பகுதி ஏழு : மறைமெய்
“அவன் பெயர் யுதிஷ்டிரன், குருவின் குடியில் விசித்திரவீரியனின் குருதிவழியில் பாண்டுவின் மைந்தனாகப் பிறந்தவன். இந்திரப்பிரஸ்தத்தின் முடிபெயர்ந்த அரசன். இப்போது உபப்பிலாவ்ய நகரியின் சிறிய அரண்மனையில் தன் பள்ளியறைக்குள் இருளை நோக்கியபடி தனித்து நின்றிருக்கிறான். சற்று முன்னர்தான் அவனை அவன் இளையோன் சகதேவன் சந்தித்து மீண்டான்” என்று உபகாலனாகிய சாகரன் சொன்னான். அவன் முன் மீசையை நீவியபடி நிலம்நோக்கி மாகாலன் அமர்ந்திருந்தார்.
“காலத்திற்கிறைவனே, அவன் அருகிருந்த பீடத்திலிருந்து உடைவாளை எடுத்து தன் கழுத்தை நோக்கி கொண்டுசெல்வதை கண்டேன். காற்றென வந்து சாளரத் திரைச்சீலையை அசைத்தேன். நிழல் கண்டு அவன் திரும்பி நோக்கியபின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதை மூடிவிட்டு மீண்டும் வாளை எடுத்தான். அதற்குள் அவன் உள்ளம் மாறிவிட்டிருந்தது. வாளை மீண்டும் பீடத்தில் வைத்துவிட்டு சாளரத்தருகே வந்து இருளை நோக்கினான். அவன் முகம் துயரில் இறுகியிருந்தது” என்றான் சாகரன்.
“அவனால் அழமுடியாது. மிகைக்குளிரில் பனி உருகமுடியாதபடி இறுகிவிடுகிறது. அவன் இருள் என எண்ணினான். கருமை என நீட்டிக்கொண்டான். பின் கார் என்று சென்று கருநீலன் என்று வந்தடைந்தான். இதோ இக்கணம்.” யமன் அவனை நோக்கிவிட்டு “அவனா?” என்றார். பின்னர் கைகளை விரித்து “சொல்திகைந்த வியாசனுக்குப் பின் மேலும் நுண்ணிதின் செல்வபவனே வரக்கூடும் என்றல்லவா நினைத்தேன்” என்றார். சாகரன் “இக்கணம் அவன் எண்ணுவதனாலேயே அவன் என்றே பொருளமைகிறது. இத்தருணத்தை யாத்த ஊழின் நெறி இது” என்றான்.
“இவ்வினாவுடன் அறிந்தவிந்த முனிவர் ஒருவரின் அகத்தமைந்து மீள்க!” என்றார் யமன். “ஆம்” என்று மீண்ட சாகரன் “ஜனமேஜயனின் வேள்வியவையில் வைசம்பாயனர் சொல்ல ஆஸ்திகர் கேட்க பாரதப் பெருங்கதையைக் கேட்டு அமர்ந்திருந்த கிருஷ்ண துவைபாயன மகாவியாசரின் உள்ளத்தமைந்து மீண்டேன். அரசே, அவர் யுதிஷ்டிரனின் பிறப்பை எண்ணிக்கொண்டிருந்தார். நான் அவருள் வினாவென நிகழ்ந்ததும் விண்ணில் முகிலென்றிருக்கும் நீர் முனிவர்களின் மெய்மை. மண்ணில் ஆறென்று ஓடி அமுதென்று விளைந்து உயிரென்று நிறைவது அரசர்களின் ஞானம் என அவர் எண்ணினார்” என்றான்.
“ஆம், அவனிடமே அவ்வினா எழமுடியும்” என யமன் எழுந்தார். ஒரு கணத்தில் யுதிஷ்டிரனின் உள்ளத்தமைந்து மீண்டார். எதையோ தன் அகம் தொட்டுவிட்டதென அறியா நடுக்கு கொண்ட யுதிஷ்டிரர் “யார்?” என்று திரும்பி கேட்டார். அவர் அறை ஒழிந்து கிடந்தது. “யார்?” என்று அவர் மீண்டும் கேட்டார். அந்த அறைக்கு வெளியே மாபெரும் சிலந்திவலை என இருள். அதன் மையத்திலமைந்தவை என விழியறியா நச்சுக் கொடுக்குகள். அவர் பெருமூச்சுடன் சாளரக் கதவை மூடி விளக்கை ஊதியணைத்து முற்றிருளில் தன் மஞ்சத்தை அடைந்து சேக்கையைத் தடவி அறிந்து அதன்மேல் படுத்துக்கொண்டார்.
யுதிஷ்டிரர் குடிலை அடைந்தபோது தொலைவிலேயே இளைய யாதவர் தன் குடில்வாயிலில் அமர்ந்திருப்பதை கண்டார். அவருடைய நடை தொய்வுற்றது. அருகணைந்து முற்றத்தின் தொடக்கத்தில் தயங்கி நின்றார். இளைய யாதவர் தன்னை பார்க்கவில்லையோ என்னும் ஐயம் ஏற்பட்டது. விழிசரிய நிலம்நோக்கி அசைவிலாதவராக அமர்ந்திருந்தார். அவருடைய கரிய உடல் ஒரு நிழல் என்று தோன்றியது. உரு இல்லாமல் இங்கிருக்கும் நிழலா? அவர் அங்கில்லையா? அந்தப் பொருளிலா எண்ணம் எழுப்பிய அச்சத்தால் அவர் உடல் நடுங்கியது.
காற்றில் அவர் சூடிய பீலி மெல்ல அசைந்தது. அதன் மெல்லிய மினுத்தலைக் கண்டு யுதிஷ்டிரர் முகம் மலர்ந்தார். நீ எங்கிருந்தாலும் அது இங்குள்ளது. எத்தனை உயரப் பறந்தாலும் அந்தப் பிரேமை உன்னை இங்கே கட்டிவைத்திருக்கிறது. அவர் அருகே சென்று “யாதவனே” என்றார். இளைய யாதவர் நிமிர்ந்து நோக்கி புன்னகைத்தார். ஆனால் விழிகள் கனவுகண்டெழுந்த குழந்தை என எங்கோ இருந்தன. “உங்கள் வரவை நோக்கியிருந்தேன், யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். “ஆம், அவ்வண்ணம் எனக்கும் தோன்றியது” என்றார் யுதிஷ்டிரர். “அமர்க!” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரர் அவர் காலடியில் முற்றத்து மண்ணில் கால்மடித்து அமர்ந்தார்.
“நான் பெருந்துயருடன் இங்கு வந்துள்ளேன், யாதவனே” என்றார் யுதிஷ்டிரர். “என் உடல் திறந்து உயிர் வெளியேறிவிடும் என தோன்றுமளவுக்கு துயர். இதுவரை நான் அறியாத் துயரென ஏதுமிருந்ததில்லை என்றே எண்ணியிருந்தேன். இன்று அறிந்தேன் துயர் நம் உடலின் ஒவ்வொரு அணுவையும் கசக்கச் செய்யும் என. பற்றி எரிந்துகொண்டே இருக்கச்செய்யும் என. தன்னைத்தான் முற்றழித்தாலும் இங்கே அது நீடிக்குமென உளமயக்கெழும் என. இதை என்னால் தாளமுடியாது. இப்புவியில் இனி நான் விழைவதொன்றுமில்லை.”
இளைய யாதவர் வெறுமனே நோக்கியிருந்தார். “நான் உயிர்துறக்க விழைகிறேன். இனி ஒரு கணமும் இங்கே வாழவேண்டுமென்பதில்லை. இனி இங்கே எதையடைந்தாலும் நான் மகிழப்போவதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “வாளை எடுத்தீர்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று வியப்புடன் சொன்ன பின் “ஆம், நீ அறியாததொன்றில்லை. யாதவனே, இறந்திருப்பேன். ஓர் எண்ணமே என்னை விலக்கியது. என்னை மாய்த்துக்கொண்டால் என்னைப்பற்றிய அனைத்துப் பழிகளுக்கும் நான் ஒப்புதல் அளித்ததாகவே பொருள் அமையும். என் இருளுரு ஒன்றை இங்கே விட்டுச்சென்றேன் என்றால் வேறுலகங்களிலும் எனக்கு நிறைவில்லை” என்றார்.
“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.
“ஆம்” என்றார் யுதிஷ்டிரர். “இப்புவியிலுள்ளோரில் எனக்கு மிக அணுக்கமானவன் எவன் என்றால் சகதேவனே. எவன்பொருட்டு மறுஎண்ணமில்லாமல் என் பொருள் உயிர் நல்வினை மூன்றையும் அளிப்பேன் என்று கேட்டால் அவனைத்தான் சொல்வேன். எனக்கு இத்துயரை அளித்தவன் அவனே.” இளைய யாதவர் “அவனை சந்தித்தீர்களா?” என்றார். “ஆம், இன்று மாலை உபப்பிலாவ்யத்தில் என் அவையில் இருந்து அறைமீளும்போது அவனும் உடன் வந்தான். நாங்கள் இயல்பாக பேசிக்கொண்டு சென்றோம்.”
அன்று காலை துருபதரால் வழிநடத்தப்பட்டு ஒரு அக்ஷௌகிணி அளவு பாஞ்சாலநாட்டுப் படைகள் பன்னிரு அணிகளாக குருஷேத்திரம் நோக்கி செல்வதாக செய்தி வந்தது. அவருடைய மைந்தர்களான பிரியதர்சன், விரிகன், உத்தமௌஜன், யுதாமன்யு ஆகியோர் அவருடன் சென்றனர். ஒரு அக்ஷௌகிணி படை என்ற சொல் காதில் விழுந்ததுமே பீமன் தொடைகளில் அறைந்தபடி எழுந்து “பாஞ்சாலம் மட்டுமே அத்தனை பெரிய படைகளை அளிக்கிறது. விராடம் என்ன செய்யப்போகிறது?” என்றான்.
அவையிலிருந்த விராட இளவரசன் உத்தரன் “நாங்களும் அதற்கிணையான படையை அளிக்கிறோம். இதோ நானே கிளம்புகிறேன்” என்றான். நான் “இளவரசே, பாஞ்சாலம் பன்னிரு துணைநாடுகள் கொண்டது. செழிப்பான உபகங்கைகளால் ஊட்டப்படும் நிலமாகையால் மக்கள் மிகுந்தது. விராடம் பெரும்பாலும் காடு. மக்கள் எளிய மலைக்குடிகள். ஒரு அக்ஷௌகிணி என்றால் பெரிய எண்” என்றேன். “ஆம், ஆனால் இது அறப்போர். இதில் இனி எண்ணித் தயங்க ஏதுமில்லை. நான் சென்று அறைகூவல் விடுக்கிறேன். மீசை முளைத்த ஆண்களனைவரும் படைமுகம்கொள்ளவேண்டும் என்று. குலமும் குடியும் விலக்கல்ல என்று. படைக்கலங்கள் எங்களிடம் உள்ளன” என்றான்.
நான் பதறி “என்ன சொல்கிறீர்கள்? எளிய குடிகளையா? படைக்கலப்பயிற்சி இல்லாதவர்களை போர்முகத்தில் நிறுத்துவது பெரும்பிழை… ஆயரும் உழவரும் களத்தில் இறந்தால் அந்நாட்டு வெளிகளும் வயல்களும் பாழ்படும். சிற்பிகளும் கணியரும் எந்நிலையிலும் போருக்குச் செல்லலாகாதென்று நூல்நெறி உள்ளது” என்றேன். அதற்குள் நகுலன் “மூத்தவரே, நம்மை ஆதரிக்கும் அனைத்துக் குலங்களில் இருந்தும் ஆடவர் அனைவரையும் படைக்கு எழும்படி அறிவிக்கலாமென நான் நினைத்திருக்கிறேன். இது இறுதிப்போர், நாம் வென்றாகவேண்டும்” என்றான்.
“எல்லா போர்களும் வெல்வதற்கே” என நான் சினத்துடன் சொன்னேன். “நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். போர்க்குடிகள் அன்றி பிறர் படைகளில் வரவேண்டியதில்லை. அதுவே நூல்கள் குறிக்கும் நெறி” என்றேன். பீமன் எழுந்து “அறம் பேசி நெறி பேசி நாம் அழிந்தது போதும். இனி சிறுமை என்பதில்லை. இனி வெற்றி மட்டுமே. இனி முழு வெற்றிக்கு ஒரு மணி குறைவாகக்கூட எதையும் ஏற்கச் சித்தமாக இல்லை நாங்கள்” என்றான். “இளையோனே…” என நான் பேசத்தொடங்க “போதும். பேசுவது அறம் இடைபேணுவது விழைவு” என்று பீமன் கூவினான்.
அவையில் அவன் அப்படிக் கூவியதைக் கேட்டு நான் திகைத்துவிட்டேன். ஆனால் அவை அச்சொல்லுடன் நின்றுள்ளது என அவர்களின் முகங்கள் காட்டியது என்னை மேலும் பதைக்கச் செய்தது. அவர்களை மாறிமாறி நோக்கினேன். மறுகணம் என் ஆணவம் சினமென சீறியெழுந்தது. “ஆம், நான் அறத்தோன்தான். என் அறத்தை நம்பியே இங்கு இத்தனை பெரும்படை திரண்டுள்ளது. அதை தவிர்க்கத் தொடங்கினால் நானும் காட்டாளனாக ஆகிவிடுவேன்” என்றேன்.
அச்சொல்லில் பீமனுக்கான நஞ்சை செலுத்தியிருந்தேன். அவன் அதை உடனே பெற்றுக்கொண்டான். சினம்கொண்டு பூசலிடுகையில் உளம்கூர்ந்து எதிரியை நோக்குகிறோம். எனவே ஒரு சொல் வீணாவதில்லை. அவன் தொடையை அறைந்து எழுந்து கைகளை நீட்டி “ஆம், காட்டாளனேதான். உங்களையெல்லாம் தோளில் தூக்கிச்சுமக்கும் காட்டாளன். எங்கே சொல்லுங்கள், இக்காட்டாளனின் தோள்வல்லமை உங்களுக்குத் தேவையில்லை என்று! ஆண்மையிருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். இக்கணமே காட்டுக்குச் செல்கிறேன். திரும்பமாட்டேன்” என்றான்.
நான் சொல்லவிந்தேன். என்னால் அதை சொல்லமுடியாது என அனைவரும் அறிவர். என் நாட்டின் வெற்றியும் குடிகளின் நலனும் அவனையே சார்ந்துள்ளன. அவனே அஸ்தினபுரியின் அனைத்துக் குடிகளுக்கும் மெய்யான அரசன். போரை தவிர்க்கமுடியாதெனும் நிலையில் அவனைத் தவிர்ப்பதென்பது என் குடிகளை எரிகுளத்தில் கொண்டு இறக்குவதுதான். “என்ன, சொல்கிறீர்களா? அறமறியா காட்டாளன் களம்வென்றால் அவ்வெற்றியை சூடமாட்டேன் என்று சொல்லக்கூடுமா உங்கள் நா?” என்றான் பீமன்.
நான் மூச்சுத்திணறினேன். அவன் பற்கள் தெரிய கைகளைப் பிசைத்தபடி அவையை சுழன்று நோக்கினான். “சொல்லமாட்டீர்கள். நாளை கொலைக்களத்தில் நான் அக்குடியின் நூற்றுவரை தலையுடைத்துக் கொல்வேன். அக்கயவன் நெஞ்சுபிளந்து குருதி உண்பேன். அவன் மூத்தவனின் தொடைபிளந்து கொண்டாடுவேன். அவ்வெற்றிமேல் அமர்ந்து நீங்கள் அரசுகொள்வீர்கள். அப்பழியை மட்டும் என்மேல் சுமத்துவீர்கள். அதிலெனக்கு சொல்மாற்றில்லை. ஏனென்றால் நான் காட்டாளன். குரங்குக் குடியினன். மானுடரின் நெறியெதனாலும் ஆளப்படாதவன்.”
அவையெங்கும் முழங்க “என் குடி அழிக்கப்படுகையில், என் குலமகள் பழிக்கப்படுகையில் குருதிகொதிக்க எழுவதை நெறியென்று அன்னைக் குரங்கின் முலைப்பால் வழியாக கற்றுக்கொண்டவன். உங்கள் சொற்கள் எனக்கு உதிர்சருகுகள்” என்றான்.
நான் சொல்தளர தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். நடுங்கும் கைகளை கோத்தேன். நகுலன் உத்தரனிடம் “உத்தரரே, உங்கள் அக்ஷௌகிணி ஒருங்கட்டும். நமக்கு பெரும்படை தேவையாக உள்ளது. நம் எதிரிப்படைகள் நம்மைவிட இப்போதே ஏழுமடங்கு பெரியவை” என்றான். உத்தரன் “ஆணை” என்றான். “இல்லை, நான் ஆணையிடவில்லை அதற்கு” என நான் கூவினேன். “மூத்தவரே, நமது வெற்றிக்கு முதல் தடை நீங்களே” என்றான் நகுலன். “உங்கள் கோழைத்தனத்தால் உலகோர் முன் சிறுமைகொண்டோம். இனியேனும் நாம் அதிலிருந்து மீளவேண்டும்.”
“இளையோனே, எண்ணிப்பார். நான் கோழையென்றே கொள்க! கோழையென்றே சொல்லப்பட்டதென்றாலும் இதில் நெறியென்று ஒன்று உண்டு என்பதை எண்ணுக! படைக்கலப் பயிற்சி இல்லாத பெருந்திரளால் களத்தில் என்ன செய்ய முடியும்?” என்றேன். பீமன் “களத்தை நிறைக்கமுடியும்” என்றான். “போர்தொடங்கும்போது நம்மைவிட பத்துமடங்கு பெரிய படைகளை எதிரில் கண்டால் நம் படைகளின் உளம் தளரும். அவர்களின் படைகளின் ஊக்கம் பெருகியெழும். முதல்நாள் முதல் பொருதுகையிலேயே போர் முடிந்துவிடும். நம் படையும் இணையாகப் பெருகிநின்றால் வெல்லக்கூடுமென்ற நம்பிக்கை நம் வீரர்களுக்கு வரும்.”
“ஆம், வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கும் வரைதான் வீரர் போரிடுவார்கள். படைவீரன் தனியன், அஞ்சுபவன். பெரும்படையின் உறுப்பென ஆகும்போது தன்னை விராடவடிவென்று எண்ணுகிறான். அப்படை பெருகுந்தோறும் அவனும் பேருருக்கொள்கிறான்” என்றான் நகுலன். நான் சினத்துடன் எழுந்து “நான் ஒப்பமாட்டேன். எளிய மக்கள் செத்துக்குவிவார்கள். பீஷ்மரும் துரோணரும் எழுப்பும் அம்புமழைக்கு முன் அவர்கள் நின்றிருக்க முடியாது” என்றேன். பீமன் “ஆம், நின்றிருக்க முடியாது. விழுந்து மடிவார்கள். ஆனால் அந்த அம்புமழையிலிருந்து நம்மை குடையென்றமைந்து காப்பார்கள்” என்றான்.
அந்த இரக்கமின்மையால் நான் சினம் மீதூற உடல் அதிர்ந்தேன். “நீ ஷத்ரியன். இரக்கமற்ற வீணன்போல் பேசுகிறாய்” என்றேன். “இல்லை, களம் கண்ட வீரனாக பேசுகிறேன்” என்றான் பீமன். “கைதளர்ந்த கோழைபோல் பேசுவது போர்க்களத்தில் மொத்தப் படையையும் பலிகொடுப்பதுதான்.” என்னால் மேலும் சினம் கொள்ள முடியவில்லை. ஆற்றலனைத்தையும் இழந்தவன்போல் உணர்ந்தேன். திரும்பி நகுலனிடம் “இளையோனே, நீயேனும் எண்ணிப்பார்” என்றேன். “அவர்கள் படையென வந்து பயனே இல்லை. செத்துக்குவிந்தால் நம் படை கண்ணெதிரே அழிவதையே நாம் காண்போம். அது ஊக்கமளிக்குமா என்ன?”
நகுலன் “மூத்தவரே, படைகள் பின் திரும்பி ஓடினால்தான் பிற படைவீரர் நம்பிக்கையிழப்பர். செத்துவிழுவதைக் கண்டால் வெறிகொண்டு எழுவர். இது களத்திலெழுந்தோர் கண்ட உண்மை” என்றான். பீமன் “அவர்களை நாம் நடுவே நிறுத்துவோம். அஞ்சி பின்னடைய அவர்களால் இயலாது” என்றான். நான் கைவிடப்பட்டவனாக உணர்ந்தேன். கண்ணீர் மல்க கைகளை விரித்து “பெருந்திரளாக மக்களை கொன்றுகுவிப்பதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றேன். “ஆம், அதைத்தான் போர் என்று சொல்கிறார்கள். பெருஞ்சாவே போர்” என்றான் பீமன். நான் உளம் தளர்ந்து விழிமூடினேன். அக்கணமே குருதிப்பெருக்கைக் கண்டு திகைத்தெழுந்தேன். “இல்லை, நான் ஒப்ப மாட்டேன்” என்றேன்.
“ஒப்புதல் இல்லை என்றால் அவையிலறிவியுங்கள். போரை நிறுத்திவிடுவோம். நான் தோற்றுவாழ விரும்பாதவன், வாளெடுத்து சங்கில் நாட்டுவேன். பிறர் அவர்கள் விழைவதை செய்யட்டும்” என்றான் பீமன். “போர் நாம் அறிவித்தது. நம் மக்களின் நலனின் பொருட்டு” என்றேன். “அதில் பின்வாங்க முடியாது. இது நாம் கொண்ட அறம்.”
பீமன் கசப்புடன் சிரித்து “என்ன சொல்லவருகிறீர்கள் மூத்தவரே, போர் வேண்டுமா வேண்டாமா?” என்றான். “நான் அறப்போர் குறித்து பேசுகிறேன். நம் குடிகளுக்கு நலம் திகழவேண்டுமென்று பேசுகிறேன்” என்றேன். “போருக்கு முன் எண்ணவேண்டியது நாம் அறத்திலமைகிறோமா என்று. அறமே எனில் பின்னர் எண்ணவேண்டியது வெற்றியைக்குறித்து மட்டுமே” என்று பீமன் சொன்னான்.
“நம் மக்கள் தங்களுக்காகவே போரிடுகிறார்கள். அடைவதும் தங்களுக்காகவே. அவர்களை ஆயிரமாண்டுகளாக அடிமைப்படுத்தியிருந்த நெறிகளுக்கு எதிராக எழுந்துள்ளார்கள். ஷத்ரியர் என்னும் இரும்புத்தளையை உடைக்கவிருக்கிறார்கள். அவர்களில் எவருடைய மைந்தனும் வில்லேந்தி வென்றால் முடிசூடி அமரலாமெனும் முறைமையை வென்றெடுக்கப் போகிறார்கள். பொருள் அதன் விலையாலேயே மதிப்பிடப்படுகிறது. அளிக்கும் குருதியால் வெற்றி அளக்கப்படுகிறது. ஆயிரம் தலைமுறைக்காலம் அவர்கள் கொண்டாடும் அருநிகழ்வென அமையட்டும் இவ்வெற்றி. அதற்கான குருதி இங்கே வீழட்டும்” என்றான் பீமன். நகுலன் “மூத்தவரே, போரை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் சொற்களால் எங்களை மீண்டும் எதிரிகள்முன் கால்களைக் கட்டி நிறுத்தாதீர்கள்” என்றான்.
நான் சில கணங்கள் கண்களை மூடி அமர்ந்திருந்தேன். விழிதிறந்து அவையை நோக்கினேன். அனைவரும் என்னை நோக்கிக்கொண்டிருந்தனர். வஞ்சத்துடன் ஏளனத்துடன் வெறுப்புடன். பீமன் “சொல்லுங்கள் அவையினரே, இப்போரில் நாம் முழுதிறங்கப்போகிறோமா?” என்றான். அவை “ஆம்! ஆம்! வெற்றி மட்டுமே. வேறேதும் வேண்டாம், வெற்றி மட்டுமே” என்று கூவியது. சாத்யகி “தெய்வங்களோ மூதாதையரோ எதிரே வந்தால்கூட போரே எமது வழி” என்றான்.
நான் அதற்குள் மெல்ல எண்ணங்களை சொற்களாக கோத்துவிட்டிருந்தேன். “நான் சொல்வதை அவை உணர்க! நெறிநூல்களின்படி அன்றி நான் எதையும் செய்யவியலாது. இந்தப் போரில் நாம் எதன்பொருட்டு அணிசேர்ந்திருக்கிறோம்? நாம் நெறிநிற்பவர் அவர்கள் நெறிபிறழ்ந்தவர் என்ற அடிப்படையில் அல்லவா? நெறிபிறழ்ந்தோமென்றால் நாமும் அவர்களும் நிகரென்றே ஆகும். அவர்கள் அதையே சொல்லிப் பரப்புவர். இன்று முனிவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. நாம் நெறிபிறழ்ந்தால் அவர்களும் நம்மிடமிருந்து அகல்வார்கள். நாம் நம்மையே அழிப்பதுதான் அது…”
அதை எதிர்பாராத பீமன் குழம்பி நகுலனை நோக்கினான். அவையினர் திகைப்பதைக் கண்டு ஊக்கம் கொண்டேன். “சொல்லுங்கள், படைக்கலமேந்தத் தெரியாத குடிகளை அரசன் போர்முகம் நிறுத்தலாமா? அதற்கு ஒப்புதலளிக்கும் தொல்நெறிநூல் ஏதேனும் உண்டா?” நகுலன் சகதேவனை நோக்குவதைக் கண்டதும் நான் சேர்த்துக்கொண்டேன். “எதையும் ஒப்பும் நெறிநூல்களுண்டு என நான் அறிவேன். நாம் காட்டும் நெறிநூலை முன்னரும் நாம் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்.”
நகுலன் “இளையோனே, சொல்க! நெறிநூல் எங்கேனும் அதை ஒப்புகிறதா?” என்றான். சகதேவனை நோக்கி அவையின் விழிகளனைத்தும் குவிந்தன. என் நெஞ்சு பேரோசை எழுப்பியது. அவன் சொல்லப்போவதென்ன என்று மெய்யாகவே நான் அறிய விழைந்தேன். சகதேவன் அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். “சொல் இளையோனே, நெறிநூல் ஒப்புதல் முற்றிலும் இல்லையா என்ன?” என்று பீமன் உரத்த குரலில் கேட்டான்.
அப்போது அவையில் அர்ஜுனன் இருந்திருக்கவேண்டுமென விழைந்தேன். எவ்வகையிலோ அவன் என் உணர்வுகளை பகிர்ந்துகொள்பவன் எனத் தோன்றியது. ஆனால் அவன் படைப்புறப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகி நகருக்கு வெளியே குறுங்காடுகளில் தனியாக வேட்டையாடி அலைந்துகொண்டிருந்தான். நான் சகதேவனிடம் “சொல் இளையோனே, எந்த நெறிநூலில் அதற்கு ஒப்புதல் உள்ளது?” என்றேன். “நீங்கள் முதன்மையாக முன்வைப்பது பராசர ஸ்மிருதி. அதிலேயே அதற்கு ஒப்புதல் உள்ளது.”
நான் தளர்ந்து அரியணையில் சாய்ந்துவிட்டேன். என் இடக்கால் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. “சொல்க, இளையோனே” என்றான் பீமன். எழுந்து அவையை ஒருமுறை நோக்கிவிட்டு தெளிந்த குரலில் “தங்கள் நிலம்விட்டு துரத்தப்படுகையில் அனைத்து மக்களும் படைக்கலமேந்தவேண்டும். தங்கள் தெய்வங்கள் அழிக்கப்படுகையில், தங்கள் மகளிர் சிறுமைசெய்யப்படுகையில் படைக்கலமேந்தாமலிருப்பதே ஆடவர்க்கு இழிவு என்கிறார் பராசரர்” என்றான் சகதேவன்.
பீமன் “பிறிதொரு நூல் வேண்டுமா, மூத்தவரே? இங்கே இருக்கும் நம் குடிகள் அனைவரும் நிலமிழந்தவர்களே. நம் குலக்கொடி சிறுமைசெய்யப்பட்டிருக்கிறாள். நாம் நிறுவிய இந்திரன் நம் நகரில் கைவிடப்பட்டிருக்கிறான்” என்றான். அவை உரக்க ஓசையெழுப்பியது. திருஷ்டத்யும்னன் “இதைவிட தெளிவாக மூத்தோரின் ஆணை எழுந்துவிட முடியாது. ஒவ்வொரு குடிமகனும் களம்காணவேண்டும். குருதியில் கைநனைக்காதவன் ஆண்மகனே அல்ல” என்று கூவினான். “ஆம்! ஆம்! ஆம்!” என்றது அவை.
நான் ஒன்றும் சொல்லாமல் எதிரே அணிப்பட்டம் ஏந்தி நின்ற தூணை நோக்கிக்கொண்டிருந்தேன். நகுலன் “அரசாணை எழுவதில் மாற்று உண்டா, அரசே?” என்றான். நான் இல்லை என தலையசைத்தேன். உத்தரன் “விராடபுரியிலிருந்தும் ஓர் அக்ஷௌகிணி படைகள் எழும்… பிறர் தங்கள் ஆற்றலை சொல்லட்டும்” என்றான். பீமன் “அதற்கு முன் ஒன்று சொல்ல விழைகிறேன். படை எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வெற்றி பகிர்ந்துகொள்ளப்படும்” என்றான். கேகய மன்னன் எழுந்து “என் படைகள் ஏழு சிற்றணிகள். ஆனால் என்னிடம் யானைகள் மிகுதி…” என்றான். ஒவ்வொருவராக தங்கள் படையளிப்பை சொல்லத் தொடங்கினர்.
நான் மிக விரைவில் அனைத்திலிருந்தும் விலகிவிட்டேன். விழித்த கண்களுடன் செவிகளின்றி அமர்ந்திருந்தேன். அவைநிறைவுக்கான கொம்போசையே என்னை எழுப்பியது. எழுந்து அவைநீங்கும்போது அருகே வந்த சுரேசரிடம் சகதேவனை வரச்சொல்லி ஆணையிட்டேன். சகதேவன் என்னை அணுகி வணங்கினான். அப்பால் பீமனைச் சூழ்ந்து திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் உத்தரனும் நகுலனும் நின்று சிரித்துப்பேசிக்கொண்டிருந்தனர். அரசர்கள் அவர்களைச் சூழ்ந்தனர். அவர்கள் ஒவ்வொரு உடலசைவாலும் என் மீதான தங்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை நோக்கியபின் நான் நடக்க சகதேவன் என் பின்னால் வந்தான். நான் நின்று பெருமூச்சுடன் அவனை நோக்கி “சொல் இளையோனே, நெறிநூலில் பராசரர் சொன்னதை அவ்வண்ணம் சொல்லாக்க நீ ஏன் முடிவெடுத்தாய்?” என்றேன். “மூத்தவரே, நிமித்தநூல் மூன்று வகை குறியுரைகளை சொல்கிறது. உண்மை சொல்லுதல், நலம் உரைத்தல், விழைவு கூறுதல். பெரும்பாலான தருணங்களில் நலத்தையும் விழைவையுமே நிமித்திகன் தேர்ந்தெடுக்கவேண்டும். உண்மை அரிதாகவே தேவையாகிறது” என்றான்.
“எவர் நலம்?” என்று நான் உரக்க கேட்டேன். “எவருடைய விழைவு?” என்று மூச்சிரைத்தேன். “பாண்டவர்களின் நலம், மூத்தவரே” என்று சகதேவன் சொன்னான். “நம் அனைவருடைய நலம்” என்றான். “நிமித்திகன் உலகநலன், குடிநலன், கேட்பவர்நலன், தன்நலன் என நான்கு நலங்களை நாடலாம். கேட்பவர் நலனுக்கு முரணாக இருந்தால் முதலிரு நலன்களை குறைத்துச் சொல்லலாம். தன் நலனுக்கு மாறு என்றால் முதல்மூன்றையும் தவிர்க்கலாம்.” அவன் நகையாடுகிறான் என்று எனக்குத் தோன்றியது. சினத்தை அடக்கியபடி “நீ பீமனும் நகுலனும் அவையும் விழைந்ததை சொன்னாய்” என்றேன்.
“ஆம், ஆனால் பொய்யல்ல. பராசர நூல் அதை சொல்கிறது.” நான் “என்னிடம் சொல்லாடாதே. பராசரநூலில் அது இறுதிவழி என்றே சொல்லப்பட்டுள்ளது. அதை எடுத்துரைத்ததன் வழியாக நீ அதன் பொருளை மாற்றினாய்” என்றேன். “நான் ஒரு சொல்லையும் மாற்றவில்லை” என்றான். “ஆம், ஆனால் சற்றே கோணம் மாற்றினால் சொல்லின் பொருளை மாற்றிவிடமுடியும்” என்றேன். “ஆம்” என்றான். “நீ சொன்னது உண்மையில் அவர்களின் விழைவை அல்ல. உன் விழைவை” என்றேன். “ஆம்” என்று என் விழிகளை நோக்கி அவன் சொன்னான்.
அவனை மேலும் புண்படுத்த உன்னி “நீ வெற்றியை விழைகிறாய். போரை எதிர்நோக்குகிறாய். உன் வஞ்சமே அவையில் எழுந்தது” என்றேன். “ஆம்” என்று அவன் சொன்னான். “இது உண்மை, இதை சொல்” என திரும்பினேன். “எஞ்சிய உண்மையும் உண்டு, மூத்தவரே” என்று சகதேவன் எனக்குப் பின்னால் சொன்னான். நான் திரும்பினேன். என் விழிகளை நோக்கியபடி “நான் சொன்னது நீங்கள் விழைந்த உண்மையையும்தான்” என்றான்.