அன்புள்ள ஜெ
ஊட்டி காவிய முகாம் பற்றி அறிவிப்பு வந்தவுடனே விண்ணப்பித்து விட்டேன், தேர்ந்தெடுக்கப்பட்டதாக அஞ்சல் வந்ததும் நம்ப முடியாமல் சிறிது நேரம் அசைவற்றிருந்தேன். முட்டாள்த்தனமான அலுவலகச்சூழலில் இருந்து, விட்டு விடுதலையாகி, எனக்கு மட்டுமான மூன்று உன்னத நாட்கள்.
பாண்டியிலிருந்து கடலூர் சீனு அண்ணா, மணிமாறன், நான் மூவரும் ஊட்டி வந்தோம், நண்பர் திருமாவளவன் ஊட்டியில் இணைந்து கொண்டார். புகைப்படங்களாகப் பழகிய அறை, முன்பே படித்திருந்த அணுகுமுறை, வரிகளில் கண்ணோடும் போதெல்லாம் மனதில் எப்போதும் வாசிக்க எழும் உங்கள் குரல், இதெல்லாம் சூழலை அயலென்றிலாததாக்கியது.
அமர்வுகளின்போது பழகிய பரீட்சை அறைபோல் பயம் வருவதும் போவதுமாக இருந்தது. இரண்டரை நாளில் என்போன்றவனுக்கு ஒரு நல்ல வாசிப்பு பற்றிய அறிமுகமும், தெளிவும் கிடைத்தது. குறிப்பாக கவிதை அமர்வுகளில் தங்கள் விளக்கங்களும் விவாதங்களும் மிகச்சிறப்பாக இருந்தது.
துவக்க நாளில் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தீர்கள் ஜெ. ஒவ்வொரு நாள் மாலை மலைநடையின் பின் அமர்வு துவங்குவதற்கான பரபரப்பு, ஆசிரியரை அவதானிப்பதெல்லாம் நம் மரபில் நாமறியாது தொடர்வதுதானே, மலையாளத்தில் கைத்தட்டச்சொல்லிவிட்டு நீங்கள் நாக்கைக்கடித்துக்கொண்டதை மிகவும் ரசித்தேன் ஜெ.
சனிக்கிழமை காலை நடையை என் சோம்பலால் தவறவிட்டதால் எனக்கு பிடித்தமான வரலாற்று ஆய்வியலையும், கோசாம்பியோடு தவற விட்டேன். எதிலும் உங்கள் நடைவேகம் அரிது.
அமர்வுகளில் பேசிய நண்பர்கள் யாவரும் சிறப்பாக பேசினார்கள், பாரி, கமலக்கண்ணன் ஆகியவர்களது உரை மிகுந்த நேர்த்தியாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உணரச்செய்தது சூர்யா, ஸ்ரீசங்கர் போன்ற இளையோரின் ஆர்வமும் பங்களிப்பும். கரமசோவ் சகோதரர்களை மீனாட்சியம்மன் கோவிலாக கட்டமைத்து எல்லாக்காலத்துக்கும் அதை மறக்கமுடியாதபடி செய்துவிட்டார் சிவமணியன்.
சந்ரு மாஸ்டரின் வகுப்பு பல்வேறு தர்க்கங்களுக்கு நம்மை இழுத்துச்சென்றது, ஒரு பித்து நிலையிலிருக்கும் கலைஞராகவே தோற்றமளித்தார் அவர், ஆயினும் திரிபுராந்தக மூர்த்தியை நடித்துக்காட்டிய கணம் அவரது உடல் ஒரு முப்பரிணாம பிம்பம் போல அவ்வளவு காத்திரமாக உருமாறியது. அதில் இம்மியளவு பிழையும் காண முடியவில்லை, மீண்டும் அவரை நாடிச்செல்லும் ஆசையே எழுகிறது.
முகாமின் நிறைவுநாள் செறிவானதாக அமைந்து விட்டது. அறிதல் முறைகள், விமர்சன வகைகள், மரபிலக்கியம் என மிகச்சிறப்பான தளங்களில் நண்பர்களின் உரையும் பின்விவாதங்களும் அனைவரையும் உள்ளிழுத்துக்கொண்டன, குறிப்பாக இந்திய அறிதல் முறை வகுப்பு என்போன்றோர்க்கு எளிய, தெள்ளிய ஒன்று, சந்திரசேகரனுக்கு நன்றி. மொத்தத்தில் அன்றைய தினம் நிறைநல்விருந்து.
இலக்கியம் பற்றிய அடிப்படைகளை புரிந்து கொள்ள உதவுபவை, உங்கள் விளக்கங்கள். ஆனால் என்போன்ற புதியவர்களுக்கு தாங்கள் பயன்படுத்தும் கலைச்சொற்கள் முக்கியமாக ஆங்கில வார்த்தைகள் உடனே விளங்காது, நீங்கள் ஒருமுறை விளக்கம் கூறினாலும் கூட. சில வார்த்தைகளை ஜாஜா சட்டென தமிழில் கூறினார், ஆனால் அப்போதைய உரைப்பெருக்கில் அவை அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. இணையத்தில் வேத சகாயகுமார் தளத்தில் சில வார்த்தைகள் கிடைத்தது. இத்தகு சொற்களின் பட்டியல் தயாரிப்பு அடுத்து வருபவர்களுக்கும் பெரிதும் உதவக்கூடும். சொல் மனதிற்கு முன்பே அறிமுகமாகிவிட்டால் பொருள் அதன்மேல் அமர்வது எளிதாகிவிடும்.
மனதிற்கு மிகவும் நெருக்கமானவை நாஞ்சிலின் கதைகளும், பாத்திரங்களும். அவரை சந்தித்தது என் நல்லூழ். வினையூக்கியான கடலூர் சீனுவுடன் சங்கப்பாடல்கள் பற்றியும் சிற்றிலக்கியங்கள் பற்றியும் சில சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. சொற்பிறப்பியல் பற்றியும் சிறிது பேசிக்கொண்டோம்.
முகாமை பெரிதும் மதிக்கச்செய்தது நண்பர்கள் காட்டிய ஒழுக்கம். பெண்கள் உட்பட நூறு பேர் மூன்று நாள் ஊட்டியில் ஒரு முகாமுக்கு வருகிறார்கள் என்பதும் அது பிழைகளின்றியும் நேர்த்தியாகவும் நடத்தப்படுவதும் அவர்கள் கற்றுக்கொண்ட ஒழுங்குமுறையால் தான் சாத்தியப்பட்டது என்றெண்ணுகிறேன். தொழில்நுட்பத்தின் கணக்குகளின் அடிப்படையில் இயங்கும் எந்த ஒரு தொழிற்சாலையிலும் இல்லாத வினைத்திட்டமும் செயல்முறையும் இந்த தளத்தில் நிகழ்கிறது
எனக்கு விருப்பமான ஒன்றை முழுநேரமாக கற்றுக்கொள்ள, பின்தொடர எப்போதும் என் வாழ்க்கைச்சூழல் என்னை அனுமதித்ததில்லை. கலையின் ஏதாவதொரு வடிவத்தில் முழுகிக்கிடப்பதே என்னை எனக்கு மிக அருகே உணரச்செய்யும் தருணம். விடைபெறும் வேளையில் என்னால் இயல்பாக இருக்கமுடியாததை முகம் காட்டிக்கொடுத்து விட்டது.
வாசிக்கும் பழக்கத்தில் சந்தனக்கட்டை சுமந்த காளவாய் கதைதான் என்னது, படிப்பதின் ஒழுங்குமுறையோடு தேர்ந்தெடுத்த வாசிப்பை இனிதான் துவங்கவேண்டும். அதற்கொரு திறப்பாக இந்த முகாம் இருந்தது. குருகுல மரபின் மீது எனக்கு ஆழமான நம்பிக்கையும் பிரியமும் உண்டு, அதை சார்ந்தொழுகுவது ஈடற்ற நிறைவைத்தருகிறது. அனைத்திற்கும் நன்றி ஜெ.
உவகைமண்டலத்திலிருந்து வெளியே வந்தபின், நண்பர்கள் எப்படி நெரிசலான மலைரோடுகளில் வாகனங்களுக்கிடையில் நடப்பது என்ற மேலதிக பயிற்சியை எங்களுக்கான தனியார் பேருந்து பயணத் துவங்குநிலை வரை அளித்தனர், நான்கரைக் கிலோ மீட்டர். சிறப்பாகத்தான் இருந்தது.
LS.தாமரைக்கண்ணன்,
புதுச்சேரி