அன்பின் ஜெ.
நண்பர் முருகானந்தம் இந்தக் காணொளியை அனுப்பியிருந்தார். பேராசிரியர் ஜீன் ட்ரீஸ் மற்றும் பேராசிரியர் அமர்த்தியா சென்னும் இணைந்து எழுதிய, “An Uncertain Glory – India and its contradictions” என்னும் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக உரை.
இந்தப் புத்தகம், சுதந்திர இந்தியப் பொருளாதாரம் பற்றிய ஒரு பருந்துப் பார்வையை, அதன் வெற்றி தோல்விகளை முன்வைக்கிறது. முக்கியமான புத்தகங்களில் ஒன்று. பாஸ்கர் அவர்களின் அறிமுக உரை, சுவாரஸ்யமான நடையில் அமைந்திருக்கிறது. இது, பொதுவாக பொருளாதாரம் பற்றிய எதிர்மறை மனச்சாய்வைப் போக்குகிறது. ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு, இது ஒரு கோனார் பொருளுரை.
இது பற்றிய அவர்களின் குறிப்பு:
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் திரு ஏ.பாஸ்கர் அவர்கள் “நிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்”என்ற ஜீன் டிரீஸ் மற்றும் அமர்தியா சென் (தமிழில்: பேரா.பொன்னுராஜ்) ஆகிய இருவர் சேர்ந்து எழுதிய நூலை அறிமுகம்
பேச்சாளர் பற்றி: திரு.ஏ.பாஸ்கர் அவர்கள் கட்டடக்கலைப் பொறியாளர்; தொழிற்சங்கவாதி. ‘பாட்டாளி படிப்பு வட்டம்’ என்கிற அமைப்பில் முனைப்போடு செயல்படுபவர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர். நவீன நாடக அரங்கில், காலஞ்சென்ற எழுத்தாளர் ஞாநியின், பரிக்ஷா நாடகக் குழுவில் முப்பது வருடங்களாக செயல்பட்டு வருகிறார்.
நூல் பற்றி: இந்தியாவின் பலம் என்பது அதன் வளங்கள் மட்டுமல்லாமல், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட பல நவின அரசியல் சமூக விழுமியங்களையும் சேர்த்து பார்க்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்நூல் பேசுகிறது. இந்தியாவின் முரண்பாடுகளையும், ஒரு வலிமையான தேசமாக அது உருவாகக் காரணமான பொருளாதார, வரலாற்றுப் போக்கையும் இந்நூல் பேசுகிறது. ஏழைகள் அதிகம் வசிக்கும் நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்வதே இந்நூலின் முக்கிய நோக்கம். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் பற்றி: திரு. அமர்தியா சென் அவர்கள் பாரத ரத்னா மற்றும் நோபல் போன்ற மிக உயரிய விருதுகளால் கவுரவிக்கப் பெற்றவர்,ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவம் கற்பிக்கும் இந்தியர். திரு. ஜீன் டிரீஸ் அவர்கள் புகழ் பெற்ற “லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்” -இன் பேராசிரியர். இந்தியாவில் வாழும் பெல்ஜிய பொருளாதார நிபுணர் இவர். இவ்விருவரும், தனியாகவும்,சேர்ந்தும், பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி உள்ளனர்
மொழிபெயர்ப்பாளர் பற்றிய குறிப்பு: இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்துள்ள பேராசிரியர் பொன்னுராஜ் அவர்கள், நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரையாளராகவும், மொழி பெயர்ப்பாளாராகவும் தனது எழுத்துப் பணியை தொடர்கிறார். இடம்: காந்தி கல்வி நிலையம், 58 வெங்கட நாராயணா சாலை, தி.நகர்,சென்னை – 600 017
ஒரு மணி நேரம் ஓடும் இக்காணொளி, மதிப்பு மிக்க ஒன்று.