஊடுருவியது.

பெண்களை இளம்வயதிலேயே திருமணம் செய்துகொடுப்பது அன்றைய வழக்கம். வெளியுலகைச் சந்திக்கச்செல்லும் இளைஞன் நோயுறாமல் மீள்வது குறைவு. ஆகவே இளம்விதவைகள் அன்று மிக அதிகம். தமிழகத்தின் பல சாதிகளில் மறுமணம் அனுமதிக்கப்படிருந்தது. ஆனால் அன்று விதவைகள் மறுமணம் செய்வது உயர்குடி வழக்கம் அல்ல என்ற நம்பிக்கை பரவலாக ஆரம்பித்தமையால் விதவைகளின் எண்ணிக்கை பெருகியது. கூடவே பெண்களை ஆண்கள் கைவிடுவதும் மிகுதியாகியது. ஆண்கள் அன்று மிக மிக இளம் வயதினர். முடிவெடுக்கும் முதிர்ச்சியும் சுதந்திரமும் அற்றவர்கள். பெரும்பாலும் அவர்களின் குடும்பங்களே அவர்களை மனைவியைத் துறக்கும்படிச் செய்தன.

இதற்கு ஒரு சமூகக் காரணமும் உண்டு. தமிழ்ச்சாதிகள் காலாகாலமாக ஒரு சின்ன வட்டத்திற்குள் வாழ்ந்துவந்தவர்கள். அவர்களின் உறவுமுறைகள் எல்லாமே ஓரிரு கிராமங்களுக்குள், உறவுமுறைகளுக்குள்தான். ஆகவே குடும்பங்கள் ஒன்றையொன்று மிகவும் நெருங்கி அறிந்திருந்தன. குடும்பங்களுக்கு பொதுவான பெரியவர்கள் இருந்தார்கள். ஆனால் 1780 களிலும் 1880களிலும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் உருவான மாபெரும் பஞ்சங்களால் பெரும்பாலான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. புதுப்புது இடங்களில்  சென்று வாழ ஆரம்பித்தன. ஆகவே முற்றிலும் புதிய குடும்பங்களில் பெண் எடுப்பதும் கொடுப்பதும் வழக்கமாகியது.

இந்த புதுவழக்கம் காரணமாக குடும்பமனநிலைகள், பழக்கவழக்கங்கள் நடுவே சரியான புரிதல்கள் உருவாகாமல் மோதல்கள் நிகழ்ந்தன. கல்யாணங்களில் தகராறுகள் நடப்பதும், கல்யாணமான சிலவருடங்களிலேயே குடும்பங்கள் சண்டையிட்டு பிரிவதும் அன்று மிகச்சாதாரணம். இது ஐம்பது அறுபதுகள் வரைகூட நீடித்தது. “நிறுத்துங்கள் கல்யாணத்தை!” என்ற வசனம் இடம்பெறாத அக்கால சினிமாக்கள் மிகக்குறைவு.

1930கள் முதல்தான் தமிழில் நவீன இலக்கியம் உருவாகத் தொடங்கியது. அதன் ஆரம்பகால படைப்பாளிகளான புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றவர்களின் கதைகளில் பெண்கள் அடைந்திருந்த இந்த துயரநிலை மிக விரிவாகவே பேசப்பட்டுள்ளது. அன்றைய விதவைகளும் வாழாவெட்டிகளும் எப்படி சமூகத்தின் பலியாடுகளாக இருந்தனர், அதேசமயம் அந்தச்சமூகத்தால் வெறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர் என்பதை இவர்கள் நெஞ்சை உலுக்கும்விதமாக எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான கதைகள் அந்தப்பெண்களை அனுதாபத்துடன் பார்த்து அவர்களின் மறுவாழ்க்கைக்கு அறைகூவும் தொனியில் அமைந்திருந்தன. அவர்களின் பாலியல்வேட்கையைச் சொல்வது அவர்களை அவமதிப்பதாகவே கருதப்பட்டது. அதைத்துணிந்து சொன்ன கதைகளை எழுதியவர் கு.ப.ராஜகோபாலன். ஆனால் மிகப்பூடகமாக, நகைசெய்யும் நிபுணர்கள் ஊசியால் தொட்டு தங்கத்தை எடுத்துவைத்து சித்திரவேலைப்பாடுகளைச் செய்வதுபோல, அவர் அந்த வேட்கையை எழுதினார். பரவலான வாசகர்களுக்கு அன்று அக்கதைகள் சென்று சேரவில்லை. ஏனென்ன்றால் அவர்களுக்கு அக்கதைகளைப்புரிந்துகொள்ளும் இலக்கிய நுண்ணுணர்வு இருக்கவில்லை. ஆனால் இலக்கியச்சூழலில் அவை பெரிதும் கொண்டாடப்பட்டன

அத்தகைய கதைகளில் ஒன்று கு.ப.ராஜ.கோபாலன் எழுதிய ‘ஆற்றாமை’ ஒரு கதை என்றே இதைச் சொல்ல முடியாது. ஒரு சந்தர்ப்பம் மட்டும்தான். சாவித்ரியின் கணவன் அவளை திருமணம் செய்துகொண்டு ஒரே ஒருநாள் மட்டுமே வாழ்ந்தான். உடனே ராணுவத்திற்குத் திரும்பிச்சென்றுவிட்டான். பலவருடங்களாக அவள் தனிமையில் வாழ்கிறாள். அவளுக்கு கணவன் முகம்கூட சரியாக நினைவில் பதியவில்லை. ஆனால் அவனிடமிருந்து தொற்றிக்கொண்ட காமவிருப்பம் உள்ளூர கனன்றுகொண்டே இருக்கிறது. முன்புபோல மனதை வெல்ல அவளால் முடியவில்லை.

அவளுடைய பக்கத்துவீட்டுக்காரியான கமலாவுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. கமலா சாவித்ரியின் தோழிதான், இருவரும் பல அந்தரங்க விஷயங்களை பேசிக்கொள்பவர்கள். கமலாவும் கணவனும் காதலாடிக்கொண்டிருப்பதைக் கண்டு சாவித்ரி உள்ளம் குமுறிக்கொண்டிருக்கிறாள். உண்மையில் அதை கண்டும் காணாமலும் இருக்கவே அவள் விழைகிறாள். அதுமுடியவில்லை. மெல்லிய கேலியும் சீண்டலும் கலந்த வார்த்தைகளைச் சொல்கிறாள். அவளாவது நன்றாக இருக்கட்டும் என்று சொல்லிக்கொள்கிறாள். அதெல்லாம் அவள் ஆழ்மனதை ஆறவைக்கவே இல்லை. ஒண்டுக்குடித்தனம், அந்தப்பக்கம் பேசுவதெல்லாம் இங்கே கேட்கும். புதுமணத்தம்பதிகள் மற்றவர்கள் கேட்பதைப்பற்றி கவலைகொள்வதில்லை. மட்டுமல்ல கொஞ்சம் கேட்கட்டுமே என்றும் கமலா நினைக்க வாய்ப்புண்டு.

அன்று இரவு சாவித்ரி தன் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறாள். பக்கத்துவீட்டில் கமலா தன் கணவனுடன் படுக்கையில் இருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியும். எப்படித்தெரியும் என்றால் எப்படியோ தெரியும் , அவ்வளவுதான். அவள் மானசீகமாக கமலாவாக மாறி நடித்துக்கொண்டிருக்கிறாள் என்றுதான் ஊகிக்கவேண்டியிருக்கிறது. அப்போது எவரோ விலாசம் விசாரித்து வருகிறார்கள். சாவித்ரி கமலாவின் வீட்டுக்கதவை சுட்டிக்காட்டி “அங்கே கேளுங்கள்” என அனுப்பிவிடுகிறாள்

அவர் சென்று கமலாவீட்டின் கதவைத்தட்டியதும் சாவித்ரி தன் வீட்டுக் கதவை மூடிக்கொள்கிறாள். ஆனால் உரையாடல்கள் கேட்கின்றன. கமலாவின் கணவன் ராகவன் எரிச்சலுடன் “ யார்?” என்று கேட்கிறான். “நான் சீனு, மதுரை” என்று குரல் கேட்டதும்  கதவைத்திறந்துவிடுகிறான். உள்ளே அரைகுறை ஆடையில் இருந்த கமலா எழுந்து உள்ளறைக்குள் ஓடுகிறாள்.அது ஒரு கணநேரக்காட்சியாக வந்தவன் கண்ணுக்குப்படுகிறது. அப்படி கண்ணுக்குப்படும் என சாவித்ரிக்கும் தெரியும். கமலா எரிசலும் ஏமாற்றமுமாக கணவனுடன் பேசிக்கொள்வது சாவித்ரி காதில் விழுகிறது. “திருப்திதானா பேயே?” என தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள் சாவித்ரி.

இந்தக்கதையை கலைமகளுக்கு வேறு ஒரு தலைப்பிட்டு அனுப்பியதாகவும் இதிலுள்ள உணர்வு ஒருவகை ஆற்றாமை அல்லவா என ந.பிச்சமூர்த்தி சொன்னதனால் ஆற்றாமை என்று தந்திகொடுத்து தலைப்பை மாற்றியதாகவும் ஒரு செய்தி உண்டு.

மிகச்சாதாரணமான கதைபோலத் தோன்றும். ஆனால் இந்தக்கதையில் ஒரு துளி மட்டுமே தெரியும் ஒரு கசப்பு சென்ற காலங்களில் பெரிய கடல்போல அலையடித்திருக்கிறது.  இந்த கதையில் சாவித்ரி கொள்ளும்  ஆற்றாமை அன்றைய குடும்பங்களில் மிகமுக்கியமான  உறவுச்சிக்கலாக இருந்துள்ளது. ஒரு விதவையோ கைவிடப்பட்ட பெண்ணோ இருக்கும் குடும்பங்களில் பிற ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக இருப்பது மிகப்பெரிய குற்றவுணர்ச்சியை உண்டுபண்ணும். அந்த பெண்ணும் அந்தக்குற்றவுணர்ச்சியை உருவாக்கிக்கொண்டே இருப்பாள். அவ்வாறு ஒரு ஒதுக்கப்பட்ட பெண் பெரும்பாலான குடும்பங்களில் இருப்பாள்.

இந்தக்கதையில் வரும் இதே சந்தர்ப்பத்தை இப்போது அறுபது எழுபது வயதானவர்களில் பாதிப்பேராவது சொந்தவாழ்க்கையில் அனுபவித்திருப்பார்கள். அவர்கள் தங்கள் இணையுடன் சேர்ந்திருப்பதற்கு பலவகையான தடைகளை அன்றைய குடும்பத்திலுள்ள சில பெண்கள் உருவாக்குவார்கள். இணைந்திருக்கையில் ஏதேனும் காரணம் சொல்லி வந்து கதவைத்தட்டுவார்கள். பக்கத்து அறையில் சத்தம்போட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். அல்லது உடல்நலமில்லை என்று நாடகம் ஆடுவார்கள்.

ஆணும் பெண்ணும் இரவு இணைந்திருந்தால் மறுநாள் காலையில் இந்தப்பெண்கள் ஏதேனும் சிறிய சாக்குபோக்கு சொல்லி பெரிய சண்டையும் சச்சரவும் உருவாக்கி அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எல்லாருக்கும் தெரியும் என்ன விஷயம் என்று. ஆனால் அதைமட்டும் வெளிப்படையாகப் பேசவே முடியாது. அந்தப்பெண்களின் எரிச்சலும் ஆற்றாமையும் பரிதாபத்துக்குரியவை, ஆனால் அவர்களை மற்ற பெண்கள் மானசீகமாக வசைபாடி சாபம் போடுவார்கள்.

பலகுடும்பங்களில் கணவன் மனைவி உறவு சிக்கலாவதற்கு அப்பெண்ணின் இளவயதிலேயே விதவையான மாமியார் காரணமாக இருப்பாள். இன்னும் ஆச்சரியம் என்னவென்றால் சில சந்தர்ப்பங்களில் அப்பெண்ணின் தாயாரே அப்படி நடந்துகொள்வதுண்டு. மாமியார்களும் நாத்தனார்களும் பலவகையான குழப்பங்களை உருவாக்குவார்கள். அந்தப்பெண்ணின் நடத்தை சரியில்லை என்றுகூட கிளப்பிவிடுவதுண்டு. பின்னாளில் லட்சுமி இதையெல்லாம் கதைகளாக விரிவாக எழுதியிருக்கிறார்.

இன்றுவாசிக்கையில் இக்கதையின் வரிகளெல்லாம் பூடகமான அர்த்தங்கள் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.  “காபி சாப்பிடவில்லையா?” என்கிறாள் கமலா. “ஆறிப்போய்விட்டது,சாப்பிடவில்லை” என்கிறாள் சாவித்ரி. அந்த இருட்டை மிகப்பூடகமாகச் சொல்லியிருக்கிறார் கு.ப.ராஜகோபாலன். ஆனால் இந்தப்பேய் ஒரு நூறாண்டுக்காலம் நம் குடும்பங்களை ஆட்டிப்படைத்திருக்கிறது என்பது மிக அதிர்ச்சிகரமான உண்மை

முந்தைய கட்டுரைஊட்டி -மணிபாரதி
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-51