அஷ்டவக்ரகீதை வெளியீடு

1

அஷ்டவக்ரகீதை

அன்பு ஜெமோ,

அஷ்டவக்ர கீதை இசை வெளியீட்டு விழா, இசை விழாக்களுக்கே உரிய உற்சாகத்துடன் சிறப்பாக நடந்தது. விழா அழைப்பிதழை தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி. நண்பர்கள் வந்திருந்தனர்!

இசை வெளியீட்டிற்குப் பிறகு, பேரா. ழாக் பசான் உலகத்தின் பெரும் தத்துவமரபுகளைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி, அதில் அத்வைத வேதாந்தத்தின் இடத்தையும், குறிப்பாக அஷ்டவக்ர கீதையின் பங்களிப்பையும் பற்றி பேசினார்.

பேரா. பமீலா வின்பீல்டு இசைவடிவங்களை புரிந்துகொள்வதை பற்றியும், இசையமைப்பாளரின் தனிப்பட்ட புரிதல் ஒரு பாடலில் எப்படி நுட்பமாக வெளிப்படுகிறது என்பதைப்பற்றி பேசினார்.

குறிப்பாக, தொடக்கத்தில் சற்றே அலைபாயும் எண்ணவோட்டங்களை வெளிப்படுத்தும் அஷ்டவக்ர கீதை, 20-ம் பாடலை நெருங்க நெருங்க  உறுதியான குரலில் பேசத்தொடங்குவதையும், அந்த ‘குரலின் தொனி’

2

இசையில்  எப்படி படிப்படியாக மேல்நகர்த்தப்பட்டு  இறுதியில் நிறைவையும்  (Conclusion), உச்சத்தையும் (Crescendo) அடைகிறது என்பதையும்  குறிப்பிட்டார். மேலும், தனித்துத்தெரியும் இரண்டு மகாவாக்கியங்கள் இசையில் எப்படி முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொன்னார். உண்மையில் இதையெல்லாம் யாரும் கவனிக்கமாட்டார்கள் என்றே நான் எண்ணியிருந்தேன்.

ஊரின் கவுன்சில் உறுப்பினர்கள், மேயர் ப்ரோ-டெம் வந்திருந்தார்கள். இறுதியாக, ஆறு மரபிசை பாடகர்களும், பன்னிரண்டு வாத்தியங்களுமாய் மேடையேறி முழு இசைவடிவையும் நேரில் பாடி வழங்கியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. சில புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

நன்றி,

ராஜன் சோமசுந்தரம்

3

அன்புள்ள ராஜன்

முற்றிலும் அன்னியமான ஊரில் முழுவீச்சுடன் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அனைத்துத் தரப்புகளையும் இணைத்துக்கொண்டு ஆழ்ந்த உரையாடல்களை ஒருங்கமைக்கிறீர்கள். எந்தவகையான எதிர்மறை நிலைகளும் இல்லாமல் முழுமையான நேர்நிலை நோக்குடன் செய்யும் இப்பணிகளுக்கு நீண்டகால மதிப்புண்டு. வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைமூட்டை
அடுத்த கட்டுரைபுரட்சிப்பத்தினி