நத்தையின் பாதை -கடிதம்

ஜார்ஜ் எலியட்
ஜார்ஜ் எலியட்ட்

ஜெமோ,

ஒன்றைப் பற்றிய புரிதல் ஏற்படும்போதே அதை மீற முடிகிறது. மீறுவது பெரும்பாலும் பொதுப்புத்திக்கு ஓங்குவதாகவே தெரிகிறது. அதிகாரமும் பயம் கண்டு அதை ஒடுக்கவே முற்படுகிறது. மரபார்ந்த அறிவு கொண்ட எவருமே தன் மரபுகளோடு முரண்பட்டு அதை வளர்த்தெடுத்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூகமளித்த பெயர் கலகக்காரர்கள். கலகம் இல்லாமல் இங்கு நியாயம் பிறப்பதில்லை. யார் கண்டது, ஆண்டனி போன்றவர்களால் கிறிஸ்து இன்னமும் நமக்கு அணுக்கமாயிருக்கலாம், நிகாஸ் கஸண்ட்ஸகீஸுக்கு ஆனது போல. கிறிஸ்துவம் இதைத் தடுத்திருக்கிறது.

 

கிறிஸ்துவின் உயிர்த்தெழல் பற்றிய இளையராஜாவின் சமீபத்தியக் கருத்து நினைவுக்கு வந்தது. இங்குள்ள ஏசு வியாபாரிகளான பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இளையராஜா சொன்னது புரியப்போவதேயில்லை.

டால்ஸ்டாயின் சுவிஷேசத்திலிருந்து ஏசுவை அறிந்து கொண்டவர்களில் ஒருவர் ராஜா என்று எண்ணத் தோன்றுகிறது. கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறி கிறிஸ்துவை அறிந்து கொண்டவர் டால்ஸ்டாய். கிறிஸ்து கூறிய ஆவி வாழ்க்கைக்கு எதிரான மாமிச வாழ்க்கையிலிருந்து வெளியேறியவர். கிறிஸ்துவின் உயிர்த்தெழல், மாமிசவாழ்க்கையை கைவிடமுடியாதவர்களால் அதைத் தொடர்வதற்காக செய்து கொண்ட ஒரு பாவனையே. ராஜா தேவையில்லாமல் எழுப்பியதும் இதைத்தான் என்று எண்ணுகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக எந்த மதத்திலும் இருந்து கொண்டு அம்மதங்களின் தீர்க்கதரிசிகளையோ கடவுள்களையோ நம்மால் அறிந்துகொள்ள முடிவதில்லை. நாம் அறிவதெல்லாம் மதபோதகர்களின், பூசாரிகளின், அர்ஷத்துகளின் திரிபுகளைத்தான்.

 

இப்படி மிக முக்கியமான புரிதல்களை எனக்களித்த ‘பாதை நிறைவுற்றது’ என்றவுடன் கொஞ்சம் வருத்தம் மேலெழுந்து, அப்பாதை என்னுள் ஏற்படுத்திய ஒளியில் இல்லாமலானது. “இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ மற்றும் ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ வழியாக தொடங்கிய உங்களுடனான பந்தத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றது விகடன் தடத்தில் வெளிவந்த இந்த நத்தையின் பாதை தொடர்தான்.

 

இத்தொடரில் வெளிவந்த ஒவ்வொரு கட்டுரையும் இலக்கியமறியா என்னைப் போன்ற பொது வாசகர்களுக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தவை.இலக்கியம் அறிய மரபுகளறிய வேண்டும் என்ற எதார்த்தத்தை ஆழமாக சுட்டிக்காட்டியவை. நம்மையும் அறியாமல் நாம் நம் மரபுகளின் மீது சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கோம் என்ற அறியாமையை உணர்த்திய ‘சிதல் புற்றுக்கள்’ இத்தொடரின் மிக முக்கியமான கட்டுரையென்று கருதுகிறேன். பன்னிரெண்டு கட்டுரைகள் கொண்ட இத்தொடரில், ஏனோ தெரியவில்லை சட்டென நினைவுக்கு வருவது இக்கட்டுரை மட்டுமே.

 

ஒளிரும் இப்பாதையின் தடத்தைப் பற்றிக் கொண்டு நானும் ஓரிரு தப்படிகள் எடுத்து வைத்திருக்கிறேன், “சொல்வளர்காடு” பற்றிய அவதானிப்பு(https://muthusitharal.com/2018/03/22/சொல்வளர்-காடு-dharmans-sabbatical-leave/), பதாகை வரை சென்றடைந்த என்னுடைய முதல் சிறுகதையென(https://padhaakai.com/2018/02/10/white-night/) , என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியும்கூட.

 

அன்புடன்
முத்து

நத்தையின் பாதை 1  ஜூன் 2017

இந்த மாபெரும் சிதல்புற்று ஜூலை 2017

தன்னை அழிக்கும் கலை ஆக  2017

தொல்காடுகளின் பாடல் செப்டெம்பர் 2017

காட்டைப்படைக்கும் இசை அக் 2017

குருவியின் வால் நவம்பர் 2017

 

இருண்ட சுழற்பாதை டிசம்பர் 2017

8  நிலைப்பதும் கலைப்பதும் ஆனது ஜன 2018

அகாலக்காலம் பெப் 2018

10 செதுக்குகலையும் வெறியாட்டும் மார்ச் 2018

11 சுவையின் வழி ஏப்ர1 2018

12  மீறலும் ஓங்குதலும் மெ 2018

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-48
அடுத்த கட்டுரைஊட்டி -நவீன்