இலட்சியக் காதலி -கடிதங்கள்

bharathiar1_thumb[21]

 

இலட்சியக்காதலியின் வருகை

 

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு

 

நலமாக இருக்கிறீர்களா? காலையில் இன்றைய பதிவுகள் படித்தவுடன் சொல்ல முடியாத சந்தோஷம். இடைவெளி விட்டதில் இருந்து மீண்டும் பதிவுகள் வந்தாலும் இன்றைக்குத்தான் பழைய ஆளாய் இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறன். வெண்முரசு ஒரே வேதாந்தம். அதில் கொஞ்சம் பரிச்சயம் உள்ளவர்களுக்கு நன்றாய் இருக்கும். என் போன்றவர்கள் கொஞ்சம் கடினமாய் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

“ஏர் என்றால் வயலுடன் தொடர்புபடுத்திதானே யோசிக்கிறோம்? அதேபோலத்தான்.”  படித்ததில் இருந்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

 

வாழ்த்துகளுடன்

டெய்சி பிரிஸ்பேன்

 

அன்பின் ஜெ,

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

பல சிறுகதைகளை உங்கள் தளத்தில் அறிமுகம் செய்கிறீர்கள்.எல்லாமே நன்றாக இருகுகின்றன.

 

பாரதியின் சிறுகதைகள் பற்றிய இலட்சிய காதலியின் வருகை”   மிகவும் நன்று.”பாரதியாரின் கதைகள் என்ற தொகுப்பினை நான்  சில ஆண்டுகளுக்கு முன் வாசித்துள்ளேன்.எனக்கு அப்பொழுது  அந்த நடையும்,கதைகளும் சாதாரணமாகவேத் தோன்றின.பாரதியின் கவிதைகள் போல கதைகள் இல்லை என்று நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

 

இப்பொழுது நீங்கள் எழுதிய பின் மீண்டும் வாசித்தேன்.அவற்றின் காலகட்டத்தை வைத்து பார்க்கையில் அக்கதைகளின் வலு புரிகிறது.அன்றைய இளைஞர்களின் இலட்சிய காதலியாக மீனாம்பாள் உருவாகி வந்திருக்கிறாள். மிக நல்ல அறிமுகம்.

 

 

 

நன்றி

மோனிகா மாறன்

 

அன்புள்ள ஜெ

 

பாரதியின் அந்த இலட்சியக் காதலி பிம்பம் ஆச்சரியமாக இருக்கிறது. அது ஒரு கனவு. அன்றைக்கிருந்த ஐரோப்பிய இலட்சியப்பெண் கதாபாத்திரங்களிலிருந்து அதை பெற்றிருக்கலாம். பியானோவுக்குப் பதில் வீணை. ஆனால் அந்த உருவகம் இங்கே இருந்திருக்கிறது. கலைமகள் என்றுதானே பாரதியும் சொல்கிறார்

 

ஆனால் அந்தப்பெண் கதாபாத்திரம் உண்மையில் உருவாகவே இல்லை என நினைக்கிறேன். காலந்தோறும் அது மாறிக்கொண்டே போகிறது. காணிநிலம்வேண்டும் பராசக்தி என்ற கவிதையை நினைத்துக்கொண்டேன். அதிலும் பத்தினிப்பெண் கேட்கிறார் பாரதி

 

ஆர். ரவிச்சந்திரன்.

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-32
அடுத்த கட்டுரைமுதல் நாவல் விவாதம்