பகுதி பத்து : பொருள்
நைமிஷாரண்யத்திற்கு வெளியே காலதேவனின் ஆலயத்திற்கு வந்து அமர்ந்த யமனுக்கு அருகே அகோரன் என்னும் காலன் வந்து வணங்கினான். அவர் விழிதூக்கி நோக்க “குசேலரின் இறுதிக்கணத்தில் உடனிருந்தேன். அவர் உயிரை கீழுலகுக்கு கொண்டுசேர்த்துவிட்டு வருகிறேன், அரசே” என்றான். யமன் தலையசைத்தார். “எளியவர், அவர் கணக்கு முற்றிலும் ஒழிந்திருக்கிறது என்றார் சித்திரபுத்திரன்” என்றான் அகோரன். யமன் பெருமூச்சுவிட்டார்.
“எஞ்சுவதென்ன, அரசே?” என்று அகோரன் கேட்டான். “இன்னும் எவர்?” என்று யமன் திருப்பி கேட்டார். “காசியிலிருந்து பன்னிரு முனிவர்கள் நைமிஷாரண்யம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். உதங்கர் அவர்களுக்கு தலைமைகொண்டு வருகிறார்” என்றான் அகோரன். யமன் அவன் மேலே சொல்வதற்காக காத்திருந்தார். “நேற்று காலை காசியில் நடந்த வேதமுடிபு ஆய்வமைவுக்கு உதங்கர் வந்திருந்தார். அவர் அங்கே ஏழு வினாக்களை கேட்டார். அவற்றுக்கு அவர்களால் மறுமொழி சொல்ல இயலவில்லை. சொல்லவை தேங்கி ஒலியிழந்தது. உதங்கர் அவ்வாறெனில் நாம் அவரிடமே கேட்போம் என்றார்.”
“அவர்தான்” என்றார் யமன். அவராகி மீண்டு சென்று இளைய யாதவரின் குடில் வாயிலை முட்டினார். அவரைச் சூழ்ந்து நின்றிருந்த முனிவர்கள் கைகூப்பினர். கதவு திறக்க நிழலென எழுந்து தெரிந்த இளைய யாதவர் “வருக, முனிவர்களே!” என்றார். “நாங்கள் உம்மைப் பார்க்கும்பொருட்டு வந்தோம், இளைய யாதவரே. இங்கு வர இத்தனை பிந்துமென எண்ணவில்லை” என்றார் உதங்கர். “நன்று, வேதமுடிபுச் சொல்லை உலகடங்கிய பின், நம் கைவிளக்கொளி நாம் விழைவதன்மேல் மட்டும் விழும் நோக்கில் அணுகுவதே நன்று” என்று இளைய யாதவர் புன்னகைத்தார்.
அவர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். உதங்கர் “காசியில் ஓர் சொல்லவையிலிருந்து அப்படியே எழுந்து கிளம்பியவர்கள் நாங்கள். உசிநாரத்தில் பேராலமரத்தின் அடியில் தவம் செய்துகொண்டிருந்த என்மேல் ஏழு இலைகள் ஒன்றன்மேல் ஒன்றென உதிர்ந்தன. எழுந்தபோது அவை ஏழு வினாக்களாக என் அருகே கிடந்தன. மேலும் அமைய இயலாமல் எழுந்து நடந்தபோது ஏழு நாகங்களாக என்னை தொடர்ந்தன” என்றார். அவர் கைகாட்ட இருளுக்குள் ஏழு விழிமின் புள்ளிகள் தெரிந்தன. “கேளுங்கள்” என்றார் இளைய யாதவர்.
உதங்கர் “யாதவரே, மெய்மை என்பது அனைத்திலும் நிலைகொள்ளவேண்டும். புலனறிவு, உய்த்துணர்வு, முன்னறிவு மூன்றும் சந்திக்கும் புள்ளியிலன்றி வேதமுடிபின் மெய்மை நிலைகொள்ள முடியுமா? அது வெள்ளிடை மலை தெரிவதுபோல் வெளிப்படும் என்றே நூல்கள் சொல்கின்றன. உள்ளங்கை நெல்லி என எப்போதேனும் தோன்றுமா?” என்றார்.
இருளிலிருந்து மெல்லிய வழிதலாக நாகம் ஒன்று தோன்றி அருகணைந்தது. அஸ்வஸ்தை என்னும் அந்த நாகம் இருளோ என அசைந்தது. இல்லையோ என விழிமயக்கு காட்டியது. “புலனறிவின் இடைவெளியை உய்த்தறிவால் நிரப்பியும் உய்த்தறிய முன்னறிவை துணைக்கொண்டும் மட்டுமே அது அறியப்படுகிறது. பிறிதிரண்டும் உள்ளமென்றும் அறிவென்றும் அகத்தே நின்றிருப்பவை. எந்த அவையிலும் வேதமுடிபின் சொல்திரண்டு எதிர்ச்சொல் எழுந்ததுமே சொல்லாடல் அகத்தே நுழைந்துவிடுகிறது. பின்னர் காற்றை காற்றால் அளக்கும் செயலே நிகழ்கிறது” என உதங்கர் தொடர்ந்தார்.
அகமென்பது புறமென வெளிப்பட இயலாதது. புறத்தமைந்த பொருளொன்றை அதற்கு நிகர்வைத்து மேலே சொல்லெடுக்கிறார்கள் வேதமுடிபினர். அதை ஒப்புமை அறிதளம் என்று சொல்லி அவைமுன் நிறுத்துகிறார்கள். அதை மறுத்து சொல்லெழுகையில் பொருளெழுகை அறிதளம் என்றும் இன்மையுணர்வு அறிதளம் என்றும் மேலும் மேலுமென அகமே விரிகிறது.
நாம் சொல்லிச்சொல்லிச் செல்லும் அனைத்து விடைகளுக்கும் அடிப்படையாக அகத்தே அறிதல் என்பதே எஞ்சி நிற்கிறது. வேதமுடிபு என்பது அகத்தே எழுந்து தன் நிழலை மட்டும் வெளியே காட்டும் ஓர் அறிதல் மட்டும்தானா? யாதவரே, வேதமுடிபின் மெய்மை வெற்று உளமயக்கே என்று சொல்லும் இருநிலையர், அனைத்து மறுப்பாளர், அறியமுடியாமைக் கொள்கையர், உலகியலாளர் போன்றவர்களை என்றேனும் மறுசொல்லின்றி நாம் வென்றிருக்கிறோமா?
ஆகாம்ஷை என்னும் இரண்டாவது நாகத்தின் சீறல் ஒலித்தது. உதங்கர் மேலும் கேட்டார். நாம் வென்ற அவைகள் அனைத்தையும் எண்ணிக்கொள்கிறோம். அந்த அவைக்குள், அச்சொற்களனுக்குள், அங்கிருக்கும் சொல்லடுக்குகளுக்குள், அங்கே பேசப்படும் நூல்களுக்குள் என எல்லை வகுத்துக்கொள்கிறோம். அதற்குள் நம்மை சீராக அடுக்கிக்கொண்டிருக்கிறோம். அதை எதிர்ப்பவர்களை சொற்களால் சூழ்ந்து வெல்கிறோம்.
நாகம் வந்து நின்று படமெடுத்தாடியது. உதங்கர் சொன்னார். யாதவரே, ஒவ்வொரு முறையும் நம் களனுக்குள் பிறரை இழுப்பதனூடாகவே நம்மை நிறுவுகிறோம். புலனறிவே மெய் எனும் தரப்பினரை நம் அகமறியும் தளங்களுக்குள் கொண்டுவருகிறோம். பருவுலகை முன்வைத்துப் பேசுபவர்களால் உய்த்தறிதலை விளக்க முடியாது. ஒப்புமைகளை எதிர்கொள்ள முடியாது. பொருளெழுகையையும் இன்மையறிதலையும் விளக்க இயலாது. நமது களத்தில் அவர்கள் கால் வழுக்குகிறார்கள். எப்போதும் உச்சத்தில் அறிவுகடந்த ஒன்றை வைத்தே நாம் அமைகிறோம்.
மூன்றாவது நாகமான ஜிக்ஞாஸை ஒழுகி வந்தது. உதங்கர் கேட்டார். அது அறியவியலாதது என்று ஒவ்வொருமுறையும் சென்று நிற்கிறோம். அறியமுடியாததைப் பற்றிய அறிவு என ஒன்று இருக்கலாகுமா? அறிவென்பது வரையறை. வரையறை என்பது எல்லைகளால் ஆனது. எல்லைகளை அழித்து ஒன்றுடன் ஒன்றென்றாக்கி முழுதொன்றை உருவாக்கி நிறுத்தும் நமது பார்வை அறிதலுக்கே எதிரானது.
சொல்லவைகளில் அமர்ந்ததுமே நாம் வரையறைகளை உடைக்கத் தொடங்குகிறோம். நாம் என்றும், இது என்றும், இதனால் என்றும், இவ்வாறு என்றும், எனவே என்றும் கொள்ளப்படும் எல்லா புள்ளிகளையும் மோதி நிலையழியச் செய்கிறோம். அவை கொள்ளும் மயக்கங்கள் வழியாக கடந்துசெல்கிறோம். வரையறுக்கவொண்ணாதது எனச் சொல்லி நிறுத்துகிறோம். நாம் அவைகளில் சொல்லாடுவதில்லை. சொல்லாடலை மறுக்கிறோம்.
விஃப்ரமை எனும் நான்காவது நாகம் வந்து உடல்சுழித்துக்கொண்டிருக்க உதங்கர் சொன்னார். இங்குள அனைத்தும் ஒன்றே என்றால் ஒவ்வொன்றும் தனிநெறி கொண்டிருக்கவேண்டியதில்லை. அனைத்து அறிதல்களும் ஒன்றையே அடைகின்றன என்றால் நோக்குகள் முரண்கொள்ள வேண்டியதில்லை. ஒன்றென்று சொல்லும் நாம் ஏன் நெறிகளுடன் முரண்படுகிறோம்? ஏன் மறுத்தெழுகிறோம்? யாதவரே, எதன்பொருட்டு திரண்டு இருபாற்பட்டு நின்றிருக்கின்றன படைகள்?
இயல்பில் இவை ஒன்றென்றால் பலவென்று நின்றிருப்பது பொய். பலவென்று நின்றிருப்பது விழிக்கூடு என்பதனால் விழிக்கூடே மறுப்பென்றாகவேண்டும். ஐம்புலன்களால் அறிவனவற்றை அகத்தால் மறுக்கிறோம். பசியென்று, தனிமையென்று, நோயென்று, இறப்பென்று கொம்புதலை குலுக்கிவருகிறது மதயானை. அங்கு யானையே இல்லை என்று கொண்டால் அது தாக்காது என்கிறோம். மூன்று வழிகளில் நாம் அதை மறுக்கிறோம்.
யானையும் கருமை இருளும் கருமை, எனவே யானையென்பது இருளே என்கிறோம். யானை என்பது முகில்போன்றது, முகில் பொருளென உருக்காட்டுவது என ஒப்புமை சொல்கிறோம். யானையென பிரிக்காமல் காடெனப் பார்க்கவேண்டும், காடெனப் பிரிக்காமல் புவியென நோக்கவேண்டும், புவியென நோக்காது புடவியெனக் காணவேண்டும் என்கிறோம். புடவியென்பது முடிவிலி என்பதனால் யானை முடிவிலியில் விழிமயக்கெனப் பிரிந்து தோன்றுவதே என்கிறோம். யாதவரே, யானை முற்றிலும் மறைவதே விடுதலை என்கிறோம்.
யாதவரே, வீடுபேறென்பது என்ன? அறிந்தமைந்தோர் என்பவர் யார்? என்று உதங்கர் கேட்டதும் ஐந்தாவது நாகமான விபரீதை வந்து எழுந்தது. இவையனைத்தும் இரண்டென்றும் பின்பு பலவென்றும் பிரிந்துபெருகி வகைகொண்டு சூழ்ந்திருக்கின்றன. பிரிந்தமைந்தவற்றின் எல்லைகளும் வேறுபாடுகளும் மறைந்து ஒன்றென்றாவதே வீடுபேறு. தானழிந்து ஒன்றிலமர்ந்தவர் அறிந்தமைந்தோர் என்கிறோம். எல்லைகளும் வேறுபாடுகளும் கலந்தழிந்தோர் பித்தரென அலைகிறார். பித்தருக்கும் பிறவி கடந்தோருக்கும் என்ன வேறுபாடு?
அவ்வேறுபாட்டை பிறவிகடந்தோர் மட்டுமே அறிவார் எனில் கடத்தலென்பது கடந்தோர் மட்டுமே கொள்ளும் தன்னுணர்வு மட்டும்தானா? உருக்கொண்டோர் உருவிலிப்பெருக்கை அறிவது அரிதிலும் அரிதென்று உரைத்தீர்கள். அறிந்தமைந்த அவ்வரியோர் இங்கிருக்கும் கோடிகளில் ஒருவர் என்று அறிவோம். கோடியிலொருவர் கொள்ளும் விடுதலைக்காக கோடிக்கணக்கானோர் பிறந்தழியும் இப்பெருஞ்சுருளுக்கு என்ன பொருள்? கோடியிலொருவரை மேலேற்றிவிடும் இந்த ஏணி ஒரு மாயவிளையாட்டு மட்டும்தானா?
விவர்த்தை எனும் ஆறாவது நாகம் வந்து படமெடுத்தது. உதங்கர் கேட்டார். எதனால் அது இதுவென்றாகியது? இவையெனப் பெருகியது? அந்நோக்கம் இங்கிருக்கும் ஒவ்வொன்றிலும் உறைந்திருக்கவேண்டும். அந்நோக்கத்தாலேயே இவையனைத்தும் நிகழவேண்டும். அது நோக்கமற்ற விளையாடலென்றால் இங்கு நிகழும் அனைத்தும் விளையாட்டே. யாதவரே, அவ்விளையாட்டையா சொல்லெண்ணி வகுத்து, மெய்யறிவென்று தொகுத்து, அவைதோறும் முன்வைக்கிறோம்? அதையறியவா ஊழ்கமும் நோன்புமென தவமியற்றுகிறோம்?
ஏழாவது நாகமான விமதை படமுயர்த்தியபோது உதங்கர் சலிப்புகொண்ட முகத்துடன் சொல்லிழந்து அசையாதிருந்தார். அவரருகே நின்றிருந்த முனிவர்கள் அவரையும் இளைய யாதவரையும் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தனர். “யாதவரே, இங்கு வாழவும் வெல்லவும் வழிசொல்வதை சிற்றுண்மை என்று விலக்கிவிட்டு இவற்றைத் துறந்து அகன்று அமைந்து பேருண்மை தேடுவதை முன்வைக்கும் வேதமுடிபு மானுடத்திற்கு அளிப்பது என்ன? இது மலரும் காயும் இல்லாத அழகிய மரம் மட்டும்தானா?” என்றார் உதங்கர்.
உதங்கர் கேட்டு முடித்ததும் முனிவர்கள் அனைவரும் மெல்ல உடல் தளர்ந்தனர். சிலர் நீள்மூச்சுவிட்டனர். அவ்வினாக்களை சொல்வடிவில் தொகுத்துக்கொள்வதையே அவர்கள் அப்போதுதான் செய்கிறார்கள் என்பதுபோல. எதிர்கொள்ள அஞ்சி தவிர்த்திருந்தனவற்றை நேர்கண்டுவிட்ட நிறைவை அடைபவர்களைப்போல. சிலர் உள்ளத்தால் திரும்பிச் செல்லவும் தொடங்கிவிட்டனர் எனக் காட்டின உடலசைவுகள்.
இளைய யாதவர் “நாகங்கள் பெருவயிறு கொண்டவை, உதங்கரே” என்றார். “அவை ஒன்று ஆயிரமென குழவியீன்று பெருக்குபவை.” அவர் கைகாட்டிய இருளை நோக்கிய உதங்கர் “ஆ! ஆ!” என மூச்சொலி எழுப்பினார். பிறர் நோக்கியபோது அவ்வறையின் விளிம்பெல்லாம் பல்லாயிரம் நாகங்களே இருளென நெளிவதை கண்டார்கள். “இன்னும் விரியாத கோடி முட்டைகளுக்குள் நாகக்குழவிகள் சுருளவிழ்ந்து விழிகொண்டு தங்களை உணர்கின்றன. படம்விரித்து ஆணவம் கொள்கின்றன” என்று இளைய யாதவர் சொன்னார்.
“நாகங்களை அறிந்தவர் கூறுவதுண்டு, அவற்றை முற்றழிக்க எவராலும் இயலாது என. ஒரு நாகம் எப்போதும் எஞ்சியிருக்கும். ஆழத்து வளைகளுக்குள். அன்னை வயிற்றுக்குள். பெருகாமையால் அமுதம் உண்பவர்கள் விண்ணவர். கட்டின்றிப் பெருகுவதனால் அழிவின்மையை அடைந்தவை ஆழுலகத்து நாகங்கள். அவை வாழ்க!” என்று இளைய யாதவர் சொன்னார்.
“நாகங்கள் அனைத்தும் கத்ருவும் வினதையும் ஈன்றவை” என அவர் தொடர்ந்தார். “ஒன்று பெருகி முடிவிலியானவை அவை. நாகங்களின் இயல்புகளில் முதன்மையானது அவை ஒன்றுபிறிதை உண்ணும் என்பது. அன்னை குழவியை விழுங்கும். உதங்கரே, தோன்றிய இடத்திற்கே திரும்பிச்செல்லும் வாய்ப்பு கொண்டவை அவை.” தரையில் கையால் தட்டி “இங்கு எழுந்தாடும் இந்த ஏழு நாகங்களும் ஓரன்னை பெற்றவை” என்றார்.
ஏழாவது நாகமான விமதை திரும்பி தன்னருகே நின்றிருந்த விவர்த்தையை நோக்கி சீறியது. அவை ஒன்றையொன்று கொத்திக்கொண்டு உடல்பிணைத்து உருண்டு பூசலிட்டன. விவர்த்தை வாய் திறந்து விமதையை விழுங்கியது. அன்புடன் அணைக்கும் கைகள்போன்றிருந்தன அதன் தாடைகள். விமதையின் தலை உள்ளே புகுந்தது. விவர்த்தையின் உடல் நெளிந்துகொண்டே இருந்தது. விமதை ஒரு சிறுபொந்துக்குள் தானாகவே உடல்நெளித்து உள்நுழைவதுபோல் தோன்றியது.
விழுங்கி முடித்து அமைதிகொண்டு கிடந்த விவர்த்தையின் அருகே ஊர்ந்து வந்து தலைதாழ்த்தியது விபரீதை. அதன் தலையருகே தன் முகத்தை வைத்து வெறித்து நோக்கியது. வாய்திறந்து அதன் தலையை தன்னுள் எடுத்தது. விவர்த்தை வால்சுழல துள்ளித்துள்ளி துவண்டது. ஆனால் நீரோடை நண்டுவளைக்குள் செல்வதுபோல விபரீதைக்குள் நுழைந்து மறைந்தது. விழுங்கியபின் வளைந்து இருமுறை தலைதூக்கி தளர்ந்து மண்ணிலறைந்து விழுந்த விபரீதையை நோக்கி மெல்ல ஊர்ந்து வந்தது விஃப்ரமை.
விபரீதையை விஃப்ரமை விழுங்குவதை முனிவர்கள் விழிதுறிக்க நோக்கி நின்றனர். விஃப்ரமை விழுங்கி முடித்ததும் அசைவிழந்து இறந்ததுபோல் கிடக்க அதை ஜிக்ஞாஸை கணுக்கணுவாக விழுங்கியது. நாழி நாழியை முகப்பதுபோல அதை ஆகாம்ஷை என்னும் நாகம் விழுங்கியது. “அதற்கு பிற அனைத்தையும் திரும்ப விழுங்குமளவுக்கு பசி உள்ளது” என்றார் இளைய யாதவர். அஸ்வஸ்தை ஆகாம்ஷையை விழுங்குவது இரு நிழல்கள் இணைவதுபோலவே தோன்றியது.
ஒற்றைநாகம் மட்டும் எஞ்சியதும் முனிவர்கள் நிலைமீண்டனர். “ஆம்” என்று பெருமூச்சுடன் உதங்கர் சொன்னார். இளைய யாதவர் “இந்நாகத்தை நான் நன்கறிவேன், முனிவர்களே” என்றார். “முன்பு நான் சப்தஃபலத்தில் பதினான்கு ஆண்டுகள் இருள்தவம் இயற்றியதை அறிந்திருப்பீர்கள். அங்கே நான் அவ்வாறு அமர்ந்தது இந்த நாகத்தின் நஞ்சால்தான்.” உதங்கர் “இதை நான் அறிந்திருக்கவில்லை” என்றார். “இவள் பெயர் அஸ்வஸ்தை. மண்ணிலுள்ள மானுடர் அனைவரிலும் சிறு அணுவாக குடியிருப்பவள். நிழல் என தொடர்வாள். இருளில் உடனிருப்பாள். தனிமையில் பெருகுவாள்.”
இவள் நஞ்சு வெறுமையைப் போக்கும் அமுது என சிலரால் கொள்ளப்படுவதுண்டு. இவ்வுலகை துயரால் நிறைத்து இருளாக்கிக் காட்டும் அது. வஞ்சமும் கழிவிரக்கமும் பெருக அதுவரை அறிந்த ஒவ்வொன்றையும் பிறிதொன்றென நோக்கும் விழிகள் எழும் நமக்கு. சித்தமும் கனவும் துரியமும் அலைக்கொந்தளிப்பு கொள்ளும். புயல்பட்ட கலத்திலென ஒரு கணமும் நிலைகொள்ளாது காலவெறுமையை கடந்துசெல்லலாம்.
கற்றறிந்தோரும் இவள் நஞ்சை விரும்பி ஏற்பதுண்டு. கல்விச் சுமையை உணர்ந்து சலிப்பவர்கள். கல்விகொண்டமையால் தனிமையாகி விலகிநின்று மானுடத் திரளை நோக்கி ஏங்குபவர்கள். இவள் நஞ்சின் ஒரு துளி போதும் அவர்கள் தாங்கள் கற்றதனைத்தும் பொய்யோ என ஐயுறுவார்கள். கணம்நூறென்று பெருகி இவள் அவர்கள் கொண்ட சொற்களனைத்தையும் விழுங்கிவிடுவாள். அடர் இருளில் அமையச்செய்வாள். பின்னர் அதிலிருந்து எழுவது எளிதல்ல. நூறுமுறை உள்ளத்தால் உந்தினாலொழிய ஒரு சொல் அசையாது. நூறாயிரம் சொற்கள் எழுந்தாலொழிய ஒரு தசையை அசைக்கவியலாது.
தாங்கள் இருக்குமிடத்திலிருந்து விலகிச்செல்ல விழையாத மானுடர் இல்லை. தன்னைத் தானே மறுத்துக்கொள்ளாமல் மானுடர் ஒரு காலகட்டத்தை கடக்க முடியாது. தாங்கள் தங்களைவிட மேலானவர் என எண்ணும் ஆணவம். தாங்கள் அடைந்தனவற்றைவிட பெரிதை நழுவவிட்டுவிட்டோமோ என்னும் விழைவு. ஓருடலில் பலரெனப் பெருக முந்துபவர்கள். ஒரே தருணத்தில் பல இடங்களில் இருக்க எண்ணுபவர்கள். இவள் அவர்களருகே அணுக்கக்குழவியென அமைந்திருப்பவள்.
சப்தஃபலத்திற்குச் செல்கையில் நான் களைத்திருந்தேன். என் உடன்பிறந்தவரால், உற்றாரால் கைவிடப்பட்டிருந்தேன். குடிகள் என்னை ஐயப்பட்டனர். என் இலக்கு அகன்று அகன்று சென்றுகொண்டிருந்தது. நகருக்குள் நுழைந்து என் அறைக்குச் சென்று தனித்து அமைந்திருந்தேன். அன்று என் கனவில் ஒரு நூலை படித்தேன். அதில் குருக்ஷேத்திரப் பெரும்போரை கிருஷ்ண துவைபாயன வியாசர் விவரித்திருந்தார். ஒவ்வொன்றையும் அருகெனக் கண்டேன்.
துயிலில்லாமல் இரவில் தோட்டத்தில் அலைந்துகொண்டிருக்கையில் என்னருகே இதை சிறு புழுவெனக் கண்டேன். வால்துள்ள உடல்சுருண்டு எழ தலைதூக்கி என்னை நோக்கியது. இதை நன்கறிந்திருந்தேன். குனிந்து இதன் விழிகளை நோக்கினேன். என்னை தூக்கிக்கொள் என்று சொல்லும் குழவி போலிருந்தது. அதை நோக்கிக்கொண்டிருக்கையில் ஓர் எண்ணம் எழுந்தது. மாற்றுவழியே இல்லை என்று உணர்ந்திருப்பது என் முன்முடிவின் உளமயக்கா? மாற்று ஒன்று எங்கேனும் இருக்கலாகுமா? இதன் நஞ்சு என்னை முற்றிலும் கலைத்தால் நான் பிறிதொருவன் என நோக்கக்கூடுமா?
கைநீட்டி இதன் வாயை தொட்டேன். என் விரல்நுனியில் தாழைமுள்போல மெல்ல கொத்தியது. மிகச் சிறிய குருதித்துளி. என் குருதியில் ஒரு சிறுநீலக் குமிழி. மீண்டு என் அறைக்கு வந்தபோது எனக்குப் பின்னால் நீண்டு சுருள்சுருளென வந்துகொண்டிருந்தது இந்த நாகம். ஏழென்று ஆகி எழுநூறென்று பெருகியது. அவ்விரவிலேயே கிளம்பி கானேகினேன். அங்கு செல்வதற்குள் நாகங்கள் என்னை நிழல்காடாக சூழ்ந்திருந்தன.
நான் அமர்வதற்காக மரம் ஒன்றை தேடினேன். கரிய அடிமரத்துடன் வேர்ப்புடைப்புகள் எழ ஓங்கி நின்றிருந்த ஆலமரத்தைக் கண்டு அதன் அடியில் அமர்ந்தேன். விழிதூக்கி மேலே பார்த்தபோது அறிந்தேன், அது இந்நாகமே என. விண்மூடி எழுந்திருந்தது. விழிகள் சூரியனும் சந்திரனுமென தெரிந்தன. நா அனலென பறந்தது. காலைமுதல் மாலைவரை கதிரவன் ஒளி என்னருகே வராமல் படம்திருப்பி திரையிட்டது. நான் முடிவிலா இருளில் அங்கு அமர்ந்திருந்தேன்.
பதினான்காண்டுகள். இரவுபகலில்லாத, நினைவுகளில்லாத, காலமில்லாத இருப்பு. ஒவ்வொன்றும் உடைந்து சரிந்தன. கல்மேல் கல்நிற்காத வெளியென விரிந்திருந்தது உலகம். ஒரு விழியை பிறிதொன்று அறியாத திரள் என உயிர்க்குலம். ஒலியோடு சொல்லும், சொல்லோடு பொருளும், பொருளோடு கனவும் பொருந்தா பெருக்கென உள்ளம். மீண்டுவந்த கணத்தை மட்டும் சொல்கிறேன். சென்று சென்று அடித்தட்டில் விழுந்து விழுந்து இறுதியில் அன்னை கத்ருவை கண்டேன்.
இருளின் பெருஞ்சுழல். முடிவிலா பேருடல். “அன்னையே சொல்க, நீ இன்மையா? உன் பொருள் வெறுமையா?” என்றேன். அன்னையின் மூச்சொலி கோடிகோடி இடிகள் என, புயல்கள் என ஒலித்ததை கேட்டேன். “ஒவ்வொன்றையும் பொருளழியச் செய்யும் இந்நாகங்கள் உன் குழவிகள் என்றால் நீ பொய்யேதானா?” என்றேன். திசைகளெங்கும் முழங்க “சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்” என்னும் குரலை கேட்டேன். அன்னை நாகம் படமுயர்த்தி எழுந்தது. என் முன் நின்ற ஒவ்வொரு நாகத்தையும் பிறிதொன்று விழுங்கியது. முதலன்னை அனைத்து நாகங்களையும் விழுங்கி தானென்றே எஞ்சியது. மெல்ல புரண்டு வெண்ணிற ஒளிகொண்ட வினதையாகியது.
“நான் எழுந்து நோக்கியபோது என் வானில் கதிரெழுந்திருந்தது. பசுமைபொலிய உயிர்க்குலங்கள் செறிந்து சூழ்ந்திருந்த காடு ஆம் ஆம் ஆம் என்றது” என்றார் இளைய யாதவர். “அங்கிருந்து நகர்மீண்டேன். அந்தப் பதினான்காண்டுகளில் அனைத்தையும் வேறெங்கிருந்தோ நோக்கினேன், மலைமீதிருந்து நகரை நோக்குவதுபோல. ஒருநோக்கில் அனைத்தையும் கண்டு தெளிவடைந்தேன்.”