நைமிஷாரண்யத்தில் கர்க்கர் இளைய யாதவரிடம் கேட்டார் “யாதவனே, வேதம்நாடும் முதற்பொருள் முடிவிலாதது எனில் வேதம் எனத் திரள்வது என்ன? எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை?” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு நாளும் இந்தப் பெருங்களத்தில் மானுடர் போரிடுகிறார்கள். வெல்கிறார்கள், தோற்கிறார்கள். வெற்றியுடனும் தோல்வியுடனும் வேதம் இணைந்திருக்கிறது. அவர்கள் பொருட்டு அவிசொரிந்து வேட்கும் அந்தணர்களாகிய நாங்கள் இங்கு இயற்றும் செயலின் பயன்தான் என்ன?”
சண்டகௌசிகர் சொன்னார் “நேற்று முன்னாள் நெடுந்தொலைவிலுள்ள சிற்றூரில் இருந்து ஓர் எளிய வேட்டுவர் எங்கள் வேள்விச்சாலைக்கு வந்தார். தன் கையிலிருந்த சுரைக்குடுவையில் ஊன்கொழுப்பு நெய் கொண்டுவந்திருந்தார். அதை வேள்வியில் அவியென சொரியவேண்டும் என்றும் தன் குடியும் கொடிவழியும் செழிக்க வேதச்சொல் எழவேண்டும் என்றும் கோரினார். அவருடைய குடிப்பெயர் சொல்லி அதை நான் அனலில் சொரிந்தேன். யாதவரே, அந்த அவியை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் அவரை அறியுமா?”
“ஆம், நான் வினவ விழைவதும் அதுவே” என்றார் முதிய அந்தணரான ஜீமுதர். “முன்பொருமுறை வழிநடையில் ஒரு சிற்றாலயத்தின் முன் இரு கைகளையும் கூப்பி அமர்ந்திருந்த முதுமகள் ஒருத்தியை கண்டேன். அவள் முன் சிறுகல் வடிவில் செவ்வரளி மலர்சூடி அமர்ந்திருந்தது ஏதோ தெய்வம். அவள் விழிநீர் வடிய உதடுகள் நடுங்க அத்தெய்வத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். நான் கடந்துசெல்கையில் நேற்றும் உன்னிடம் சொன்னேன். அப்படி எத்தனைமுறை சொன்னேன் என அவள் சொன்னதை கேட்டேன்.”
அரசமுனிவரே, அக்கணம் என் உள்ளம் உருகியது. தெய்வமெழுக என்று நான் என் முழுச் சித்தத்தாலும் கூவினேன். ஆனால் அது அனலில் எழுந்து அவிகொள்ளுமா, விண்ணிலிருந்து மண்புரக்குமா, வெறும் சொல்லுருவகம் மட்டும்தானா, அஞ்சினோரும் தனியரும் கொண்ட உளமயக்கன்றி வேறில்லையா என்று உள்ளம் கலைந்தேன். அவ்வினாக்கள் என் இளமையில் என்னை வந்தடைந்தன. இன்றுவரை பலநூறு வேள்விகளில் அமர்ந்து அவிசொரிந்து வேதமோதி வேட்டிருக்கிறேன். சொல்லெண்ணி ஒலிபொருத்தி வேதம் முற்றோதியுள்ளேன். ஆயினும் அந்த ஐயம் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது.
என் பொருட்டு வேண்டிக்கொள்கையில் எல்லாம் இந்தப் பெருங்கதவத்திற்கு அப்பால் எவரேனும் உள்ளனரா என்றே என் அகம் திகைக்கும். ஆனால் அங்கு இல்லையென்றாலும் இருக்கிறதெனும் சொல்லேனும் இங்கு வாழட்டுமே என்று எண்ணினேன். இல்லையேல் எளியோருக்கும் தனியருக்கும் எவர்தான் இங்கு துணை? யாதவரே, மெய்யாகவே பிறர் சொல்கேட்கும் மானுடச்செவி என ஒன்று உண்டா?
இப்புவியில் ஒருகணத்தில் எத்தனை கோடி வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன! எத்துணை விழிநீர் சிந்தப்படுகிறது! என்னென்ன வகையான வழிபாட்டுச் சடங்குகளால் ஆனது மானுட வாழ்க்கை! அவையனைத்தையும் பெற்றுக்கொள்ள அப்பால் கைகளும் செவிகளும் இல்லையாயின் மானுடரைப்போல இரக்கத்திற்குரிய உயிர் எது?
யாதவரே, இந்தப் பெருவேள்விகளை நோக்கி நிற்கையில் எல்லாம் என்னுள் ஐயமெழுவதுண்டு. எங்கு செல்கின்றன இந்த அன்னமும் நெய்யும்? வெறும்புகையென விண்ணில் கரைந்தழிகின்றனவா? எனில் எதன்பொருட்டு இதை தொடங்கினர் முந்தையர்? ஒருபொழுதில் அந்த ஐயம் எழுந்து என்னை முழுமையாக மூடியது. கைசோர செயலற்று அமர்ந்திருந்தேன். என் எதிரிலிருந்த வேதியர் அவிசொரியும்படி என்னிடம் விழிகாட்டினார். அப்படியே எழுந்து வெளியே சென்றேன். வேள்விச்சாலையிலிருந்து விலகி ஓடினேன்.
நாற்பத்தேழு நாட்கள் அன்னசாலைகளில் உண்டு, மரநிழல்களில் துயின்று, எவரிடமும் ஒரு சொல்லும் உரைக்காமல் சென்றுகொண்டிருந்தேன். கொந்தளித்துக்கொண்டிருந்த உள்ளத்தில் அலையோசை என ஒரு வினாவே எழுந்துகொண்டிருந்தது. அப்போது மாளவத்திலிருந்தேன். தண்டகாரண்யத்தை நோக்கி சென்றேன். சித்திரை வெயிலில் காய்ந்து கிடந்தது காடு. விளைநிலங்கள் பாலைவிரிவென தெரிந்தன. சோர்ந்திருந்தன கால்நடைகள். பறவைகள்கூட சிறகோய்ந்து கிளைகளில் அமர்ந்திருந்தன.
நான் சென்றமைந்தது ஒரு சிறுகுடிலில். அங்கே முதிய அந்தணர் ஒருவர் கானேகலுக்கு வந்து தங்கியிருந்தார். அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நானும் ஒன்றும் சொல்லவில்லை. நான் சென்ற மறுநாளே அவர் கிளம்பி தெற்கே சென்றார். குடிலில் வறுத்த அன்னப்பொடி இருந்தது. கலத்தில் நீர். நான் கூரைக்கு அடியில் அரையிருளில் பாயிலிருந்து எழாமலேயே கிடந்தேன். வானம் பெருமுழக்கமிடுவதை கேட்டேன். மின்னல்கள் குடிலறைக்குள் ஒளியதிரச் செய்தன. பெருமழை கொட்டலாயிற்று.
வான்போல் இருண்டிருந்தது என் உள்ளம். மழையை நான் அறியவில்லை. பன்னிரு நாட்கள் அங்கிருந்தேன். பின்னர் உணவு தீர்ந்ததை அறிந்த பின்னரே வெளியே வந்தேன். களைத்த உடலை மெல்ல மெல்ல நகர்த்தி கொண்டுசென்று காட்டை நோக்கினேன். அங்கே நான் கண்டது பிறிதொரு காடு. நிலம் மலர்ந்திருந்தது. பசுமையன்றி ஏதுமில்லை எங்கும். அனைத்துச் செடிகளிலும் தளிர். அள்ள அள்ள அன்னம். கனிகளை உண்டு, பெருகிச்சென்ற ஓடைகளில் நீர் குடித்து உடல் தெளிந்தேன்.
ஒரு மலைவிளிம்பில் நின்று விரிந்த நிலத்தை நோக்கினேன். பசுமை விழிநிறைத்தது. தென்மேற்கில் முகிற்குவைகள் பெருகிக்கொண்டிருந்தன. குளிர்க்காற்று நீர்த்துளிகளுடன் உடல்தொட்டுச் சென்றது. ஒரு கணத்தில் மெய்ப்புகொண்டேன். அதன் பின்னரே அந்த எண்ணத்தை அடைந்தேன். வேறெப்படி நாம் திருப்பியளிக்க முடியும்? தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு கைப்பிடி அள்ளி அன்னைக்கு திருப்பி ஊட்டமுயலும் மைந்தர் அல்லவா நாம்? அதைவிட இனிய உணவுண்டா அன்னைக்கு?
முந்தையோரே, எத்தனை நெகிழ்ந்திருந்தால் இதோ என அள்ளி அதற்கே அளித்திருப்பீர், இன்னும் இன்னும் என அவி பெய்து நிறைந்திருப்பீர் என எண்ணி விழிநீர் மல்கினேன். இரு கைகளையும் விரித்து “தேவர்களே, தெய்வங்களே, நீங்கள் எவரேனும் ஆகுக! நீங்கள் அறியவியலாதோராயினும் இல்லாதவரேயாயினும் எங்கள் உளப்புனைவேயாயினும் எங்களுக்கு அளிக்கிறீர்கள். நாங்கள் திருப்பியளித்தாகவேண்டும். அப்போதுதான் எங்கள் உளம்நிறையும். அந்த நிறைவின்பொருட்டே எழுக வேள்விகள் என இதோ அறிகிறேன்” என்று கூவினேன்.
யாதவரே, வேள்விகளை பயனற்றவை எனச் சொல்லும் அறிஞர் இன்று நிறைந்துள்ளனர். மறுப்பாளர், ஐயத்தார், இருமையாளர், உலகியலார். அவர்கள் அனைவரிடமும் எளிய வேதியனாகிய எனக்கு சொல்வதற்கொன்றே உள்ளது. அறிந்து தெளிந்து இதை ஆற்றவில்லை நாங்கள். அவைநின்று இதை நிறுவவும் எங்களால் இயலாது. இது அறிவெழும் முன்னரே எங்கள் மூதாதையர் இயற்றிய சடங்கு. இதை ஆற்றுகையில் அறிவிலாதிருப்பதன் மாபெரும் விடுதலையை நான் அடைகிறேன்.
“வேதமுடிபின் ஆசிரியர் நீங்கள். உங்கள் புன்னகையின் பொருளென்ன என்று நான் அறியேன். ஆனால் நான் தெளிந்த ஒன்றுண்டு. அறிவினூடாகச் சென்றடையும் மெய்மைகள் பல இருக்கலாம். அறிவின்மையினூடாகச் சென்றடையும் மெய்மைகளும் சில உண்டு. நெய்யள்ளி அவியிட்டு வேதச்சொல்லுரைத்து அமரும் நான் வெறும் நிலம். மழையென வந்ததை இலைப்பசுமையென்றும் மலர்வண்ணமென்றும் திருப்பியளிப்பவன். என் இயல்பால் அதை எனையறியாமல் இயற்றுகிறேன்” ஜீமுதர்.
”ஆம், இப்புவியெங்கும் ஏதேனும் ஒரு வடிவில் வேள்வி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இறைவனுக்கு உணவளிக்காத மானுடர் எங்கும் இல்லை” என்றார் கர்க்கர். “இல்லத்தில் கைப்பிடி மாவை தெய்வமென உருட்டிவைத்து சிறுகரண்டியால் அன்னம் பரிமாறி வணங்கும் முதிய குலமகளின் எளிமைக்கு நிகரான தவமுண்டா என நான் உளம் பொங்கியதுண்டு. எத்தனை வடிவங்களில் ஏதேதோ முறைகளில் வழிபடப்படுகிறது அது. முழுமைத் தோற்றம் கொண்டு அவர் முன் அது எழாமலிருப்பதே அவர்கள்மேல் கொண்ட பேரளியால்தான் போலும்.”
அவர்கள் சொல்லிமுடித்ததும் மீண்டும் அமைதி நிலவியது. இளைய யாதவர் தணிந்த இன்குரலில் சொன்னார் “அந்தணர்களே, வேள்விக்கொடை என ஒன்று மானுடர் உள்ளத்தில் எழுந்ததே அது வேள்வியை விழைவதனால்தான். அன்னத்திலும் நீரிலும் தொடங்குகிறது கொடை. சொற்கொடை, பொருள்கொடை என விரிந்து தற்கொடையில் நிறைவெய்துகிறது. இப்புவியில் கொடை ஒருபோதும் நிலைக்காது. வேள்வியிலாத நிலை புவியில் எப்போதும் அமையாது. அறிக, முழுமையாகத் தன்னை அளிப்பவரே வேள்விநிறைந்தவர்.”
ஆனால் வேதங்களாலும், தவத்தாலும், கொடையாலும், வேள்வியாலும் அம்முழுமையை எளிதில் காண இயலாது. பிறிதிடஞ் செல்லாத வணக்கத்தால் மட்டுமே அதை அறிதலும், மெய்யுணர்தலும் அதுவென்றாகி அதில் புகுதலும் இயலும். வேள்வி அதன் தொழில். அதைச் செய்வதைத் தலைக்கொண்டோர் அதற்கே அடியாரென்றாகி அல்லதன்மேல் பற்றிலாதாராகி அமைபவர். எவ்வுயிரிடத்தும் பகைமை கொள்ளாதவர் அதற்கு இனியவர். அவர் அதை அடைவார்.
குழவியின் வயிறும் பசியும் அறிந்து அன்னை அமுதை அளந்தூட்டுகிறாள். அதன் மறைவுப்பெருந்தோற்றத்தில் அகம் ஈடுபட்டோருக்கு அல்லல் மிகுதி. அருவான அதை உருவெடுத்தமைந்தோர் சென்றெய்துதல் அரிதினும் அரிது. அகத்தை அதில் நிறுத்துக. மதியை அதில் புகுத்துக. அதில் உறைவீர்கள். அதில் சித்தத்தைச் செலுத்துவதே வேதம். உளம்நிலைகொள்ளவில்லை என்றால் தொழிலியற்றுக. அதுவும் வேள்வியே. செயல்பயனைத் துறந்து அளிக்கப்படும் அனைத்தும் அவிகொடையே.
உங்கள் வேள்விகளில் வாய்கொண்டு கைகொண்டு எழுவது பல்லாயிரம்கோடி வாய்களால் புடவிகளை உண்கிறது. பல்லாயிரம்கோடி கைகளால் புடவிகளைப் படைக்கிறது. பல்லாயிரம் கோடி விழிகளால் அவற்றை ஆட்டுவிக்கிறது. பல்லாயிரம்கோடி நாவுகளால் ஆணையிடுகிறது. கோடானுகோடி புடவிகள் அதன் உடற்துகள்கள். கோடானுகோடி வானங்கள் அதன் உடற்துளிகள்.
அந்தணர்களே, வேள்விச்சாலை அளந்து வகுத்து நேர்கொண்ட கணக்குகளால் அமைக்கப்படுகிறது. அதற்குள் எரிகுளங்களும் பீடங்களும் அமைகின்றன. அங்கே அமர்ந்திருக்கையில் அங்கு மட்டுமே திகழ்க. வானிலிருந்து தெய்வங்கள் அங்கே அவிகொள்ள வரட்டும். மண்ணிலுள்ள அனைத்தும் அவியாகும்பொருட்டு அங்கே அணையட்டும்.
இங்கிருக்கும் பெருங்களத்தின் ஆடல்களை உங்கள் எளிமையால் கடந்துசெல்க. சொல் தெறிக்கும் அவைக்களத்தில் தன் தந்தையின் குரலை மட்டுமே கேட்டு மகிழும் இளங்குழவி என்று இங்கே இருங்கள்.
கொடையெனும் கடமையை மட்டும் தலைக்கொள்க. திருவிழாவின் வண்ணங்களில், ஓசைகளில், வனப்புகளில் உளம்செலாது தன் குழவிக்கு உணவூட்டுவதை மட்டுமே செய்யும் அன்னை என்று அமைக.
அதுவென்றும் இதுவென்றும் பிரித்தல் அந்தணர்க்கு உரியதல்ல. அவரென்றும் இவரென்றும் நோக்குதல் அவர்களின் வழி அல்ல. அனைவர்பொருட்டும் வேள்விகூட்டுதல் அவர்களின் தொழில். அவ்வேள்விகளின் பயன்கள் அவர்களை அடைவதில்லை. வேள்வி செய்ய எழுந்தமையின் பயனாலேயே அவர்கள் வீடுகொள்கிறார்கள்.
உலகத்தோரை வெறுக்காதவர், உலகத்தாரால் வெறுக்கப்படாதவர், களியாலும் அச்சத்தாலும் சினத்தாலும் விளையும் அலைக்கழிப்புகளிலிருந்து விடுபட்டவர் அதற்கு அணுக்கமானவர்.
அதன் அலகிலா ஆடலை அறிவதல்ல வேட்பவனின் இலக்கு. அதன் முழுதுருவை நாடுவதல்ல அவனுக்குரிய இயல்பு. ஒவ்வொன்றிலும் உறைவதை ஒவ்வொரு கணத்திலும் உணர்வதன்றி அவன் அறியவேண்டுவதொன்றில்லை. அந்தணரே, அறிவைத் துறக்காதவரை அடிபணிதல் இயல்வதில்லை.
எல்லா நிலைகளிலும் நிலைபொருள் அது. எது நிலை, எது அதன் நிலைக்கோள் என்று உணர்வதே வேதமெய்மை. ஐம்பருக்களுக்கும் உள்ளும் புறமுமாவது, அசைவதும் நிலைபெறுவதுமாவது. உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறிக. அவற்றை உண்பதும், பிறப்பிப்பதும் அதுவே. நுண்மையால் அறிவதற்கரியதாகியது, அகன்றது, அருகிலிருப்பது அது. அதுவே அனைத்துமாவது.
அந்தணரே, உளம்கனிந்து சொல்லும் அனைத்து சொற்களுக்குமுரியது. உளமெழுந்து கூவும் அனைத்து வாழ்த்துக்களையும் கொள்வது. அளிக்கப்படும் அனைத்துக் கொடைகளையும் அதுவே பெற்றுக்கொள்கிறது. அனைத்துப் பெயர்களும் அதையே சுட்டுகின்றன.
எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால் தான் செயலியற்றுவோன் அல்ல என்று காண்பானே காட்சியுடையான். வேள்விகளில் அவிகொள்வதும் அவியும் அவியளிப்பதும் அதுவே என்று அறிந்தவருக்கு ஐயமில்லை. ஐயமின்றி கொடைபுரியுங்கள். எச்சமின்றி அளியுங்கள்.
எச்சமின்றி அளிக்கப்படும் ஒரு பரு மாமலைகளாகி நின்றிருக்கும் வானம் ஒன்றுண்டு. முழுதுற உளம்கனிந்து அளிக்கப்படும் துளி கடலென்றாகும் ஒரு வெளி உண்டு.
பெற்றுக்கொண்டவர்கள் கொடுப்பதனால் நிறைவுறுகிறார்கள். தன்பொருட்டு கொடுப்பவர்கள் விடுதலை பெறுகிறார்கள். பிறர்பொருட்டும் கொடுப்பவர்கள் ஓங்கி நிறைகிறார்கள். இப்புடவி வேள்விகளால் நிலைநிறுத்தப்படுகிறது.
எளிமைகொள்ளுந்தோறும் கொடை பெருகுகிறது. எண்ணப்படாதிருக்கையில் வளர்கிறது. கனிகையில் ஒளிகொள்கிறது. கொடைகளால் இப்புவி வாழ்கிறது. ஆம், அவ்வாறே ஆகுக.
அந்தணர் இளைய யாதவரிடம் சொல்பெற்று உளம் நிறைந்து நைமிஷாரண்யத்திலிருந்து செல்கையில் கர்க்கர் தன்னருகே தனித்து தலைகுனிந்து நடந்துவந்த முதிய அந்தணரிடம் “உம்மை முன்பு நான் கண்டதில்லை, அந்தணரே” என்றார். மெலிந்த கூனுடலும் நெஞ்சில் பரவிய பிசிறுத் தாடியும் சிற்றடி வைத்த நடையும் கொண்ட அந்த முதியவர் “என் பெயர் சுதாமன். என்னை குசேலன் என்பார்கள்” என்று சொன்னார். “நான் இளைய யாதவருடன் சாந்தீபனியில் ஒருசாலை மாணாக்கனாக பயின்றேன்.”
அந்தணர் அனைவரும் அவரைச் சுற்றிக்கூடினர். “ஆம், இவர் எங்கள் எவருக்கும் தெரியாதவர். நான் முன்னரே நோக்கினேன்” என்றார் இளையவராகிய சுந்தரர். அவருடைய தோழராகிய முத்ரர் “இக்காட்டுக்குள் நாம் நுழைகையில் இவர் ஒரு நிழலென உடன் வந்து இணைந்துகொண்டார்” என்றார். “நான் இவர் தெய்வமோ அணங்கோ என ஐயம்கொண்டேன்” என்றார் இன்னொருவர்.
குசேலர் “நான் இங்கு வரவேண்டுமென எண்ணவில்லை. இவ்வழிச் செல்கையில் உபப்பிலாவ்யத்தை அடைந்தேன். இங்கே அவர் குடியிருப்பதாகச் சொன்னார்கள். வெறுமனே நோக்கி மீளலாம் என எண்ணியபோது உங்கள் நிரை என்னைக் கடந்துசென்றது. நான் உடன் இணைந்துகொண்டேன்” என்றார். “நீங்கள் அவரிடம் பேசியபோது பின்நிரையில் இருளில் சுவர்சாய்ந்து நின்று அவரை விழிமட்டுமேயாகி நோக்கிக்கொண்டிருந்தேன். நான் வந்தது அதன்பொருட்டே.”
“உமக்கு அவரிடம் கேட்பதற்கொன்றும் இல்லையா?” என்றார் கர்க்கர். “இல்லை, ஒருபோதும் இருந்ததில்லை” என்றார் குசேலர். “நான் ஏழை. எந்தை என்னை உணவுக்காகவே சாந்தீபனிக் குருநிலையில் கொண்டுசென்று சேர்த்தார். அவரும் அங்கேயே அடுமனையாளனாக வாழ்ந்து மறைந்தார். நான் வேதச்சொல்லை நினைவுகூரும் திறன்கொண்டிருந்ததனால் மட்டுமே அங்கு மாணாக்கனானேன். அங்கு பேசப்பட்ட எதுவும் ஒரு சொல்லும் எனக்குப் புரிந்ததில்லை. அனைத்து வினாக்களுக்கும் வெற்றுவிழிகளையே விடையென அளித்தேன்.”
சாந்தீபனியில் அனைவருக்கும் நான் ஏளனப்பொருளென்றிருந்தேன். அடுமனையாளரும் விறகுகொண்டுவரும் நிஷாதரும்கூட என்னை நகையாடினர். மாணாக்கர் எவரும் என்னை அருகணைய ஒப்பியதில்லை. ஒவ்வொன்றாலும் நான் எளியவனாக்கப்பட்டேன். பிறர் விழிகளுக்குத் தெரியாதவனாக அமைந்திருப்பதில், பிறருக்கு குரல் கேட்காமல் சொல்கொள்ளுவதில் பழகினேன். எப்போதும் பிறர் அணிந்து இற்றுப்போன ஆடைகளையே எனக்கு அளித்தனர். என் உடல் அந்த ஆடைபோலவே மெலிந்து நைந்திருந்தது. புன்மையணிந்தோன் என என்னை அவர்கள் அழைத்தனர். சுதாமன் என்ற பெயர் மறைந்து குசேலன் என்பதே நிலைத்தது.
என்னை தன்னவன் என அமைத்துக்கொண்டவர் இளைய யாதவர். குருநிலைக்கு வந்த முதல் நாளே அவர் என்னிடம் “சுதாமரே, இது என்ன?” என்று கேட்டார். அவர் சுட்டியது அங்கு மட்டுமே பறக்கும் ஒரு சிறு பூச்சியை. நான் அதை அறிந்திருந்தேன். அறிந்த ஒன்று கேட்கப்பட்டமையால் முகம்மலர்ந்து மீண்டும் மீண்டும் அதன் பெயரைச் சொன்னேன். “ரத்னபிந்து” என கூவினேன். “இது சிறகிருந்தாலும் பறக்காதது. வண்ணங்களற்றது. பறவைகளால் எளிதில் கொத்தி உண்ணப்படுவது. ஆயினும் இதை அருமணித்துளி என்றனர் முன்னோர். ஏனென்றால் இது நிலவொளியில் அருமணிபோல் ஒளிரும்.”
புன்னகையுடன் ”நீர் இதை அறிந்திருக்கிறீர், சுதாமரே” என்றார் இளையவர். அடுமனையில் சாம்பலிட்டு கலம் கழுவுவதனால் வெந்து புண்ணாகியிருந்த என் கைகளைப் பற்றிக்கொண்டு “என்னை உள்காட்டுக்கு அழைத்துச்செல்க” என்றார். அன்று தொடங்கிய நட்பு எங்களுடையது. என் தோளில் கையிட்டு தோள் ஒட்டி நின்றே பேசுவார். என்னை எப்போதும் களியாடிக்கொண்டே இருப்பார். “புல்லணிந்தோர் என்று பெயர் கொண்டிருக்கிறீர். புல்லணிந்து எழுந்து நிற்பது மலை அல்லவா? நீர் இங்கே எந்த மலை, சொல்க” என்பார். அவர் என்னை நகையாடும்போதெல்லாம் நாணி வாய்பொத்திச் சிரிப்பேன்.
அவருக்கு நான் இணையல்ல என நன்கறிந்திருந்தேன். கற்பதற்கு முன்னரே அனைத்தையும் அறிந்தவர்போலிருந்தார். ஆசிரியர்களுக்குக் கற்பித்தார். அவர்களால் அஞ்சப்பட்டார். அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் செய்பவர், அனைவருக்கும் அணுக்கமானவர். அவர் ஒருவரல்ல ஓர் உடலில் கணம் ஒருவரென திகழும் முப்பத்துமுக்கோடி தேவர்களின் பெருந்தொகை என ஒருமுறை அடுமனையாளர் ஒருவர் சொன்னார். நான் அதை மெய்யென்றே நம்பினேன். அவர் ஒரு பெருவாயில். வந்துகொண்டே இருக்கிறார்கள். பொழிந்துகொண்டிருக்கும் ஓர் அருவி. முடிவிலா அலைகளால் ஆன கடல். அடுமனையாளர் சொல்லச்சொல்ல நான் பெருக்கிக்கொண்டேன்.
நான் அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொண்டதில்லை. ஒரு துளி அறிவை, ஒரு சொல்லை. எப்போதும் அவருக்கு அளித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருநாளும் புலரிக்கு முன்னரே எழுந்து காட்டுக்குச் சென்று காட்டுக் கனிகளை பறித்துக்கொண்டு வந்து கழுவி அவர் அருகே வைப்பேன். அவர் வழிபடும் மலர்களை கொண்டுவருவேன். தேன், கிழங்கு, அருங்கற்கள் என என் விழிகளுக்குச் சிக்குவன அனைத்தையும் கொண்டுசென்று அளிப்பேன். என் உள்ளம் ஒவ்வொரு கணமும் தேடிக்கொண்டேதான் இருக்கும்.
குருநிலையில் எளிய உணவு பரிமாறப்படுகையில் அவர் பசித்த நாய்க்குட்டி என விரைந்து உண்பார். அவர் உண்டுமுடிப்பது வரைக் காத்திருந்து என் கலத்தை அளிப்பேன். அதில் பாதியை உண்டு முடித்து எஞ்சியதை எனக்களிப்பார். நான் அங்கிருந்த நாள்முழுக்க அவர் வைத்த மிச்சிலையே அருந்தினேன். என்றாவது மிகுபசி இருந்தால் வெறுங்கலமே எனக்குக் கிடைக்கும். அன்று உளம்நிறைந்து முகம்மலர்வேன். அந்த கலத்தின் வெறுமையை கைகளால் வருடி வருடி மகிழ்வேன்.
நான் அவருடைய தோழனென்றே அறியப்பட்டேன். என்னிடம் ஆசிரியர்கள் மதிப்பு காட்டினர். தோழர்கள் அணுக்கம்கொள்ள வந்தனர். அவருடைய ஒரு நோக்கு கிடைக்க, ஒரு சொல் பெற அங்குளோர் ஏங்கினர். எளியோனாகிய என்னிடம் அவர் கண்டதென்ன என்று அறியாமல் திகைத்தனர். நான் எளியோன் என்பதனாலேயே அவர் எனக்கு அணுக்கமானவர் என்று நான் சொல்வேன். நான் அவருக்கு அளிப்பவற்றைவிட சிறந்தவற்றை அவர்கள் அவருக்கு அளிக்க முற்பட்டனர். அவர் விழைந்தால் கொள்ளற்கரிய எதுவுமில்லை புவியில் என அறிந்திருந்த எனக்கு அது வேடிக்கையாகவே தெரிந்தது. நான் அளித்தது அவருக்காக அல்ல. எனக்காகத்தான்.
சாந்தீபனியிலிருந்து அவர் சென்ற குருநிலைகளுக்கெல்லாம் நானும் உடன் சென்றேன். பின்னர் அவர் மறைந்தார். நான் குருநிலை விட்டு அகன்றேன். மாளவத்தில் ஒரு சிற்றூரில் இல்லம்கொண்டேன். மனைவியை அடைந்தேன். மைந்தரை பெற்றேன். இல்லம் நிறைந்து கலம் ஒழிய வறுமையெய்தினேன். வேதமறிந்திருந்தாலும் காணிக்கை கேட்டுப்பெற என்னால் இயலவில்லை. எங்கும் எதையும் கேட்கும் நா எனக்கு அமையவேயில்லை.
அந்நாளில்தான் ஒரு சூதன் இளைய யாதவர் துவாரகை எனும் நகர் அமைத்து முடிசூடி ஆள்வதைச் சொன்னான். அது என் சாலைத்தோழர்தானா என ஐயம்கொண்டேன். என் இல்லாள் அங்குமிங்கும் உசாவி அவரே என்று தெளிந்தாள். “சென்று கேளுங்கள், உங்கள் வறுமைக்கு அவர் உதவியாகவேண்டும்” என்றாள். “இப்புவியில் எவரிடமேனும் நீங்கள் கேட்பதென்றால் அவரிடமே கேட்கவேண்டும். உங்களுக்கு எவரேனும் அளித்தாகவேண்டும் என்றால் அது அவரே” என்றாள்.
நான் தயங்கித் தயங்கி நாள் கடத்தினேன். அந்நாளில் இளையவர் என் ஊர் அருகே மாளவத்து அரசரின் அரண்மனையில் அரசவிருந்தினராக வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். “எங்கும் எதையும் கேட்காதவர் நீங்கள். உங்கள் மைந்தர் உணவின்றி வாடுவதைக் கண்டும் நாவெழாதவர். ஆனால் உங்கள் உளத்தமைந்த அவரிடமும் கேட்கவில்லை என்றால் அது உங்களுக்கே இழைக்கும் தீங்கு. அவர் அறியாத ஒன்று உங்களுக்கு ஏது? செல்க” என என் மனைவி என்னை தூண்டிக்கொண்டிருந்தாள்.
பின்னர் அவளே ஒரு வழி கண்டடைந்தாள். சிறிது நெல் சேர்த்து இடித்து அவலாக்கினாள். “மணமுள்ள புதிய அவல் இது. இதை உங்கள் தோழருக்கெனச் செய்தேன். கொண்டுசென்று கொடுத்துமீள்க” என்றாள். அவலை அள்ளி முகர்ந்தேன். அவலின் நறுமணம் அவரையே எனக்கு நினைவூட்டும். சாந்தீபனிக் குருநிலையில் எங்களுக்கு பெரும்பாலும் அவல்தான் உணவு. அவலை உண்ணும்போதெல்லாம் அவரை அருகுணர்வேன். ஒரு பிடி அள்ளி நுண்வடிவென உடனிருக்கும் அவருக்கு அளிக்காமல் நான் உண்டதேயில்லை.
அவலைக் கொடுக்கவே நான் மாளவனின் விருந்தினர் அரண்மனைக்குச் சென்றேன். வாயிற்காவலன் என்னை உள்ளே அனுப்ப மறுத்தான். “அரசப்பெருங்கொடை நான்கு நாட்கள் நிகழும். அப்போது வருக இரவலரே, அரசர் கைநிறைய அள்ளிக்கொடுப்பார். செல்க!” என்றான். “நான் எதையும் கேட்டுவரவில்லை. இந்த அவலை அவரிடம் கொடுக்கவே வந்தேன்” என்றேன். அவன் என்னை திகைப்புடன் நோக்கினான். பணிந்து “என் பெயர் மட்டும் சொல்லும், காவலரே” என்றேன்.
அவன் சென்று மீளவில்லை. இரு கைகளையும் விரித்தபடி இளைய யாதவரே என்னை நோக்கி ஓடிவந்தார். என்னை ஆரத்தழுவி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். கண்ணீர் மல்க “எங்கு சென்றீர், சுதாமரே? இந்நிலமெங்கும் உங்களையே தேடிக்கொண்டிருந்தேன்” என்றார். “என் மாளிகைக்கு வருக… என் மனையாட்டியர் உடனிருக்கிறார்கள்” என்றார். என்னை தோள்வளைத்து அழைத்துச்சென்றார்.
அரசி சத்யபாமையிடம் “இவர் என் முதல் தோழர். இவரளித்த சுவைகளை இன்றும் நான் கனவில் உணர்வதுண்டு” என்றார். அரசி புன்னகைத்து “சொல்லாத நாளில்லை உங்களைப்பற்றி” என்றார். இளைய அரசி ருக்மிணி “முதற்காதல் உங்கள்மேல்தான் என ஒருமுறை சொன்னார். அன்றே உங்கள்மேல் ஊடல் கொண்டுவிட்டேன், சுதாமரே” என்றார்.
“சுவையென என்ன கொண்டுவந்தீர், சுதாமரே?” என்றார். “என் மனைவி செய்த அவல் இது” என என் பொதியை நீட்டினேன். “கொடும்” என என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டார். “கேட்டுப்பாருங்கள் சுதாமரே, நான்கு நாட்களாக குருநிலையின் அவல் உணவைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றார். அரசி சிரித்து “ஆம், நானும் இது என்ன புதிதாக பேச்சு என வியந்தேன்” என்றார். “குருநிலைகளில் விகால உணவென்பது அவல்தான்” என்றேன்.
ஊஞ்சலில் அமர்ந்து அள்ளி அள்ளி உண்டார். முலையருந்தும் மைந்தனின் மலர்வும் தளர்வும் கொண்டு சுவையிலாழ்ந்தார். அருகணைந்து “ஒரு வாய் எனக்கும் அளிக்கலாகாதா?” என்றார் அரசி. அவரை கையால் தள்ளிவிட்டு ”இதன் இறுதித்துளி வரை எனக்கு மட்டுமே” என்றார். அவர் உண்பதை உளம்நெகிழ நோக்கி நின்றேன். என் விழிகள் நீர்மின் கொண்டன. அரசி என்னிடம் “அனைத்தும் சுவையே என உண்பவர். சுவையென ஒன்றில் முழுதாழ்வதை இப்போதுதான் காண்கிறேன்” என்றார்.
பன்னிரு நாட்கள் அவருடன் அங்கிருந்தேன். அவர் அருகிருக்கையில் நான் இருப்பதை அவர் மறந்துவிடுவார். நாய் என தொடர்ந்து செல்வேன், நோக்கிக்கொண்டே இருப்பேன். நான் என்றும் அவ்வாறே உடனிருப்பதாக எண்ணி அவர் பேசுவார், பல தருணங்களில் விழிநோக்காதமைவார். எதையும் அவரிடம் கேட்கவில்லை. எப்போதும் எதையும் கேட்கவியலாதென்று உணர்ந்தேன். விடைகொண்டு என் இல்லத்திற்கு மீண்டேன். என் மைந்தரும் மனைவியும் விழைந்த அனைத்தையும் பெற்று மகிழ்ந்திருப்பதைக் கண்டேன். மாளிகை, செல்வம், ஏவலர் என அனைத்தையும் பெற்றேன்.
அந்தணரே, பெறுவதனைத்தும் கொடுப்பதற்கே என்று நான் எண்ணினேன். பிறிதொன்றை நான் உளம் பழகியிருக்கவில்லை. அந்தணருக்கும் சூதருக்கும் இரவலருக்கும் அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருந்தேன். கொடுக்கக் கொடுக்கப் பெருகியது என் செல்வம். மனைநிறைந்து என் இல்லாள் மறைந்தாள். மைந்தர் முதுமை எய்தினர். மைந்தரும் பெயர்மைந்தரும் அவர் மைந்தரும் என பெருக நுரைததும்பி விளிம்பு கவியும் கலம் போலாயிற்று என் வீடு. ஒருநாள் அனைத்தையும் விட்டுவிட்டு கானேகினேன். வேதம் ஒலித்த என் வாய்க்கு அன்னமிட்டது நாடு. அந்த அன்னத்தையும் கொடையளித்தேன்.
நாளுக்கு நாள் நிறைவுகொண்டேன். எஞ்சியிருந்தது ஓர் எண்ணம். அது என்னவென்று நானே எண்ணியதில்லை. உபப்பிலாவ்யத்தை அணுகியபோது அவர் பெயரை ஒருவர் சொல்லக் கேட்டேன். அப்போது அறிந்தேன், அவரைப் பார்க்கவே என் உயிர் எஞ்சியிருக்கிறது என்று. பயணத்தில் உண்ணும்பொருட்டு நான் வைத்திருந்த அவல்பொதியுடன் அந்நகருக்குள் நுழைந்தேன். அங்கு அவரில்லை என்று அறிந்து இங்கு வந்தேன்.
நீங்கள் பேசியதென்ன, அவர் உரைத்ததென்ன என்று நான் செவிகொள்ளவில்லை. அவர் என்னை நோக்கவேண்டுமென்றும் எண்ணவில்லை. எப்போதும்போல் விழிதொடாமல் நின்று அந்த பீலித்தலையை மட்டும் நோக்கிக் கொண்டிருந்தேன். திரும்பும்போது என் கையிலிருந்த அவல்பொதியை அவர் அருகே வைத்துவிட்டு வந்தேன். என் இறுதிக்கொடை. என் பயணம் நிறைவுற்றது. இந்தக் காட்டுக்கு அப்பால் எங்கோ எனக்கான காடு காத்துள்ளது.
கர்க்கர் “அவரிடம் அதை நீங்கள் கொண்டுவந்ததையாவது சொல்லியிருக்கலாம்” என்றார். தௌம்யர் “ஆம், அது உங்கள் அவல்” என்றார். சுதாமர் “நான் அந்த அவலை அவருக்கென எடுத்து தாமரையிலையில் பொதிந்து வாழைநாரால் கட்டுகையிலேயே எனக்குரிய நிறைவனைத்தையும் அடைந்துவிட்டேன்” என்றார். அவர்கள் அவரை வியப்புடன் நோக்கினர். அவர் முகம்மலர்ந்து இருளை நோக்கி “அன்றென்றே இருக்கிறது அந்த மயிற்பீலி” என்றார். “அதே விழிகள், அதே குரல். என்றுமென்றும் அவ்வண்ணமே இருக்கும்போலும்.”
நைமிஷாரண்யத்தை விட்டு நீங்கி ஒரு சிறுசுனையை அவர்கள் அடைந்தபோது அவர் அமர்ந்து “நீங்கள் செல்லலாம். எனக்கு தளர்வெழுகிறது” என்றார். கர்க்கர் “இல்லை, நீங்கள் வெளுத்திருக்கிறீர்கள். உடல் நடுக்குகொள்கிறது” என்றார். சண்ட கௌசிகர் அவர் கையை பற்றி நாடியை நோக்கினார். தலையை அசைத்து “கரும்புரவிக் குளம்போசை” என்றார். “ஆம்” என்றார் குசேலர். “அதற்கான தருணம் இது.”
வேதியர்கள் இருவர் சுனைநீரை அள்ளிக் கொண்டுவந்தனர். அதை அவர் வாய் திறந்து பெற்றுக்கொண்டார். நா சுழற்றி சுவைத்து உண்டபின் நீண்ட பெருமூச்சுவிட்டார். “கிருஷ்ணா” என முனகினார். விழிகள் நிலைத்ததைக் கண்டு கர்க்கர் “முழுக்கொடை” என்றார். “ஓம்! ஓம்! ஓம்!” என்றனர் வைதிகர்.