ஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.

இந்த முறை நிகழ்ந்த குருநித்யா இலக்கிய அரங்கம் எத்தனையாவது நிகழ்ச்சி என அதில் கலந்துகொள்ள வந்திருந்த பி.ஏ.கிருஷ்ணன் கேட்டார். 1994ல் நித்ய சைதன்ய யதி கேட்டுக்கொண்டதற்கேற்ப நான் இளம் எழுத்தாளர்களை அழைத்துவந்து அங்கே ஒரு சந்திப்பை ஒருங்குசெய்தேன். அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் இந்நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார், க.மோகனரங்கன். இன்னொருவரான எம்.கோபாலகிருஷ்ணன் [சூத்திரதாரி] வருவதாக இருந்தது. அலுவலகப்பணி காரணமாக வரமுடியவில்லை. தமிழிலக்கியத்தின் மூன்றுதலைமுறையின் முக்கியமான கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் இதற்கு முன் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  .

 

அப்படியென்றால் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. ஆம், கால்நூற்றாண்டு. அன்றுமுதல் இன்றுவரை இதன் ஒருங்கிணைப்பாளர், உண்மையான அடித்தளம் நிர்மால்யாதான். அவருக்கு இது ஆண்டில் பதினைந்துநாட்கள் முழுவீச்சுடன் பணியாற்றி முடிக்கவேண்டிய ஒரு பொறுப்பு. உணவு, தங்குமிடம், கம்பிளி மெத்தைகள், வண்டிகள் என அனைத்தையும் அவர் ஒருவரே நின்று ஏற்பாடுசெய்வார். உச்சகட்ட பதற்றம் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் மூன்றுநாட்களும் திகைப்புகொண்ட பாவனையுடன் இருப்பார். பின்னர் மூன்றாம்நாள் அனைவரும் கிளம்பிச்செல்லும்போது துயரத்துடன் விடைகொடுப்பார். நித்யாதான் ஊட்டி என்றிருந்தது. இன்று ஊட்டி என்றாலே நிர்மால்யாதான்.

ஏ வி மணிகண்டன், விஷால்ராஜா, சந்திரசேகர்

 

நிகழ்ச்சியின் தோற்றமும் இலக்கும் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றது. நித்யா மறைவுக்குப்பின் தமிழ்-மலையாளக் கவிஞர்களுக்கிடையேயான உரையாடலாக தொடர்ச்சியாக சில ஆண்டுகள் நடத்தினோம். குற்றாலத்தில் மூன்றுமுறை, ஒகேனேக்கல்லில் ஒருமுறை ,ஏற்காட்டில் ஒருமுறை நடத்தியிருக்கிறோம். கேரளக் கவிதையில் ஆழமான பாதிப்பை உருவாக்கிய சந்திப்புகள் இவை. அதைப்பற்றி ஏற்றும் மறுத்தும் அங்கே நிறையவே எழுதப்பட்டுள்ளது. அன்று வந்த அறிமுகக் கவிஞர்கள் பலர் இன்று அறியப்பட்ட ஆளுமைகள், அங்கும் இங்கும். [இசைநயமில்லா கவிதையை ஊட்டி எஃபக்ட் கொண்ட கவிதை என வசைபாடும் வழக்கமும் மலையாளத்தில் உண்டு]

 

ஊட்டியில் மு.தளையசிங்கம், நாஞ்சில்நாடன்,சுந்தர ராமசாமி    உட்பட குறிப்பிட்ட படைப்பாளிகளுக்கான ஆய்வரங்குகளாக நான்கு அரங்குகள் நடந்தன.  திற்பரப்பு, கன்யாகுமரி, ஆலப்புழா போன்ற ஊர்களில் தேவதேவன், எம்.யுவன், கல்பற்றா நாராயணன் போன்ற கவிஞர்களுக்காக தனியாக விவாத அரங்குகளை நடத்தியிருக்கிறோம். இவர்களின் ஆக்கங்களுக்காக நடந்த முதல் அரங்கும், பலசமயம் ஒரே அரங்கும் இதுதான். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும்கூட அரங்குகளை நடத்தியிருக்கிறோம்.

 

அன்றெல்லாம் ஆண்டுக்கு மூன்று முறை குருகுலத்தில் அரங்குகள் நடத்தியிருக்கிறோம். என் குறிப்புகளைப் பார்த்தேன். ஊட்டியில் 27 [மொத்தம் 36] சந்திப்புகள்.சரியான கணக்கை இனிமேல்தான் எடுக்கவேண்டும். தமிழில் இது ஒரு சாதனைதான். இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த இலக்கிய முகாம் வேறில்லை. நிர்மால்யா ஒரு வாழ்நாள் சாதனையாகவே பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

சுனீல் கிருஷ்ணன்

 

முன்பெல்லாம் 30 பேர் கலந்துகொள்வார்கள். உணவுக்கான பொருட்கள் மட்டுமே செலவு. அதை அருண்மொழியின் கணக்கில் வைப்போம். இப்போது பங்கேற்பாளர்கள் பெருகிவிட்டனர். சென்றமுறை 80 பேர். இம்முறை 110 பேர். வெளியே மூன்று தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. மெத்தைகள், கம்பிளிகள், தலையணைகள் என செலவு. ஆகவே தலைக்கு 2500 வரை ஆகியது. ஊட்டியில் உச்சகட்ட சீசனில் மூன்றுநாட்களுக்கு இது குறைவானதே என்றனர். என்றாலும் பங்கேற்பாளர்களில் சிலருக்கேனும் சுமையாக இருக்குமோ என்னும் எண்ணம் எனக்கு எழுகிறது.

 

ஆகவே அடுத்த ஆண்டுமுதல் ஏப்ரல், மே மாதங்களைத் தவிர்த்து ஆகஸ்ட்டில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என தோன்றுகிறது. தங்குமிடம், வாடகைச் செலவை சற்று குறைக்கலாம். [இது வசதிப்படுமா என நண்பர்கள் சொல்லலாம்] ஆகஸ்டில் ஊட்டியில் மிதமான தட்பவெப்பமே இருக்கும். ஜூன்,ஜூலை மழைக்குப்பின் பசுமையாகவும் இருக்கும். வழக்கமாக செலவுக்கு மிஞ்சியே சிலர் நன்கொடை அளிப்பதுண்டு. அது மாணவர்கள் வந்து தங்கிச்செல்வதற்கு உதவும்.  நன்கொடைக்கு வெளியே கொஞ்சம் ஆள்தேடவேண்டும் என்றும் தோன்றியது.

2009 வரை ஊட்டியில் பெரும்பாலும் கவிதையரங்காகவே இதை நடத்தினோம். காவிய அரங்கு என்னும் பெயர் அப்போது உருவானது. எழுதி அழைக்கப்பட்ட கவிஞர்களுக்கே அனுமதி. பார்வையாளர்களும் அழைக்கப்பட்டவர்களே. கவிஞர்கள் மட்டுமே பேசலாம். மலையாளக் கவிதைகளை தமிழ்க்கவிஞர்களும் தமிழ்க்கவிஞர்களை மலையாளக் கவிஞர்களும் விமர்சித்துப்பேசுவார்கள்.  இவ்வரங்கின்பொருட்டு நான் மொழியாக்கம் செய்த மலையாளக் கவிதைகள் இரு தொகுதியாக தமிழினி வெளியீடாக வந்துள்ளன.

 

2010 ல்தான் இன்றைய வடிவில் நடத்தலாமெனத் தோன்றி இந்தத் தளத்தில் அறிவிப்பை வெளியிட்டோம். குருநித்யா ஆய்வரங்கு என்றபெயரும் அமைக்கப்பட்டது.இது எட்டாவது சந்திப்பு. இம்முறைதான் ஊட்டி சந்திப்புகளிலேயே மிக அதிகமான பங்கேற்பாளர்கள். பாதிக்குமேல் இளைஞர்கள். அத்துடன் இம்முறை நிகழ்ச்சியின் முன்வைப்பாளர்கள் அனைவருமே இளைஞர்களாக அமையட்டும் என முடிவெடுத்தோம். மூத்தவாசகர்கள் அந்த முன்வைப்புகள் மேல் கருத்துரை அளித்தபின் விவாதம் நிகழ்ந்தது. இதனால் பேச்சாளர்களின் பட்டியல் மிக நீளமாக இருந்தது. ஆனால் பலகோணங்களில் பலர் பேசவும் வேறுபட்ட கோணங்கள் வெளிப்படவும் வாய்ப்பு அமைந்தது

2010 முதல் நாஞ்சில்நாடன் கம்பராமாயணம் குறித்த ஓர் அரங்கை நிகழ்த்தி வருகிறார். இப்போது யுத்தகாண்டத்தை வந்தடைந்துவிட்டோம். ஊட்டி சந்திப்பில் மாறாமலிருப்பது இதுதான். பொதுவாக கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம், மரபிலக்கியம், இந்திய தத்துவ இயல் என விவாத அரங்குகள் அமையும். 2012ல் ராஜீவ் கிருஷ்ணாவின் கதகளி நிகழ்ந்தது. 2014ல் அ.கா.பெருமாள் அவர்கள் நாட்டுப்புறவியல் பற்றிய அறிமுக,நிகழ்வொன்றை நடத்தினார். சென்றமுறை பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பக்கலைமரபு குறித்து விளக்கவுரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

மீண்டும் நடத்த ஆரம்பித்தபின் மூத்த படைப்பாளிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து பேசவைக்கிறோம். நாஞ்சில்நாடனைத் தவிர தேவதேவன்,க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், கு.ஞானசம்பந்தன் போன்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டிருக்கிறார்கள். இம்முறை பி.ஏ.கிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள்.

சில கட்டுப்பாடுகளை நாங்கள் கடைப்பிடிப்பதுண்டு. ஒன்று, விவாதிக்கப்படும் படைப்புக்களை முழுமையாக வாசித்துவிட்டு வரவேண்டும். தனிப்பட்ட முறையில் மட்டம்தட்டாமல் பேசவேண்டும். இலக்கியம் அன்றி அரசியல், சினிமா சார்ந்து ஒரு சொல்லும் பேசப்படக்கூடாது. இலக்கியத்தை ஒட்டிக்கூட அரசியல் சார்ந்த விவாதங்கள் இருக்கலாகாது. இம்முறை பங்கேற்றவர்கள் ஏறத்தாழ அனைவருமே அனைத்தையும் வாசித்துவிட்டு வந்திருந்தனர். அவர்களின் பங்கேற்பு நிகழ்ச்சியை மிக ஆக்கபூர்வமானதாக ஆக்கியது.

 

பி.ஏ.கிருஷ்ணன் தன் நிறைவுச்சொல்லில் இத்தனை ஆண்டுகளில் இவ்வரங்கு ஏராளமான எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கக் கூடும் என்றார். ஆனால் இது இலக்கிய எழுத்துக்கான பட்டறை அல்ல, இலக்கிய வாசகர்களுக்கான அரங்குதான். நிகழ்ச்சிகள் கூர்வாசிப்பை அனைத்துத் தளங்களிலும் நிகழ்த்தும்பொருட்டே வடிவமைக்கப் பட்டுள்ளன. எளிய வாசகர்களாக உள்ளே வந்து தீவிரமான, நுட்பமான வாசகர்களாக ஆன சிலநூறுபேரை எனக்கே தெரியும். அவர்கள்தான் என் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதாரம் -பொருளியல் சார்ந்தும்கூட.  எழுத்தாளர்களும் வாசகர்களே என்றவகையில் அவர்களுக்கும் பயன் உண்டு. அவர்கள் வாசகர்களை நேரில்சந்திக்க உரையாட இங்கே வாய்ப்பமைகிறது. அவர்களின் படைப்புக்களை மதிப்பிட்டுக்கொள்ளலாம். இம்முறை பேசியவர்களில் ஏறத்தாழ அனைவருமே அறிமுக எழுத்தாளர்கள். சிலர் தவிர அனைவருக்குமே இதுவே அவர்கள் எழுந்துபேசும் முதல் அனுபவம்.

 

வேணு வெட்ராயன்

பொதுவாக இத்தகையச் சந்திப்புகளின் பயன் என்ன என்ற கேள்வி தமிழில் எழுந்துகொண்டே இருக்கிறது. இம்முறையும் சில கடிதங்கள் – ஒருமுறைகூட கலந்துகொள்ளாதவர்களிடமிருந்து. தமிழகத்திற்கு வெளியே உலகத்தில் எங்கும் இக்கேள்வி எழ வாய்ப்பில்லை. கர்நாடகத்திலும் கேரளத்திலும் இதழ்களும், பல்கலைகளும், கலாச்சார அமைப்புக்களும் இத்தகைய இலக்கியக் கூடுகைகளை நடத்திக்கொண்டே இருக்கின்றன. இந்திய அளவில் புகழ்மிக்க இலக்கிய ‘சாகித்ய சிபிரங்கள்’ ஏராளம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல்கலைகள் இவ்வகை அரங்குகளை அமைக்கின்றன. சிங்கப்பூரிலும் கொரியாவிலும் அரசே ஒருங்கிணைக்கிறது – பெரும்பொருட்செலவில். சிங்கப்பூரில் நாங்கள் நிகழ்த்திய அரங்குக்கு சிங்கப்பூர் அரசே நிதி அளித்து உதவியது.

 

தமிழில் அமைப்புசார்ந்து இவற்றை நிகழ்த்த எந்த முன்னெடுப்பும் இல்லை. இங்குள்ள பிரசுர நிறுவனங்களுக்கு ஆர்வமில்லை. பல்கலைகள் சீரழிந்துகிடக்கின்றன. கலாச்சார அமைப்புக்கள் இங்கே இல்லை. ஆகவே எழுத்தாளர்களே முன்னெடுத்து இவற்றை நிகழ்த்தி வருகின்றனர். கலாப்ரியா குற்றாலத்தில் நிகழ்த்திய ’பதிவுகள்’ என்னும் அரங்குதான் முக்கியமான தொடக்கம். ஏழு ஆண்டுகள் நடத்தினார் என நினைக்கிறேன். சுந்தர ராமசாமி பாம்பன் விளையில் ‘காகங்கள்’ என்றபேரில் நான்கு கூடுகைகளை ஒருங்கிணைத்தார். அவருக்குப்பின்  ‘காலச்சுவடு’ கண்ணன் மூன்று கூடுகைகளை. பிரம்மராஜன் மீட்சி சார்பில் ஒகேனேகல்லில் இலக்கியக்கூடுகைகளை ஒருங்கிணைத்திருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், பவா செல்லத்துரை, தமிழவன், விஜயா வேலாயுதம் போன்றவர்கள் சில அரங்குகளை ஒருங்கிணைத்துள்ளனர். லக்ஷ்மி மணிவண்ணன் இன்றும் நம்பிக்கையிழக்காமல் அரங்குகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் இம்முயற்சிகள் ஒரு கட்டத்திற்குப்பின் நின்றுவிட்டன. முதன்மையாகக் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள் இலக்கியவாதிகள். அவர்கள் இந்தச் சந்திப்புகளை வெறும் குடிக்கொண்டாட்டங்களாக ஆக்கினர். ஆகவே பூசல்கள் உருவாயின. பெருமுயற்சியுடன் செய்யப்பட்ட இந்த முன்னெடுப்புகளை எழுத்தாளர்கள், கவிஞர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இவை எவ்வளவு அரியவை, நின்றுவிட்டால் மீண்டும் ஒன்று நிகழவாய்ப்பில்லை என்று அவர்கள் உணரவேயில்லை.இன்னொன்று, மேலே சொன்ன நிகழ்வுகளிலெல்லாம் வாசகர் எண்ணிக்கை மிகக்குறைவு, பெரும்பாலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மட்டுமே. வாசகர்களும் அன்று மிகக்குறைவுதான், ஆகவே வேறுவழியில்லை. வாசகர்கள் இருந்தால் எழுத்தாளர்களின் இயல்பு வேறொன்றாகி விடுகிறது.

 

ஊட்டி நிகழ்ச்சியில் நான் பிற அரங்குகளில் கண்ட குறைகளைக் களைய முயன்றேன். ஒன்று, இதை எழுத்தாளர்களுக்காக மட்டுமானதாக அன்றி வாசகர்களும் ஏராளமாக கலந்துகொள்ளும்படி அமைத்தேன். இன்று வாசகர் எண்ணிக்கை பலமடங்காகப் பெருகியிருக்கிறது. அந்த நுண்வாசகர்களின் இருப்பு ஒரு பெரிய விசை. எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வந்த அனைத்து எழுத்தாளர்களுமே இந்த வாசக எண்ணிக்கையைக் கண்டு திகைப்புற்றிருக்கிறார்கள்.

 

கமலக்கண்ணன்

இன்னொன்று, இதை ஓர் இனிய நட்புக்கூடுகையாகவே நடத்தவேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தேன். குடிக்கு இடமில்லை. பூசல்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிளம்பிச்செல்கையில் நிறைவும் மேலும் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்ற  ஊக்கமும் மட்டுமே எஞ்சவேண்டும். சென்றகாலங்களில் பிற அரங்குகளில் முடிந்தபின் பெரும் சலிப்பும் சோர்வுமே எஞ்சும், சிலருடைய மட்டுமீறிய நடத்தையால். அது பலமுறை பதிவாகியிருக்கிறது.

 

இவற்றின் பயன் முதன்மையாக ஒன்றே. இலக்கியம் ஒருவகை கொண்டாட்டமாக ஆகும்போதே அது சமூக இயக்கமாக நிலைகொள்கிறது. இவை இலக்கியத்தை மகிழ்வான நிகழ்ச்சித்தொடராக  ஆக்குகின்றன. மரபிலக்கியம், தத்துவம், இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் போன்றவை கூட்டான வாசிப்பில் மிக எளிதாகத் துலங்கிவருபவை. இவற்றில் கலந்துகொண்ட பலருக்கு இங்கிருந்தே தொடக்கம் கிடைத்திருக்கிறது. எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஏற்கனவே எழுத்தாளர்களுக்குரிய உளவிசையுடன், படைப்பூக்கத்துடன் இருந்தால் ஒரேசமயம் மரபிலக்கியம், கவிதை, புனைகதை அனைத்திலும் திறப்புகள் அமைகின்றன. அவற்றினூடாக அவர்கள் செல்லும் தொலைவு மிகுதி. இன்று தமிழில் இவ்வாய்ப்புக்கு வேறு அமைப்புகளோ அரங்குகளோ இல்லை.

 

வி என் சூரியா

இங்கிருந்து தொடங்கிச் சென்ற பலர் இன்று தமிழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எழுத்தாளர்கள் தாங்கள் சுயம்புக்கள் என்று சொல்லவே விழைவார்கள். பெற்றவற்றை அளித்தவர்களை நினைவுகூர்வதைத் தவிர்ப்பார்கள். அத்துடன் இலக்கிய அரசியல்களும் அதன் விளைவான விருப்புவெறுப்புகளும் சேர்ந்துகொண்டால் பேசவேண்டியதே இல்லை. குற்றாலம் ’பதிவுகள்’ அரங்கு தனக்கு என்ன அளித்தது என அன்று கலந்துகொண்ட இளம் எழுத்தாளர்களில் நான் மட்டுமே தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன் என நினைக்கிறேன்.

 

இத்தகைய அரங்குகள் உருவாக்கும் விளைவுகளை திட்டவட்டமாகச் சொல்வது கடினம். கண்கூடாகத் தெரியும், ஆனால் வகுக்க முடியாது. ஒரு குறுப்பிட்ட காலம் கடந்தபின்னரே திரும்பிப்பார்த்து மதிப்பிட முடியும். சென்றகாலத்தில் நாங்கள் ஒருங்கிணைத்த கவிதை நிகழ்வுகளை பார்க்கையில் இன்று குறிப்பிடத்தக்க கவிஞர்களில் மிகச்சிலர் தவிர அனைவருமே தொடக்ககாலத்தில் இவற்றில் கலந்துகொண்டவர்கள்தான் என்பது எனக்கே விந்தையாக இருக்கிறது. அதோடு தீவிரமாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு நின்றுவிட்ட சிலர் நினைவிலெழுந்தார்கள் பா.சத்தியமோகன் இப்போது எழுதுகிறாரா?.

 

ஸ்ரீசங்கர்

இந்தியாவில் பல்கலைகள், இதழ்கள் நடத்தும் அரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அனைத்தையும் விட மேலும் தீவிரமானது இது என்பதே என் எண்ணம். இத்தனை அரங்குகள் சலிப்பில்லாமல் அங்கே நிகழ்வதில்லை. இத்தனைபேர் இணையான தீவிரத்துடன் இருப்பதில்லை. இவ்வளவுபேர் அனைத்தையும் படித்துவிட்டு வருவதுமில்லை. அவர்களுக்குச் சில எல்லைகள் உள்ளன, ஜனநாயக நோக்கு காரணமாக அனைவரையும் அழைக்கவேண்டும். அதன்பின் எங்கும் எப்போதும் என்ன பேசப்படுகிறதோ அதுவே அங்கும் பேசப்படும்.

 

தமிழ்ச்சூழலில் எவரும் எதுவும் செய்வதில்லை, ஆகவே செய்பவர்கள் மேல் காழ்ப்பும் கசப்பும் கொள்பவர்கள் மிகுதி. சென்றகாலங்களில் எழுந்துவந்த அவதூறுகள், வெறுப்புகள், நக்கல்நையாண்டிகளை பற்றி பி.ஏ.கிருஷ்ணனிடம் சொன்னேன். இப்போதும் அவை தொடர்கின்றன. [இன்றுமட்டும் பதினெட்டு மின்னஞ்சல்கள் நக்கல், நையாண்டி, வசைகளுடன்] இந்தியாவில் வேறெங்கும் இத்தனை சிறுமை நேரடியாக வெளிப்படாது என்றார்.பி.ஏ.கெ.

 

உண்மையில் அச்சிறுமைகளால் எங்களுக்கு இழப்பு ஏதுமில்லை. நிர்மால்யா எதையும் வாசிப்பதில்லை. நான் இவர்களை ஒருநாளும் ஒரு பொருட்டாக நினைத்தவனல்ல. எங்கே இழப்பு என்றால் அவற்றை நம்பி இன்று நிகழும் ஒரே இலக்கியமுகாமான இதை தவிர்ப்பவர்களுக்குத்தான். அவர்கள் இளமையில் கிடைக்கும் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றை இழக்கிறார்கள்.

 

நாராயணன் மெய்யப்பன்

இம்முறை ஊட்டி சந்திப்பில் நிகழ்ந்தவை குறித்த பங்கேற்பாளர்களின் கடிதங்கள் நிறைவளிக்கின்றன. கவிதை, சிறுகதை விவாதங்களில் ஒரு தொடர்ச்சி இருந்தது. தெரிவுசெய்யப்பட்ட படைப்புக்கள் தீவிரமானவையாக இல்லாதபோதுகூட விவாதங்கள் வாசிப்பை மேலெடுத்துச் சென்றன. மரபிலக்கியமும் நவீன இலக்கியமும் ஒரே அரங்கில் தொடர்ந்து விவாதிக்கப்படுவது இரண்டையுமே துலக்குகிறது என்பது நான் கண்டறிந்தது. ஒவ்வொருவரின் பங்களிப்பைப் பற்றியும் தனியாகச் சொல்வது கடினமானது. இளம் எழுத்தாளர்களுக்கான எல்லா அரங்குகளையும் அவர்கள் மிகுந்த முயற்சியுடன் தீவிரத்துடன் நடத்தினர் என்றுநினைக்கிறேன். சென்றகாலங்களில் இப்படி தயக்கமும் அச்சமுமாக வந்து பேசியவர்களான ஏ.வி.மணிகண்டன், சுனீல் கிருஷ்ணன் போன்றவர்கள் இன்று அவர்களே தனி இயக்கங்கள் என கருதும்படிச் செயலாற்றிவருகிறார்கள்

 

முக்கியமாக இம்முறை கவனித்தது பெண்களின் பங்கேற்பு. அருண்மொழியும் இதைச் சொன்னாள். சுசித்ரா, சுபா,ஜெயந்தி போன்றவர்களின் தொடர்ச்சியான விவாதப்பங்கேற்புடன் ஒப்புநோக்க பையன்களின் பங்கேற்பு ஒருபடி குறைவு என்றே சொல்லவேண்டும். இதுவும் இன்றுநிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தைக் காட்டக்கூடியதாக இருக்கலாம்.

 

இம்முறை 110 பேர் என்பது ஒரு திகைப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் பெரிய இடர்கள் இல்லாமல் ஏற்பாடுகள் நடந்தன. மீனாம்பிகை, செந்தில் இருவரும் முக்கியமான பங்களிப்பை ஆற்றினர். கூடுமானவரை அனைத்து இளைஞர்களையும் உள்ளே அனுமதித்தமையால் தீவிரமும் கூர்மையும் அதிகரித்தன. இது ஒரு புதியபுரிதலை அளித்தது. மேலும் ஊக்கத்துடன் இதைத் தொடரவேண்டும். அத்துடன் ஓர் எண்ணமும் எழுந்தது. நான் கலந்துகொள்ளாமல் நண்பர்கள் தாங்களே நடத்துவதாக ஓர் கூடுகை ஒருங்கிணைக்கப்படவேண்டும். அதுவே இது முன்செல்லும் என்பதற்கான உறுதி.

 

 

 

 

சீனிவாசன் எடுத்த படங்கள்

கணேஷ் பெரியசாமி எடுத்த படங்கள்

 

முந்தைய கட்டுரைஊட்டி -நவீன்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-49