மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்

1

 

மெலட்டூர் பாகவதமேளா

சில ஆண்டுகளுக்கு முன் ஊட்டி காவிய முகாமில் அ.கா.பெருமாள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது  அவரது ஆய்வுப்பணி குறித்து சொன்னார். உரையாடல் மரபார்ந்த நிகழ்த்து கலைகள் குறித்த ஆவணப்படம் எடுப்பது சார்ந்து. அ.கா.பெருமாள் அவர்கள் மரபும், சாதியும் உருவாக்கி பேணிவந்த கலைவடிவங்கள் குறித்து அறிந்த அறிஞர்களில் முதன்மையானவர். அவற்றின் இயல்பும், போக்கும் அறிந்தவர். அந்த உரையாடல் வழியாக ஒரு புரிதல் உருவாகியது. அப்புரிதலை அனுபவமாகக் கொண்ட இடமாகத்தான் மெலட்டூர் பாகவத மேளா எனக்கு பொருள்பட்டது.

 

கடந்த இருநூறு ஆண்டுகளில் இந்திய சமூகம் தன் மரபான கட்டமைப்பின் மீது வலுவான சவால்களை சந்தித்து வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த நூறு ஆண்டுகள்,  மரபின் அடிப்படையில் அமைந்த சமூக கட்டமைப்பை வேறோர் வடிவத்தில் உருவாக்க அறைகூவி நிற்பது தெரிகிறது. இப்படி கட்டமைப்புகள் மாறும் காலத்தில் அதனுடன் இணைந்து புரக்கப்பட்ட கலைகளின் வடிவங்களும் அதே அளவு அறைகூவலை சந்திக்கின்றன . மரபுக் கலைகள் சந்திக்கும் அறைகூவல்கள் எப்படிப்பட்டவை ?

முதலாவதாக அக்கலை தனது புரவலர் அமைப்பை இழக்கிறது. புரவலர் அமைப்பு என்பது சாதியால், கிராமத்தால், வளப் பகிர்வை நுகர்வோரால் , இனத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம். இப்புரவலர் அமைப்பு ஒரு கோயிலை மையமாகக் கொண்டே பெரும்பாலும் அமைகிறது. இக்கோயிலின் தெய்வங்களுக்கு உரிய நிகழ்வாக ஒரு கலை அமைகையில் கோயிலின் விழாக்களில் அக்கலை நிகழ்த்துதல் ஒரு தவிர்க்க இயலா அம்சம் என்றாகிறது. ஆகவே புரவலர் அமைப்பு அக்கலை வடிவை புரப்பது அவசியமாக்கப்படுகிறது. புரக்கும் சமூக அமைப்பு சிதைகையில் முதலில் கைவிடப்படுவது இக்கலையை நிகழ்த்துவதால் புரக்கப்பட்ட கலைஞர்கள்தாம். மரபார்ந்த கலைகள் ஆவணங்கள் வழியே அல்லாமல் நிகழ்த்துவோர் நினைவின் வழியே நீடிக்கும், தலைமுறைகளாக பரிமாற்றம் செய்யப்படும் இயல்புடையவை. வாழ்வாதாரம் தேடிப் போகும் கலைஞன் ஒருவன் கலையினை நிகழ்த்தும் வாய்ப்பினை இழக்க நேரிடுகையில் அக்கலை அவன் நினைவின் ஆழங்களுக்கு சென்று கரந்துரைகிறது. மரபான முறையிலான தலைமுறைப் பரிமாற்றம் நிகழாமல் ஆகிறது. ஒரு வகையில் கலைவடிவம் உறைநிலை உறக்கத்திற்கு செல்வதாகத்தான் தோன்றுகிறது.

இரண்டாவதாக அக்கலை வடிவம் அதன் மரபார்ந்த நிகழ்த்து தளத்தை விட்டு வெளியே வருமாயின் அதற்கு இன்னொரு தளம் அமைய வேண்டியது அவசியம். அப்படி ஒரு தளம் உருவாக்கப்படவில்லையானால் அக்கலை நசிந்து போகும். தஞ்சையில் சதிர் தன் மரபார்ந்த புரவலர் அமைப்பை இழக்கையில் பரதம் எனும் நுண்கலை வடிவமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டதை சொல்லலாம். அப்படி வேறோர் இயங்குதளம் கிடைக்காத மரபுக் கலைகள் பரிதவித்து நசிந்து போவதையே பார்க்கிறோம்.

bb

மரபுக் கலையை அதன் மரபார்ந்த வடிவிலேயே தொடர இன்று சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மெலட்டூர் பாகவத மேளா அவ்வகையில் ஒன்று. 4௦௦ ஆண்டு மரபு இருப்பதாக சொல்லப்படும் இக்கலை தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் மானியமளிக்கப்பட்டு புரக்கப்பட்டது. முழுவதும் தெலுங்குப் பாடல்களால் உருவாக்கப்பட்ட, ஆண்கள் மட்டும் பங்கு பெறும்  நாட்டிய நாடகத் தொகுப்பே மெலட்டூர் பாகவத மேளா. அது தொடர்ந்து நடைபெறும் ஊர்களின் பெயரால் அழைக்கப்படும். சூலமங்கலம், சாலியமங்கலம், ஊத்துக்காடு முதலிய இடங்களிலும் பாகவத மேளா உண்டு. அரிச்சந்திரன் கதை, பிரகலாத சரித்ரம், உஷா பரிணயம், ஆண்டாள் கதை என பத்து நாட்கள் நடைபெறும் ஒரு விழா இது.

இதில் நரசிம்ம ஜெயந்தியை ஒட்டி நடைபெறும் பிரகலாத சரித்திரம் எனும் நாட்டிய நாடகமே அதிகம் புகழ் பெற்றது. நண்பர் ராகவ் மெலட்டூரை சேர்ந்தவர். அவர் அழைத்ததால் அவர் வீட்டில் தங்கி இவ்விழாவின் பிரகலாத சரித்திரம் நாட்டிய நாடகத்தை இந்த முறை  காண முடிந்தது.

இரவு பத்து மணியளவில் தொடங்கும் நாடகம் அதிகாலை 3 மணி அளவில் முடிவடைந்தது. முன்பெல்லாம் விடியும்வரை நடக்கும் என்றார்கள். மேடை என தனியாக இல்லை. வாழை மரங்களை வெட்டி நான்கடி உயரத்தில் இரு வரிசைகளாக நிறுத்தி அவற்றில் எண்ணெய் விளக்கை ஏற்றி அவ்வொளியில் நாடகம் நிகழ்கிறது.

பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் பாடகர்கள். பாடலுக்கும், இசைக்கும் அபிநயிக்கும் நடிகர்கள். இடையே வசனங்களும் உண்டு. இசை, பாடலின் இலக்கிய நயம் , கலைஞர்களின் திறன் எனும் மூன்றும் சந்திக்கும் இடங்கள் நாடகம் முழுதும் வந்தபடியே இருந்தன. ஒரு வகையில் நாடகங்களின் செவ்வியல் பண்புக் கூறு என இப்புள்ளியை சொல்லத் தோன்றுகிறது.

ஒரு வழக்கமான நாட்டார் கூத்து வடிவமே இதிலும் பின்பற்றப்படுகிறது. கோணங்கி, கட்டியங்காரன், கதைமாந்தர் தனித்தனியே வந்து தம்மை அறிமுகம் செய்து கொள்ளல், பாடலும் வசனமும் கலந்து வரும் முறை ஆகியவை நாட்டார் கலை வடிவத்திலிருந்து பெறப்பட்டவையே.

a

பாடல்கள் மிகுந்த ரசனையுடன் இயற்றப்பட்டிருக்கின்றன . பாடல்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வெங்கடேச சாஸ்த்ரி என்பவரால் மீண்டும் உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. பாடல்களில் வெளிப்படும் கவிதைத் தன்மை அதன் ஆசிரியர் செவ்வியல் ஆக்கங்களில் பயிற்சி உள்ளவர் என்பதைச் சொல்லும். பக்தியும், தத்துவமும் சரியாக இணைந்த பாடல்கள்.  இரணியன் திருமாலைத் தேடும்படி தன் படைகளுக்கு உத்தரவிடுகிறான். திருமால் ஒரு மாயோன். எனவே அவன் ஒளிந்திருப்பான். அவனை எப்படி தேட வேண்டுமென இரணியன் சொல்வது “நிந்தா ஸ்துதி “ தான். இரணியன் சொல்கிறான் – “ அவன் பூவுக்குள் தேன் போல ஒளிந்திருப்பான், பாலுக்குள் நெய்யென பதுங்கி உறைவான்………….”. முடிக்கும்போது சொல்கிறான் – “ அவன் சொல்லுக்குள் ஓங்காரம் என ஒளிந்திருப்பான். அவனைத் தேடி கண்டுபிடித்து என் முன் கொண்டுவாருங்கள்”.

இறுதிக் காட்சியில் நரசிம்மம் வெளிப்பட்டதும் அதனை கேலி செய்கிறான் –“ என்ன உருவம் இது ? மீனாக இருக்கிறாய், ஆமையாக இருக்கிறாய் , இப்போது மிருகமாக இருக்கிறாய், ஆனால் மனித ரூபமாகவும் இருக்கிறாய். எல்லா ரூபமாகவும் இருக்கிறாயே , உனக்கென ரூபம் இல்லையா ? “ –பக்தியின் ஆழத்தால் உருவாக்கப்பட்ட வரிகள்.

நாடகத்தில் காட்சிகளாக வெளிப்படும் நாடகீயத் தருணங்கள் மிக வியப்பானவை. நுட்பங்களை உணர்த்தும் அதே நேரம் அதில் கலை வெளிப்பாட்டையும் மிக சரியாக இணைக்கும் காட்சிகள். இதுவரை கேள்விப்பட்ட அனைத்து கதைகளிலும் தூணை அறைந்ததும்  செங்கட் சீயம் வெளிவருகிறது. உடனே இருவருக்கும் யுத்தம் என்றுதான் வாசித்திருக்கிறேன்.  இங்கு தூண் பிளந்து நரசிம்மம் வெளிப்பட்டதும் இரணியன் பாய்ந்து பிரகலாதனிடம் வருகிறான். “ பாலா , நுவ்வே சத்புத்திரடு – நீயே சத் புத்திரன். இதோ நீ சொல்லிய வண்ணம் உன் நெஞ்சில் உறைபவனை கண்முன் கொணர்ந்தாய், உன் நம்பிக்கையில் நீ உறுதியாக நின்றாயே, நீயே சிரேஷ்டன், நீயே மெய் பேசியவன் .” என்று மெச்சி ஒரு முத்தம் தருகிறான் மகனுக்கு.

அடுத்த நொடியே கர்ஜிக்கிறான் –“ஆனால் இவன் என் எதிரி.” என்று பாய்கிறான். ஒரு கணம் கண்கள் கலங்கி விட்டன. மரணம் கண்முன் வந்த கணமும் மகனை ஒரு கணம் அவன் நம்பிக்கை வென்றதற்காக பாராட்டிவிட்டு போருக்கு செல்லும் இந்த இரணியனை வேறெங்கும் கண்டதில்லை. என்னுள் இருந்த தகப்பன் சரியாகக் கண்டுகொண்டான் இந்த இரணியனை.

ஒவ்வொரு கதை மாந்தராக வந்து தம் பாத்திரத்தின் இயல்புக்கேற்ற பாடலுக்கு நடனம் ஆடி செல்கிறார்கள். அப்படி இரணியன், அவன் மனைவி லீலாவதி, பிரகலாதன் என வருகிறார்கள்.  பிரகலாதனும் தனியே வந்து ஹரி நாமமே முக்தி என இருபது நிமிடங்கள் பாடி  முடித்து மேடை நீங்குகிறான். கிட்டத்தட்ட அரங்கத்தின் விளிம்புக்கு சென்று விட்டான். எதிர்பாரா கணத்தில் நிகழும் காட்சியாய் மேடை விளிம்பிலிருந்து மின்னல் பாயும் தருணமாய் நான்கடிகள் வைத்து லீலாவதி மேடைக்கு வருகிறாள். திரும்பி வரும் பிரகலாதனை அள்ளி ஆவி சேர அணைத்து பெருமை பொங்க அணைத்துச் செல்கிறாள். காட்சி முடிகிறது. நொடியில் காட்டப்பட்ட தாய் கொள்ளும் பெருமிதத்தின் பிரம்மாண்டம்.

நடனக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக செய்தார்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சும் வெளிப்பாடு. காலையில் ராகவ் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் போல இருந்த அரவிந்தா இந்த இரணியன்? சிரிப்பில், கண்களின் முறைப்பில், கர்ஜனையில், புருவ நெறிப்பில், அழுந்த உதைத்து ஆடும் அசுர பாவ அடவுகளில், சற்றும் இறங்கா புயங்களின் பூரிப்பில் ( வன்கரி யிரண்டிரு கைக்கொடு பொருத்தும் என கம்பன் இரணியனின் தோள்வலி சொல்கிறான்) , ஒரு முறையேனும் நிலம் நோக்கா நிமிர் பாவனைகளில் என ஒவ்வொரு அசைவிலும் காவிய எதிர்நாயகன் இரணியன் கண்முன் நின்றான்.

b

லீலாவதியாக நடித்த நாகராஜன் லீலாவதியேதான். என் 8 வயது மகன் இறுதி வரை அது “ஆண்ட்டி”தான் என்பதில் உறுதியாக இருந்தான். தாய்மையின் பூரிப்பினை ஒவ்வொரு முறையும் மகனைத் தொடுவதில் நமக்குக் காட்டும் அதே நேரம் கணவன் மீதான நேசமும் வெளிப்பட நிற்கும் லீலாவதி இன்றும் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு. சுக்ராச்சாரியார் இரணியனின் சகோதரனின் மரணம் , கொன்ற விஷ்ணு குறித்து பேசப் பேச இரணியன் கோபத்தில் கொதிக்கிறான். அதே காட்சியில் பின்னால் நிற்கும் லீலாவதியின் வெளிப்பாடுகள் மிகச் சிறப்பானவை. “ஐயோ, இது வேண்டாமே’, “இப்ப இந்த பேச்சு வேணுமா?” , “ கடவுளே, இது எங்கு போய் முடியும்?” , “இவர் கிளம்ப மாட்டாரா”…. இத்தனை சொற்களின்  உணர்வுகளையும் லீலாவதி பாவங்களில் காட்டிக்கொண்டிருக்க முன்னால் இரணியனும், சுக்ராச்சாரியாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இரணியனின் கோபத்தைத் தணிக்க லீலாவதி செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தேர்ந்த கலை நுட்பங்கள். தாம்பூலம் மடித்துத் தருவதென்ன , கால்களை அழுத்தி விடுவதென்ன, அருந்த பானங்கள் கொடுப்பதென்ன , மகனை அழைத்து வந்து தந்தை முன் நிறுத்தி தணிவிக்க முயல்வதென்ன, சற்றே நெஞ்சை சிலிர்த்து ஆடை ஒப்பனைகள் செய்து கணவனிடம் இன்சொல் சொல்ல முயல்வதென்ன, அவன் விலக்குகையில்  முகம் சுருங்கி கணமே மீண்டெழுந்து புன்முறுவல் காட்டி மீள அவனை தணிவிக்க முயல்வதென்ன… ஹ்ம்ம் …. இரணியனுக்கும், இராவணனுக்கும்தான் இப்படி மனைவிகள் அமைகிறார்கள் எனும் கொடுமையை என்னவென்று சொல்ல  ?

மரபின் கலை என்பதால் பக்திக்கும், சில ஐதீகங்களுக்கும் முக்கியத்துவம் தரும் கலை வடிவம் என்றாலும் அவற்றையும் தாண்டி நிற்கும் கலைநுட்பங்கள் பலவற்றை மெலட்டூர் பாகவத மேளாவில் காண முடிந்தது.

தொழில்முறை அல்லாதவர் எனினும் பங்கேற்றோர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நகரங்களிலிருந்து இங்கு வந்து இந்த மேளாவை ஆண்டுதோறும் நிகழ்த்திச் செல்கிறார்கள். தெலுங்கு மொழி என்ற ஒரே காரணத்தால் ஆந்திர அரசின் துணை சபாநாயகர், ஆந்திரத் தொழிலதிபர், ஆந்திர அரசின் கலை பண்பாட்டுத் துறை செயலர் என வந்து பங்கேற்றனர். வரலாற்று உணர்வும், கலை உணர்வும் உள்ள சிறு உரைகள் ஆற்றி நிகழ்வுக்கு நேரம் தந்தனர்.  தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ் பாடப்படும் இடங்கள் உண்டு. அந்தப் பட்டியலாவது தமிழக அரசின் கையில் உண்டா எனத் தெரியவில்லை.

தமிழில் நாட்டார் கலைக்கும், செவ்வியல் கலைக்கும் இடையே ஒரு பாலம் போல் அமைந்த இந்த மெலட்டூர் பாகவத மேளாவை கலையுணர்வு கொண்ட நண்பர்கள் ஒருமுறையேனும் நேரில் பார்க்க வேண்டும். மெலட்டூர் ஊரே இந்த நாடகத்தை தன்னில் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறது. வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தால்  ராகவ் அப்பா சொல்கிறார் – அவர் பனிரெண்டு ஆண்டுகள் பிரகலாத வேடம் ஆடியவர், இரணியன், பெண் வேடம் தவிர பிற வேடங்கள் ஆடியவர், ஊரில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இந்த கலையோடு இணைந்திருக்கிறார்கள்.  அக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், அன்பும்.

 

ராஜகோபாலன்

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-45
அடுத்த கட்டுரைசெல்லப்பா நினைவுப்பதிவு -அ.ராமசாமி