என் அறைக்குச் செல்வது வரை நான் தன்னிலையிலேயே இல்லை. சகதேவன் என் விழிகளை நோக்கி அப்படி சொன்னதும் விதிர்த்து விழிவிலக்கினேன். கால்கள் நடுங்கத்தொடங்கின. சூழ நின்றவர்கள் என் உணர்வுகளை அறிந்துவிடக்கூடாதென்பதனால் அப்படியே திரும்பிக்கொண்டு உறுதியான சீரான அடிகளை எடுத்துவைத்து எதுவும் பேசாமல் நடந்தேன். இடைநாழியில் எப்படி அவனிடம் அச்சொற்களை பேசினேன் என வியந்துகொண்டேன். அவன் என்னை சிறுமைசெய்யும் எதையும் சொல்லமாட்டான் என அத்தனை நம்பியிருக்கிறேன்.
அறைக்குச் சென்று மஞ்சத்தில் அமர்ந்தேன். சேடி வந்து பணிந்து “இன்நீர் கொண்டுவரவா, அரசே?” என்றாள். என் தொண்டை விடாய்கொண்டு தவித்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். “ஆம்” என்றேன். குளிர்நீர் அருந்தியதும் மெல்ல மெல்ல தளர்ந்தேன். வியர்வை குளிர மீண்டு வந்தேன். அவன் ஏன் அப்படி சொன்னான் என்றே என் சித்தம் ஓடியது. அதை உண்மை என்றல்ல உணர்வு என்றே புரிந்துகொண்டேன். மீண்டும் மீண்டும் ஏன் ஏன் என்றே என் உள்ளம் எழுந்தது.
அருகே நின்று சாமரம் வீசிக்கொண்டிருந்த ஏவலனிடம் “அவன் வெளியே நின்றுள்ளானா?” என்றேன். “ஆம், அரசே” என்றான். “வரச்சொல்” என்றேன். அவன் வெளியே சென்று சொல்ல சகதேவன் உள்ளே வந்தான். அவன் விழிகள் நேராக என்னை நோக்கின. அந்நோக்கில் ஓர் அறைகூவலை உணர்ந்தேன். அவனை வெல்வது அமைதியாலேயே இயலுமென்று உணர்ந்து என்னை சொல் சொல்லாக அடுக்கி அடக்கிக்கொண்டேன். “இளையோனே, என்னை வருந்தச்செய்து நீ அடைவது என்ன?” என்றேன்.
“நான் உங்களை வருந்தச்செய்யவில்லை, மூத்தவரே. உண்மையென்ன என்று நீங்கள் கோரியதனால் மட்டுமே சொன்னேன்” என்றான். என் குரலில் மேலும் அமைதியை வரவழைத்தபடி “நீ சொன்னதற்கு என்ன பொருள் தெரியுமா?” என்று கேட்டேன். அறியாமல் என் குரல் எழுந்தது. “நான் பொய்யன் என்கிறாய்.” என் குரலைக் கேட்டதுமே என்னுள் சினம் ஓங்கியது. “என்னை அறச்செல்வன் என்கிறார்கள். என் இளையோனாகிய நீ என்னை உள்ளம் கரந்தவன் என்கிறாய்.” சகதேவன் “அறத்தான் அல்ல என்று நான் சொல்லவரவில்லை, மூத்தவரே. இப்புவியில் அறத்தில் நின்ற அனைவருமே அடையும் அனைத்து இயல்புகளும் கொண்டவர் நீங்கள்” என்றான்.
நான் ஏளனத்துடன் “உள்ளத்தை மறைத்து பொய்யுரைப்பது குழப்பமா என்ன?” என்றேன். “நீங்கள் உள்ளத்தை அறிந்து மறைக்கவில்லை. உங்களை அறியாமல் அது உள்ளே கரந்திருந்தது” என்றான். நான் “என்ன சொல்கிறாய்?” என்றேன். என் குரல் எப்படி தணிந்தது என்று எண்ணி வியந்தேன். “நீங்கள் என்னிடம் கேட்டதென்ன, மூத்தவரே? எந்த நெறிநூலில் அதற்கு ஒப்புதல் உள்ளது என்றீர்கள். ஏதேனும் நெறிநூல் அப்படி சொல்கிறதா என்று கேட்கவில்லை. அவ்வினாவில் ஆழ்ந்திருந்தது நூலை நான் சொல்லவேண்டுமென்னும் விழைவுதான்.”
நான் “மூடா!” என சீறி எழுந்தேன். ஆனால் அச்சொற்கள் என்னுள் ஒலிக்க உடனே தளர்ந்தேன். தழைந்த குரலில் “ஆனால் நான் எண்ணியது…” என்று தொடங்க அவன் இடைமறித்து “சொற்கள் நாம் அறியாதெழுகையில் மேலும் நம்முடையவை” என்றான். மீண்டும் சினத்தை என்னுள் மூட்டிக்கொண்டேன். பற்களைக் கடித்தபடி “நான் பராசர ஸ்மிருதியை நினைத்து உன்னிடம் கேட்டேன் என்கிறாயா?” என்றேன். “இல்லை, நான் சொல்லக்கேட்டதும் நீங்கள் அதிர்ச்சி அடைந்தீர்கள். ஆனால் உங்கள் ஆழம் அந்நூலின் அவ்வரியை அறிந்திருந்தது. அதை விழிகளில் கண்டேன்.”
“நன்று! சிறுமைசெய்வதென்றே முடிவெடுத்துவிட்டாய்” என்றேன். அவன் “மூத்தவரே, அறத்தானின் போர் என்பது தன் ஆழத்திற்கும் தனக்குமானதுதான். ஆழுளமும் கனவும் விழைவுகளால், ஆணவத்தால் ஆனவை. நனவோ கற்றறிந்த சொற்களால் ஆனது” என்றான். நான் உளம் உடைந்து மெல்ல விம்மிவிட்டேன். “அறத்தான் தன்னாலேயே மீளமீளத் தோற்கடிக்கப்படுவான். தன் மிகமிக நுண்ணிய நரம்புமுடிச்சுகளைக்கூட எதிரிக்கு திறந்து வைப்பவன். தன் குருதிச்சுவையை தான் உணர்ந்து அதில் திளைப்பவன்” என்று அவன் சொன்னான்.
“நான் என்னை இழிந்தோன் என உணர்கிறேன், இளையவனே. எப்போதும் இரக்கமின்றி என்னிடம் உசாவிக்கொண்டிருக்கிறேன்” என்று நான் சொன்னேன். “என்னிடம் ஒவ்வொருநாளுமென நான் கேட்டுக்கொள்கிறேன். நான் மண்விழைகிறேனா? வெற்றியையும் புகழையும் எண்ணிக்கொண்டிருக்கிறேனா? வஞ்சம் வளர்க்கிறேனா? இல்லை இல்லை இல்லை என நூறுமுறை என்னுள் சொல்லிக்கொள்ள என்னால் இயலும். ஆயினும் நான் என்னை அவ்வாறு உணரும் தருணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.” என் விழிநீர் வழிந்து மடியில் சொட்டியது.
“மிகமிக ஆழத்திலிருந்து என் கீழ்மைகள் எழுந்து வருகின்றன, ஏழாமுலகத்து நாகங்கள் என. நான் தீயோன் என உணர்ந்து உளம் கரைந்தழிந்த நாட்கள் எவ்வளவோ. உயிர்விடுவதொன்றே வழி என்று துணிந்த தருணங்களும் பல. நீ சொல், நான் என்ன செய்யவேண்டும்? என் இயல்பு என்ன? ஆழத்தில் காமத்தையும் வஞ்சத்தையும் விழைவையும் வைத்துக்கொண்டு அதை மறைக்க அறமென்றும் நெறியென்றும் அள்ளிப்போர்த்திக்கொள்ளும் பொய்யனா நான்?” என்றேன். மேலே பேசமுடியாமல் உதடுகளை மடித்து அழுத்திக்கொண்டேன்.
சகதேவன் என் விழிநீரால் முகம் கனியவில்லை. எவருக்கோ குறிச்சொல் உரைப்பவன்போல சொன்னான் “இல்லை மூத்தவரே, இன்று இப்புவியில் வாழ்பவர்களில் நீங்களே அறத்தோன். அதில் எனக்கு ஐயமே இல்லை.” அச்சொற்களை அவன்தான் சொல்கிறானா என்பதுபோல் அவன் விழிகளை நோக்கியிருந்தேன். “மூத்தவரே, அறத்தோர் என்போர் இம்மண்ணில், குடியில், உறவுகளில், அரசியலில் பிணைந்து வாழும் உலகியலோர். இரண்டின்மையில் அமர்ந்த யோகியருக்கு அறமில்லை” என்று அவன் சொன்னான்.
“உலகியலில் வாழ்பவர் என்பதனாலேயே அறத்தோர் பற்று கொண்டிருக்கிறார்கள். உண்மையானவர் என்பதனாலேயே அப்பற்று நிலை கொண்டதாகிறது. உணர்வுமிக்கவர் என்பதனாலேயே அது ஆற்றல்மிக்கதாகிறது. நமர் பிறர் என்னும் பிரிவினை இன்றி பற்றில்லை. நலம் நாடுதலும் அல்லவை ஒழித்தலும் என பற்று செயல்வடிவாகிறது. அறத்தோர் அனைவருமே ஓயாது செயல்படுவோர். செயல் உணர்வலைகளை உருவாக்குகிறது. செயல்விசை மிகுந்தோறும் துயர் பெருகுகிறது. பெருந்துயரே பேரறத்தானின் இயல்பு.”
“சார்புநிலைகொண்டு மிகையுணர்ச்சியுடன் பெருவிசையுடன் செயல்படுபவரை பிறர் அஞ்சாமலும் வெறுக்காமலும் இருக்கமுடியாது. அவர்கள் இரட்டைநிலை கொண்டவர்கள் என்றும் நயவஞ்சகர்கள் என்றும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்கள் என்றும் வசைபாடப்படுவார்கள். அவர்களை அணுகியிருப்போர் விலகுவர். அகன்றிருப்போர் தங்கள் எண்ணப்படி வகுத்துக்கொள்வர். அறம்பிழைப்போர் அனைவருமே அவர்களை தங்கள் எதிரிகளென எண்ணுவர். அவரை அறமிலி என நிறுவுவதனூடாக தங்களை நன்னிலையில் காட்டமுடியுமென நம்புவர்.”
“மூத்தவரே, அறத்தில் நிற்பவர்கள் விரும்பப்படுவதேயில்லை. அவர்கள் இளையோருக்கு காமத்தின் நடுவே கேட்கும் ஆலய மணியோசைபோல எரிச்சலூட்டுகிறார்கள். உலகியலோருக்கு மேயும் பசுவை கொட்டும் ஈயென சினமளிக்கிறார்கள். நோக்கு விலக்கா மூதாதையிடம் என சிறுவர் அவர்கள்மேல் கசப்பு கொள்கிறார்கள். வரவிருக்கும் கூற்றை என முதியோர் அஞ்சுகிறார்கள்” என்று சகதேவன் தொடர்ந்தான். “ஆயினும் அறத்தோர் இங்கு தேவைப்படுகிறார்கள். அவர்களே இச்சுழற்சியின் மைய ஆணி. விலகிச்செல்லும் விசைகொண்டவர்கூட ஒரு கையால் பற்றிக்கொள்ளும் தூண்.”
“ஆகவே அறத்தோர் வாழ்கையில் வெறுக்கப்படுவார்கள். மறைந்தபின் திருவுருவாக ஆக்கப்பட்டு வணங்கப்படுவார்கள். அவர்களிலிருந்து மேலும் அறத்தோர் எழுவார்கள். அறம் ஒருபோதும் ஐயமின்றி, தயக்கமின்றி, திரிபின்றி, மறுப்பின்றி மானுடரால் கடைக்கொள்ளப்படாதென்பதனால் அறத்தோரும் அவ்வண்ணமே அறியப்படுவார்கள்” என்று சகதேவன் சொன்னான். அவன் சொற்கள் என்னை ஆறுதல்படுத்தின. பெருமூச்சுகளினூடாக நான் தணிந்தேன். தலைகுனிந்து நிலம்நோக்கி முணுமுணுத்தேன். “நான் அறத்தோனா என்றே ஐயம்கொள்கிறேன்.”
“மூத்தவரே, பற்றிலிருந்து எழுவன காமமும் விழைவும். அவ்விரண்டும் விளைவிப்பது வஞ்சம். அறத்தோன் அந்த மூன்று மாசுகளையும் அஞ்சுபவன். அவற்றை விலக்கி விலக்கி உள்ளழுத்தி ஆழத்தில் புதைக்கிறான். அணுவென்றாகி அது அவனுள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு செயலிலும் நுண்ணிதின் நுண்மையாக அது வெளிப்படவும் செய்கிறது. எளியோரிடம் பெருந்தீமைகளேகூட மறைகையில் அறத்தோரிடம் ஆழத்து நுண்மாசுகூட பேருரு எனத் தெரிகிறது. ஏனென்றால் எளியோரிடம் நாம் நன்மையை எதிர்பார்க்கிறோம். அறத்தோரிடம் தீமையை எதிர்பார்க்கிறோம்.”
“அறத்தோரை ஆயிரம் விழிகொண்டு கண்காணிக்கிறோம். அவர்களில் மும்மாசில் ஒருதுளியைக் கண்டடைந்ததுமே நிறைவடைகிறோம். அறத்தோர் நமக்கெதிரான ஓர் இறையாணை. நம்மை ஆளும் ஒரு செங்கோல். நம்மை கண்காணிக்கும் அறியா விழி. அதில் பழுது என்பது நாம் அடையும் ஒரு விடுதலை. மூத்தவரே, அறத்தோரிடம் நீர் அறத்தோர் அல்ல என்று சூழல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. எரிபுகுந்து காட்டு, முள்பீடத்தில் அமர், நெஞ்சு பிழுது எடுத்து அவைநடுவே வை, நிறைதுலாவில் நின்று நிலைநிறுவு என்று ஆணையிடுகிறது. அதை ஏற்று தங்களை மீளமீள உசாவுகிறார்கள் அறத்தோர். குருதியால், விழிநீரால் தங்களை நிறுவமுயல்கிறார்கள். உள் திறந்திட்டு நம் முன் நின்றிருக்கிறார்கள்.”
“நான் மாசுடையோன் என்று சொல்லாத அறத்தான் இல்லை. தன்னைச் சுருக்கி அணுவென்றாக்குவதே அவர்களின் இயல்பு. ஆனால் அறத்தான் எனும் ஆணவமே அவர்களை ஆள்கிறது. நீ அறத்தானா என்று கேட்கும் குரல்களுக்கு முன் உனக்கென்ன என்று கேட்கும் அறத்தான் எவருமில்லை. இவ்வுலகுக்கே மறுமொழி சொல்ல கடன்பட்டவன் என்றும் இவ்வுலகத்தின் முன் எழுந்து நிற்கிறேன் என்றும் எண்ணிக்கொள்வதே அறத்தானின் தீயூழ்” என்று சகதேவன் சொன்னான். “மூத்தவரே, நீங்கள் பேரறத்தான் என்பதனால் ஒவ்வொன்றும் நூறுமடங்கு.”
நான் அவனை நோக்கியபடி அமர்ந்திருந்தேன். பின்னர் “நீ சொன்ன அனைத்தையும் நான் ஒற்றைச் சொல்லாக சுருக்கிக் கொள்கிறேன். நான் ஆழத்தில் மூன்று மாசுகளை கரந்தவன், என் நல்லியல்பால் அவற்றுடன் ஓயாது போரிடுகிறேன் என்பதனால் மட்டுமே நான் அறத்தோன்” என்றேன். சகதேவன் “ஆம் மூத்தவரே, எளியோர் தங்கள் அகத்தே அறத்தை கொண்டவர்களல்ல. மும்மாசுகளில் ஆடுவதே ஆழத்து விளையாட்டு. காமமும் ஆணவமும் வஞ்சமுமே அங்கே களியாடலென உருமாறியிருக்கின்றன. ஒவ்வொரு கணமும் அதை அசைபோட்டு சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
“எளியோருக்கு அறமென்பது பிறருடனான ஒப்பந்தம் மட்டுமே. செயலின் தருணங்களில் மட்டுமே அவர்கள் அதை எண்ணுகிறார்கள். எதிர்விளைவை எண்ணி மட்டுமே அதற்குக் கட்டுப்படுகிறார்கள். அறத்தோன் தன் அகத்திலும் அறத்தை எண்ணுபவன். தன்னுடன் கொள்ளும் சமரசங்களிலும் அறத்தை முன்வைப்பவன். எதிர்விளைவுகளை எண்ணாமல் அறத்திலமைய முற்படுபவன்” என்று அவன் சொன்னான்.
சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.
நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.
அவன் சில கணங்கள் தலைகுனிந்து நின்றுவிட்டு அருகிருந்த ஏட்டுப்பலகையை எடுத்து என் முன் வைத்தான். தன் கச்சையிலிருந்து எடுத்த சுண்ணக்கட்டியால் பன்னிரு களம் வரைந்தான். அதன்மேல் சோழிகளைப் பரப்பி கைகளை கட்டிக்கொண்டு நோக்கினான், அங்கே எதையோ படிப்பவன்போல. அவன் புருவங்கள் அசைந்துகொண்டே இருந்தன. முகம் கனவிலாழ்ந்தது. கைகள் நீண்டு அவனை அறியாமல் நிகழ்வதுபோல காய்களை நீக்கி வைத்து களம் மாற்றின. பலமுறை களம் உருமாறி இறுதியாக அமைந்ததும் பெருமூச்சுடன் என்னை நோக்கினான்.
“மூத்தவரே, விழைவுகொண்டு வேள்வி செய்யும் மானுடன் எழுந்து மேல்சென்று அடையும் பெருநிலை என்பது இந்திரனே. ஞானவேள்வி செய்வோர் வான்திகழ் மீன்களாகின்றனர். கர்மவேள்வி செய்வோர் தேவர்களாகின்றனர். பெருவேள்வி நிறைவுசெய்வோர் இந்திரர்களாகி அமர்கின்றனர்” என்று சகதேவன் சொன்னான். “யுகம் மாறுகையில் இந்திரர்கள் மாறுகிறார்கள். இதுவரை பன்னிரண்டாயிரம்கோடி இந்திரர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பது நிமித்தக் கணக்கு. அவ்விந்திரர்களாலான இந்த காலத்துளி பன்னிரண்டாயிரம் கோடிமுறை சொட்டி நிறைகையில் விஷ்ணுவின் ஒருகணம் முழுமைகொள்கிறது.”
“ஆனால் விழைவதனைத்தையும் அடைந்து அமைந்திருக்கையிலும் இந்திரனின் உள்ளத்துள் சென்ற பிறப்பின் நினைவென, கனவின் ஆழமென, ஒருதுளி இனிமை என மானுடவாழ்வு எஞ்சியிருக்கும். ஏனென்றால் இன்பம் சற்று இழப்புணர்வின்றி, ஒருதுளி ஏக்கமின்றி நிறைவடையாது. ஒருதுளி சிந்திய கலத்தையே நாம் இறுகப் பற்றுகிறோம். ஆயிரம் யுகங்களுக்கு ஒருமுறை இந்திரன் தன் வாழ்க்கையை முழுமைசெய்யும்போது அவனுள் எஞ்சிய விழைவினால் மானுடனாக பிறக்கிறான்.”
“மூத்தவரே, சென்ற காலங்களில் விஸ்வஃபுக், பூததாமன், சிபி, சாந்தி, தேஜஸ்வி என்னும் ஐந்து இந்திரர்கள் இருந்தனர். அவர்களே நாம்” என்றான் சகதேவன். நான் “ஒருவர் பின் ஒருவராகவா?” என்று கேட்டேன். அவன் புன்னகைத்து “இங்கிருக்கும் காலமல்ல அவர்களுடையது” என்றான். நான் அச்சொல்லையே ஓசையின்றி சொல்லிக்கொண்டிருந்தேன். விஸ்வஃபுக். புடவியுண்பவன். பின்னர் “அந்த இந்திரனின் இயல்பென்ன?” என்றேன்.
மூத்தவரே, யுகங்களுக்கு முன்பு புவியில் ஒரு சதுப்பில் யுதன் என்னும் கழுதைப்புலி வாழ்ந்தது. ஒவ்வொரு கணமும் வயிற்றிலெரியும் அனலால் அது அலைந்து திரிந்தது. அழுகியதும் மட்கியதும் புழுக்கொண்டதுமான ஊனைக்கூட உண்டது. வளைகளை தோண்டியும் சதுப்புகளை கிண்டியும் ஊன் தேடி அலைந்தது. ஒருமுறை ஊனுக்காக கழுகுகளுடன் போரிடுகையில் அதன் கண்களை அவை கொத்தி குருடாக்கின. விழியிழந்த அதை அதன் குடி விலக்கியது. தனித்துப் பசித்து அலைந்த யுதன் மூக்கின் கூர்மையை நோக்கென்றாக்கி காட்டில் உணவு தேடியது. பிற விலங்குகள் உண்டு சிந்திய ஊன்துளியை நக்கி உண்டது. ஒவ்வொரு நாளும் பசி மிகவே ஊளையிட்டு அழுதபடி விண்ணை நோக்கியது.
காட்டில் அது சென்றுகொண்டிருக்கையில் செத்து அழுகிக்கிடந்த யானையின் உடலொன்றை கண்டது. அதை உண்ணும்பொருட்டு அதை நோக்கி சென்றது. ஊன்மணம் அதன் வாயிலிருந்து நீர் பொழியச் செய்தது. ஆனால் அந்த யானை ஒரு சேற்றுக்குழிக்குள் பாதிமூழ்கியதென உப்பிக்கிடந்தது. யுதன் அதை அணுகமுடியவில்லை. சுற்றிச்சுற்றி வந்து ஊளையிட்டபின் தன் உள்ளுறைந்த எச்சரிக்கையை முற்றாகக் கைவிட்டு அது சேற்றிலிறங்கியது. கால்கள் சேற்றில் புதைய உணவை கண்முன் நோக்கியபடி எச்சில் வழிய மூழ்கி இறந்தது.
அந்தப் பெருவிழைவால் அது மறுபிறவியில் அரக்கர்குலத்தில் பெரும்பசி கொண்ட யுதானன் என்னும் குழவியாகப் பிறந்தது. பிறந்ததுமே பசிவெறி கொண்டு அன்னை முலையை உறிஞ்சிக் குடித்தான். பால் நின்றதும் பிறப்பிலேயே இருந்த பற்களால் முலைக்கண்ணைக் கடித்து குருதியை உறிஞ்சலானான். அன்னை அவனைத் தூக்கி அப்பால் வீசினாள். செவிலி அருகணைந்து முயல் ஒன்றைக் கொன்று அக்குருதியை அவனுக்கு ஊட்டினாள்.
உணவு உணவென்று யுதானன் அலைந்தான். அவனை பசி என்னும் பேய் பற்றியிருப்பதாக எண்ணிய அவன் குடியினர் முற்றாக விலகிக்கொண்டனர். வேட்டையாடுவதும் உண்பதுமே வாழ்வென்றிருந்த யுதானன் ஒருநாள் காட்டெரியில் சிக்கி உயிரிழந்தான். அவன் பிடித்த மானை சுடும்பொருட்டு அவனே மூட்டிய தீ அது. அவனை அனலவன் உண்டபோது அவன் “ஃபுக்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். உண்பேன் எனச் சொல்லி மாண்டதனால் அவன்மேல் அளிகொண்ட அக்னி மறுபிறவியில் அவனை சர்வஃபுக் என்னும் அரசனாக காசிநாட்டில் பிறக்கச் செய்தான்.
பெருவிழைவு கொண்ட அரசனாக இருந்தான் சர்வஃபுக். காணுமனைத்தையும் தனக்கெனக் கொள்பவன். பிறர்கொண்ட எதன்மீதும் வெறிமிக்க விழைவு எழுபவன். அப்பெருவிழைவே அவனை ஒருகணமும் சோர்வுறாதவனாக ஒரு சொல்லுக்குக் கூட உளம்தளராதவனாக ஆக்கியது. அவன் தன் வாழ்நாளெல்லாம் துயிலாமலிருந்தான். நூறு பிறவியில் செய்யவேண்டிய பயிற்சியை ஒரே பிறவியில் முடித்த வில்வீரன். நூறு பிறவிக் கல்வியை ஒரு பிறவியில் அடைந்த அரசுமதியாளன். அவன் அகத்தளத்தில் ஆயிரம் அரசியரும் துணைவியருமிருந்தனர். படைகொண்டுசென்று சூழ இருந்த அரசர்கள் அனைவரையும் வென்றான். அவர்களின் கருவூலங்களை உரிமைகொண்டான். மகளிரை சிறைப்பற்றினான்.
அரசர் வளரவளர மேலும் வளர்பவர் ஆகிறார்கள். சர்வஃபுக்கை வெல்ல எவராலும் முடியவில்லை. பாரதவர்ஷத்தை முழுதாண்டான். மேலும் ஆளும்பொருட்டு அஸ்வமேதமும் ராஜசூயமும் இயற்றினான். நூறு அஸ்வமேதமும் ராஜசூயமும் இயற்றி நூறாண்டு ஆண்டான். அகவை முதிர்ந்து விழியும் செவியும் மங்கிய பின்னரும் அரியணையொழியவில்லை. ஒருநாளும் அவையமர்வதை தவிர்க்கவில்லை. நூறாண்டிலும் மணம்கொண்டு காமமாடினான். படைகொண்டு தொலைநிலத்து எதிரிகளை வென்று பொருள்கொண்டான்.
இறுதிநாளில் படைகொண்டு செல்லவேண்டிய பன்னிரு நாட்களின் அட்டவணையை அமைச்சரும் படைத்தலைவரும் சூழ அமர்ந்து முடிவுசெய்துவிட்டு, இளநங்கை ஒருத்தியுடன் கொடிமண்டபம் சென்றான். அவளுடன் காமத்திலிருக்கையில் நெஞ்சு நிலைக்க இறந்து அவள் மேலேயே விழுந்தான். அவன் உடலில் காமம் விரைத்து நின்றது. அவனை எரியூட்ட கொண்டுசெல்கையிலும் அவ்விரைப்பு குத்திட்டு நின்றது. அது அவ்வாறே இருக்கட்டும், விழைவே அரசருக்கு மாண்பு என்றனர் அமைச்சர். எரியேறிய சர்வஃபுக் தானியற்றிய வேள்விகளின் பயனாக இந்திரநிலை அடைந்தான். அங்கே விஸ்வஃபுக் என்று பெயர்பெற்றான்.
புடவிப்பெருவெளியையே உண்டாலும் தீரா விழைவுகொண்டவனாக அவன் இருந்தான். எரியெழுந்த வேள்விக்களங்கள் அனைத்திலும் அவன் எழுந்து நாநீட்டி துளி சிதறாமல் அவிகொண்டான். அழகு முழுமைகொண்ட அனைத்துப் பெண்டிரையும் வண்டாகவும் மீனாகவும் சூழ்ந்து பறந்தான். அவர்களின் காதலர் உடல்களை சூடிச் சென்று காமம் நுகர்ந்தான். பொன்னை, மணியை, மலர்களை, அரும்பொருட்களனைத்தையும் தான் தான் என தழுவிக்கொண்டான். உலகனைத்தும் உண்டாலும் தணியா வேட்கையே விஸ்வஃபுக்.
“யுகம் முழுமையடைந்து அவன் மறைந்ததும் அவனுள் எஞ்சியிருந்த விழைவென்ன என்று நோக்கினர் கடுவெளியை ஆளும் ஊழின் தெய்வங்கள். அறத்தோன் என எதையும் வேட்காமல் அமைந்து வாழும் பெருநிலையை அவன் தன் ஆழ்கனவுகளில் கண்டு இன்புற்றிருந்தான் என உணர்ந்தனர். ஆகவே அவனை மண்ணில் ஓர் அரசன் என்று பிறக்கச் செய்தனர். அவன் அஸ்தினபுரியில் விசித்திரவீரியனின் குருதிவழியில் பாண்டுவின் முதல் மைந்தனாக பிறந்தான்”
நான் “உன் கதையின் உட்பொருளை மெல்ல மெல்ல சென்றடைகிறேன்” என்றேன். “என்னுள் உலகை உண்டாலும் தீராத இந்திரன் ஒருவன் வாழ்கிறான். அவனுடன் நான் போரிட்டுக்கொண்டிருக்கிறேன், இல்லையா?” சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. “நான் பட்டினி கிடக்கும் பெருந்தீனிக்காரன், இல்லையா?” என மேலும் உரக்க கேட்டேன். சகதேவன் “நான் விடைகொள்கிறேன், மூத்தவரே” என்றான். “என்னால் துறந்துசெல்ல முடியாது, இல்லையா? நீ சொல்ல வருவது அதைத்தானே?” என்றேன். சகதேவன் தலைவணங்கினான்.
“நில், சொல்லிவிட்டு செல். நான் துறந்துசென்றால் இப்பேரழிவு நின்றுவிடும் என எண்ணுகிறாய் இல்லையா?” என் மூச்சிரைத்தது. கைகள் அடிபட்ட நாகங்கள் என பதைத்து நெளிந்தன. சகதேவன் என் விழிகளை நோக்கி “ஆம்” என்றான். நான் நெஞ்சிலறைந்து “என்னால் துறக்கவே முடியாதென நினைக்கிறாய் அல்லவா?” என்று கூவினேன். அவன் விழிவிலக்காமல் “ஆம்” என்றான். “துறக்கிறேன்… இப்போதே துறந்துசெல்கிறேன். எனக்கு ஏதும் தேவையில்லை… நீ கூட தேவையில்லை. இதோ என் கணையாழியைக் கழற்றி வீசுகிறேன். மரவுரி அணிந்து சதசிருங்கத்திற்கு கிளம்புகிறேன்” என்று உடைந்த குரலில் சொன்னேன்.
“அப்போதுகூட சதசிருங்கத்தையே சொல்கிறீர்கள், மூத்தவரே. பற்றறுக்க உங்களால் இயலாது” என்றபின் மீண்டும் வணங்கி சகதேவன் வெளியேறினான். அவன் பின்னால் நான்கடி வைத்து நின்றேன். கதவைப் பிடித்தபடி நின்றமையால் விழாமலிருந்தேன். துறப்பது மிகமிக எளிது. அக்கணையாழியை கழற்றினால் போதும். ஆனால் அதன்பின் என்னை எப்படி நினைவுகூர்வார்கள்? போரை அஞ்சி தப்பியோடிய கோழை என்று. அதைவிட என்னை துறக்கச்செய்து முடியை வென்றார்கள் என்னும் பழிக்கு என் இளையோர் ஆளாவார்கள். அனைத்துக்கும் மேலாக குலமகள் கொண்ட சிறுமையை நிகர்செய்யாமல் கானேகிய வீணன் என்பார்கள். துறவால் அச்சொற்கள் அனைத்தையும் நான் ஒப்புதல்கொடுத்து வரலாறென்று ஆக்குவேன். செய்வதறியாமல் நின்று அந்தி இருண்டு வருவதை நோக்கினேன்.