சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை
சோர்பா கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
அருணா அக்காவின் சோர்பா எனும் கிரேக்கன் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான விமர்சனக் கட்டுரை.
பொதுவாக எனக்கு கீழை தத்துவங்கள் சார்ந்த மேலை நாட்டுப் படைப்புகள் மீது ஒரு விலகல் உண்டு. தோரோ, எமர்சன் போன்ற சில விதி விலக்குகள் தவிர. பல முறை மெத்தப் படித்த என் இந்திய நண்பர்களுக்கும், சில அமெரிக்க நண்பர்களுக்கும் நம் ஆன்மீக, தத்துவப் பின்புலத்தை விளக்க முயன்று தோற்றதனால் இருக்கலாம். இருத்தலியல் கண்ணாடி வழி மட்டும்தான் தான் அனைத்தையும் பார்க்க விழைவோரிடம் உள்ளுணர்வு, ஆழ்மனம் போன்ற எதையும் சரிவர புரிய வைக்க முடிந்ததில்லை. இதை விடக் கடினம், கீழைத் தத்துவங்களை அதன் உள்ளடுக்குகளைப் புரிந்து கொள்ளாமல் நீர்த்துப் போன எளிமைப் படுத்தல்கள் மூலம் விளக்க முயல்பவர்களின் வாதங்கள். பெரும்பாலும் தீபக் சோப்ரா போன்றோரைப் பின் தொடர்பவர்கள். கிட்டத்தட்ட கீழைத் தத்துவப் பின்புலம் மேலை மனங்களுக்கு புரியப் போவதில்லை என்ற முன் முடிவுக்கும், கீழை ஆன்மிகம் பேசும் மேலைப் படைப்புகளிலிருந்து எனக்கு பெரிதாக பெற்றுக்கொள்ள எதுவுமிருக்க போவதில்லை என்ற நிராகரிப்புக்கும் வந்திருந்தேன்.
பல வருடங்களுக்கு முன் சோர்பாவின் இசையின் வழியாக இந்த நூலைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. பெரும்பாலான நூலைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளும், விமர்சனங்களும் பெரிதாக என்னில் ஆர்வத்தை எழுப்பவில்லை. நடுக்கடலில் படகில் ஓட்டை விழுந்ததும் நீச்சல் தெரியாத பண்டிதனிடம் நீச்சல் அறிந்த படகோட்டி சொல்லும் வாழ்க்கைத் தத்துவத்தை அடியொற்றிய விமர்சனங்களே காணக்கிடைத்தன. பெரும்பாலான விமர்சனங்களும் முழுமையான இருத்தலினூடாய் வாழ்க்கையைக் கொண்டாடும் சோர்பாவிடம் தோற்கும் அறிவுஜீவியாகவே கதை சொல்லியை அடையாளம் காட்டின. அருணா அக்காவின் விமர்சனக் கட்டுரை ஒரு நல்ல திறப்பாக இருந்தது. முற்றிலும் வேறொரு பரிமாணம்.
சோர்பா ஒரு நவீன சார்வாகன் என்ற ஒப்புமையும், கதை சொல்லியும் சோர்பாவும் எதிரெதிர் துருவங்கள் அல்ல – ஒரு புள்ளியை வந்தடையும் இரு பயணிகள் என்ற புரிதலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. ஒருவன் செயல் வழியேயும் மற்றொருவன் சிந்தனை வழியேயும் தங்கள் விடுதலையை நோக்கிப் பயணிக்கிறார்கள். கட்டுரையைப் படித்து விட்டு நிதானமாக அசை போட்டதில், இப்படியாக மட்டுமே இருக்க முடியும். இதை எப்படி எல்லா விமர்சனங்களும் தவற விட்டன என்ற ஆற்றாமை மேலோங்கியது. இது போன்ற புரிதல் பிழைகளால் எத்தனை நல்ல படைப்புகளைத் தவற விட்டிருக்கிறேனோ என்ற பதட்டமும் தொற்றிக்கொண்டது. பனிமூட்டத்தின் பின்னால் மறைந்திருந்த மலையின் பிரம்மாண்டம், திடீரென பனி விலகியதும் கண் முன்னால் நெடிதுயர்ந்து நிற்பது போல் உணர்ந்தேன். ஒரு நல்ல படைப்பை என் பார்வையில் இருந்து மறைத்த பனி விலகியது என்றே சொல்ல வேண்டும். ஒருமுறை இலக்கிய விமர்சனம் பற்றி நீங்கள் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. இலக்கிய விமர்சனம் என்பது படைப்பை மதிப்பிடுவது அல்ல. நமது அளவுகோல்களை மதிப்பிட்டுக்கொள்வதே. என் அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வைத்த அருணா அக்காவிற்கு நன்றிகள் பல.
கட்டுரையின் சரளமான மொழியை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். “ஒரு கிளி பழம் தின்கிறது. இன்னொன்று அதை பார்த்திருக்கிறது” என்ற உபநிஷத வரியில் துவங்கியதில் இருந்து, விலகிச்செல்லும் ஒற்றை ஆடு போன்ற ஒப்புமை வழியாக, ‘கலைஞனை எந்த தத்துவமும், சித்தாந்தமும் முழு நம்பிக்கை கொள்ளச் செய்வதில்லை’ என்ற உண்மையில் முடிப்பது வரை தடையில்லாத ஒழுக்காய் பல படித்துறைகளைத் தொட்டுச் செல்கிறது. உங்கள் மொழியின் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற கூடுதல் அழுத்தமும் இருந்திருக்கும். சோர்பா கதைசொல்லியின் ‘இணை மனம்’ போன்ற சொல்லாட்சி, சிந்தனை – செயலூக்கம் என்ற கருத்தாக்கத்தை படிப்படியாய் கட்டி எழுப்பியது, கீழைத் தத்துவதுடன் நீட்ஷேயின் அதி மானுடனையும் மேலை மெய்யியலையும் கோர்த்தது, அதே சமயம் லௌகீக இன்பம் மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்யுமா என்ற கேள்வியை முன் வைதது, மிகவும் சிக்கனமாக எங்கெங்கு தேவையோ அங்கு மட்டும் கதையோட்டத்தை சொல்லியது என படைப்பின் ஆழத்தை, சாத்தியங்களை தொட்டுக் காட்டி மேலும் விரித்துக்கொள்ளும் உபகரணங்களையும் அளித்திருக்கிறார்.
கட்டுரையை வாசித்ததிலிருந்து, பல முறை சோர்பாவின் நடனத்தையும், பெஸுகி இசையையும் மீள மீள பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதன் நாட்டுப்புற அழகியலும், சன்னத நிலையும் ஒரு மயக்கத்தை தரத்தான் செய்கிறது. அடியாழத்தில் எங்கோ உறங்கிய சோர்பாவை துயிலெழுப்பிய அருணா அக்காவிற்கு நன்றி!
அன்புடன்,
பழனி ஜோதி
***
அன்புள்ள ஜெயமோகன்
சோர்பா தி கிரீக் நாவல் நான் கல்லூரியில் படிக்கும்காலகட்டத்தில் , அறுபதுகளில் பிரபலம். அதை வாசிப்பது ஹிப்பியாக ஆவதற்கான ஒரு வழி. அதை வாசித்துவிட்டு ‘இயற்கையாக’ இருப்பதற்காக படிப்பை விட்டவர்கள் பலர் உண்டு
அன்றெல்லாம் ஓஷோ. ஜேகே எல்லாரும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். Hedonism ஒரு கல்ட் ஆகவே இருந்தது. ஜென் ஆண்ட் மோட்டார் சைக்கிள் மெக்கானிசம் என்று ஒரு நூல். அதையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்
இதெல்லாம் ஒரு காலகட்டம். முதலில் Existentialism வந்தது. அதன்பிறகு இது. இதன்பிறகுதான் காப்மேயர் வகையறாக்களின் சுயமுன்னேற்றம் வந்தது. இன்றைக்கு அதுதான் பேஷன். இப்போது சோர்பா ஒரு ஹீரோ இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் தான் கதாநாயகன்
நன்றாக எழுதியிருக்கிறார்கள். சோர்பாவை சார்வாகர்களுடன் ஒப்பிட்டிருந்தது நன்றாக இருந்தது.
சத்யநாராயணன்
***