அன்புள்ள ஜெ
இந்த இணைப்பை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.
ஜெமோ என்னும் இலக்கிய அதிகார மையம்.
தமிழிலக்கியத்தில் ஓர் அதிகார மையமாகச் செயல்பட விரும்புகிறீர்களா? உங்களைப்பற்றி இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுக்கு நீங்கள் ஏன் எதிர்வினையாற்றுவதில்லை?
ஆனந்த்
***
அன்புள்ள ஆனந்த்,
அதை வாசிக்காமலேயே அதில் என்ன சொல்லப்பட்டிருக்குமென என்னால் சொல்லமுடியும். அனேகமாக ஊட்டி அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டபின் எழுதப்பட்டிருக்கும். இது பதினைந்தாண்டுகளாக நிகழ்வதுதான். ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால் இந்த விவாதத்தின் சில விஷயங்களை மட்டும் இலக்கியவாசகர் கருத்தில்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். ‘இலக்கிய அதிகாரம்’ என்று ஒன்று இருந்தால், அதை எதிர்ப்பவர்கள் அதற்கு மாற்றாக எதை முன்வைக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையாகச் சென்றுபாருங்கள். அவர்கள் அரசியலை முன்வைக்கிறார்கள். தங்கள் கட்சி, சித்தாந்தச் சார்பை முன்வைக்கிறார்கள்.
அவர்களின் செயல்பாட்டைப்பாருங்கள். அவர்கள் அந்த கட்சியரசியல், சித்தாந்த அரசியலின் அதிகாரத்தை எந்த ஒளிவுமறைவுமில்லாமல் மூர்க்கமாக செலுத்துகிறார்கள். தங்கள் தரப்புடன் முழுமையாக நிலைகொள்ளாத அனைவருமே அவர்களுக்கு எதிரிகள், ஒழிக்கப்படவேண்டியவர்கள்.ஆகவே வசைபாடுகிறார்கள், அவதூறுசெய்கிறார்கள். கூட்டாகச் சேர்ந்து செயல்படுகிறார்கள். அமைப்புவல்லமை கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் இயல்பானவை என்று சொல்கிறார்கள். ஆனால் இலக்கியம்சார்ந்து , அழகியல்சார்ந்து ஒரு கருத்து சொல்லப்பட்டால், அதற்கு சற்றேனும் செல்வாக்கு உருவானால் அது இலக்கிய அதிகாரம் என்றும் இலக்கியத்தை அழிப்பது என்றும் கூச்சலிடுகிறார்கள்.
அதாவது இலக்கியத்தின்மேல் அரசியலின் அதிகாரத்தை முன்வைப்பவர்கள் இவர்கள். இலக்கியம் தன் அழகியல்தரப்பைச் சொல்வது அத்துமீறலாக இவர்களுக்குப்படுகிறது. அதைத்தான் இலக்கிய அதிகாரம் என்கிறார்கள்.
அரசியலை முன்வைப்பவர்களுக்கு இலக்கியம் மீது எந்த மரியாதையும் கிடையாது. அவர்கள் அறிந்ததெல்லாம் நம்தரப்பு – எதிர்தரப்பு என்ற பிரிவினை மட்டும்தான். நான் சொல்வதை சொன்னால், எனக்குக் கொடிபிடித்தால் நீ நல்ல எழுத்தாளன் என்கிறார்கள்.அதை ஏற்று தொழுதுநிற்பவர்களை தூக்கிப்பிடிக்கிறார்கள். ஏதேனும் ஒரு சிறு மாறுபாடு வந்தால் இவர்கள் இலக்கியவாதிகளை வசைபாடுவதைக் கவனியுங்கள். அந்த மொழி ஒருபோதும் ஓர் இலக்கியவாதியிடம் அமைவதில்லை.
இவர்களுக்கு இலக்கியம் சார்ந்த எந்த அறிதலும் இல்லை, ரசனையும் இல்லை. அவர்களுக்கு மெய்யாகவே படைப்புகள் நடுவே வேறுபாடு தெரியாது. இலக்கியத்தின்மேல் இவர்களின் அதிகாரமே மிக ஆபத்தானது. உலகமெங்கும் இலக்கியவாதியின் முதன்மைப்போர் இவர்களுடன்தான். ஏனென்றால் இவர்கள் இலக்கியத்தை அறியாமல் இலக்கியத்தை வகுக்கவும் ஆளவும் முயல்கிறார்கள். இலக்கியத்தை நிகழ்கால அதிகாரப்பூசல்களில் ஒரு தரப்பாக நிறுத்தி அதன் காலம்கடக்கும் தன்மையை அழிக்கிறார்கள். தங்கள் வரலாற்று உருவகங்கள். தத்துவநோக்குகளை இலக்கியத்தின்மேல் திணித்து இலக்கியத்தின் தனக்கேயுரிய வரலாற்று உருவகத்தையும் நோக்குகளையும் அழிக்கிறார்கள்.
அதற்கு எதிரான ஒரு தற்காப்பே இலக்கியவாதியின் குரல். அது இலக்கியத்தின் தனித்தன்மையை முன்வைப்பது. அழகியல் சார்ந்தது. ஆகவே அதில் தெரிவுகள் உண்டு. நிராகரிப்புகள் உண்டு. அந்த வேறுபாடு இல்லையேல் இலக்கிய இயக்கமே இல்லை. அதேசமயம் அது அரசியல், மதம், கருத்தியல்சார்பானது அல்ல. முற்றாக மாற்று அரசியல்கொண்ட ஒரு நல்ல படைப்பை அழகியல்நோக்கு ஏற்றுக்கொள்ளமுடியும். க.நா.சு முதல் இதை நீங்கள் காணலாம். அச்செயல்பாட்டைத்தான் இலக்கிய அதிகாரம் என இவர்கள் பேசுகிறார்கள்.
தமிழில் கட்சிகள் சார்ந்து எழுதும் சில எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு [அவற்றில் பெரும்பாலானவை ஒரு வாசகன் பத்துப்பக்கம் படிக்க லாயக்கற்றவை] ஐம்பதும் நூறும் வாசகர்சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. அக்கட்சியினர் அவற்றை முன்னெடுக்கிறார்கள். ஆனால் பெரும்சாதனையாளர்களான படைப்பாளிகளுக்கு ஒரு கட்டுரைகூட இவர்களால் எழுதப்பட்டதில்லை. அவர்கள் சாகக்கிடந்தால் கையில் ஒரு நூறுரூபாய் இவர்களால் அளிக்கப்பட்டதில்லை. அதையும் எழுத்தாளர்களே இங்கே செய்துகொண்டிருக்கிறார்கள் – மூன்று தலைமுறையாக. அவ்வாறுசெய்பவர்களே இலக்கிய அதிகாரம் செய்பவர்கள், மடாதிபதிகள் என்றெல்லாம் இவர்களால் வசைபாடப்படுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தரப்பு, ஒரு நோக்கு உள்ளது. அதை முடிந்தவரை முன்வைப்பதே அவர்களின் செயல்பாடு. என் இலக்கியநோக்கை, என் ரசனையை முன்வைத்துக்கொண்டிருக்கிறேன். அது தொடர்ச்சியான செல்வாக்கைச் செலுத்துகிறது. அது ஒருவகையில் அதிகாரமே. ஆனால் அத்தகைய நேர்நிலை அதிகாரமில்லாமல் சிந்தனைச் செயல்பாடே கிடையாது. எந்தச்செல்வாக்கையும் செலுத்தாமல் ஒருவன் எழுதினால் அதற்கு என்ன பயன்? நீங்கள் உலக இலக்கியத்தில் பேசும் அத்தனை பெரும்படைப்பாளிகளும் நேர்நிலை அதிகாரத்தைச் செலுத்தியவர்கள்தானே?
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தகுதியற்ற ஒரு படைப்பாளியை முன்னிறுத்தினேன் என எவரேனும் சொல்லமுடியுமா? என் எழுத்துக்களுக்காக ஏதேனும் ஆதரவு சேர்த்தேன் என்று சொல்லமுடியுமா? தமிழில் நான் செய்வன அனைத்தும் பிற எவரேனும் செய்தால் நன்று என பலகாலமாக நான் சொல்லி வந்தவை. பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து நானே செய்கிறேன். இவை எதிலும் என் ஆக்கங்களை முன்வைத்ததில்லை. என் படைப்புகளுக்காக ஒரு நிகழ்ச்சியைக்கூட ஒருங்கிணைத்ததில்லை. என் கருத்துக்களுக்காகக்கூட ஒரு அமர்வை நடத்தியதில்லை. அந்த எண்ணமே இல்லை. அவை தன் வல்லமையால் நின்றால்போதும்.
என் இயல்பில் இவை எல்லாமே சலிப்பூட்டுவன கூட. இப்போதே வேறுவழியில்லாமல் இவற்றுடன் இருக்கிறேன், அவ்வளவுதான். இதில் அதிகாரம் ஏதுமில்லை, வசைகளும் சிறுமைகளும் மட்டுமே எஞ்சுகின்றன. மெல்லமெல்ல கருத்துக்கள், தனிப்பட்ட விமர்சனங்கள் சொல்வதை குறைத்துக்கொள்கிறேன். சொல்லவேண்டிய அளவுக்குச் சொல்லிவிட்டேன் என்று தோன்றுகிறது.
ஜெ