செல்லம்மாள் – ஒருவாசிப்பு

புதுமைப்பித்தன்

இரண்டு கணவர்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இரண்டு கணவர்கள் வாசித்தேன்.
செல்லம்மாளை ஆகச்சிறந்த காதல் கதை என்கிறார் சுந்தர ராமசாமி.
இந்தக் கதையை கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதலை, அன்பை வெளிப்படுத்தும் ஒரு கதையாகவே நானும் காண்கிறேன்.
நீங்கள் குறிப்பிடுவது போல  “பாவி! பாவி! என் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டாயே” என்ற வரி கதையில் எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை.
 
அன்புடன்,
கேசவமணி
***

அன்புள்ள கேசவமணி

இக்கட்டுரைகள் ஜன்னல் இதழுக்காக எழுதப்பட்டவை – சொல்லி எழுதவைக்கப்பட்டவை. பெரும்பாலும் நினைவை நம்பி. புதுமைப்பித்தன் கதைகள் வெவ்வேறு சிறிய பாடபேதங்களுடன் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் என் நினைவுகள் பொதுவாகப் பொய்ப்பதில்லை. என் நூலகத்தில் தேடநேரமில்லை. இணையத்தில் கிடைக்கும் வடிவிலேயே நான் பொதுவாகக் குறிப்பிட்ட செல்லம்மாவின் சொற்கள் மேலும் தெளிவாக கிடைக்கின்றன

”யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா?… இனிமே நான் பொடவெயே கேக்கலே… என்னைக் கட்டிப் போடாதிய… மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ! என்னெவிட்டிடுங் கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?… கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா?”

சரியான சொற்கள் இவை. மேலே சொன்னபடி அவள் காய்ச்சல்வேகத்தில் புலம்புகிறாள். இங்கே செல்லம்மாள் சொல்வது பிரம்மநாயகம்பிள்ளையை. அவர் புடவை எடுத்துத்தான் கொடுக்கிறார். ஆனால் அவள் புடவைகேட்டதாக கொடுமைசெய்வதாகவும், கட்டிப்போட்டிருப்பதாகவும் அவளுக்குத் தோன்றுகிறது. அவளுக்குள் அவருடைய சித்திரம் வேறு.

செல்லம்மாள் புலம்பும் அந்தச் சொற்கள் பிரமநாயகம்பிள்ளை அவள் செத்தபின் உணரும்  ‘பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன’ – என்ற வரியுடன் இணைந்து  அந்தச்சித்திரம் முழுமையடைகிறது

இதுதான் நான் சொல்லவந்தது. பொதுவாக கதையின் மையப்போக்கிற்கு அப்பால் செல்லும் குறிப்புகளை எடுத்துக்கொண்டு வாசிப்பதே இலக்கியவாசிப்பை முழுமையாக்கும். புதுமைப்பித்தனே மிகக்குறைவாகச் சொல்லி பூடகமாக விட்டிருக்கும் பகுதி இது. செல்லம்மாளின் அந்தப்புலம்பலை அப்படியே கடந்துசென்று வாசிப்பது நல்ல வாசிப்பு அல்ல. இந்த நுண்வாசிப்பு விமர்சகரான எம்.வேதசகாயகுமாரால் எழுபதுகளில் முதன்மைவிவாதமாக ஆக்கப்பட்டது.

ஆனால் வாசிப்புக்கு ஒரு காலகட்டம் உண்டு. 50 களின் வாசகர்கள் பலர் பிரமநாயகம்பிள்ளை உண்மையிலேயே அவளுக்குச் சேலை எடுத்துக்கொடுக்கவில்லை, ஒருமுறை எதற்காகவோ அவள் கையையும் காலையும் கட்டிப்போட்டிருக்கிறார், அதைத்தான் அவள் நினைவுகூர்கிறாள் என எண்ணினார்கள். ஏனென்றால் அன்றெல்லாம் கணவன் மனைவியைக் கொஞ்சம் கொடுமைசெய்தாலும் தப்பில்லை என்னும் மனநிலை இருந்தது.  இறுதியில் அன்பாக உடனிருக்கிறானே, அதுவே அவனுடைய ஆழத்திலுள்ள அன்பைக் காட்டுகிறதல்லவா என்ற கோணம். அந்த அடிப்படையிலேயே இது யதார்த்தமான இலட்சியக்காதல் என வாசித்தனர்.

பிரமநாயகம் பிள்ளையின் கதாபாத்திரம் உண்மையில் அதையெல்லாம் செய்யக்க்கூடியது அல்ல, அன்பானது என்றே கதை காட்டுகிறது. அப்படியென்றால் அவளுக்கு ஏன் அப்படித்தோன்றுகிறது என்பதுதான் மெய்யான கேள்வி. அது எழுபதுகளுக்குப்பின் எழுந்துவந்த வாசிப்பு.

ஜெ

முந்தைய கட்டுரைபயணம், கிண்டில்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-43