அன்புள்ள ஆசிரியருக்கு…
அறம் வரிசைக் கதைகளில் பொதுவான நிகழ்வுகள் சொல்லப்பட்ட கதைகள் முதலில் மனத்தில் பதிந்தன. அறம், சோற்றுக்கணக்கு போல. பிறகு ஆழ் உள்ளே நிற்பவை மிக அந்தரங்கமான மத்துறு தயிரும், மயில் கழுத்தும் தான். முதலில் இக்கதைகளில் வரும் பாத்திரங்கள் பழக்கமற்று இருந்ததால், அவர்கள் கொள்கின்ற அந்த குண விவரிப்புகள் ஆர்வம் ஏற்படுத்தவில்லை. இப்போது அவற்றை மீறி அந்தக் கதைகளில் எழுந்து நிற்கும் உணர்ச்சிகள், பிடிக்க வைத்து விட்டன.
மயில் கழுத்தை முதலில் படிக்கையில் ராமன் கொள்ளும் அந்த தாப உணர்வு முழுக்கப் பிடிபடவில்லை. சந்திரா மேல் மயக்கமாக இருந்தார்; பின் பிரியலாயிற்று; அந்தப் பிரிவும் அதன் துயருமாகக் குமுறுகிறார் என்று தோன்றியது. (முள்நுனி யமுனாவாக்கி ஓய்ந்தார்.)
சமீப காலமாக அஷ்டபதியின் பாடல்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ‘யா ரமிதா’ பாடலை பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் முதலில் கேட்ட பின் வேறெந்த குரலிலும் கேட்கப் பிடிக்காமலாயிற்று. அவரது குரலில் வெளிப்பட்ட அந்த தாபம், தவிப்பு, விரகம், ஏக்கம், வெறுமை, கிடைத்தால் அப்படியே கால் மடிந்து சரணடைந்து விடுவேன் என்ற விருப்பு, அழுகை, தேம்பல்…
இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் மயில்கழுத்து படித்த போது மேடையில் முதல் பாடலாக ‘யா ரமிதா’ பாடப்பட்டது என்று படித்ததும், மின்னல் போல் அந்த உணர்வை புரிந்தது போல் ஆயிற்று. பின்பு தொடர்ந்து வந்த அத்தனை பாடல்களிலும் அதுவே சாறாக வழிந்தது. தாளாமல் ராமன் ஏன் சரிந்து விழுந்தார் என்பதையும் திண்ணையில் அமர்ந்து ஏன் உலகத்தின் மொத்த தாபத்தையும் வாங்கிக்கொள்ள ஏங்கினார் என்பது விளங்கிக் கொள்ள முடிந்தது. அவர் கண்டு உறைந்தது சந்திரா என்ற பெண்ணின் அழகைப் பற்றி அல்ல; அது எங்கும் பெருகியோடும் பிரபஞ்சப் பேரழகின் ஒரு துளி; கைக்கெட்டும் சொட்டு. அழகை மட்டுமே கண்டு கண்டு களிக்கும் கண்களுக்கு அதன் வழியாக எல்லா அழகும் தெரியும். அதைத் தாங்கிக் கொள்ள இயலா சுப்பு அண்ணா மது குடித்து சமன் செய்கிறார்; இவர் சங்கீதமாய் எழுதித் தீர்க்க முயல்கிறார்.
கலைஞன் ஒவ்வொருவனும் பர்சானபுரியின் பிச்சியைப் போல் ஒரு கணமேனும் ஆகாமல் எதைத் தான் படைக்க முடியும் என்று தோன்றி விட்டது.
இதையும் கேட்டுப் பாருங்கள்.
நன்றிகள்,
இரா.வசந்தகுமார்.