மறைந்த எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பாலும் பாவையும்’ என்ற நாவலில் ஒரு காட்சி கதாநாயகன் கதாநாயகியை ஒர் உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறான். ஆங்கிலேயர் அதிகம் புழங்கும் உணவகம் அது அப்போது ஹிப்பி இயக்கம் தொடங்கியிருக்கிறது. ஒரு ஹிப்பிப் பெண் உள்ளாடை மட்டுமே அணிந்து அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மார்பகங்கள் பெரும்பாலும் வெளியே தெரிகின்றன. அதை பார்த்ததும் கதாநாயகி நாணத்துடன் முகம் சிவக்க பார்வையை விலக்கிக் கொண்டு “நாம் கிளம்பிச் செல்வோம்” என்கிறாள்.
கதாநாயகன் கதாநாயகியைப்பற்றிய பெருமதிப்பை அடைகிறான். “எவளோ ஒரு ஹிப்பிப் பெண் தன் உடம்பை காண்பிப்பதைக்கண்டு இவள் வெட்கம் கொள்கிறாள் எவ்வளவு உயர்ந்தவள்! எவ்வளவு பண்பானவள்!” என்று நினைக்கிறான். ”இதுதான் தமிழ்ப்பண்பாட்டின் உச்சம்” என்று அவன் குரலில் ஏறி நின்று விந்தன் நம்மிடம் சொல்கிறார்
இந்த காட்சி மு.வரதராசனாரின் நாவல் ஒன்றில் வந்திருந்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இது முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் திராவிட எழுத்தாளர்களுக்கும் முக்கியமான ஒருவராகிய விந்தன் எழுதிய நாவலில் வந்தது. விந்தனை தமிழகத்தில் எழுந்த இரு மரபுஎதிர்ப்பு அரசியல் இயக்கங்கள் கம்யூனிஸ்ட்டு இயக்கமும் திராவிட இயக்கமும். விந்தனை இவ்விரு இயக்கங்களுக்கு இடையே ஒரு சந்திப்புப் புள்ளி என்று சொல்லலாம். ஈ.வெ.ராமசாமி மீது பெரிய ஈடுபாடு கொண்டவர். கூடவே இடதுசாரி இயக்கங்களின் தலைவர்களுக்கு அணுக்கமானவர். தமிழின் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு முன்னோடி விந்தன், தொ.மு.சி ரகுநாதன் இருவரும்தான்.
விந்தன் ஜெயகாந்தனுக்கு ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர். மிகத் தீவிரமான சமூகவிமர்சன நோக்குள்ள கதைகளை எழுதியிருக்கிறார். அன்றைய முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கிய வேலையில்லாத்திண்டாட்டத்தையும் வறுமையையும் எகத்தாளமாகவும் எரிச்சலாகவும் எழுதியிருக்கிறார். விந்தனின் பாணியைப் பின்பற்றி எழுதும் எழுத்தாளர்களின் பெரிய பட்டியலே தமிழில் இருக்கிறது. மிக முக்கியமான உதாரணம் என்றால் சு.சமுத்திரம் என்று சொல்லலாம்.
விந்தனின் பார்வையில் இந்துமதம் அதன் ஆசாரங்கள் மத நம்பிக்கைகள் குறியீடுகள் அனைத்துமே எள்ளிநகையாடப்பட்டவை. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் என்னும் புகழ்பெற்ற பாடலை பகடி செய்து பசிகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர் அவர். . ஆனால் பெண்களைப்பற்றிய் பார்வை மட்டும் முழுக்க முழுக்க மரபானது என்பதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய கதாநாயகி அடக்கமான குடும்பப் பெண். ஆம் கண்ணகியே தான்.
இன்னொரு பக்கத்தை பார்ப்போம். தமிழகத்திலுள்ள மிகப்பெரும்பாலான ஆலயங்களில் திருப்பணிகளை பரத்தையர் செய்திருக்கிறார்கள். பொது ஊருணிகளை வெட்டிய பரத்தையர் ஏராளமாக வரலாற்றில் உண்டு. இந்தியச் சுதந்திரப்போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில், பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த சூழலில், நாடகநடிகைகளும் பாடகிகளுமான கணிகைகளே காந்தியின் அறைகூவலை ஏற்று அரசியல்களத்திற்கு வந்தனர். சொத்துக்களையும் உயிரையும் பணயம்வைத்தனர்.
அத்தகைய ஒரு பெண் கதாபாத்திரத்தை நம் இடதுசாரிகளின் எழுத்தில் ஏன் காணமுடியவில்லை? அவர்களின் வரலாற்றுப் பங்களிப்பு ஏன் இங்கே பதிவாகவே இல்லை? என் என்பதற்கான விடையை அளிக்கிறது விந்தனின் நாவலில் வரும் அந்தச் சித்திரம். பெண் அரசியல்பிரக்ஞை உடையவளாக, பொதுநலனுக்காகப் போராடுபவளாக மட்டும் இருந்தால் போதாது. அவள் கற்பரசியாகவும் கணவனைக் கண்கண்ட தெய்வமாக நினைப்பவளாகவும் இருக்கவேண்டும்.
நம் இடதுசாரிகள் எழுதிய பெண் கதாபாத்திரங்களுக்கு முன்மாதிரி மார்க்சிம் கார்க்கி எழுதிய அன்னை என்னும் நாவல். உலகமெங்கும் உள்ள இடது சாரிகளைப்பாதித்த முக்கியமான நாவல் அது. போல்ஷ்விக் புரட்சியாளனாகிய பாவலின் அன்னை நிலோவ்னா மிகச் சாதாரணமான ஒரு கிராமத்துப் பெண். தொழிற்சாலையில் கடுமையான உடலுழைப்புப்பணியைச் செய்கிறாள். தன் மகன் எதை நம்புகிறான். எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறான். ஏன் அவனை காவல் துறை தேடுகிறது என்று எதுவும் அவளுக்குப் புரிவதில்லை. ஆனால் மகன் மேல் பெரிய அன்பும் பிரியமும் வைத்திருக்கிறாள்
மெல்ல மெல்ல மகனை அவள் புரிந்து கொள்ளும் போது அரசியலையும் புரிந்துகொள்கிறாள். பாவேல் கைதாகிச் சிறைக்குச் செல்லும்போது அவனுடைய அரசியலை தான் கையில் எடுத்துக்கொண்டு தீவிரமான அரசியல் போராட்டத்தின் மையத்தில் வந்து நிற்கும் நிலோவ்னாவை காட்டி மர்க்சிம் கார்க்கியின் தாய் முடிகிறது. ஏறத்தாழ அதே வகையான நாவல்கள் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கின்றன. [மலையாளத்தில் செறுகாடு எழுதிய முத்தச்சி]
ஒரு முன்னுதாரணமான பெண் என்பவள் வெறுமே வீட்டுக்குள்: அடங்கி ஒடுங்கியிருப்பவள் அல்ல. அரசியல் தெரிந்தவள் உரிமைப்போராட்டங்களில் முன்நிற்பவள் ஆணுக்குச் சமானமாகவே போராடவும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளவும் துணிந்தவள். ஆணுக்கு நிகராகவே அறிவார்ந்த தகுதி கொண்டவள் என்ற செய்தியை மாக்ஸிம் கார்க்கியின் தாய் உலகெங்கும் கொண்டு சென்றது.
ஆனால் தமிழ் இடதுசாரிகளிடம் மட்டும் அந்நாவல் இந்தக் கோணத்தில் எந்தப்பாதிப்பையும் உருவாக்கவில்லை. தமிழ் இடது சாரி இலக்கியத்தின் தோற்றுவாய் என்று சொல்லப்படும் நாவல் தொ.மு.சிரகுநாதன் எழுதிய பஞ்சும் பசியும். புதுமைபித்தனின் மாணவராகிய ரகுநாதன் இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர் போராட்டங்களில் முன் நின்றவர். அவருடைய நாவலில் வலுவான பெண் கதாபாத்திரங்களே இல்லை. அதன்பின் ஐம்பதாண்டுகாலம் இங்கே மிக விரிவாக எழுதப்பட்ட இடதுசாரி இலக்கியத்தில் மர்க்சிம் கார்க்கியின் அன்னையைப்போல ஒரு கதாபாத்திரம் உருவாகவில்லை.
அவ்வாறு உருவாகாமல் தடுத்தது இந்தக் கண்ணகி உருவகம்தான். என்னதான் அரசியல் உணர்வு கொண்டிருந்தாலும் எவ்வளவு துணிச்சல் இருந்தாலும் கணவனுக்கு அடங்கி குடும்பத்திற்குள் பெண் இருந்தாகவேண்டும் என்றுதான் நம் இடதுசாரிகள் நம்பினார்கள். இந்த வரையறை அவர்களின் ஒட்டுமொத்த பார்வையைக் குறுக்கிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
மாதவியின் நோக்கில் சிலப்பதிகாரத்தை மறுஅமைப்பு செய்யும் மாதவி காவியம் தமிழ்ஒளி என்னும் கவிஞரால் எழுதப்பட்டது. அவர் விந்தனுக்குச் சமகாலத்தவர். ஜெயகாந்தனின் ஆசிரியர்நிலையில் இருந்தவர். இடதுசாரிக்கொள்கை கொண்டவர். அந்த நூலை இப்போது படித்துப்பார்த்தால் மாதவியும் ஒருவகையில் கண்ணகியைப்போன்றவள்தான், கற்பரசிதான், ஒருவனுக்கு என வாழ்ந்தவள்தான் என்று அந்த நூல் வாதிடுவதைப்பார்க்க முடியும். மாதவியாக, அதாவது பரத்தையாக, அவளுக்கு எந்தச் சிறப்பும் இல்லை என ஆசிரியர் கருதுகிறார் என்று புரியும்.
***
இங்கே இடதுசாரி இலக்கியம் உருவாகி அரைநூற்றாண்டு கழித்து, 1982ல் அஸ்வகோஷ் என்றபேரிலும் எழுதிய ராஜேந்திரசோழன் ‘சிறகுகள் விரித்து’ என்ற சிறுநாவல் ஒன்றை எழுதினார். அது வடதமிழ்நாட்டின் சிறுநகர் ஒன்றின் அடித்தளமக்கள் வாழும் சேரியின் கதை. அங்கே மிகநெகிழ்ச்சியான பாலுறவுகளே இருக்கின்றன. பெண்கள் சுதந்திரமாகப் பிடித்தவனுடன் வாழ்கிறார்கள். பிடிக்காவிட்டால் பிரிகிறார்கள் அதில் பாலுறவுச்சிக்கல்களையும் அரசியல்கொள்கைகளையும் புரிந்துகொண்டு இளைஞனாக எழும் ஒரு முதிராச்சிறுவனை அவர் சித்தரித்திருந்தார்.
ராஜேந்திர சோழன் இடதுசாரி அமைப்புகளில் பணியாற்றிக்கொண்டிருந்தார் அப்போது. அவர்மேல் மிகக்கடுமையான தாக்குதல்கள் முன்வைக்கப்பட்டன. அவர் ‘பெண்களை இழிவுபடுத்துகிறார்’ என்று முத்திரை குத்தப்பட்டது. ‘உழைக்கும்பெண்கள் அனைவரும் விபச்சாரிகளா?” என்று கேட்டார்கள்
அடுத்தபதிப்பில் குறுநாவலைவிட பெரிய முன்னுரையை ஆசிரியர் எழுதியிருந்தார். பாலுறவுசார்ந்து ஒரு பெண்ணை நல்லவள் கெட்டவள் என அடையாளப்படுத்துவதே மாபெரும் பிழை என்றும் அது பெண்ணை ஆணின் உடைமை என்றும் குடும்பத்தின் சொத்து என்றும் எண்ணும் மனநிலையில் இருந்து உருவான கருத்தும் என்றும் அவர் சொன்னார். ஆண் ஒருவனுடன் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே பெண் ஒழுக்கமானவள் என்று இல்லை. ஒழுக்கத்தை நேர்மை, துணிச்சல், பிறருக்கு உதவும்தன்மை, அறச்சார்பு போன்ற அளவுகளைக்கொண்டே மதிப்பிடவேண்டும் என்றார். ஒழுக்கம் சார்ந்த அளவுகோல்களுடன் உழைக்கும் மக்களை அணுகினால் அவர்கள் விபச்சாரிகள் என்றுதான் தோன்றும் என்றார்
இப்போது மீண்டும் கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. ராஜேந்திரசோழனின் அறைகூவல் அப்படியேதான் உள்ளது. பெண்ணை அவளுடைய அறிவு,நேர்மை, சமூகப்பங்களிப்பு சார்ந்து மதிப்பிட நம்மால் முடியவில்லை. அவளுடைய பாலியல்நடத்தை மட்டும்தான் நம் அளவுகோலாக உள்ளது. அவள் என்ன உடை அணிந்திருக்கவேண்டும், எப்படிப்பேசவேண்டும் என்றுதான் இன்றும் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். ஒரு பெண் கண்ணகியா மாதவியா என்பதே நம் கேள்வி. நாம் மாதவியைக் கொண்டாடுவோம், கண்ணகியை வணங்குவோம்.
மாதவியும் கண்ணகியும் இருவகையில் ஆணின் பாலியல் கருவிகள் என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. ஒருத்தி வீட்டுக்குள் இன்னொருத்தி பொதுவெளியில். அந்த இரண்டு உருவகங்களையும் உதறிவிட்டு தன் அறிவையும் ஆற்றலையும் மட்டும் நம்பி செயல்படும் பெண்ணைத்தான் நம் முற்போக்காளர்கள் முன்வைத்திருக்கவேண்டும். ‘என் ஒழுக்கம் என் சொந்த விஷயம். அதை நீங்கள் பேசவேண்டியதில்லை’ என்று சொல்லும் ஒரு பெண்ணை. அவள் பத்தினி அல்ல, சிந்திக்கும் பெண்.
================================================================================================
கசப்பெழுத்தின் நூற்றாண்டு
==============================================================================================
1. இலட்சியக்காதலியின் வருகை
2 ஒரு சிறு வெளி
3 கல்வியும் காதலும்
4 இரண்டு கணவர்கள்
5 யாருடைய சொத்து?