ஊட்டி -மணிபாரதி

IMG_1508

அன்புள்ள ஜெ,
முதல் முறையாக காவிய முகாமில் கலந்து கொள்ள போகிறேன் என்ற  ஆர்வத்துடனும் கவிதை அரங்கில் கருத்துரை கூறவேண்டும் என்ற கலக்கத்துடனும்  பாரி, பிரபு,இராஜ மாணிக்கம் , மற்றும் சிவகுமார் ஆகியோருடன் இணைந்து குருகுலம் வந்து சேர்ந்தேன். முதல் நாள்  தொடங்கி மூன்றாம் நாள் வரை தொடர்ந்த சிறுகதை   கவிதை அரங்குகள்  அவைகளை எவ்வாறு  புரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்தின.கம்ப இராமயாண அமர்வு  மரபிலக்கியங்களை எவ்வாறு படிக்க வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தியது.

IMG_1390
லக்ஷ்மி மணிவண்ணன்

 

அரங்கில் கற்றவை மட்டும் அல்லாமல் மூன்று முறை நடந்த நடையிலும் கற்றவை இலக்கிய பற்றிய ஆரம்ப அறிதல் கொண்டவனாக மாற்றி இருக்கின்றது என்று நினைக்கிறேன்.சனி இரவு நீங்கள் சொன்ன பேய்க்கதைகளை இனி என் வாழ்க்கையில் மறக்கமுடியாது என்று நினைக்கிறேன்.பேய்க்கதை கேட்க சூழ்நிலை மிகவும் முக்கியமானது என்று உணர வைத்த தருணம் அது.குரு சிலையின் அடியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிரக்கிறேன்.மின்சாரம் வந்து சில நொடிகளில் சென்று விடுகிறது. பல முறை இது நடக்கிறது.எதிரிருக்கும் கண்ணாடி ஜன்னலில் தூரத்து மலைகள் மின்னலில் தெளிவாகவும் பின் தெளிவற்றதாகவும் தெரிகின்றன. உங்களுடைய மாமா யட்சியை கட்டுப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வந்து பின் அது தப்பிய கதையை கூறும் போது ஜன்னலுக்கு வெளியே ஒரு வெளிச்சம் அது செல்போனின் ஒளிதான் என்று என்று என் தர்க்க மனம் கூறினாலும்  புனைவு மனம்  அதை மறுத்து ஒரு புனைவை முன்வைத்தது.

 

IMG_1542

நண்பரின் வீட்டில் நடந்ததாக சொன்ன நிகழ்வு என் சிறு வயதில்  நான் கண்ட என் தாய்க்கு நடந்த பேயோட்டும் நிகழ்ச்சியை கண்முன்னே  மீண்டும் நிகழ்த்தியது .பிரிவாளுமையா அல்லது பேயா என்று இருபக்கமும் நினைக்க தோன்றும் சுற்றுலா சென்ற  குடும்பத்தில் அங்கே மகள் கண்ணுக்கு  முதலில் தெரியும்  பேய் பின் வீட்டிலும் தென்பட  பிரிவாளுமை என்று மருத்துவம் செய்யப்பட பின் தாய்க்கும் தெரிய தொடங்க இருவர்க்கும்  மருத்துவமும் பேயோட்டுவதற்கான சடங்குகளும் நிறைவேறி இருவரும் வெளிநாடு சென்றபின் தந்தைக்கு தென்படும் கதையை சொல்லி முடிக்கும் போது இன்று கனவில் பேய்  தோன்றும் என்ற நம்பிக்கையுடனே  உறங்கினேன்.

2

ஞாயிறு காலையில் நடந்த இந்திய அறிதல் முறைகள் அமர்வில் முன்னறிவு  என்பதற்கு நீங்கள் அளித்த விளக்கம் எனக்குள் இருந்த பல தகவல்களை ஒன்றிணைந்து  புரிந்து கொள்ள  உதவி செய்தது.அதற்கு முன்வரை  முன்னறிவாக வேதங்கள் உபநிடதங்கள் ஆகியவை மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்தேன்.ஒட்டு மொத்த மானிட குலத்தின் அறிவையும் முன்னறிவாக கொள்ளலாம் என்று கூறியவுடன் நானறிந்த தகவல்களான செவ்விந்தியரின் மனிதன் விலங்குகளின் வகைதான் என்ற தகவலும் பாலிநேசியரின் மூதாதையர் இறப்பதில்லை அவர்கள் கனவுக்குள் சென்று விடுகிறார்கள்   என்பதும் வெண்முரசு–‘குருதிச்சாரல்’–77ல் இளைய யாதவர். “தொல்முனிவர் யாத்து வியாசர் தொகுத்த நால்வேதம் இந்நிலத்திற்கும் இம்மொழிக்கும் இங்குள குலங்களுக்குமானது. விரிந்துளது உலகு. ஒருநாள் துவாரகையின் கடல்முகத்தில் நின்று நோக்குக! மனிதமுகங்களின் முடிவிலா வடிவுகளில் எழுகின்றன நிலவிரிவுகள், குலத்தொகைகள். வேதமெனக் கனிந்து இங்கு இறங்கியது அங்கும் வந்தமைந்திருக்கும். அந்தணரே, அங்கு மாரி பெய்கிறது என்பதே வேதமும் பொழிந்திருக்கும் என்பதற்கான சான்று. அவை வேதங்கள் என்றால் இவ்வேதம் கொண்ட மெய்மையே அவற்றிலும் அமைந்திருக்கும். இவையனைத்தும் வேதங்கள் என்றால் ஒன்றையே உரைத்து நின்றிருக்கும்.”என்பதுவும் இணைந்து அளித்தது ஒரு மாபெரும் திறப்பு .

1

காவிய முகாமில் பங்கு பெற்று தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட  நண்பர்கள் அனைவருக்கும் இலக்கிய ஆளுமைகளான  பி ஏ கிருஷ்ணன்,  தேவதேவன், நாஞ்சில் நாடன் ஆகியோருக்கும் அரங்கில் இருந்தவர்களின் தேவைகளின் பொருட்டு அரங்கை தியாகம் செய்து அவைகளை கவனித்து கொண்ட நிர்மால்யா,க்விஸ் செந்தில்,விஜய் சூரியன் ஆகியோருக்கும் , என்னை இலக்கியத்தில் ஆற்றுப்படுத்தும் கிருஷ்ணனுக்கும் தங்களுக்கும் என் நன்றிகள்.

 

மணிபாரதி

 

முந்தைய கட்டுரைமயில் நீலம்.
அடுத்த கட்டுரைரகசியப்பேய்