அன்புமிக்க ஜெயமோகன்
மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த முதல் கடிதம் எழுதுகிறேன். முதல் காரணம் விஷ்ணுபுரம் விருது விழாவில் முதல் முறை தங்களுடன் கைகுலுக்கி என்னை உங்கள் வாசகன் என்று பெருமையுடன் அறிமுகம் செய்துகொண்டது.
இரண்டாவது காரணம் எப்படி மிகப்பெரிய சுந்தரராமசாமி தங்களுக்கு ஆ.மாதவனை அறிமுகம் செய்து வைத்தாரோ அதுபோல எங்களுடைய மிகப்பெரிய ஜெயமோகன் அதே ஆ.மாதவனை இவ்வளவு பக்கத்தில் பார்த்துப்பேச ஏற்பாடு செய்தது.
உங்களுடைய கட்டுரைகள் வழியாகவே மாதவனைப் பற்றி மிகப்பெரிய பிம்பம் மனதில் விழுந்துவிட்டது. அதன் பின் அவருடைய சில சிறு கதைகளைப் படித்தேன். தெளிந்த ஆற்று வெள்ளம் போன்ற அநாயாசமான நடையில் வந்து விழும் வர்ணனைகள் வாசகனை அந்தந்த இடங்கள், காலகட்டங்கள், மனிதர்களை மிகச்சுலபமாக மனதில் கொண்டுவர வைத்து விடுகின்றன. சர்வசாதாரணமாக கதைக்களங்களை அது இரவாக, பகலாக, ம்லையாக, இழவு வீடாக, கடைதெருவாக, சம்பாஷனைகளாக எதுவாக இருந்தாலும் அதை அபாரமாக விஸ்தரிக்கும் திறமை அமையப்பெற்ற இவ்வளவு திறமையாளனை தமிழ் எழுத்துலகம் இப்படி புறக்கணித்தது மகாகுற்றம். விழாவில் பேசிய அனைவரின் ஆதங்கங்களும் மிகச்சரியே.
உங்களின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களின் இலக்கிய கூட்டங்களிலும் (ஊட்டியில் நடந்தது போல) பங்கேற்க ஆவல். அடுத்த முறை கலந்து கொள்ள அனுமதி தாருங்கள். உங்களின் வலைப்பூக்களில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது உங்கள் கானுலா பற்றிய பதிவுகள். உங்களைப் போலவே நானும் ஒரு வனப்ப்ரியன் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி. அத்துடன் நேற்று மேடையின் மேலும் , கீழும் உங்களின் எளிதாக பழகும் நேர்த்தி கண்டு வியந்தேன்.
இன்னும் எழுதுவேன்
மிக்க அன்புடன்
செந்தில் குமரன்
கோவை
அன்புள்ள செந்தில்குமரன்
நன்றி. இத்தனை நண்பர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு கொண்டாட்டமாக இந்த விழா நிகழ்ந்ததே முக்கியமானது. ஆ.மாதவன் அதை மிக நெகிழ்ச்சியுடன் மீண்டும் மீண்டும் சொன்னார்
ஜெ
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மதிப்பிற்குரிய ஜெயமோகன் சார் ..,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விழா சிறப்பாக இருந்தது..,கலந்து கொண்டதில் நெறைய மகிழ்ச்சி எனக்கு ; கோவை ஞானி மற்றும் நாஞ்சில் நாடன் அவர்களின் பேச்சு சரியாக இருந்தது.;திரு.ஆ.மாதவன், திரு.எம்.எஸ் அவர்களின் அருகாமை யின் சில நேரங்கள் மற்றும் தங்களோடு ஏறக்குறைய ரெண்டு நாட்கள் நான் உடன் இருந்ததை மிக முக்கிய கணங்களாக நினைக்கிறேன். தங்களது உரையாடல்கள் , கிண்டல்கள், சூழலை விவரிக்கும் போது மாறும் முக பாவங்கள் , காலேஜ் நோட் ஐ விரலில் சுத்திகொண்டே ‘அசால்ட்’ ஆக பேசும் செகண்ட் இயர் மாணவனின் நினைப்பு அடிக்கடி வந்தது எனக்கு நீலி அருகில் கிரிதரன் இருந்ததுடன் ஒரு 70 சதம் ஒப்பிடலாம் அதை;; உங்கள் வாசகர்கள் பெரும்பாலானோரை சந்தித்தது புது அனுபவம் குறிப்பாக கடலூர் சீனு வுடன் பேசியது எல்லாம்
தேங்க்ஸ் சார்
—
Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ்,
சில கூட்டங்களில் நாம் சந்தித்திருந்தாலும் இந்த நீண்ட நேர சந்திப்பும் உரையாடலும் இன்னும் நெருக்கமாக நம்மை ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளச் செய்தது. வெளியே செல்லும்போதெல்லாம் நீங்கள் வாங்கி வந்த குளிர்பானங்களை நினைத்துக்கொள்கிறேன்
நன்றி
ஜெ
++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புள்ள ஜெமோவிற்கு
நேற்று நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது விழாவிற்கு நானும் வந்திருந்தேன். எனக்கு நினைவில் இருந்த விஷயங்களைப் பதிவு செய்துள்ளேன்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அங்கத்தினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். விழா நன்றாக நடந்ததா என்ற குறுகுறுப்பு யாருக்கேனும் இருந்தால் அவர்களிடம் சொல்லுங்கள். மிக நன்றாக நடந்தது என்று ஒரு வாசகர் கருதுகிறார் என்று.
முடிந்தால் இந்தப் பதிவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கு எல்லோரையும் தெரியாது.
http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post_20.html
அன்புடன்
கோபி ராமமூர்த்தி
பெங்களூர்
அன்புள்ள ராமமூர்த்தி
பெங்களூரில் இருந்து கூட பலர் வந்திருந்தது மகிழ்ச்சியை அளித்தது. உங்கள் பதிவை வாசித்தேன். நன்றி
விழா நன்றாக நடைபெற்றது என்றே பொதுவாகச் சொன்னார்கள்.
ஜெ
++++++++++++++++++++++++++++++++++++++++++++
Dear Mr. Jeyamohan,
Looks like you have dared to face the camera (LoL) with so much ease. Hell a lot of difference from some of your former photographs. Both of you (Mr. Nanjilnadan) look, let me be cliched, AWESOME. Attached is what I liked a lot.
எழுத்தாளர்களை இப்படி கம்பீரமாக பார்ப்பதற்கு நிறைவாக இருக்கிறது. நீங்கள் மற்றும் நாஞ்சில்நாடன் பேசியவை பதிவேற்றம் செய்யப்படுமா?
Regards,
Mangai
அன்புள்ள மங்கை,
நல்ல படம்தான். நாஞ்சில்நாடன் தான் உடை தோரணை அனைத்திலும் எப்போதும் சிறப்பு
ஜெ
==================================
நண்பர்களுக்கு,
விஷ்ணு புரம் விருது முதல் நிகழ்வினிலே பரவலாக கவனிக்கப்பட்டு, முக்கியமான இலக்கிய விருதாக நிலைநிறுத்திக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்விருதைப்பற்றிய பத்திரிக்கை செய்திகள், கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விழாவினுடைய புகைப்படங்கள், விழா அரங்கம் அனைத்தும் அருமை.
நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனதால், விருது நிகழ்ச்சியைப்பற்றிய ஜெமோவின் பதிவை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.
விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கதிரேசன், ஒமன்
===========================================
அன்புள்ள ஜெ
நான் 19 ஆம் தேதி என் நண்பருடன் நீங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தேன். முதலில் நீங்கள் ஒரு குடும்பத்தின் விருந்தினராக அங்கே தங்கியிருப்பீர்கள் என்ற நினைப்பே இருந்தது . அங்கே கண்ட காட்சி உண்மையிலேயே எனக்கு பரவசமாக இருந்தது. கிட்டத்தட்ட 30 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தீர்கள். சீரியசான விவாதம் சட்டென்று நகைச்சுவை மீண்டும் சீரியஸான பேச்சு என்று ஒரு செகண்ட் கூட சலிப்பே இல்லாமல் போய்க்கொண்டே இருந்தது பேச்சு. நீங்கள் ஒரு அபாரமான கான்வர்சேஷனிஸ்ட். நான் உங்களிடம் பேசவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உங்கள் பேச்சு அப்படியே கொண்டுசென்றது.
அதன்பின்னர் மணிரத்னம் வந்தார். வழக்கமாக விழாக்களுக்கு வரக்கூடிய விஐபிகள் விழா தொடங்கியபிறகு நேராக அரங்கத்துக்கு வந்து அவர்கள் பேசவேண்டியதை பேசிவிட்டு உடனே கிளம்புவதே வழக்கம். மணிரத்னம் போன்ற சர்வதேசப்புகழ்பெற்ற ஒரு இயக்குநர் முன்னரே அறைக்கு வந்து அத்தனை நண்பர்களுடனும் சரிசமமாக அமர்ந்து அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தது நினைத்தாலே நம்பமுடியாததாக இருந்தது. அவருக்கும் உங்களுக்கும் இடையே இருந்த சகஜமான நட்பையும் நீங்களும் அவரும் பேசிக்கொண்டிருந்த முறையையும் நான் மிகவும் ரசித்தேன். மணிரத்னம் சிரிக்கும்போது எந்த தடையுமே இல்லாமல் நன்றாக வாய்விட்டு சிரிக்கிறார். பார்க்க மிக அழகாக இருந்தது. தன்னை ஒரு விஐபி என பிறர் நினைத்துக் கொள்ளக் கூடது என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும் அழகாக இருந்தது. அவர் பிறருக்கு ஒவ்வொரு முறையும் எழுந்து இருக்கை கொடுத்தவிதம் சாதாரண நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது எல்லாமே ஆச்சரியம்தான். அவருக்கும் எல்லாரையும்போல அதே தயிர்சாதப் பொட்டலம் கொடுக்கப்பட்டதை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.
அதேபோல நாஞ்சில்நாடன். நான் அவரது நாவல்களை வாசித்து மகிழ்ந்தவன். ஆனால் அவரிடம் பேச எனக்கு கூச்சம். அடக்கமான தொனியிலே அவர் பேசினாலும் எப்போதும் நக்கலும் நையாண்டியும் ஓடிக்கொண்டே இருந்தது. இரவிலே அவர் மணிரத்னத்திடம் மும்பை வாழ்க்கையைப்பற்றியும் வர்தாபாய் பற்றியும் பேசிய பேச்சு ஒரு தனிப்பட்ட அனுபவம். உண்மையிலே எட்டுதிக்கும் மதயானையிலே வரும் அந்த அண்ணாச்சி வர்தாபாய்தான் என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது)). மிகநிறைவான அனுபவம். என்னுடைய வாழ்க்கையில் இதுவரை இந்த அளவுக்கு ஒரு அனுபவம் இல்லை. மனசு கொப்புளித்துக்கொண்டே இருந்தது. நன்றி சார்
சரவணன்
அன்புள்ள சரவணன்,
நன்றி. எல்லாரிடமும் பேசக்கூடிய சூழல் அமையவில்லை.இன்னொரு தருணத்திலே பார்ப்போம்.
திருவனந்தபுரத்தில் இண்டியன் காபி ஹவுஸ் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. அது கேரள கலையிலக்கியத்தின் பொற்காலம். அந்த காபி ஹவுஸில் கேரளத்தின் முக்கியமான அரசியல்வாதிகள், சினிமநடிகர்கள், இயக்குநர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள் வருவார்கள். பிரபல கதகளி ஆசான் கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர்கூட வருவார். எந்த பேதமும் இல்லாத, பாவனைகள் இல்லாத அரட்டை ஓடிக்கொண்டே இருக்கும். நான் அங்கே சகரியா, எஸ் வி வேணுகோபன்நாயர், ஏ.கெ.ஆண்டனி, நடிகர் சோமன், இயக்குநர் அரவிந்தன், அடூர் , பரதன் , அய்யப்ப பணிக்கர் என பலரை சந்தித்திருக்கிறேன். அந்தச் சூழல் ஓர் இளம் எழுத்தாளனுக்கு மிகமிக ஊக்கம் அளிப்பது. அவனை பலவகையான அனுபவங்கள் வழியாக, பற்பல சிந்தனைகள் வழியாக புரட்டி அடிப்பது
அப்படி ஒரு இடமோ சூழலோ இங்கே இல்லை. இத்தகைய சில கூடல்கள் அச்சூழலை உருவாக்கும்.
ஜெ