செய்தி -கடிதங்கள்

news

 

செய்திதுறத்தல்

அன்புள்ள ஜெ சார்,

வணக்கம்.

நான் இதை உங்களுக்கு ஏற்கனவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்களுடைய தன்னைத் தக்கவைத்துக்கொள்ளல் என்று தலைப்பிடப்பட்ட கேள்வி பதிலுடன் இதை இணைத்து புரிந்து கொள்கிறேன்.

சமஸ் அவர்களும் செய்தி பிரதானம் அல்ல கேளிக்கை தான் என்கிற ரீதியில் செய்தி ஊடகங்கள் செயல்படுவதை பற்றி எழுதியிருந்தார்.

தொலைக்காட்சி நம் வீட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் சனியன். செய்தித்தாள் நம்மை தேடி வரும் மரண அறிவிக்கை.

என்னுடைய தந்தை காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். செய்தித்தாள்கள் இல்லாமல் அவர் நாட்கள் செல்லாது. வீட்டில் 3 செய்தித்தாள் வாங்கி கொண்டிருந்தோம். இரண்டு தமிழ்,  ஒரு ஆங்கிலம். பின்னர் அதை இரண்டாக குறைத்து இப்போது ஒன்று போதும் என்று முடிவு எடுத்திருக்கிறோம். இது போக என்னுடைய அப்பா டீ கடையில் மீதி தாள்களை படித்து விடுவார்.

அவர் ஓய்வு பெற்று 6 வருடம் ஆகிறது. நான் ஒரு நான்கு வருடங்கள் படிப்பு, வேலை என்று வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளியிருந்து விட்டு வீடு திரும்பிய போது எனக்கு முதலில் உரைத்தது நமது குடும்பங்கள் இத்தனை கூச்சல் மிகுந்ததா என்று தான்.

அரசாங்கம் பென்ஷன் கொடுப்பது நிம்மதியாக மீதி நாட்களை வாழ தான் என்று நான் சொல்ல அவர் நண்பர்களுடன் சேர்ந்து private security வேலைக்கு போகும் யோசனையை கை விட்டு விட்டார். வெயில், மழை, கொசுக்கடி என்று இரவும் பகலும் உழைத்தவர். நன்றாக உறங்கிய நேரம் போக ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஆறு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து விட்டார். பெரும்பாலும் செய்தி சேனல்கள். எப்போதாவது Animal Planet, சிரிப்பு சேனல்கள் போன்றவை. கடந்த இரண்டு வருடங்களாக இது அளவு மீறி போய் கொண்டிருந்தது. ஜெயலலிதா மரணம் அதை தொடர்ந்த build up கள் மக்களை பரபரப்பில் வைத்திருந்தன.

நடு வீட்டில் உட்கார்ந்து ஒருவர் புகை பிடித்தால் உங்களுக்கு எப்படி மூச்சு முட்டுமோ அப்படி இருக்கிறது எனக்கு என்று சொல்லி விட்டேன். மனிதருக்கு வேறெந்த பொழுதுபோக்கும் கிடையாது. ஊர்நாட்டில் தங்கி விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு பங்காளி சண்டை. நான் தனியாக வீடு பார்த்து போக போகிறேன் என்று பல முறை சொல்லி விட்டேன்.

எனது அம்மா ஜாடிக்கு ஏத்த மூடி. அவர் பாட்டுக்கு பாட்டு மாதிரி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பார். இடையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தீவிரமாக பார்த்து கொண்டிருந்தார். நீங்கள் சொல்லும் பழங்குடி மனப்பான்மை தான். அடுத்த வீட்டில் நிகழும் துன்பத்தை வேடிக்கை ஆக்கி கடை விரித்தால் அதை வாங்குவார் உண்டு. அதற்கும் ஒரு சண்டையை போட்டு நிறுத்தி வைத்தேன்.

நீயெல்லாம் படிச்சவனா என்கிற கேள்வி என்னை நோக்கி அடிக்கடி கேட்கப்படும். கொஞ்சம் கூட பண்பாடில்லாமல் அவர்களை tv பார்க்க கூடாது என்று சொல்கிறேன் அல்லவா?!

எனக்கு என்ன அதிர்ச்சி என்றால் இந்த செய்தி சேனல்கள் பயன்படுத்தும் பின்னணி இசை தான். Michael Jackson இசையில் இருந்து ஏதோ போர் முரசு ஒலிப்பது போன்ற இசை வரை பல மாதிரி. இவர்களுடைய தொழில் ‘manufacturing consent’. சின்ன பிள்ளைகள் ஓடி விளையாடும் வீட்டில் CCTVயில் பதிவான  கொலைக்காட்சியை திரும்ப திரும்ப காட்டுகிறார்கள். இவர்களுக்கு அறம், தர்மம் என்று ஒன்றும் கிடையாது. பணம் தான் எல்லாம். புகழ், பிரபலம் கிடைத்தால் வேண்டாம் என்றா இருக்கிறது?

சமூக ஊடகமும் அதற்கு மேல். Sterlite குறித்து கொந்தளித்த மாணவர்கள் IPL தொடங்கவும் குதூகளிக்க தொடங்கி விட்டனர். அவர்கள் வாழ்க்கை அத்தனையும் online ல் தான்.

பெண் பிள்ளைகள் பெரும்பாலும் அட்டவணை போட்டு நாடகம், reality show பார்க்கிறார்கள்.

Gladiator படத்தில் “மக்கள் கிளர்ச்சி செய்வார்கள் போல் இருக்கிறது” என்று அமைச்சர் சொல்ல “Games, More Games” என்று மக்களின் கவனத்தை திசை திருப்புவான் அரசன். அது தான் தற்போது உலகெங்கும் நடக்கிறது.

வயதிற்கு ஏற்றார் போல் கேளிக்கை. 365 நாளும் குடிக்க பணம் வேண்டும். ஆனால் tv யும் cell phone கூடவே jio என்று விலை மலிந்து விட்டனவே. IPL, ISL, TNPL, Big Boss என்று அடுக்கி கொண்டே போகலாம்.

இந்நிலையில் கொஞ்சம் நுண்ணுணர்வு உள்ளவன் பாடு திண்டாட்டம் தான். நாடு தேடும் அகதி போல் அவன் தனக்கென்று ஒரு இடம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றான்.

மிக்க அன்புடன்

மருது

 

வணக்கம் ஜெ.

 

200% சரியான முடிவு.

 

இதை நான் கடந்த 3 வருடங்களாக கடை பிடிக்கின்றேன்.

 

வானொலியில் செய்தி படிக்க எல்லா பத்திரிக்கைகளையும் படிப்பேன்.

 

எனக்கு நானே சொல்லி விடுவேன்.

 

நீ படிக்கும் செய்திகளில் உண்மை 50% இருக்கலாம் என்று.

 

ஆகவே பதட்டமே கொள்ளாமல் படி மாலா என்று எனக்கு சொல்லி கொள்வேன்.

 

அது மட்டுமல்ல சூப்பர் மார்கெட் செல்லும் போது மனது அலை பாயாமல் பார்த்து கொள்வேன்.

 

எது தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொண்டு வேண்டாதவற்றை பார்க்கவே மாட்டேன். ( இது ஒரு பெண்ணிற்கு எவ்வளவு கழ்டம் என்று உங்களுக்கு புரியுமா என்று எனக்கு தெரியாது)

 

மேலெழுந்தவாரியாக செய்திகளை வாசித்தி விட்டு மனம் பாதிப்படையாமல் இருக்க பழகி கொண்டு விட்டேன்.

 

சில நல்ல மனிதர்களும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இருக்கிறார்கள். அவர்களையும் ஊடகங்கள் மூலமாகத்தானே தெரிய வருகிறது.

 

நாமும் கவனமாக இருக்க வேண்டும். நம் பிள்ளைகளையும் கவனமாக கவனிக்க வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

 

இதெற்கெல்லாம் காரணம் துரதிர்டவசமாக நல்ல தலைவர்கள் நாட்டை ஆள இப்போது இல்லை.

 

 

மாலா

 

அன்புள்ள ஜெ

 

ஜெயகாந்தன் ஒரு மேடையிலே சொன்னார் ‘நான் செய்திகள் வாசிப்பதில்லை, எனக்குத்தேவையான செய்திகள் என்னைத்தேடிவரும்’ . அதை நானும் கடைப்பிடிக்கிறேன். வேறுவழியே இல்லாமல் நம்முடைய அன்றாடவாழ்க்கை, தொழில் பயங்கரமான டென்ஷன் கொண்டதாக மாறிவிட்டது. அதைத்தவிர்க்கமுடியாது. அதற்குச்சமானமாக நாம் சொந்தவாழ்க்கையை சொந்தநேரத்தை அமைதியாகவும் உற்சாகமமாகவும் வைத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை அழிந்துவிடும். அதற்கு பெரிய தடையாக இருப்பவை செயற்கையாக செய்திகளை மிகையாக்கி பரபரப்பாக அளிக்கும் ஊடகங்கள்தான்

 

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

 

உண்மையில் இதே செய்திகளை நானே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். நாம் ஒரு நல்ல நிலவை அமர்ந்து பார்ப்பதில்லை. ஒரு நாலுமணிநேரம் இசைகேட்க உக்காருவதில்லை. ஒரு நல்ல வாக்கிங் சுமுகமான நிலையில் நடைபெறுவதில்லை. காரணம் இதுதான். சூழல் நமக்கு அளிக்கும் செயற்கையான பரபரப்பு. அந்த மனநிலை இருக்கும் போது எப்போதும் ஒரு பதற்றம். சுமுகமாக அமர்ந்தாலே நேரம்நகராமலிருக்கிறது. ஒரு ஐந்துநிமிடம் காத்திருப்பது என்றால் நாம் உடனே செல்போனை நோண்டுகிறோம். சுற்றிநடப்பதை சும்மா வேடிக்கை பார்ப்பதில்லை. ‘அராம்சே’ என்று வடக்கே சொல்வார்கள். அதுதான் நமக்கு இல்லாமலாகிவிட்டது

 

ராகவேந்திரன்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-42
அடுத்த கட்டுரைபயணம், கிண்டில்