பயணம், கிண்டில்

HMy_9pqg

குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு,

வணக்கம்.

குற்றவாளிகளின்  காவல் தெய்வம் கட்டுரை  குறித்து  நான்எழுதிய  கடிதத்திற்கான  (https://www.jeyamohan.in/108643#.WudaCNFRWf0)   தங்களதுபதிலைத்  தங்களது தளத்தில் வாசித்தேன் .  என் கடிதம் தங்களது தளத்தில்  தங்களது  பதிலுடன் வெளியிடப்படும்  என்று நினைத்துக்கூடப்  பார்க்கவில்லை.  பரிசு  பெற்றதைப்  போன்ற உணர்வை  அடைந்தேன்.

தொழில்முறைப்  பயணமாக  நிறைய  நாடுகளுக்கு நான் செல்வதுண்டு.  ஆப்கானிஸ்தான் ,  நைஜீரியா , உகாண்டா போன்ற  நாடுகளும்  அவற்றில் உண்டு. தங்களது  பயணங்கள் குறித்த  புத்தகங்களை வாசித்த பின்னர் என் பயணங்கள் அனைத்தும்   பிறிதொன்றாக மாறிக் கொண்டிருப்பதை மெதுவாக  உணர ஆரம்பிக்கிறேன். பயணத்தின்போது  மனிதன் அள்ளிக்கொள்ள  நிறைய  இருக்கின்றன  என்பதை உங்களிடமிருந்தே  பெற்றேன்.

சமர்கண்டில்  தைமூரின் சமாதி  அருகே சென்றபோது  விளக்கமுடியாத  சிந்தனைகள் தோன்றின.  சமீபத்தில்  கானா  என்றமேற்கு  ஆப்பிரிக்க  நாட்டில், அடிமைகளை  ஏற்றுமதி  செய்த அந்தக்காலத்துத்  துறைமுகத்தைக் கண்ட பொழுது, எனக்குள்ளேயிருந்த   கார்ப்பரேட்  அடிமை தன்னைஆசுவாசப்படுத்திக் கொண்டது போன்ற  ஒரு பாவனையை அடைந்து  கொண்டேன். அதே நாட்டில்,  நன்றாகப் பழகிய பெண்ணொருத்தி,  தன்  குழந்தைக்கு  வெளிநாட்டுத்  தகப்பன்வேண்டும்  என்று  தீவிரமாக   என்னை  உறவுக்கு அழைத்தபொழுது, ஒரு நொடி  நடுங்கி பின்னர் சிரித்துக் கொண்டே  விலகினேன். வெண்முகில்  நகரத்து பூரிசிரவஸ்  கதாபாத்திரம்  நினைவில்  வந்து சென்றது.

தற்பொழுது,  செசல்ஸ்  என்ற  தீவுக்கூட்ட நாட்டிற்கு தொழில்முறைப் பயணமாக  வந்துள்ளேன். இங்கே ஒரு வீட்டில் பணம் செலுத்தும் விருந்தினராகத்  தங்கியுள்ளேன். இந்தவீட்டின்  உரிமையாளர்களான  நடுத்தர வயது ஜோடிக்கு  இருபதுவயதில்  ஒரு மகன்  இருக்கிறான்.  இதைப் போன்ற  ஒருசந்தோஷமான  ஜோடியை இதுவரை நான் கண்டதில்லை .அவர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை . அந்த ஆணிடம், ஏன்  இன்னும் திருமணம்  செய்து கொள்ளவில்லை என்று   கேட்டேன்.  திருமணம்  தேவையில்லை  என்றும்,  இந்தஉறவில்  அவர்கள்  இருவருக்கும்  முழு சம்மதம்  என்றும்,வாழ்க்கையின்  எந்தக்கட்டத்திலும்  எந்த ஒரு முடிவையும் எடுக்கும்  சுதந்திரம் அவர்கள்  இருவருக்குமே உள்ளது  என்றும் சொன்னார்.

பயண அனுபவங்களை,  உங்களது நூல்கள் என்னும் கண்ணாடியை அணிந்து பார்க்கத்  தொடங்கியிருக்கின்றேன். தற்பொழுது,  என்னைப் போன்ற  ஊர்சுற்றிகளுக்கு,  புத்தகவாசிப்பிற்கு  கிண்டில் மிகவும் உபயோகமாக  இருக்கிறது. உங்கள் தளத்தில்  பேசப்பட்டுள்ள  உங்கள் படைப்புக்களையும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட  மற்ற புத்தகங்களையும், உங்கள் வாசக நண்பர்  கடலூர் சீனு அவர்களின் கட்டுரைகளில் பரிந்துரைக்கப்பட்ட  புத்தகங்களையும்,  மற்றும் எனது  முகநூல்நண்பர்  ஹரன் பிரசன்னா (கிழக்கு பதிப்பகம்)  அவர்களின்முகநூல்வழி  பரிந்துரைக்கப்படும் புத்தகங்களையும்  குறித்துவைத்துக்கொண்டு, அவற்றில் அமேசான் கிண்டிலில் கிடைக்கும்  புத்தகங்களை  ஆரம்பக்கட்ட  வாசிப்பிற்காக வாங்கி  வாசித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் வசிக்கும்   என் உடன் பிறந்த தம்பிதான்  எனக்கு புத்தகப்புரவலன்.  அவனும்   வாசிப்பில்  நாட்டம் உடையவன்.  விஷ்ணுபுரம்  வாசித்துத்  திகைத்துவிட்டான்.  என்னிடம்  அந்த வாசிப்பனுபவத்தை   அவ்வப்பொழுது  பகிர்ந்து கொள்வான்.

கடிதம்  நீண்டுவிட்டது.  இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

வணக்கம்.

க. மூர்த்தி

***

அன்புள்ள மூர்த்தி,

பொதுவாக தொழில்முறைப் பயணங்களில் நாம் நம்முடைய தொழில்சார்ந்த பதற்றத்திலேயே இருப்போம். அதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் கூடவே அதை ஒரு பயண அனுபவமாகவும் ஆக்கிக்கொண்டால் அந்த சலிப்பு மிக எளிதில் விலகும்

பயணங்களில் கடைப்பிடிக்கவேண்டிய சில விதிகள். செல்லும் ஊரைப்பற்றி ஒரு பொதுவான சித்திரத்தை முதலிலேயே உருவாக்கிக்கொள்வது. இணையம் வழி மிக எளிதாகச் செய்திகளை அடையலாம். நாம் எதுவும் தெரியாமல் பார்க்கும் ஓர் ஊர் கொஞ்சம் தகவல்களி தெரிந்தபின் முற்றாக மாறிக்கொள்வதைக் காணலாம் – ஒரு தெரியாத மொழியில் எழுதப்பட்ட நூல் தெரிந்த எழுத்துக்களாக மாறுவதைப்போல.

இரண்டாவது, குறைந்தபட்ச நேரத்தையாவது தனியாக ஒதுக்கி அந்த ஊரைச் சுற்றிப் பார்ப்பது. வழக்கமான இடங்களாக அல்லாமல் ஆர்வமூட்டும் இடங்களாக. குறிப்பாக எந்த ஊரிலும் சந்தைகள் எனக்கு சுவாரசியமானவை.

கடைசியாக, சிறிய அளவிலேனும் அன்றாடம் பயணத்தை குறித்து வைத்துக்கொள்வது. குறிப்பாக சிறிய தகவல்களை குறித்துக்கொள்வது. உணவு, ப்ழக்கவழக்கம் என மிகச்சிறிய விஷயங்கள். பயணம் பெரிய நிகழ்வுகளால், பெரிய செய்திகளால் ஆனது அல்ல. சிறிய செய்திகள் சற்று காலம் கடந்தபின்னர் மிகப்பெரிய உளத்தூண்டலை அளிக்கும். ஒட்டுமொத்தமாகவே அந்நாடு, மக்கள், பண்பாடு பற்றிய சித்திரத்தை உருவாக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைசெய்தி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெல்லம்மாள் – ஒருவாசிப்பு