ராஜம் அய்யர் -கடிதங்கள்

b r

ஒரு சிறு வெளி

அன்புள்ள ஜெயமோகன்,

 

ராஜம் அய்யரைப் பற்றிய சமீபத்திய பதிவுகளின் தொடர்ச்சியாக ஒரு செய்தி. கமலாம்பாள் சரித்திரத்தில் இடம் பெறும் பெரிய வீடு எழுத்தாளர் அசோகமித்திரனின் தாய் வீடு. என்னுடைய ஊர் நிலக்கோட்டை. பக்கத்துக்கு ஊர். வத்தலகுண்டில் சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் கேட்டிருந்த போது, அசோகமித்திரன் இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு அவரிடமிருந்து வந்த மெயிலில்(ஒரு விழாவில் அவரை சற்றே எரிச்சல் படுத்தியிருந்ததற்கு மன்னிப்பு கேட்டு நான் எழுதிய மெயிலில் அவருக்கு இப்போது வத்தலக்குண்டில் யாரும் இருக்கிறார்களா என கேட்டிருந்தேன். அப்போது இதைக் குறிப்பிட்டிருந்தார்”Rajam Iyyar had modelled his protagonist on my maternal grandfather”). அந்த மெயில் கைவசம் இல்லை. ராஜம் ஐயர் வாழ்ந்த வீடு என்று கல் பதித்த ஒரு வீடு நான் வத்தலகுண்டு ஒத்தை தெருவில் பார்த்திருக்கிறேன். வத்தலகுண்டு அக்ராஹாரத்தில் விசாரித்த போது கூட சொன்னார்கள் “பெரிய வீட்டு” அம்பி என்று ஒருவர் இருக்கிறார் என்று.

 

அன்புள்ள

கிருஷ்ணன்

 

அன்புள்ள கிருஷ்ணன்

 

இது புதிய செய்தியாக இருக்கிறது. சி.சு.செல்லப்பா தனக்கு ராஜம் அய்யர் தூரத்துச் சொந்தம் என நிறைமுறை எழுதியிருக்கிறார். அசோகமித்திரன் அப்படி எங்கும் எழுதியதாகத் தெரியவில்லை. அந்தக்கடிதம் இருந்தால் பிரசுரிக்கலாம்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

ராஜம் அய்யரின் நாவலைப்பற்றி இப்போதும் பேசப்படுவது ஆச்சரியம்தான். அதில் பொதுவான அக்கால சமூகமறுமலர்ச்சிக் கருத்துக்களைக் கண்டுசொல்வதே வழக்கம். ஏனென்றால் அதைப்பற்றிப் பேசுபவர்கள் பெரும்பாலும் கல்லூரித்தமிழாசிரியர்கள். நான் அந்நாவலை வாசித்தபோது அன்றைக்கிருந்த அக்ரஹார வம்புகளை எவ்வளவு நுட்பமாக எழுதியிருக்கிறார் என்றுதான் ஆச்சரியப்பட்டேன்

 

நாராயணமூர்த்தி

 

அன்புள்ள நாராயணமூர்த்தி,

 

அன்றைய எழுத்தாளர்கள் பலரும் எழுதியதுதான் அது. குறிப்பாக அ.மாதவையா. அந்த வரிசையில் மாதவையாவின் முத்துமீனாட்சி ஒரு பெரிய கலைப்பதிவு. கண்ணன்விடுதூது ஒரு முதன்மையான படைப்பு

 

ஜெ

முந்தைய கட்டுரைதுகள் -கடிதம்
அடுத்த கட்டுரையாருடைய சொத்து?