இரண்டு கணவர்கள்

pupi

சீதையும் ராமனும் காட்டில் தங்கியிருக்கும் அகலிகையைப்பார்க்க செல்கிறார்கள். சீதை அரசியாக பொலிவுடன் இருக்கிறாள். ராமனின் நெற்றியில் அனுபவ ரேகை படிந்திருக்கிறது. ராமனும் கௌதமனும் வெளியே செல்ல அகலிகை சீதையிடம் தனியாகப்பேசுகிறாள்.

கௌதம முனிவரின் மனைவியாக காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த அகலிகை தன் கணவனின் நிழலாக அவனுக்குப் பணிவிடை புரிந்து பிறிதொரு நினைப்பே இல்லாமல் வாழ்ந்தாள். பேரழகியான அவளைக் கண்டு காதல் கொண்டான் இந்திரன். ஒவ்வொரு நாளும் கௌதமர் விடியற்காலையில் எழுந்து கங்கைக்குச் சென்று நீராடி பூஜைகளையும் தியானத்தையும் முடித்துவிட்டுத்தான் வருவார் என்பதைக் கண்டு கொள்கிறான்.

ஒருநாள் பின்னிரவில் விடிவெள்ளி எழுவதற்கு முன்னரே கௌதமரின் குடில் வாயிலில் வந்து நின்று ஒரு சேவலாக மாறி குரலெழுப்புகிறான். பொழுது விடிந்தது என்று எண்ணி கௌதமர் தன் ஆடையையும் பூசைக்கான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அகலிகையிடம் விடை பெற்று கங்கைக்குச் செல்கிறார். உடனே கௌதம முனிவரின் வேடம் தாங்கி அரையிருளில் குடிலுக்குள் நுழைந்தான் இந்திரன்.

”இன்னும் பொழுது விடியவில்லை” என்று சொல்லிவிட்டு அகலிகையை அணுகி அவளை அணைத்து உறவு கொண்டான். சற்று தூரம் சென்ற பின்னர் தான் உண்மையில் பொழுது விடியவில்லை ஏதோ தவறு நடந்துவிட்டது என்று உணர்ந்த கௌதம முனிவர் தன் குடிலுக்குத் திரும்பி வந்தார். அங்கு இந்திரனுடன் அவள் காமத்திலாடிக் கொண்டிருப்பதைக் கண்டு கடும் சினம் கொண்டு கங்கை நீரை எடுத்து இந்திரன் மேல் தெளித்து உன் உடலெங்கும் பெண்குறிகள் முளைக்கட்டும் என்றார். அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கோரியபோது அவை கண்களாக மாறட்டும் என்று மறுசொல் கொடுத்தார்.

திரும்பி தனக்குத் துரோகம் செய்த அகலிகையிடம் “நீ கல்லாக மாறுக!” என்று தீச்சொல்லிட்டார். அகலிகை கணவனின் காலடியில் விழுந்து அழுது பிழை பொறுக்குமாறு மன்றாடினாள். சற்று குளிர்ந்த கௌதமர் “ஆயிரம் ஆண்டுக்காலம் கழித்து ஓர் உத்தம கணவன் காலடி உன்மேல் படும்போது நீ பெண்ணென்று எழுவாய்” என்று மறுசொல்லளித்தார். ஒரு பாறையாக மாறி அந்தக் காட்டில் அகலிகை காத்திருந்தாள். அங்கு விஸ்வாமித்திரனுடன் ராமன் வந்தான்.

கணவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமானவன் ராமன், அப்போது அவன் சீதையை கண்டிருக்கவில்லை. அவன் கால் புழுதி அந்த பாறையில் பட்டதும் அகலிகை கைகூப்பியபடி எழுந்தாள். அதன் பிறகு அவள் கௌதமரிடம் சென்று கற்பு நீங்கா பெரும்பத்தினியாக அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனாலும் அவளை அத்தனைபேரும் அருவருப்புடன் மட்டுமே பார்த்தார்கள். அவள் தூய்மையடைந்தாள் என எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அகலிகையும் கௌதமனும் ஜனகனைப்பார்க்க அயோத்தி செல்கிறார்கள். அவர் சஞ்சலமற்ற மனம் கொண்டிருந்தாலும் சீதை காட்டுக்குச் சென்றிருந்த செய்தியை அறிந்து கௌதமர் மனம் கலங்குகிறார். அவர்கள் கங்கைகரையில் குடிலமைத்து தவம்செய்கிறார்கள். ராவணன் சிறை பிடித்துச் சென்ற சீதையை ராமன் போரிட்டு மீட்டுக் கொண்டு வந்ததும் அயோத்திக்குச் சென்று அரசனாக முடிசூடியதும் எல்லாம் கதைகளாக அவளுக்கு வந்து சேர்கின்றன.

அகலிகையிடம் சீதை அவள் அடைந்த கஷ்டங்களை எல்லாம் சொல்கிறார். அயோத்திக்கு வந்தபின் ஓர் எளிய துணி வெளுக்கும் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு ராமன் அவளை அக்னிப்பிரவேசம் செய்யச்சொன்னதைப்பற்றிக் குறிப்பிடுகிறாள். தன் குடிகளில் ஒருவர் கூட அவளை சந்தேகப்படக்கூடாது என்று ஓர் அரசனாக அவன் நினைத்தான். அரச தர்மத்தில் அவன் நிமிர்ந்தான். ஆனால் கணவனாக அவன் சரிந்தான்

அதைக்கேட்டு அகலிகை திடுக்கிடுகிறாள். “அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?” என்று கேட்டாள். “அவர் கேட்டார்; நான் செய்தேன்” என்றாள் சீதை, அமைதியாக. “அவன் கேட்டானா?” என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவ மாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா?

இருவரும் வெகு நேரம் மௌனமாக இருந்தனர். “உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை. “உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்றாள் அகலிகை. வார்த்தை வரண்டது. “நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும்; உலகம் எது?” என்றாள் அகலிகை.

அவர்கள் சென்றபின் கௌதமர் மனைவியைத் தழுவுகிறார். அவளுக்கு அவர் இந்திரன் மாறுவடிவில் வந்ததாகவே தோன்றுகிறார். அவள் மீண்டும் கல்லானாள். மனம் ஆறுதல் அடைந்தது. கௌதமன் அங்கிருந்து இமய மலை நோக்கி தன்னந்தனியாக நடந்து சென்றார்.

புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் என்ற இந்தக் கதை 1943-ல் வெளிவந்த போது அன்றைய தமிழ் பண்பாட்டின்மேல் பெரிய ஆதிக்கம் செலுத்தியிருந்த ராஜாஜி கடும் கோபத்துடன் “இவருக்கு இப்படியெல்லாம் எழுத யார் அதிகாரம் கொடுத்தது?” என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிகாரம் கொடுக்கப்படாத இடத்தில் துணிந்து பேசுவதுதான் எழுத்தாளனுடைய வேலை என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

Ahalya_rama

தமிழ் நவீன இலக்கியத்தில் பெண்ணின் இடத்தை மறுவரையறை செய்ய எழுந்த முக்கியமான குரல் இது என்று சொல்லலாம். அதற்கு முன்னரே புதுமைப்பெண்களைப்பற்றிய உருவகம், இலட்சியப்பெண்களைப்பற்றிய கனவு தமிழில் வேரூன்றியிருந்தது. ”நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகளும் கொண்ட” பெண்ணைப்பற்றி பாரதி எழுதியிருந்தார். ஆனால் புதுமைப்பித்தனுடையது அவர்களுடைய லட்சியவாதப் பார்வைக்கு நேர் எதிரான யதார்த்தப்பார்வை. மூவாயிரம் ஆண்டுகால மரபு பெண்களை எப்படி பார்த்துவந்தது, அவர்களை எப்படி அடக்கி ஆண்டது, அவர்களின் சிறகுகளை எப்படி வெட்டியது என்பது தான் புதுமைப்பித்தனின் கோணமாக இருந்தது.

புதுமைப்பித்தனின் இன்னொரு கதை செல்லம்மாள். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் வெளிவந்தது. கதை என்று பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. செல்லம்மாள் என்னும் நடுவயதுப்பெண்மணி சாகக்கிடக்கிறாள். திருநெல்வேலியின் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவள் செல்லம்மாள். கணவனின் கைபிடித்து சென்னைக்கு வந்தாள். பிரமநாயகம்பிள்ளை சென்னையிலே ஒரு சிறிய கடையில் எடுபிடி வேலை பார்த்தார். அவருடைய வாழ்க்கையில் உள்ள ஏற்றங்களெல்லாம் ஒரு பெரிய இறக்கத்தின் சிறு பகுதிகளே என்று புதுமைப்பித்தன் சொல்கிறார். வாய்க்கும் வயிற்றுக்கும் கட்டாத ஒரு வாழ்க்கை. ஒண்டுக் குடித்தனம், பிள்ளைகள் கிடையாது.

செல்லம்மாளின் எந்தக் கனவும் நிறைவேறவில்லை. உச்சகட்ட கனவென்பது திரும்ப திருநெல்வேலிக்குப்போய் சிறிதுகாலம் அங்கே மகிழ்ச்சியாக இருப்பது. ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. காசநோயுற்று மெலிந்து சாகக்கிடக்கிறாள். துணைக்கு யாருமில்லை. பிரமநாயகம் பிள்ளைதான் அவளுக்குப் பணிவிடைகள் செய்கிறார். சுக்கு நீர் வைத்துக்கொடுக்கிறார். சுர வேகத்தில் செல்லம்மால் “பாவி! பாவி! என் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டாயே” என்று புலம்புகிறாள். விழித்துக் கொண்டதும் கணவரிடம் “சாப்பிட்டீர்களா?” என்று அன்பாகப் பேசுகிறாள்.

“பாவி” என்று அவள் யாரைச் சொல்கிறாள் என்பது கதையில் தெளிவுற இல்லை. ஆனால் பிரம நாயகம் பிள்ளை அவளருகே அமர்ந்திருக்கிறபோது அவருடைய நிழல் கைநீண்டு அவளுடைய ஈரக்குலையை அள்ள இருப்பது போல் மேலே விழுந்திருந்தது என்றொரு வரி வருகிறது. இவ்விரு விவரிப்புகளையும் கூட்டிப்பார்த்து தன்னை அறியாமலேயே பிரமநாயகம் பிள்ளை செல்லம்மாளின் எமனாக விளங்கினாரென்று வாசிக்க முடிகிறது. செல்லம்மாள் சாகிறாள். பிரமநாயகம்பிள்ளை வெளியே வந்து முதலாளி அனுப்பிய தூதனிடம் “அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா” என்றார். சடலத்தின்மேல் ஈ அமராமல் விசிறிக்கொண்டே அமர்ந்திருந்தார்.

இரண்டு கணவர்கள். ராமன் மகாபுருஷன், லட்சியக்கணவன், ஆனால் அன்றிருந்த சமூக அறத்திற்கும் அரசியல் கட்டாயத்திற்கும் பணிந்து மனைவியை அக்னிபிரவேசம் செய்ய அனுப்பினான். பிரமநாயகம் பிள்ளை அப்பாவி ,கையாலாகாதவர். அன்புடையவர்தான், ஆனால் தன் மனைவியின் வாழ்க்கையை தன்னையறியாமலே அழித்தார். செல்லம்மாள் ஆச்சி வாழ்ந்தது ஒரு கருங்கல் சிறை. சன்னலோ வெளியேற வழியோ இல்லாத சிறை. அந்தக் கருங்கல் சுவரே அவர்தான். அவரை அறியாமலேயே அன்றைய சமூக வாழ்க்கை அவரை அப்படி ஆக்கியது.

செல்லம்மாள் கதை வேறொரு வகையில் அன்றிருந்த வாசகர்களிடம் அதிர்வை உருவாக்கியது. ராமன் லட்சிய புருஷன், அவனை எப்படி குறை சொல்லலாம் என்பது சாபவிமோசனம் பற்றி எழுந்த கேள்வி. பிரமநாயகம் பிள்ளையும்தானே துன்பப்படுகிறார்?அவரும்தானே சிறையில் அடைபட்ட வாழ்க்கை உடையவர்? அவரை எப்படி செல்லம்மாளின் எமனாக சொல்ல முடியும் என்ற கேள்வி செல்லம்மாள் பற்றி எழுந்தது.

பெண் சிறைப்பட்டிருக்கிறாள், அவள் வாழ்க்கை பிறரால் தீர்மானிக்கப்படுகிறது. பெண்ணைக் கொடுமைப்படுத்தும் ஆணாதிக்கப்பார்வை கொண்ட கொடூரமான ஆண்களை உருவாக்கி அவர்களால் பெண்கள் துயருறுவதைக் காட்டுவது ஒர் எளிய கதைசொல்லி செய்வது. பிரச்னையே அந்த ஆணின் கெட்ட குணம் தான் என்று சாதாரண வாசகர்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆகவே தான் புதுமைப்பித்தன் ராமனை எடுத்துக் கொள்கிறார். அல்லது அப்பாவியான அன்பான பிரமநாயகம்பிள்ளையை எடுத்துக்கொள்கிறார். ராமனே ஆனாலும் சீதைக்கு அரியணாஈ அனல்தான். அல்லது பிரமநாயகம் பிள்ளையைப்போன்ற பிள்ளைப்பூச்சியே ஆனாலும் வீடு பெண்ணின் சிறை தான் என்று சொல்கிறார்.

தமிழ் நவீன இலக்கியத்தின் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட இந்த இரு கதைகளும் பிறகு எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கதைகளுக்கான கால் திருத்தி அமைக்கும் முயற்சிகளாக அமைந்தன. இன்றும் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகள் என்று சிலவற்றை எடுக்கப்போனால் அவற்றில் இக்கதைகள் இடம் பெறுகின்றன. எத்தனை விளக்கினாலும் விவாதித்தாலும் முழுக்க புரிந்து கொள்ள முடியாத கடைசி வார்த்தை சொல்லிவிட முடியாத கேள்விகளாக இந்தக் கதைகள் நின்றிருக்கின்றன.

அகலிகை கதையை எவ்வாறு இந்தியப் புராண மரபு திருப்பித் திருப்பி சொல்லியிருக்கிறது என்பது மிகுந்த ஆச்சரியத்துக்குரியது. மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் வரும் அகலிகை இந்திரன் தன்னைத் தேடி வந்திருப்பதைத் தெரிந்து கொள்கிறாள். விண்ணின் அதிபதியாகிய இந்திரனே தன் அழகில் மயங்கித் தன்னைத் தேடி வந்தானே என்கிற திளைப்பில்தான் அவள் இந்திரனுடன் உறவு கொள்கிறாள். அதன்பின்புதான் அவளை ராமன் களங்கம் களைந்து பத்தினியாக மாற்றுகிறான்.

ஆனால் சில நூறாண்டுகளுக்குள்ளாகவே பார்வை மாறிவிட்டது. ராமனால் பத்தினியாகி களங்கம் களையப்பட வேண்டுமென்றால் அகலிகை மனதாலும் பிழை பட்டிருக்ககூடாது என்று ஒரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். ஆகவே கௌதமர்தான் வந்திருக்கிறார், அது இந்திரனென்று அவளுக்கு முற்றிலும் தெரியாது என்றும் அவள் தன் கணவனுடன் தான் மானசீகமாக உறவு கொண்டாள் என்றும் இந்திரன் அவள் உடலைத்தான் அடைந்தான் என்றும் கதை மாற்றப்பட்டது. புதுமைப்பித்தனின் கதையிலேயே “உள்ளத்தால் களங்கப்படாதவளை நீ மீட்பது சரிதான்” என்று விஸ்வாமித்திரர் சொல்கிறார்.

அப்படிப் பார்த்தால் மகாபாரத காலத்திலோ ராமாயண காலத்திலோ இருந்த பெண்ணுரிமையோ யதார்த்தப்புரிதலோ கூட இல்லாமல் இந்தியச் சமுதாயம் மேலும் மேலும் இறுகிக் கொண்டே போவதைத்தான் வரலாறு காட்டுகிறது. அந்தப்போக்கின் ஒர் உச்சத்தில் தான் சாப விமோசனம் என்ற கதை வெளிவருகிறது. அவள் தவறு செய்தாளா இல்லையா என்பது இன்னொரு கேள்வி அதை முடிவு செய்ய ராமன் யார் என்று புதுமைப்பித்தன் கேட்கிறார். பெண் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று வரையறை செய்வது எப்போதும் ஆணின் உரிமையாக ஏன் கொள்ளப்படுகிறது என்று கேட்கிறார்.

இலக்கியம் காலத்திற்கு முன்னால் செல்கிறது. சாபவிமோசனம் கதையை அதிர்ச்சியில்லாமல் படிக்கும் இடத்திற்கு புதுமைப்பித்தன் இறந்து ஐம்பது ஆண்டுகள் கழிந்தே தமிழ் சமுதாயம் வந்து சேர்ந்தது. ஆனால் இன்றும் கூட செல்லம்மாள் கதை தமிழர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கதைதான். மீண்டும் மீண்டும் பிரமநாயகம் பிள்ளையை எப்படி குறை சொல்ல முடியும் என்ற கேள்விதான் அந்தக் கதை வாசிக்கும் அனைவரிடமும் எழுந்து கொண்டிருக்கிறது. இன்று ராமனைக் குறைசொல்லிக்கொண்டிருக்கும் அத்தனை கணவர்களும் பிரமநாயகம்பிள்ளைகள்தான்

***

சாப விமோசனம் – புதுமைப்பித்தன்
செல்லம்மாள்

 

முந்தைய கட்டுரைசோர்பா கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைகீதை உரைநூல்கள்