நான் வசிட்டரின் முதல் மைந்தர் சக்திக்கு அதிருஸ்யந்தி என்னும் மலைமகளில் மைந்தனாகப் பிறந்தவன். விழியறியாது காட்டில் உலவும் கலையறிந்த ஹரிதகர் என்னும் குலத்தில் பிறந்தவள் என் அன்னை. காட்டில் தவமியற்றச் சென்ற என் தந்தை அவளை அவள் நோக்காலேயே உணர்ந்து தன் எண்ணத்தால் கட்டி அருகணையச் செய்தார். அவள் நாணி முன்வந்து நிற்க “என்மேல் நீ கொண்ட காதலை நான் உணர்ந்தேன்” என்றார். சிரித்தபடி “விழியறியாது எதையும் மறைக்கலாம், காமத்தை தவிர” என்றார். அவளும் நகைத்தாள்.
எந்தை என் அன்னையை மணந்து ஹரிதகர் குடியிலேயே தங்கினார். என் அன்னை என்னை கருவுற்றாள். புளிக்கும் மாங்காய் வேண்டுமென்று அவள் கேட்டாள். அது மாங்காய் காய்க்கும் பருவமல்ல. அன்னையிடம் அதை கொண்டுவருவதாகச் சொன்ன பின்னரே தந்தை அதை உணர்ந்தார். சொல்பிழைக்கவேண்டாமென்று எண்ணி அவர் அப்பருவத்தில் காய்க்கும் மாமரம் எங்குள்ளது என்று கேட்டார். கன்மாஷி நதியின் கரையில் ஆண்டுமுழுக்க காய்கொண்டிருக்கும் மரம் ஒன்று உள்ளது என்று குலமுதியவர் சொன்னார். தந்தை கன்மாஷி நதிக்கரைக்கு கிளம்பிச் சென்றார்.
எந்தை காட்டில் சென்றுகொண்டிருக்கையில் எதிரே வந்த கன்மாஷபாதன் ஆணவக் குரலில் “அகல்க, மானுடா!” என ஆணையிட்டான். “நான் அந்தணன், அகலும் வழி கொள்வதில்லை” என்று எந்தை சொன்னார். பேருருக் கொண்ட கன்மாஷபாதன் “உன்னை கொன்று உண்பேன் என்றாலும்கூடவா?” என்றான். “அந்தணர் அனைவரும் அன்னையென மைந்தரால் உண்ணப்படுபவர்களே” என்றார் தந்தை. இடியோசை எழுப்பி அவரைப் பற்றி கொண்டுசென்ற கன்மாஷபாதன் கொன்று சமைத்து மதுவுடன் உண்டான்.
என் அன்னையின் கருவில் நான் வளர்ந்தேன். தந்தை மறைந்த செய்தி கேட்டதும் அன்னை என் முதுதந்தை வசிட்டரின் குருநிலைக்குச் சென்று தங்கினாள். ஒருநாள் வசிட்டரின் கல்வியமர்வில் வேதமோத்து முடித்து அனைவரும் எழுந்த பின்னரும் வேதச்சொல் எழுந்தது. அவர் “எவர் குரல் அது?” என்றார். “மூதாதையே, அது உங்கள் மைந்தரின் மகன். என் வயிற்றில் அவன் எப்போதும் வேதமோதிக்கொண்டே இருக்கிறான்” என்றாள் அன்னை. வசிட்டர் “அவன் தன் இலக்கை வகுத்துக்கொண்டு மண்ணிலிறங்குகிறான்” என்றார்.
கருவிலேயே வேதம் கற்று நான் பிறந்தேன். சின்னாட்களிலேயே என் தந்தை எவ்வண்ணம் கொல்லப்பட்டார் என்று அறிந்தேன். என்னுள் வஞ்சம் நுழைந்தது. நான் கற்ற வேதச்சொல்லை ஏற்று அது வளர்ந்தது. வஞ்சினம் கொண்டவர்களை நாடி விசைகொண்ட தெய்வங்கள் வந்தணைகின்றன. மிக விரைவிலேயே வேதங்களையும் உபவேதங்களையும் வேதாங்கங்களையும் கற்றுத் தேர்ந்தேன். முதுதாதையிடம் விடைபெற்று பூர்ஜவனம் என்னும் காட்டுக்கு சென்றேன்.
அங்கே கங்கையின் துணையாறான கோமதியின் கரையில் அமர்ந்து விக்ரமாக்னி என்னும் பெருவேள்வியை செய்யத் தொடங்கினேன். சொல்முழுத்து வேள்வி நிறைந்தபோது அருகிருந்த மலைமுடி என் குரலை ஏற்று எதிரொலித்தது. “எழுக அனலே, எந்தையரைக் கொன்ற குடியினரை முற்றழித்து மீள்க!” என நான் ஆணையிட்டேன். மலைபிளந்து விண் தொடும் பெருங்குமிழி என அனல் கிளம்பியது. கோமதி அனலொழுக்கு என்றாகியது. அது சென்ற வழியெங்கும் அனல் பரவியது. அரக்கர்களின் ஊர்கள் எரிந்தழிந்தன. அவர்களின் குடிகள் முற்றாக பொசுங்கி சாம்பலாயின. நிரைநிரையென அரக்கர்கள் கோமதியில் விழுந்து மறைந்துகொண்டே இருந்தனர்.
அரக்கர் குலம் முற்றழியும் தருணத்தில்தான் அந்நிகழ்வை என் முதுதாதை வசிட்டர் அறிந்தார். அன்று வேதவேள்விக்கு அனலோம்ப அமர்ந்தபோது எரி எழவில்லை. எட்டுமுறை அரணி கடைந்தும் அனலோன் தோன்றாமை கண்டு மெய்கணித்து நோக்கினார். அனலவன் உண்டு உண்டு உணவு மிகையாகி பசியவிந்து அமைந்திருப்பதை உணர்ந்ததும் நிகழ்ந்ததை அறிந்தார். அங்கிருந்தே கிளம்பி என் வேள்விநிலைக்கு வந்தார். “நிறுத்துக!” என்று கூவினார். என் நாவில் வேதச்சொல் உறைந்தது.
“என்ன செய்கிறாய், அறிவிலி? எக்குலத்தையும் முற்றழிக்க எவருக்கு உரிமை? விதையிலாது அழிவன விண்ணில் எஞ்சும் என அறியாதவனா நீ? விண்ணிலிருந்து ஆயிரம் மடங்கு விசைகொண்டவையாக அவை மண்ணுக்கு வந்தால் உன் குலம் தாங்குமா?” என்று கூவினார். “எது நிகழினும் ஆகுக! எந்தையைக் கொன்று உண்டவனின் குலமழித்தால் மட்டுமே என் வஞ்சம் அடங்கும்” என நான் கூவினேன். “எவருடைய வஞ்சம் இது? நான் உனக்கு இதை அளித்தேனா? வஞ்சம் கொண்ட உள்ளத்தில் கவிதையும் மெய்மையும் குடியேறுமா? மூடா, நீ கற்ற வேதம் நச்சுக்கடலென ஆகிவிட்டிருப்பதை பார். அதை அமுதப்பெருக்கென ஆக்கி விண்சென்ற மாமுனிவர் குடிநிரையில் பிறந்தவனா நீ?” என்று வசிட்டர் என்னை நோக்கி அறைந்தார்.
குழப்பத்தால் என் சினம் அடங்கியது. “அரக்கக் குடியின் இளமைந்தர் செய்த பிழை என்ன? குலமாதர் ஏது பிழைத்தனர்? முதியோரும் இளையோரும் எதன்பொருட்டு மாய்ந்தனர்? வஞ்சம் பெருக்கி நீ அழித்தவர்களுக்கும் உனக்கும் என்ன பகை?” என்று வசிட்டர் கேட்டார். “என் தந்தைக்காக!” என்று நான் சொன்னேன். “எனில் அவனை அழைத்து கேள், அவன் இதை விரும்புகிறானா என்று?” என்றார் வசிட்டர். நான் நீரள்ளி நெருப்பில் வீசி வேதச்சொல் உரைத்து “எந்தையே, எழுக!” என்றேன். எந்தை சக்தி அனலுருவாக எழுந்தார்.
“சொல்லுங்கள், தந்தையே. உங்கள் வஞ்சத்தையே நான் கொண்டேன். உங்கள் பொருட்டே இதை செய்தேன்” என்றேன். “மைந்தா, நான் உன் குருதிவழியில் எழும் மைந்தர் இப்பழிக்கு ஈடாக தங்கள் உயிரளித்து களம்நிறைத்துக் கிடப்பதை நோக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார் தந்தை. “குருக்ஷேத்திரமென்னும் குருதிநிலம். வெட்டுண்டு சிதறிய உடல்கள். துண்டான தலைகள். குருதிப்பெருக்கு… அவர்கள் உயிர்துறக்கும் அக்கணம் அப்படியே காலமென்று நீண்டு கிடக்கிறது. அதில் நான் வாழ்கிறேன்.”
நான் திடுக்கிட்டு எழுந்துவிட்டேன். “செயல்கள் அழியாத் தொடர்கள்” என்றபின் தந்தை மறைந்தார். நான் விம்மியபடி நின்றேன். வசிட்டர் என்னிடம் “மீண்டெழுக, மைந்தா! இவ்வஞ்சத்தில் இருந்து எழாவிட்டால் உன் ஆத்மா மீளா இருளில் மூழ்கியழியும்” என்றார். நான் ஒரு கணத்திரும்பலில் நான் இயற்றிய அனைத்தையும் கண்டேன். உளம் உடைந்து அழுதேன். “மைந்தர்களே, என் மைந்தர்களே” என்று கூவினேன். கருகி எரிந்து நெளிந்துகொண்டிருந்த அரக்கர்குடி மைந்தர்களை நோக்கி கைநீட்டி “என் குடியே! என் மக்களே” என கதறியழுதேன்.
“உன்னில் முளைத்த இவ்வஞ்சத்தின் துளி என்னிடமிருந்தது என உணர்கிறேன். அதை நான் விட்டுவிடாவிடில் என் குடிக்கு மீட்பில்லை” என்றபின் வசிட்டர் குனிந்து மண்ணில் ஒரு பிடி எடுத்து நெஞ்சோடு சேர்த்து “அனைத்தையும் பொறுப்பவளே, நீ சான்றாகுக! என் மைந்தரைக் கொன்ற கன்மாஷபாதன்மேல் எனக்கு ஒரு துளியும் வஞ்சமில்லை. அவன் தன் நிலைமீளட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். பின்னர் தெளிந்த முகத்துடன் “நான் விடுபட்டேன். என் குடியினரில் இனி வஞ்சம் எழாதொழிக!” என்றபின் வசிட்டர் திரும்பிச் சென்றார்.
வசிட்டரின் அருள்பெற்ற கன்மாஷபாதன் மீண்டும் அயோத்திக்கு சென்றான். அவனுடன் வசிட்டரும் உடன்சென்றார். கோட்டை முகப்பை அடைந்ததும் திகைப்புடன் சூழ்ந்துகொண்ட மக்களை நோக்கி வசிட்டர் “இவ்வரசன் இனிமேல் அயோத்தியின் தலைவனாகுக! இவன்மேல் நான் இட்ட தீச்சொல்லை மீளப்பெறுகிறேன். இவன் எனக்கிழைத்த பிழைகளும் முழுமையாக மறைக!” என்றார். அவனை மக்கள் மீண்டும் மித்ரசகனாக ஏற்றுக்கொண்டார்கள்.
நாடாண்டுவந்த அரசி மதயந்தி விழிநீருடன் ஓடிவந்து அரசனை கால்தொட்டு வணங்கி அரண்மனைக்கு அழைத்துச்சென்றாள். அரசனுடன் வசிட்டரும் அரண்மனையிலேயே தங்கினார். ஏழாண்டுகளான பின்னரும் அரசனுக்கு மைந்தர் உருவாகவில்லை. வசிட்டரிட்ட தீச்சொல்லால்தான் அரசனுக்கு மைந்தர் பிறக்கவில்லை என நிமித்திகர் கணித்துரைத்தனர்.
அரசன் வசிட்டரிடம் “முனிவரே, என் அரசியின் கருவில் உங்கள் மைந்தன் பிறக்கவேண்டும். உங்கள் தீச்சொல்லை நீங்கள் நிகர்செய்ய அதுவே வழி. உங்கள் மைந்தரை நான் கொன்றழித்தமைக்கு அதுவே நிகர்” என்றான். வசிட்டர் நியோக முறைப்படி அரசியுடன் மூன்று வாரம் தங்கி மைந்தனை அளித்தார். கல்லென அமைந்து அக்குலம் காக்கவேண்டும் என விழைந்து அம்மைந்தனுக்கு அஸ்மாதன் என பெயரிட்டனர். அஸ்மாதனிலிருந்து இக்ஷுவாகு குலம் பெருகியது.
நான் என் தவநிலையிலிருந்து கிளம்பி காடுகளில் தனித்தலைந்தேன். தனியனாக, பித்தனாக. என் தலையில் சடைவளர்ந்து முழங்காலை தொட்டது. தாடி திரிகளாக மார்பில் கிடந்தது. சொற்கள் உள்நோக்கிச் சென்று ஒடுங்க விழிகள் வெளியே எவரையும் நோக்காதாயின. என் உடலில் அழுக்கு படிந்து பொருக்கென உதிர்ந்தது. நகங்கள் நாகக்குழவிகள் என சுருண்டிருந்தன. ஏழாண்டுகள் அவ்வண்ணம் எங்கெங்கோ அலைந்தேன். என்னை நூறு பெருநிழல்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. தனித்து என்னை கண்டவர்கள் அவற்றை நோக்கி அஞ்சி அலறி ஓடினர்.
ஒருநாள் காட்டுச்சுனை அருகே அமர்ந்திருந்தபோது இளமைந்தன் ஒருவனின் சிரிப்பை கேட்டேன். அவன் நான் அமர்ந்திருந்த பாறையை நோக்கி புதர்களினூடாக ஓடிவந்தான். அவன் துரத்திவந்த முயல் தப்பியோடியது. என்னைக் கண்டு திகைத்து நின்றான். பின்னர் புன்னகைத்து தன் வலக்கையிலிருந்த கனி ஒன்றை எனக்கு நீட்டி “பசிக்கிறதா, தாதையே? இதோ இதை உண்க!” என்றான். மூன்று அகவை நிறைந்த அரக்கர்குலத்துச் சிறுவன். கரிய உருவம், உருண்ட முகம், ஒளிரும் பெரிய வெண்பற்கள்.
அவன் விழிகளை என் விழிகள் சந்தித்தன. என் உள்ளம் அதிர்ந்தது. ஏழாண்டுகளில் முதல்முறையாக நான் விழிதொட்டு முகமறிகிறேன் என உணர்ந்தேன். “நீ என்னை அஞ்சவில்லையா?” என்று அவனிடம் கேட்டேன். “இல்லையே, ஏன் அஞ்சவேண்டும்?” என்றான். “நான் மண்படிந்து மாசுத் தோற்றத்தில் இருக்கிறேன்” என்றேன். அவன் குழம்பி பின்னால் திரும்பி நோக்கினான். பின்னர் வலக்கையிலிருந்த கனியை நீட்டி “இது என் அன்னை” என்றான். இடக்கையிலிருந்த கரிய கிழங்கை நீட்டி “இது நீங்கள். இரண்டுமே இனியவை” என்றான்.
நான் சிரித்துவிட்டேன். “அருகே வா, மைந்தா” என்றேன். அவன் தயங்காமல் அருகே வந்ததும் கைநீட்டி அள்ளி எடுத்து நெஞ்சோடணைத்து அவனை முத்தமிட்டேன். “உன் பெயர் என்ன?” என்றேன். “கிங்கரன்” என்றான். “நீ உன் குலத்திற்கு தலைமைகொள்வாய். உன் குடிபெருகும். உன் குலம் என்றும் அழியாது வாழும்” என அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினேன்.
பின்னால் புதர்களில் வேட்டையாடிய முயல்களுடன் வந்து நின்ற அவன் அன்னை “என் பெயர் கிருதி. இவன் என் மைந்தன்” என்றாள். “நீள்வாழ்வும் அழியாப் புகழும் கொள்வான் உன் மைந்தன்” என்றேன். அவள் என்னை கால்தொட்டு வணங்கினாள். இளமைந்தனின் செவியில் அனலுக்குரிய நுண்சொல்லைச் சொல்லி “இதை தவம் செய்க! நீ வெற்றியை மட்டுமே அடைவாய்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தபோது என் முகம் மலர்ந்திருப்பதை, என் நடையில் துள்ளல் இருப்பதை உணர்ந்தேன். அனைத்திலிருந்தும் விடுபட்டுவிட்டேன் என்று உணர்ந்தேன். அங்கிருந்த சுனையில் இறங்கி நீராடினேன். அருகிலிருந்த அரக்கர்குடிச் சிற்றூர் ஒன்றுக்குள் நுழைந்து “நான் வசிட்டரின் பெயர்மைந்தன் பராசரன். உணவளித்து என்னை ஓம்புக, அன்னையே!” என்றேன். மரத் தாலத்தில் அன்னத்துடன், கனிந்த விழிகளுடன் அரக்கர் குலமகள் ஒருத்தி வெளியே வந்து எனக்கு அமுதீந்தாள்.
வயிறு நிறைந்ததும் அவள் திண்ணையிலேயே படுத்து விழிமயங்கினேன். அரைத்துயிலில் என் மார்பின்மேல் ஒரு மலர்போல் பெண்குழந்தை ஒன்று அமர்ந்திருப்பதாக உணர்ந்தேன். அதன் மெல்லிய உடலை தொட்டேன். சிறுதோள்களை, குருத்துக்கைகளை வருடிக்கொண்டிருந்தேன். அது என்மேல் மார்பமைத்துப் படுத்து “தந்தையே, கதை சொல்க!” என்றது. “என்ன கதை?” என்றேன். “எல்லா கதையும்” என்று அது சொன்னது. “ஏன் உனக்கு கதை பிடித்துள்ளது?” என்றேன். “ஏனென்றால் கதை மீண்டும் நிகழும்” என்றது.
என் உடல் அதிர்ந்து சில கணங்கள் விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. அத்தனை தெளிவாக அறிந்தவிந்த கவிமுனிவரும் சொன்னதில்லை. இங்கு நிகழும் எதுவும் மீள நிகழாது. ஆகவேதான் கதைகள். மீளமீள நிகழ்த்திக்கொள்பவை, திரும்பத்திரும்ப வாழ உகந்தவை. “ஆம், சொல்கிறேன்” என்று அவள் புன்தலை மென்குழல் கற்றைகளை வருடியபடி சொல்லலானேன். “இவ்வுலகம் ஒரு பெரும் தொல்கதை.”
அவ்வரியுடன் விழித்துக்கொண்டேன். கைகளை நெஞ்சோடு சேர்த்தபடி படுத்திருந்தபோது அச்சொற்கள் என்னுள் ஓடிக்கொண்டிருந்தன. எழுந்து அமர்ந்தபோது அவ்வரி பெருகியது. கதையாகி, கதைத்தொடராகியது. புராணசம்ஹிதையின் முதல் வரி எழுந்தது அவ்வாறுதான்.
“மைந்தா, கொடும்பழியிலிருந்து, ஆறா வஞ்சத்திலிருந்து, ஆற்றொணாத் துயரிலிருந்தே பெருங்காவியங்கள் எழுகின்றன என்றுணர்க! நீ இளைய யாதவரின் முற்றத்தில் மிதித்த குருதி குருக்ஷேத்திரக் களத்திலிருந்து வந்தது அல்ல. உன் தந்தையாகிய நான் இயற்றிய கொலைக்களத்திலிருந்து வந்தது. நீ அளித்தாகவேண்டிய கடன் அது” என்றார் பராசரர். வியாசவனத்தின் காட்டில் அரையிருளில் ஒரு மரநிழல் என அவர் தோன்றினார்.
வியாசர் “தந்தையே, நம் மூதாதையான வசிட்டர் வந்து அரக்கர்குடி முற்றழியாமல் காக்கும்படி ஊழ் அமைந்தது எதன்பொருட்டு?” என்றார். “அவர்கள் நம் குடிமேல் வஞ்சம் தீர்க்கவேண்டும். மண்ணில் தீர்க்கப்படாத பழிகள் விண்ணில் பெருகும்” என்றார் பராசரர். வியாசர் சில கணங்களுக்குப் பின் தலையசைத்து “ஆம், அக்கணக்கை கொடுத்து முடித்தாகவேண்டும்” என்றார்.
வியாசர் விழித்துக்கொண்டபோது தன் உடல் எரிந்து கருகி மழையில் நனைந்து நைந்த காட்டுச்சுள்ளியென ஆற்றலிழந்திருப்பதை உணர்ந்தார். அமர்ந்திருந்த தர்ப்பைப் பாய்மேல் சரிந்து துயில்கொண்டிருந்தார். மெல்ல கையூன்றி எழுந்து அமர்ந்தார். ஆயிரம் கதைகளாக சூதர்களின் பாடலில் வாழ்ந்த அவர் குருஷேத்திரத்தின் வடக்குமூலையில் பரீட்சித்தால் அமைக்கப்பட்ட வியாசவனம் என்னும் சிறுசோலையில் அக்கதைகளில் ஒன்றில் இருந்து என உளம் மீண்டார்.
அன்று காலை தன் பெருங்காவியத்தின் இறுதிச் சொற்களை எழுதி முடித்திருந்தார். அவர் வியாசவனத்தில் குடியேறிய அன்று தன்னுள் எழுந்த சொல்லலைகளுடன் அமர்ந்திருக்கையில் புதர்களை விலக்கி வந்த மதகளிறு ஒன்று தலைகுலுக்கி, காதுகளை விசிறி, துதிக்கை சுழற்றி, ஓங்காரமெனப் பிளிறி, அவர் இருந்த கல்லாலமரத்தை குத்தியது. திரும்பி தலையை எடுத்து மேலும் இருமுறை ஓங்காரமெழுப்பி அது பின்வாங்கியபோது அதன் தந்தங்களில் ஒன்று ஒடிந்து மரத்தில் பதிந்திருப்பதை கண்டார். அதை எடுத்து சிவந்த மென்மணல் விரிந்த கதுப்பில் ஓம் என எழுதினார். அதுவே அவருடைய காவியத்தின் முதல் சொல்லாக அமைந்தது.
ஒற்றைக்கொம்பனை தன்முன் நிறுவி அவர் எழுதிய காவியத்தின் கடைசி சொல்லாகவும் ஓங்காரமே அமைந்தது. அந்த ஒலி அவருள் மட்டுமே ஒலித்தது. முழுமையிலிருந்து முழுமைநோக்கி வழிந்த காவியத்தை எழுதி நிறுத்திய தாழை மடலை மதகளிற்றுமுகத்தானின் மண்சிலைக்கு முன்னால் வைத்துவிட்டு மெலிந்த கைகளைக் கூப்பியபடி கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட அமர்ந்திருந்தார். பின்னர் விழிகள் மூட வாய் துயிலில் மெல்ல திறக்க “தந்தையே” என்றார். அவர்முன் எழுந்த பராசரர் “கதைகளால் ஆனது பிரம்மம்” என்றார். “ஆம், மழை அனைத்துக் குருதியையும் சாம்பலையும் கழுவிச்செல்கிறது. அனைத்து மாசுகளையும் மண்ணுக்கு உரமாக்குகிறது” என்று அவர் சொன்னார்.
விடிந்துவிட்டதைச் சொல்ல அவரது மாணவர் பைலர் குடிலுக்குள் வந்தபோது குறுகிய உடலுடன் அவர் ஒடுங்கி அமர்ந்து மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டார். பைலர் மெல்ல வந்து தாழை மடலை கையிலெடுத்து படித்தார். “நாராயணம் நமஸ்கிருத்ய” என்றதுமே அவரது கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. வெளியே காத்திருந்த ஜைமினியும் உள்ளே வந்து பைலரின் உணர்ச்சியிலிருந்தே உய்த்துக்கொண்டு அவரும் கண்ணீர்விட ஆரம்பித்தார்.
அன்று வியாசவனத்தில் ஒரு திருவிழா கூடியது. சீடர்களும் அவர்களின் மாணவர்களும் சேர்ந்து வியாசவனத்தின் அத்தனை குடில்களையும் ஈச்சங்குருத்துக்களாலும் தளிரிலைகளாலும் மலர்களாலும் அலங்கரித்தனர். மையக் குடிலில் பட்டுமணல் விரித்து நடுவே முகக்கையனை நிறுவி அவர் காலடியில் வைத்த செம்பட்டுப்பீடத்தில் அடுக்கடுக்காக காவியச்சுவடிகளை குவித்துவைத்து அருகே அகல்விளக்கை ஏற்றிவைத்தனர்.
அது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் பேராசிரியரின் பாதங்களைப் பணிந்து அவரளித்த ஞானத்திற்கு கைமாறாக தங்களை முழுதளிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். “இச்சொல் இங்கு வாழவேண்டும். இது இந்நிலத்தின் விதைக்களஞ்சியம்” என்றார் ஜைமினி.
அப்போது அஸ்தினபுரியிலிருந்து நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வைசம்பாயனரும் அமைச்சர் பத்மபாதரும் வந்து வியாசவனத்தில் இறங்கினர். பத்மபாதருக்கு வைசம்பாயனர் வியாசரின் வரலாற்றையும் அவரைப்பற்றிய சூதர்களின் கதைகளையும் சொல்லிக்கொண்டு வந்தார். பாரதத்தில் வாழும் ஏழு நீடுவாழிகளில் ஒருவர் வியாசர் என்றார் வைசம்பாயனர். மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா, வியாசர் என அவர்களை சூதர்களின் பாடல்கள் பட்டியலிடுகின்றன. கொடையால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.
வியாசவனத்துக்குள் நுழைந்ததும் பைலரும் ஜைமினியும் அவரை நோக்கி ஓடிச்சென்று கண்ணீருடன் ஆரத்தழுவிக்கொண்டனர். காவியம் முடிவுற்ற செய்தியைக் கேட்டதும் “இது ஊழ்த்தருணம் போலும். அங்கே குருதேவரின் ஞானத்தை சோதிக்க ஒருவன் தென்திசையிலிருந்து வந்து நிற்கிறான்” என்றார் வைசம்பாயனர். “அவரை கொண்டுசெல்லவே வந்தோம்” என்றார் பத்மபாதர்.
அவர்கள் நிகழ்ந்ததை சொன்னதும் வியாசரை அவ்வளவு தொலைவுக்கு ரதத்தில் கொண்டு செல்லமுடியுமா என்று பைலரும் ஜைமினியும் ஐயம் தெரிவித்தனர். “வேறு வழியில்லை. இன்றைய நாளில் அவரது குரல் அங்கே ஒலித்தாகவேண்டும்” என்றார் வைசம்பாயனர். “தேரின் அசைவை அவர் உடல் அறியாதிருக்க தூளியில் அவரை கொண்டுசெல்லலாம். அன்னத்தூவிகள் செறிந்த மெத்தையும் உள்ளது.”
குடிலுக்கு வெளியே பின்திண்ணையில் வியாசர் அமர்ந்திருப்பதை வைசம்பாயனர் கண்டு சொல்லிலாது வணங்கி நின்றார். இறப்பை வென்றாலும் மூப்பை வெல்லமுடியாத உடல் தசை வற்றி மட்கி உதிரவிருக்கும் சருகு போலிருந்தது. ஒரு காலத்தில் தாடியாகவும் தலைமயிராகவும் விழுதுவிட்டிருந்த கனத்த சடைக்கற்றைகள் முழுமையாகவே உதிர்ந்துபோய், தேமல்கள் பரவிச் சுருங்கிய தோல்மூடிய மண்டைஓடு தெரிந்தது. ஒன்றுடன் ஒன்று ஏறிப்பின்னிய விரல்களில் நகங்கள் உள்நோக்கி சுருண்டிருக்க, கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் தளர்ந்த கொடிகள்போல் ஓடின. உள்ளடங்கிய வாயும் தொங்கிய நாசியும், சிப்பிகள்போன்று மூடிய கண்களுமாக அங்கே இருந்த அவருக்குள் அவர் நெடுந்தொலைவில் இருந்துகொண்டிருந்தார்.
வைசம்பாயனர் வியாசரின் பாதங்களை வணங்கியபோது அவரது கண்கள் அதிர்ந்து பின்பு திறந்தன. கரிய உதடுகள் மெல்ல அசைந்தன. வைசம்பாயனர் வியாசரிடம் அவரை ஜனமேஜயனின் அவைக்கு கொண்டுசெல்ல அழைப்பு வந்திருப்பதை சொன்னார். “ஜரத்காருவின் மைந்தன் ஆஸ்திகன் வந்திருக்கிறானா?” என்றார் வியாசர். அது வைசம்பாயனருக்கு வியப்பளிக்கவில்லை. “ஆமாம், குருநாதரே… தங்கள் சொல்லுக்காக அங்கே அவை காத்திருக்கிறது” என்றார். செல்வோம் என வியாசர் கையசைத்தார். தனக்குள் என “ஒரு துளி மிச்சமிருக்கவேண்டும்…” என்றார். அவர் சொல்வது அவர்களுக்கு புரியவில்லை. “ஒரு சொல் எஞ்சியிருக்கவேண்டும்” என்று வியாசர் மீண்டும் சொன்னார்.