அஞ்சலி ஸ்ரீகலா பிரபாகர்

NTVM0598626

மலையாள இதழாளர்களில் எனக்கு நெருக்கமான இரு ஸ்ரீகலாக்களில் ஒருவர் இன்று அழைத்து “இனி ஒரு ஸ்ரீகலாதான் இதழாளர்களில் உங்கள் நண்பர்” என்றார். அப்போதுதான் ஸ்ரீகலா பிரபாகர் மறைந்த செய்தியை அறிந்தேன். நான்குநாட்களுக்கு முன்பு, தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்துகொண்டார்.

 

கொட்டாரக்கரையைச் சேர்ந்த என்.பிரபாகரன்நாயர் –சாரதாவின் மகள் ஸ்ரீகலா இடதுசாரி தொலைக்காட்சியான கைரளியின்செய்திப்பிரிவு தலைமைப்பொறுப்பில் இருந்தார். சிறிதுகாலம் சுதந்திரச் செய்தியாளராக செயல்பட்டார்.மீண்டும் கைரளி.கேரள அரசியலில் ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்கிய பல செய்திகளை வெளிப்படுத்தியவர்.

 

இடதுசாரிப்பார்வை கொண்டவரும் தீவிரமான களப்பணியாளருமான ஸ்ரீகலா கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராக பணியாற்றினார். தீவிரமான வாசகர். அரசியல்,பொருளியல் தளங்களில் விரிந்த வாசிப்பும் உள்வட்டத்தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தவராகையால் பெரும்பாலும் நான் அவரிடம் நாட்டுநடப்புகளை விசாரித்துத் தெரிந்துகொள்வதுண்டு

 

நான்காண்டுகளுக்கு முன்பு என்னுடைய ‘உறவிடங்கள்’ என்னும் தொகுப்பை வாசித்துவிட்டு அறிமுகமானார். தொடர்ந்து நட்பிலிருந்தோம். கடைசியாக சிலமாதங்களுக்கு முன்பு இங்கே வந்தபோது நீலம் நாவலைப் பரிசாகக் கொடுத்தேன். அதற்காகவேனும் தமிழ் படிக்கப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார். வெண்முரசு குறித்து ஒரு செய்தி ஆவணப்படம் தயாரிப்பதாக திட்டமிருந்தது

 

ஸ்ரீகலா தொடர்ச்சியான உள அழுத்தம் கொண்டிருந்தார். தற்கொலை எண்ணம் எப்போதுமிருந்தது என சொன்னதுண்டு. நாட்கணக்கில் பேசவே முடியாத நிலை ஏற்படும் என்றும், தொலைபேசியை எடுக்கத்தோன்றாது என்றும் சொன்னார். அவருடைய தனிப்பட்ட உளநிலைகளை நான் அறிய முடிந்ததில்லை. இன்று அவர் மறைந்த செய்தி நிலைகுலைவை உருவாக்கியது. தன் உள அழுத்தம் குறித்து அவர் சொன்னபோதிருந்த முகபாவங்களை திரும்பத்திரும்ப நினைத்துக்கொள்கிறேன்

முந்தைய கட்டுரைஇமையம்நோக்கி…
அடுத்த கட்டுரைபோகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்