மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 3

mutha

பகுதி :மூன்று தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன?

சென்ற காலத்தைசேர்ந்த தளையசிங்கம் போன்ற ஒரு படைப்பாளியின் இன்றைய முக்கியத்துவன் என்ன?  அதிலும் தளைய சிங்கம் வெற்றிகரமாக புதைக்கப்பட்ட ஒருவர் என்று ஈழ த்து முற்போக்காளர் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவரது காலத்தில் இல்லாத பல புதிய சிந்தனைப்பொகுகளும் இலக்கிய அலைகளும் இப்போது வந்து விட்டன. இப்பொது அவரை பற்றிபேச வலுவான காரணம் இருந்தாக வேண்டும்.

விளிம்புநிலை தத்துவம்

தளையசிங்கம் காலகட்டத்தின் மையத்தில் இயங்குபவரல்ல, அதன் விளிம்பில் சஞ்சரிப்பவர் என புரிந்துகொள்வது மிக அவசியம். இவ்வித்தியாசத்தை உணரமுடியாவிட்டால் அவரது சிந்தனைகளின் பயன் குறித்து ஆழமான ஐயங்கள் நமக்கு ஏற்பட்டுவிடும். நாம் வாழும் இக்காலத்தை புரிந்துகொள்வது, அதன் பிரச்சினைகளை தாண்டிச் செல்வது என்பது தான் எப்போதுமே சிந்தனையின் உடனடித் தேவை என்பது உண்மையே.ஆனால் நாம் வரலாற்றாய்வில் பலநூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணம்செய்து அறிய முயல்கிறோம். நிலவியல் தொல்லுயிரியல் ஆய்வினூடாக பலலட்சம் ஆண்டுகள் தாண்டிச் செல்கிறோம். அவை பயனற்றவையல்ல, நாம் வாழும் இந்த நிகழ்காலமென்பது அதன் தொடர்ச்சியே. அதை அறிந்தால் மட்டுமே நிகழ்காலத்தை அறியமுடியும். இன்னொரு கோணத்தில் இப்படி சொல்லலாம்.இறந்தக ‘லம் குறித்த நமது எல்லா புரிதல்களையும் நிகழ்காலத்திலிருந்தே நாம் உருவாக்கிக் கொள்கிறோம். அப்படியானால் நமது இறந்தகாலம் குறித்த நமது ஆய்வுகளின் நோக்கம் என்ன?  நமது கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை நிகழ்காலத்தின் சிறு எல்லையிலிருந்து விரித்து இறந்தகாலத்தின் எல்லையின்மைவரை நீட்ட முயல்கிறோம். தளையசிங்கம் செய்வதும் அதுதான். அவர் எதிர்காலம் நோக்கி நகர்கிறார்.

இக்கட்டுரையில் ஏற்கனவே சொல்லப்பட்டபடி ஊகங்கள் தான் அறிதலின் அடிப்படைகள் ஆகின்றன. அறிவியலில் மட்டுமல்ல, தத்துவத்திலும் மெய்யியலிலும் கூட அப்படித்தான். ஊகங்களுக்கு ஒரு முக்கியமான இயல்பு உண்டு. அவை அவற்றுக்குரிய அறிவுத்தளத்தின் விளிம்புநுனியில்தால் சஞ்சரிக்க முடியும். இந்தத் தளம் விளிம்புநிலை அறிவியல் [frontier science]  என்று கூறப்படுகிறது.

விளிம்பு நிலை அறிவியல் மற்றும் தத்துவம் குறித்த பேச்சுகளில் எப்போதுமே எழக்கூடிய வினா இவற்றுக்கு அப்பால் உள்ள எந்த அடிப்படையில் இந்த சஞ்சாரங்கள் நிகழ் கின்றன என்பதே. கணிசமான அறிவியலாளர்கள் தங்களுக்கு அடிப்படையாக உள்ளது உள்ளுணர்வின் மூலம் உள்வாங்கப்பட்ட மெய்யியல் தேடல்களே என்றும், அவற்றை பெரும்பாலும் மதத்தில் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் சொல்லிய்ருக்கிறார்கள். உதாரணமாக சந்திர சேகர் கருந்துளைகள் குறித்த தனது ஊகம் இந்து மதமரபிலிருந்து கிடைத்ததே என்று சொல்லியிருக்கிறார். ஓபன் ஹைமெர், ஸ்க்ராடிஞ்சர் போன்றவர்கள் அவ்வாறு உபநிடத தரிசனங்களைப்பற்றி சொல்லியிருப்பது ஃப்ரிஜோ காப்ராவின் பிரபல நூலுக்குப் பிறகு நாம் அனைவரும் அறிந்ததே.

மெய்யியலின் தேடல் என்ன?  அது மனிதனால் புரிந்து வகுத்துவிட முடிவதாக பிரபஞ்சத்தை மாற்ற தொடர்ந்து முயல்கிறது என்று சொல்லலாம். நாம் இதுகாறும் அறிந்துள்ள இயற்கைவிதிகள் எல்லாமே உண்மையில் இயற்கையின் விதிகளா, இல்லை மனிதனுக்கு அர்த்தப்படும் இயற்கைத் தோற்றங்களா?  மனிதன் அறிந்த முதல் விஷயம் அவன் உடல் என்பதால் அவனது அறிதலின் அடிப்படை அலகாக உடல் இருந்தபடியே உள்ளது. அவன் அறியும் குணஇயல்புகள் பெரும்பாலும் அவன் உடலை அடிப்படையாகக் கொண்டவையெ [தூரம் விசை எடை…] பிற்பாடு மனம் உருவாகி அது தனித்துச் செயல்படவும் ஆரம்பித்தபோது உடலை மீறிமனதை செலுத்தி பிரபஞ்சத்தை அறியும் யத்தனம் உருவாயிற்று.மனம் பருப்பொருளின் பிரதிபலிப்பு என்பதால் பருப்பொருளையே படிமங்களாக்கி, அதன் மூலம் அது தன் பருத்தன்மையை மீறிநகரச்செய்து மன இயக்கத்தை சுதந்திரமாக்கினர். இவ்விரு முயற்சிகள் மூலம் பிரபஞ்சம் மனிதனால் அறியப்பட்டது. அத்வைதத்தின் மொழியில் சொல்லப்போனால் பிரபஞ்சம் அறிவு ஆக மாறியது. இம்மாற்றத்தையே மெய்யியல் என்கிறோம். அதை புறவயமாக ஆக்க முயல்வது அறிவியல், தருக்கபூர்வமாக வகுக்கமுயல்வது தத்துவம். விளிம்பில் சஞ்சரிக்கும் எல்லா அறிவியலாளர்களும், தத்துவ வாதிகளும் மெய்யியலில் தான் பெரிதும் மூழ்கியுள்ளனர். விசுவாசமான நாய் போல அவர்கள் சார்ந்துள்ள துறையின் தருக்கம் கூட வருகிறது. சிலசமயம் தவறவிட்டுவிடுகிறது.

தத்துவத்தின் விளிம்பில், மெய்யியலில் சஞசரிப்பவர் தளையசிங்கம். அப்படி சஞ்சரிக்கும்போது ஏற்படும் பிழைகள் ஏராளம். தத்துவத்தின் முக்கியத்துவத்தை தனது உலகப்புகழ்பெற்ற அறிமுகநூலின் முன்னுரையில் வில் டூரண்ட் விளக்குமிடத்தை நினைவுகூர்கிறேன். கடந்தகாலத்தில் தத்துவத்தின் ஊகங்கள் எப்படி அத்துமீறின பிழையாயின என்பது இன்று தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைக்காது என்கிறார் வில் டுரண்ட். காரணம் தத்துவத்தின் அப்பிழைகள் பாதைகளற்ற பாதையில் உள்ளுணர்வின் துணைகொண்டு பயணம் செய்ததன் விளைவுகள், அதன் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் அப்படி உருவானவையே.

உதாரணமாக நீட்சே பிரபஞ்சத்தில் பொருள் எல்லைக்குட்பட்டதுஎன நம்பினார், காலம் எல்லையற்றது.ஆகவே இங்கு பொருளின் பல்வேறு இணைவுகள் மூலம் நிகழும் ஒவ்வொரு செயலும் மீண்டும் நிகழும் என்றார். இது நிரந்தர சுழற்சி சித்தாந்தமாக அவரால் முன்வைக்கப்பட்டது.[ நான் இதைவைத்தே ‘ஜகன்மித்யை’  என்ற கதையை எழுதினேன்] இது இன்றைய அறிவியல்ப் பார்வையில் எத்தனை அபத்தமானது என்று சொல்லவேண்டியதில்லை. காலம் ஆற்றல் பொருள் மூன்றும் ஒரு புள்ளியில் ஒன்றாகுமெனில்தான் நீட்சேயின் கொள்கை தவறாகும். ஆனால் அது உண்மைஎன்கிறது நவீன இயற்பியல். மேலோட்டமாகப் பார்க்கும்போது வியப்பேற்படும். நம் பொதுப்புத்திக்கு வெகு அருகேவரும் நீச்சேயின் கொள்கை தவறானது, பொதுப்புத்திக்கு மிக அபத்தமாகத் தோன்றும் நவீன இயற்பியல் கொள்கை உண்மையானது. பொதுப்புத்தி என்பது ஒரு துறையில் பொதுவாக ஏற்கப்பட்டவற்றால் ஆனது. விளிம்பில் நகரும் அதன் ஊகங்கள் அதை மீறிச்செல்பவையாக, அதற்கு எதிரானவையாகத்தான் பலசமயம் இருக்கும்.

நாமறிந்த பொதுத் தத்துவப் புரிதலை சகஜமாக மீறிச்செல்கின்றன தளையசிங்கத்தின் கருத்துக்கள். இப்போது நம்மிடமுள்ள தத்துவ சிந்தனைகளை, மெய்யியல் போக்குகளை தொகுத்து எதிர்காலத்தின் முடிவின்மைவரை நீட்டிச் செல்கிறார். அதற்கு தன் வாசிப்பையும் உள்ளுணர்வையும் சார்ந்திருக்கிறார். அவற்றுக்கிடையேயான மோதலால் பிளவுண்டு பின்னதன் பக்கமாகச் சாய்கிறார். இந்த ஊகங்களின் உடனடிப் பெறுமானம் என்ன?  அதாவது இன்றைய தத்துவ விவாதத்துக்கு இவற்றை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும்?

ஒன்று இவை நமது தத்துவக் கொள்கைகளின் சாராம்சமான மதிப்பு என்ன என்று நம்மை அறியத்தூண்டுகின்றன.இவை எழுப்பும் வினாக்கள் ஒரு சிந்திக்கும்மனதை பொறுத்தவரை மிக அரியவை.தமிழ் சூழலில் உள்ள சிந்தனைக்கான பயிற்சியின்மையே அப்படிப்பட்ட ஆழமான உசாவல் தளையசிங்கத்தை சார்ந்து உருவாகாமல் போகக் காரணம். இங்கு பெரும்பாலோர் அடிப்படை வினாக்களை எழுப்பிக் கொள்வதில்லை. தளைசிங்கத்தைப்பற்றி பொருட்படுத்தி எழுதப்பட்ட ஒரே கட்டுரையான சுந்தர ராமசாமியின் கட்டுரை அதன் செயற்கைஇறுக்கம் நிரம்பிய மொழிநடையை நீவிவிட்டுப் படித்தால் மிக எளிமையாக அவரை அன்றைய பொதுவான இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சியே என்பதைக் காணலாம்.

இரு வகையில் தளையசிங்கத்தின் ஊகங்கள் நம்மை தூண்டக்கூடும்.ஒன்று அவர் முன்வைக்கும் கருத்துச் சட்டகம் எழுப்பும் வினாக்கள் மூலம். இன்னொன்று அதன் விவாதப்போக்கில் சகஜமாக அது விட்டுவிட்டு போகும் உதிரிக் கருத்துக்கள் மூலம். உதாரணம் தரலாம். தளையசிங்கம் இலக்கியம் எதற்காக என்றால் பரவச விடுதலையை அளிக்கும் பொருட்டு என்கிறார். மனமைய சமூகத்தில் மேலும் ஆழமான அகங்களை காட்டுவதன்மூலம் இலக்கியம் அந்த பரவச நிலையை அளிக்கிறது. ஆழ்மனங்கள் மையப்படும் சமூகத்தில் எல்லா செயல்பாடுகளுமே அந்த பரவசநிலையை அளிப்பதானால் இன்றைய இலக்கியம் தன் மதிப்பை இழக்கும் என்கிறார். இந்த ஊகத்தின் சாத்தியக்கூறு என்ன என்பது வேறு கேள்வி. ஆனால் இது இலக்கியத்தின் அசல் பெறுமானம் என்ன என்ற வினாவை எழுப்புகிறது. மனிதமனம் அன்றாடவாழ்வில் அதிகமாக ஈடுபட்டு அதன்மூலம் அடைந்த உதாசீனம்தான் இலக்கியத்தின் தேவையை உருவாக்கியதா?

இக்கேள்வியை நாம் காலத்தில் முன்னும் பின்னும் நகர்த்திக் கொள்ளவேண்டும். பழங்குடிப் பாடல்களில்உள்ள படிமச் செறிவு நுண்ணுணர்வுள்ள சமகால வாசகனுக்கு பரவச அனுபவத்தை அளிக்கிறது. ஆனால் அப்பழங்குடி மக்களுக்கு அது ஒரு வகை யதார்த்தம் மட்டுமே. தன் மேல்மனம் விலகப்பெற்று அப்படிமத்தை தனக்குள் கண்டடைய நேரிட்டதே இவனுக்கு பரவசத்தை அளிக்கிறது. அவனுக்கு அது ஒரு சுய தரிசனம். ஆனால் அம்மக்கள் அதில் சகஜமாக வாழ்கின்றனர். அதில் அவர்களுக்கு பரவசம் இல்லை. அவர்கள் மறக்காததானால் கண்டடைவதன் உவகை அவர்களுக்கு இல்லை. தளையசிங்கம் சொல்வதுபோல அன்றாட வாழ்வில், தொழிலில்தான் அவர்களுக்கு பரவசம் இருக்கிறது.

காலத்தில் இதை முன்னகரச் செய்வோம். நினைவில் வைத்திருத்தல், கணித்தல், பகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களை இப்போதே கணிப்பொறிகள் செய்ய ஆரம்பித்துள்ளன. நாளை கணிப்பொறி மொழியறிவு பெற்று மனித மூளையின் நியூரான்களுடன் நேரடியாக இணைக்கவும்பெற்றால் மனத்தின் அன்றாடச் செயல்கள் என நாம் இன்று நினைப்பவற்றில் இருந்து மூளை விடுதலை பெற்றுவிடும். கற்பனை, உள்ளுணர்வுப்பயணம் ஆகியவற்றை மட்டுமே மனிதன் செய்யவேண்டியிருக்கும். அப்போது அவனது மன இயக்கம் பெரிதும் குறைந்து ஆழ்மன இயக்கம் தீவிரமடையலாம். இது சாத்தியமாகக் கூடியதுதான். இந்த நூறு வருடங்களில் உலகம் முழுக்க கல்வியறிவு தரப்படுத்தப்ப்பட்டு பரப்பப் படுவதனால் மூளை உழைப்பாளர்கள் பெருகி வருகிறார்கள். மொத்த உலகும் மூளை உழைப்புக்கும், பின்பு ஆழ்மனம் சார்ந்த உழைப்புக்கும் திரும்பிவிடலாம். அப்படிப்பட்ட சமூகத்தில் இலக்கியம் என்ன அனுபவத்தை அளிக்க முடியும்? காரணம் அவர்களுக்கு இலக்கியம் தரும் அறிதலின் பரவசத்தை அவர்களுடைய அன்றாட வேலையே அளிக்குமே. ஏன், இப்போதே அறிவியலின் தளங்களில் உள்ள ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இலக்கியம் தேவையில்லை என்று சொல்கிறார்கள். என் நினைவு சரியென்றால் இலக்கியவாதியான ப்ரைமோ லெவி அப்படிச் சொல்லியிருக்கிறார்.

இலக்கியத்திலிருந்து அதன் ஒவ்வொரு பணியாக கழன்று விழுந்தபடியே இருப்பதை இலக்கிய வரலாற்றைக் கவனித்தால் அறியலாம். ஒரு வீரகதைப்பாடல் வரலாறு, தகவல் கைமாற்றம், நீதி போதனை, விழுமியங்களின் வினியோகம் என மொழியின் எல்லா பணியையும் ஆற்றியது. மெல்ல தகவல் தொடர்புக்கு மொழியின் வேறு வடிவங்கள் உருவாயின.பிறகு நீதிபிரிந்தது. பிறகு வரலாறு. கடைசியாக இலக்கியத்தின் ஆவணமதிப்பு முற்றாக ரத்தானது. இப்போது இலக்கியம் வெறுமே அகமனதை எழுப்பிக்காட்டும் பணியை மட்டும் ஆற்றுவதாக மாறிக் கொண்டிருக்கிறது. நாளை இதையும் அது இழக்குமானால் அதன் பெறுமானம்தான் என்ன?

இது குறித்து விவாதிக்க வேறு சந்தர்ப்பம் தேவை. ஆனால் தளையசிங்கம் எப்படி ஒரு பிரச்சினையை அதன் விளிம்பு நோக்கி இழுத்துச்செல்லுவதன் மூலம் அதன் அடிப்படி என்ன என்று வினவச்செய்கிறார் என்று காட்டவே இக்கேள்வி இங்கு விவாதிக்கப்பட்டது. விளிம்புநிலையில் சஞ்சரிக்கும் சிந்தனையாளர்கள் மட்டுமே இப்படி அடிப்படைகளை உலுக்கும் வினாக்களை உருவாக்கமுடியும். மிகச்சிறந்த உதாரணம் நீட்சேதான்.

சிந்தனையின் பொறிகள்

அடுத்த உதாரணம் போகிறபோக்கில் வரும் ஒரு கருத்து எப்படி நம்மை யோசிக்க வைக்கும் என்பதற்கு. மெய்யுளில் இலக்கியம் குறித்து பேசிப்போகும் தளையசிங்கம்[நல்லசிவம்] எப்போதுமே கலையிலக்கியங்கள் அசலான பரவச அனுபவத்தை அளிப்பதில்லை என்கிறார். ஒரு காலகட்டத்து தொழில்,சமயம், தத்துவம் ஆகியவை அளித்த பரவச அனுபவத்தை கலையிலக்கியங்கள் பிரதி செய்கின்றன, நினைவூட்டுகின்றன. அதன்மூலமே அவை தங்கள் பரவச அனுபவத்தை அளிக்கின்றன என்கிறார். யோசித்துப் பார்க்கும் போது பலவகையான பிரச்சினகளை நம் சிந்தனையில் உருவாக்கியபடியே இருக்கும் கருத்து இது. இலக்கியம் நமக்கு அளிக்கும் ஒரு பரவச நிலையை எடுத்து ஆய்வு செய்தால் அது ஒரு நினைவூட்டல் என்பதை காணமுடியும். இயற்கையை காணும் அனுபவம், பெண்ணின் அழகு, வாழ்க்கையின் ஒரு தருணம் எல்லாமே இலக்கியத்தால் கடன்வ ‘ங்கப்பட்டவை, பிரதியெடுக்கப்பட்டவை மட்டுமே.

அப்படியானால் இலக்கியம் தத்துவத்தின் சமயத்தின் ஒரு தாதிமட்டும்தானா?  பரிமாறப்படும் தட்டு மட்டுமா?  அப்படிச் சொல்ல முடியாது. இலக்கியம் தரும் ஆழ்ந்த பரவசநிலையை அந்த அசல் அனுபவம் பலசமயம் தருவது இல்லை. மேலும் இலக்கியம் ஒருபோதும் நேரடியாக பிரதியெடுப்பது இல்லை. அது மாற்றியமைக்கிறது. அந்த இலக்கிய அனுபவமே ஒருவேளை அம்மாற்றம் மூலம் விளைவதாக இருக்கலாம். அப்படியானால் அனுபவத்தில் உள்ளுறைந்துள்ள பரவச அம்சத்தை அடையளம்காட்ட முயல்கிறதா இலக்கியம்?  அல்லது அனுபவங்களை கற்பனை மூலம் பரவசமூட்டும் மெய்மையனுபவங்களாக மாற்ற முயல்கிறதா?  இவ்வாறு இக்கேள்வியை பின்தொடர்ந்து வெகுதூரம் போகமுடியும். தளையசிங்கத்தின் முக்கியத்துவமே அவர் தன் ஆய்வுப்போக்கில் நமது அடிப்படைகளை மாற்றிப்போடும் வரிகளை தொடர்ந்துமுன்வைத்தபடி போகிறார் என்பதே.

ஒருங்கிணைந்த அறிதல் அல்லது முழுமையறிவு

கடந்த பல வருடங்களாக உலக அறிவுத்துறையை தழுவி எழுந்துவரும் பிரச்சினை ஒன்று உண்டு.மானுட அறிவுகளுக்கும் அறிதல்முறைகளுக்கும் பொதுவான ஓர் அளவுகோல என்ன என்பதே அது. அமீபா போல இன்று அறிவுத்துறைகள் பிளந்து பிளந்து வளர்கின்றன. ஒவ்வொன்றும் தனக்குரிய மெய்காண்முறையையையும் நிரூபணமுறையையும் வளர்த்து வருகின்றன.ஒன்றின் உண்மை பிறிதில் செல்லுபடியாகாது என்ற நிலை உருவாகி வருகிறது. மிக நெருக்கமான, ஒன்றிலிருந்துஒன்றென பிறந்த துறைகளில் கூட அப்படித்தான். பெரும்பாலான சமயங்களில் அறவியல்[ethics] ஒழுக்கவியல் [m orality] சட்டம் [law] ஆகியவற்றுக்கிடையே கூட பெரும் வித்தியாசம் உள்ளது. உளவியலும் நரம்பியலும் அல்லது மானுடவியலும் சமூகவியலும் போன்ற இரட்டைத் துறைகளுக்கிடையே ஒத்திசைவு இல்லை. நிரந்தரமான பயன் தரக்கூடிய உண்மை அனைத்து தளங்களுக்கும்பொதுவானத ‘கவே இருக்க முடியும். இன்றைய சூழலில் புறவயமாக அப்படி ஒரு பொது உண்மையை கட்டமைக்கும் தளத்தை உருவாக்கிவிட முடியாது.அது அகவயமானதாக மடுமே இருக்க முடியும்.அகவயமான கருதுகோள்கள் சமூக முழுமையால் ஏற்கப்படுதல் என்ற நிலை மெய்யியல்மூலமே சாத்தியமாகும். ஏதாவது ஓர் அடிப்படையின்ல் சாரம்சப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்ட ஒருமித்த அறிவு என்பதற்கான தேடல் இன்று உள்ளது.

மொழியியல் அவ்வாறு ஒரு பொதுத்தளமாக செயல்படுவதற்கான அடிப்படைகளை உருவாக்கியது. குறிப்பாக விட்ஜென்ஸ்டானின் சிந்தனைகளை இதற்கான துவக்கப்புள்ளியாக சொல்லவேண்டும். மொத்த மானுட ஞானமும் மொழியே என்றும் எல்லாவகை அறிதல்களையும் கோட்பாடுகளையும் கூறுதல்/எடுத்துரைத்தல் [narration]பொதுமைப்படுத்தி அவற்றின் உபயோக மதிப்பின் அடிப்படையில் அளவிடலாம் என மொழியியல் கூறியது. இதற்கு இணையாக அறிவியல் சூத்திரங்களையெல்லாம் சொல்ல செயற்கை மொழிகளை உருவாக்குதல், கணிப்பொறியின் செயலிகளையும் அதில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகிய தளங்களில் அதீத உற்சாகம் ஏற்பட்டு சீக்கிரமே வடிந்தது. பிரச்சினை கணித வாய்ப்பாடுகளை தொகுத்துமதிப்பிடும் கார்ட்டாசியன் தேற்றம் போலவோ, தேற்றவிதிகளை தொகுத்து மதிப்பிடும் ராம்சே கோட்பாடு போலவோ ஒன்றை உருவாக்குவதல்ல என்று தெளிவாயிற்று. பிரச்சினை ஏன் எதற்கு எதனடிப்படையில் தொகுக்கவேண்டும், பயன் என்றால் என்ன என்பதை வகுத்துக் கொள்வதே என புரிந்துகொள்ளப்பட்டது. ஆகவே மெய்யியல் முதன்மைப்பட்டது.

இத்தளத்தைசேர்ந்த பல கட்டுரைகளை சொல் புதிது தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இவற்றில் முன்னேண்டியான கட்டுரை, தளைசிங்கத்தின் மொத்த எழுத்துக்களுடன் சேர்த்து பயிலவேண்டிய கட்டுரை ; நடராஜ குரு எழுதிய அறிவியலைபாட முடியுமா என்ற கட்டுரையாகும். நடராஜ குருவின் மெய்யறிவு [wisdom]  என்ற நூலில் இவ்விஷயம் குறித்து விரிவாக பல கட்டுரைகளில் விவாதிகிறார் அவர். சார்போன் பல்கலையில் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவ ஆய்வு செய்தபோதே இந்த விஷயம் அவரை பின்தொடர்ந்திருந்தது என்றாலும் நடராஜகுரு நாராயணகுருடமிருந்து இந்திய தத்துவ மரபை அறிந்துகொண்டபிறகே இந்நூலுக்கான அடிப்படைகளை அறிந்தார். மெய்யியலின் கனிந்த நிலையில் கவிதைக்கும் அறிவியல் கோட்பாட்டுக்கும் இடையே வேறுபாடு ஏதுமில்லை என நடராஜகுரு கண்டடைந்தார். பிரபஞ்சம் தழுவிய ஓர் மனவிரிவாக அதை தன் நூலில் அவர் அறிமுகம் செய்கிறார். சொல்புதிது 9 இதழில் நீலகண்டன் அரவிந்தன் இதுசார்ந்த இன்றைய விவாத தளம் குறித்து ‘அறிவியலின் மெய்யியல் அடிப்படை ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.

1959 ல் இச்சிந்தனையின் முன்னோடியான சி. பி.ஸ்நோ தன் கருத்தை முதன்முதலாக முன்வைத்தார் என்றாலும் இவ்விவாதம் பொருள் பெற்றது எழுபதுகளுக்கு பின்புதான் என்று காணலாம். தளையசிங்கம் இவ்விவாதத் தளம் குறித்து எத்தனை தூரம் அறிந்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது மனம் சமானமாக நகர்ந்திருப்பது வியப்பு தருகிறது. இத்தளத்தில் இன்று வெளிவரும் பல கட்டுரைகளின் வரிகளை சிறிய மாற்றங்களுக்கு பிறகு தளையசிங்கத்தின் வரிகளாக மாற்றிவிடலாம் ஃப்ரிஜோ காப்ராவின் உயிர்வலை[ Web of life] என்ற நூலை தளையசிங்கத்தின் வரிகளுக்கான அறிவியல் அடிப்படையாக முன்வைத்து பேசமுடியும். ஆல்பர்ட் ஐன்ஸ்டான்பிரபஞ்சம் தழுவிய சமய உணர்வு என்று கூறுவதையே ஏறத்தாழ அதே சொற்களில் தளைய சிங்கம் குறிப்பிடுவதைக்காணலாம்.இனி அறிவல்ல அறிவுகளை இணைக்கும் மெய்யறிவே வாழ்க்கையை தீர்மானிக்கமுடியுமென தளையசிங்கம் கூறுகிறார். தளையசிங்கத்தின் தரிசனங்களில் முதன்மையானது ஒருங்கிணைந்த அறிதல்முறை அல்லது உண்மைக்கான அவரது தேடலேயாகும். அதை சமகால சிந்தனைகள் பலவற்றுடன் இணைத்து வாசிக்க முடியும்.

தத்துவத்தின் உறைநிலையும் புதியசவால்களும்

தளையசிங்கத்தின் தரிசனங்களின் முக்கியமான இரண்டாவது அம்சம் அவர் இன்றைய கருத்தியல் உறைநிலையை மிகத்தெளிவாக முன்கூட்டியே கண்டார் என்பதுதான். இதுகுறித்த அகவயமான தரிசனங்களை மேற்கிலும் பலர் முன்வைத்தது உண்டு. மேற்கத்திய தத்துவ சிந்தனை இருகூறான நிலையை [ dichotomy] அடிப்படையான மெய்யியல் விதியாக வகுத்துக் கொண்டு, அதன் நீட்சியாக முரணியக்க இயங்கியலை [dialectics] தனது பிரபஞ்ச புரிதலாக அனைத்து துறைகளுக்கும் பொருத்திபர் த்துக் கொண்டிருந்தது. சார்பியல் தத்துவத்தின் வருகை உயர் பெளதிகத்தில் இருகூறான நிலைக்கு இடமில்லை என்று ஆக்கியது. தொடர்ந்து பலதளங்களிலும் இருகூறுகளும் முட்டி நின்று ஒரு சமநிலை / உறைவுநிலை ஏற்படுமென பல த்த்துவசிந்தனையாளர் கணித்திருந்தார்கள். அதை மிகச்சரியாக ஊகம் செய்யும் தளைய சிங்கம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான காரணமாக அதை பலமுறை சொல்கிறார்.

சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு நாம் இந்த உறைநிலையை ஒரு கண்கூடான உண்மையாக காண்கிறோம். இன்று தமிழ் சூழல் உட்பட எங்குமுள்ள பலவகையான கருத்தியல் தள்ளாட்டங்களுக்கு அடிப்படைக் காரணம் தெள்ளத்தெளிவான இரு எல்லைகளாக வகுக்கப்பட்டிருந்த இரு தரப்புகளும் வலுவிழந்துவிட்டமையே. புதிதாக இரு எல்லைகளை வகுத்த முயல்பவர்கள் ஒரு பக்கம். ஆனால் இப்படி எல்லைகளை வகுத்துக் கொண்டு மோதல்சமரசம் மோதல் என உலக இயக்கத்தை புரிந்துகொள்ள முயல்வது எத்தனைதூரம் சரி என்ற வினா எல்லா துறைகளிலும் எழ ஆரம்பித்துள்ளது.

இருபது வருடம் முன்பே இந்தத் தருணத்தை தளையசிங்கம் ஊகித்து விட்டிருக்கிறார் என்பது அவர் சஞ்சரித்த விளிம்புநிலையை வைத்துப் பார்க்கும்போது வியப்பு தருவது அல்ல. சோவியத் முகாமும் அமெரிக்க முகாமும் சமவல்லமை பெற்று மோதலின் உச்ச நிலையில் அசைவற்று உறைந்து விட்டன, இனிமேல் வளர்ச்சி இல்லை, ஏதாவது ஒரு தரப்பு வெல்வதும் இல்லை, அழிவுதான் என்று தளையசிங்கம் சொல்கிறார் [அதில் முதலாளித்துவத் தரப்பின் தோல்வியைப்பற்றி அவருக்கு அத்தனை திடம் இல்லை போலும்.ஆனால் சோவியத் ரஷ்யா அழியும் என உறுதியாகவே சொல்கிறார். தனிமனித மனத்தின் செயல்பாடுகளையோ, கலாச்சார அரசியல்போக்குகளின் சுதந்திரமான நகர்வையோ கணக்கில் கொள்ளாமல் ஒருங்கிணைக்கப்பட்ட மையம் சார்ந்த இய்க்கமே அதற்குக் காரணம் என்கிறார்]  முதலாளித்துவ அமைப்பு சோஷலிச அடிப்படைகளை ஏற்றும் கம்யூனிஸ அமைப்பு சந்தைவிதிகளை ஏற்றும் சமரசமாவதன் வழியாக இரண்டும் ஒரே போல ஆகி இந்த உறைநிலை ஏற்படுகிறது. [அமெரிக்கா சீனா இன்றைய சிறந்த உதாரணம்]  அதாவது முடிவின்றி மோதி முன்னகரும் சித்தாந்தம் பொய்யாகிறது. இதுவே புதியவினாக்களை எழுப்புகிறது.

இந்த உறைநிலையிலிருந்து முன்னகர தளையசிங்கம் தனக்கேயுரிய பல கருத்துநிலைகளை முன்வைக்கிறார். அதை அவர் ‘அத்வைத நிலை ‘ என்று சில இடங்களில் குறிப்பிடுகிறார். தமிழ் சூழலில் இது குறித்து சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பண்டைய இந்திய கருதுகோள்கள் அனைத்துமே இந்துமதம் சார்ந்தவை, அவையெல்லாமே பிராமணர்களால் உருவாக்கப்பட்டவை, ஆகவே தெரிந்துகொள்ள முயலாமலே முற்றாக எதிர்க்கப்பட வேண்டியவை என்ற மடத்தனமான எண்ணம் இங்கு வேரூன்றச் செய்யப்பட்டுள்ளது. அத்வைதம் என்ற சொல்லை உடனே சங்கரமடம் வரை கொண்டு செல்லவேண்டியதில்லை. ஒன்று மரபான அத்வைதம் மதச் சார்புகள் இல்லாத ஒது தூய தத்துவ நிலைபாடு மட்டுமே. இரண்டு தளையசிங்கம் பேசுவது கறாரான சங்கர அத்வைதமும் அல்ல. இரண்டின்மை என்ற கருத்தையே அவர் அச்சொல்லால் குறிப்பிடுகிறார் எனலாம் இரண்டின்மை என்ற கருத்தக்கத்தை தொடர்ந்து பலதளங்களுக்கு அவர் எடுத்துச் செல்கிறார்.

தளையசிங்கம் சொல்வதை ஏறத்தாழ இப்படி விளக்கலாம். மனிதமனம் அதன் ஆரம்பக்கத்திலேயே அகவிழிப்புநிலையை அடைந்துவிட்டது. அந்நிலையில் அது முழுமையான, காலம்சாராத பேருண்மையை அறிந்தும்விட்டது. அது முன்வைக்கப்பட்ட படிமங்கள், மொழி ஆகியவை பிறரால் தங்கள் அதிகார நோக்கத்துக்காக நிறுவனமாக்க பட்ட் போது மதங்கள் உருவாயின. நமது நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவன அதிகாரத்தின் மூலமாக சீரழிந்து, தனது சாரம்சமான பேருண்மைகளை மறைத்துக்கொண்டு இயங்கும் மதங்களையே நாம் கண்டோம். ஆய்வறிவு அதற்கு எதிராக முளைத்து வளர்ந்தது. அது தனித்த அறிவுத்துறைகளாக பிரிந்து இயங்கி தன் வளர்ச்சிநிலையில் இப்போது மதங்கள் சொன்ன அதே பேருண்மையின் வாசலை சென்று தட்டிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இதுகாறும் இருந்துவந்த ஆய்வறிவுX உள்ளுணர்வு போன்ற இருமைகள் இனி இல்லாமலாகும். எல்லா அறிதல்முறைகளும் மையமான மெய்யறிவின் அடிப்படையில் தொகுக்கப்படும்.விளைவாக அறிவியலின் யுகம் மெய்யியலின் யுகமாக வளர்ச்சி பெறும். அந்நிலையில் எல்லா மனங்களும் பேருண்மையை சாதரணமாக ஏற்கும்காலம் வரும். அதுவரை சமயம்சார்ந்த பேருண்மைகள் உறைந்தே கிடக்கும் என்கிறார் தளையசிங்கம்.

மார்க்ஸியமும் மெய்யியலும்

இங்கு தளைய சிங்கம் மார்க்ஸியம் குறித்து சொல்லும் ஒரு கருத்து முக்கியமாக சிந்திக்கத்தக்கது. மார்க்ஸியம் சென்ற காலகட்டத்தின் அழிவை நிகழ்த்தும் ஒரு சித்தாந்தமே ஒழிய புதிய காலகட்டத்தை ஆக்கும் சித்தாந்தமல்ல என்கிறார் அவர். சென்ற காலட்டத்தின் சிந்தனை முறையிலேயே முளைத்தெழுந்து அதற்குள்ளேயே செயல்படுவது அது. கடந்த யுகங்கள் ஜடசக்தியை நம்புவை, மார்க்ஸியமும் அந்நம்பிக்கையை கொண்டது. சென்ற காலகட்டம் மனதை மையமாக கொண்டது, மார்க்ஸியமும் அப்படித்தான்.ஆழ்மனத்தளங்களை அது கருத்தில் கொள்ளவில்லை என்கிறார். சென்ற காலகட்டத்தின் முரண்பாடுகளை வெளிப்படுத்தி அதை செயலற்றதாக ஆக்குவது மட்டுமே மார்க்ஸியத்தின் வரலாற்றுக் கடமை என்கிறார் தளையசிங்கம்.

தமிழ்ச்சூழலில் தளையசிங்கத்தைப் புரிந்துகொள்ளத் தடையாக இருப்பது அவர் அடிக்கடிச் சொல்லும் சமயஞானம் என்ற சொல்லாகும். ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல மரபார்ந்த எல்லாமே பிற்போக்கானவை என்று கற்பிக்கப்பட்டு வளர்ந்த எளிய தமிழ் வாசகனுக்கு இது அளிக்கும் அவநம்பிக்கை சாதாரணமல்ல. [நான் இதன் பொருட்டே ஆன்மீகம் என்ற சொல்லை பயன்படுத்துகிறேன்.அதை ஒவ்வொரு முறையும் மதம் சார்ந்த பொருளில் அல்ல என்று குறிப்பிடவும் செய்வேன். எனினும் எளிய வாசகர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களுள் உள்ள சில பாமர மனங்கள் கூட அதை சாமி கும்பிடுதல் என்றே புரிந்துகொள்கின்றன] தளையசிங்கம் சமயஞானத்தின் சாரமாக உள்ள பிரபஞ்ச அனுபவத்தையே இங்கு குறிப்பிடுகிறார், அதை விளக்கியும் சொல்கிறார். ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல இந்திய மரபுசார்ந்த கருதுகோள்களை நவீனச்சூழலில் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் இது.

பேருண்மையை நோக்கி எல்லா மனிதர்களும் செல்லும் நிலையை அறிவியல் உருவாக்கிவிடும் என தளைய சிங்கம் கூறுவதை புரிந்துகொள்ள இன்றுள்ள பல அறிவியல்புனைவுக் கதைகளை படிப்பது உதவியானதாக இருக்கக் கூடும்.காலம், வெளி, நான்குபரிமாணப்பிரபஞ்சம் போன்ற கருத்துக்கள் எத்தனை எளிதாக சமூகப்புழக்கத்துக்கு வந்துவிட்டன என்ற வியப்பு அப்போது நமக்கு ஏற்படும். மிகப்பிரபலமான பரபரப்பு நாவலான இழக்கப்பட்டஊ லகம் [The Lost World. Michael Crychton]  போன்ற நாவல்கூட பெருஞ்சிக்கல் சித்தாந்தத்தை, கருத்துருவமாக நாம் உருவாக்க்கும் தோற்றத்தில் வெளிப்பிரபஞ்சம் வந்து பொருந்திக் கொள்ளும் விந்தையை, அறிவியல் ஊகங்கள் மனிதனின் கற்பனையை எல்லையாகக் கொண்டிருப்பதை எளிதாகக் காட்டிவிடுவதைக்காணலாம். உயர்கல்வி சமூகத்தில் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும் போது தளையசிங்கம் சொல்லும் நிலை ஏற்படக் கூடும். இன்றைய அறிவியல்ப் புனைகதைகளில் சாதாரணமாகவே அப்படிப்பட்ட ஒரு சமூகம் கற்பனை செய்யப்பட்டுவிட்டது.

இலக்கியமும் மெய்யியலும்

மூன்றாவதாக தளையசிங்கம் இலக்கியவடிவங்களில் மாற்றம் தேவை என சொல்லும் இடத்தை கவனிக்க வேண்டும். இரண்டின்மை என்ற அவரது கருத்துநிலையின் நீட்சியேஇது. அறிவுத்தளம், உணர்வுத்தளம், உள்ளுணர்வு [அல்லது தர்க்கம், கற்பனை, தியானம்] என மூன்றாக பிரித்து மன இயக்கத்தை அறிவதை அவர் நிராகரிக்கிறார். அப் பிரிவினை இல்லாமாலாகும்போது உருவாகும் ஓர் இலக்கியப்படைப்பு வடிவத்தை அவர் கற்பிதம் செய்கிறார். அவ்வடிவம் இன்றுள்ள எல்லா வடிவங்களையும் ரத்து செய்துவிடும் என நம்புகிறார். அவர் தன் கருத்துக்களை முன்வைத்த காலகட்டத்தில் அது அர்த்தமற்ற வெறும் பேச்சாகவே இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே. மேலும் தளையசிங்கம் எழுதிக்காட்டிய வடிவமான கலைஞனின் தாகம் படைபெழுச்சியுடன் வரவுமில்லை. ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் இலக்க்ய வடிவம் குறித்து எழுந்த பேச்சுகள் பலவகையிலும் தளைய சிங்கத்தின் குரலுடன் ஒத்துப்போவதைக் கணலாம்

ஒன்று இலக்கியப்படைப்பு மற்ற அறிவுத்துறைகளின் செயல்பாடுகளையும் மொழியயையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென்பது இப்போது மிக விரிவாகவே பேசப்படுகிறது. இலக்கியவடிவம் தூய கற்பனையைச் சார்ந்து இயங்கவேண்டுமென்ற எண்ணம் இப்போது ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும். அறிவியல் தேற்றங்கள், வரலாற்றுத் தரவுகளின் ஒழுங்கமைப்புமுறை, கணிதமொழி எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக இன்றைய இலக்கியவடிவங்கள் உள்ளன.தீவிரமான அறிவார்ந்த உழைப்பு இல்லாமல் இன்றைய படைப்புகளை வாசிப்பதுகூட சாத்தியமில்லாமல் உள்ளது. அதேப்போல இலக்கியம் மெய்யியலின் எல்லைக்குள் புகுந்து சுயமான கட்டமைப்புகளை உருவாக்குவதும் இன்றைய போக்காக உள்ளது. தளையசிங்கம்இதன் பொருட்டே அவரது இலக்கியவடிவத்தை உள்ளுணர்வின் கவித்துவ வெளிப்பாடு, அறிவார்ந்த விவாதம், மற்றும் கற்பனையின் வீச்சு ஆகியவை சம அளவில் கலந்து வருவதாக அமைத்துள்ளார். அதேசமயம் யாதார்த்தப் பிரதிபலிப்பு, சித்தரிப்பு போன்றவற்றை அவர் முற்றக நிராகரித்துவிட்டிருக்கிறார்.

தன் இலக்கிய வடிவில் தளையசிங்கம் விவாத அம்சத்தை பெரிதும் வலியுறுத்துகிறார் என்பதைக் காணலாம். அது எழுத்தாளனை மையம் கொண்ட படைப்பாக இல்லை. எழுத்தாளன் உருவாக்கும் யாதார்த்தத்தை முன்வைப்பதாகவும் இல்லை. எழுத்தாளனின் யதார்த்தத்திலிருந்து திமிறி மீறி வேறு ஒரு யதார்த்தம் புறப்பட்டு தன்னை நிறுவும் களமாக அது உள்ளது. இந்த பன்மைப்பார்வையே அதன் சிறப்பியல்பாகும். அது புனைவையும் சேர்த்தே புனைந்து காட்டும் பிரதியாக உள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் தளைய சிங்கம் காட்டும் வடிவம் ஒரு பின் நவீனத்துவ நாவலுக்கு மிக அருகே உள்ளது என்பது வியப்பூட்டுகிறது. கலைஞனின் தாகத்தின் குறுக்கு வெட்டுகள் மூலம் சிதறுண்ட கூறுமுறை இன்று பிரேம் ரமேஷ், எம் ஜி சுரேஷ், தமிழவன் எழுதும் நாவல்களின் வடிவங்களுடன் கணிசமாக ஒத்துப் போகிறது. இவற்றின் முன்னோடி வடிவங்களான உம்பர்ட்டோ எக்கோ, ஜான் பார்த், பிரைமோலெவி ஆகியோரின் நாவல்களையும் இதனுடன் நாம் ஒத்துப்பார்க்க முடிகிறது. அதே சமயம் இவ்வடிவத்தில் நமது காவிய, புராண, நாட்டார்கதைமரபுகளின் சாயல் சிறிதும் இல்லாமலிருப்பது என் பார்வையில் குறையாகவும் படுகிறது. அவை இணையும்போதுமெய்யுளின் வடிவம் இப்போதிருப்பது போல அந்தரத்தில் நிற்பதாக இருந்திருக்காது, மேலும் ஆழமாக நம்மை பாதிப்பதாக இருந்திருக்கும் என்று படுகிறது.

தளையசிங்கத்தின் முக்கியத்துவம் இவ்வாறு அவர் காலத்தில் வெகுவாக முன்னால் நடந்தமையில்தான் உள்ளது. அவரது ஊகங்களின் உடனடிப் பயன்பாடு நாம் கொண்டுள்ள கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளின் சாரமென்ன, நீண்டகால விளைவென்ன, அவற்றை வரலாற்று ஓட்டத்தில் எங்கு எப்படி பொருத்திக் கொள்வது என்று நம்மை அவை யோசிக்கச் செய்கின்றன என்பதே. உடனடி விளைவுகள் மற்றும் எதிர்வினைகளை தவிர்த்துதான் நாம் இந்த கோணத்தில் யோசிக்கமுடியும். அதற்கான உந்துதலை எப்போதுமே விளிம்புநிலையில் சஞ்சரிக்கும் படைப்பாளிகளே அளிக்கின்றனர். அத்தகைய படைப்பாளிகள் காலம்தோறும் மீண்டும் மீண்டும் கண்டடையப்படுகின்றனர். தமிழில் அவ்வகையில் சொல்லப்பட வேண்டிய ஒரே சிந்தனையாளார் மு தளையசிங்கம் மட்டுமே.

***

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 2

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 3

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 1

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 2

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 3

முந்தைய கட்டுரைமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 2
அடுத்த கட்டுரைமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – தொகுப்பு