ஐந்து நீளமான அத்தியாயங்களைக் கொண்ட கஜராஜன் கேசவனின் கதையை ( மத்தகம் ) ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
சிறு குழந்தையாய் இருக்கும்போது செய்யும் சேட்டையால் ஆரம்பிக்கும் இளைய தம்புரானுக்கும் அவனுக்குமான உறவு அவர் இறக்கும் வரையிலும் தொடர்கிறது. பாகன்களும், ஆசான்களும் இருப்பினும் அவன் இளைய தம்பிரானின் அன்பால் மட்டுமே கட்டுப்பட்டவன். உள்ளார்ந்த நட்புக் கொண்ட நண்பனாக ராஜாவும், கேசவனும் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அவனது சேவகர்களே.
அவன் திருவனந்தபுரத்திற்கு வெள்ளத்தில் தனியாளாய் ஓடுவதும், அவனைத்தேடி பாகன்கள் உயிரைக்கொடுத்து ஓடுவதும் அப்படியே கண்முன் நடக்கின்றது.
அவனது சேட்டைகள் மற்றும் நற்குணங்கள் எல்லாம் ஆங்காங்கே கதையில் சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட யானைப்பாகன்களின் வாழ்க்கையை கேசவன் கதையினூடாக அறிந்து கொள்ளவும் முடிகிறது. அருனாச்சலத்தைக்கொன்ற பாகனின் சாவு கேசவனின் சோகத்தால் தப்பிக்கிறது என நினைக்கிறேன். இல்லையெனில் அவனது கதையும் முடிந்து விட்டிருக்கும்.
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். படிப்பதைக்கூட உணர முடியாமல் கதையுடன் நாம் இணைந்த தோற்றத்தை உண்டாக்கியது மத்தகம்.
மிக்க நன்றி ஜெயமோகன்.
ஜெயக்குமார்
இப்போது தான் படித்து முடித்தேன். கிடைக்கும் நேரத்தில் சறுக சிறுக அனுபவித்து படித்தது ! சொல்ல ஆரம்பித்தால் ஒவ்வொரு அழகையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
தம்புரானின் மரணத்துடன் கேசவனின் மரணமும் நிகழ்ந்தது சிலிர்கக வைத்தது. யானைகள் கொல்லும் பாகன்களின் மனைவிமார்களின் கதி போன்று கேசவனுக்கும் நேர்ந்தது மனதை என்னமோ செய்தது.
எல்லாம் இருப்பினும், கதைசொல்லி பாகனுக்கு குறுக்கு வழிகளில் கிடைக்கும் வெற்றி மேல் வெற்றிகளும், அதில் அவன் அனுபவிக்கும் குரூர சந்தோசமும் அவனுடைய நல்ல நேரத்தைக் காட்டுகிறது என்றல்லாமல் வேறென்ன சொல்ல..?!
அன்புடன்,
வினோத்
**
அன்புள்ள ஜெமோ
நான் உங்களுக்கு ஒருமுறை கடிதம் எழுதியிருக்கிறேன். விஷ்ணுபுரம் படித்துவிட்டு எழுதினேன்.அப்போது தூத்துக்குடியிலே இருந்தேன். ஞாபகம் இருக்கலாம். என் சொந்த ஊர் புத்தேரிதான்.
சமீபத்தில் மத்தகம் கதை உங்கள் சமீபத்திய இரு கதைகளிலும் இருக்கும் கட்டுப்பாடு இல்லாமல் கட்டற்ற பாய்ச்சலாக உள்ளது ஜெ. இதை பாஸிட்டிவ் ஆகவும் சொல்லலாம், நெகட்டிவ் ஆகவும் சொல்லலாம். இந்தக்கதைகளில் எல்லாம் இயல்பான ஒரு கவித்வம் பீரிட்டுச்செல்வதைக் காணமுடிகிறது. நான் தமிழில் கவிதைகளை தொடர்ச்சியாக படிப்பவன். உங்களுடைய இந்தக்கதைகளில் உள்ள கவித்துவத்தின் சிறிய பகுதியைக்கூட நம் கவிஞர்கள் அடைவதில்லையே என்ற எண்ணம் எனக்கு உருவானது. ஆற்றை வானத்தின் தும்பிக்கை என்று மத்தகம் கதையிலே சாதாரணமாகச் சொல்லிச்செல்கிறீர்கள். அதுவே ஒரு அற்புதமான கவிதை. கேசவனின் மத்தகத்தில் யாரோ இருப்பது போன்ற பிரமை உருவாவதும், அதற்குக் காரணம் அவன் அப்படி நடந்துகொள்வதும்தான் என்ற இடமும் சரி அதேபோல ஆற்றுக்கரையில் கேசவன் அலங்காரம்செய்யப்படும்போது அவன் அப்படியே மறைந்து போய்விடுவதும் சரி என்ன ஒரு கவித்துவமான இடங்கள். ஊமைச்செந்நாயிலே அந்த பச்சைப்பாம்பும், கொல்லப்படும் மானையும் எல்லாம் தனித்த கவிதைகளாகவே நான் காண்கிறேன். சாதாரணமாக இருக்கக்கூடிய வரிகள் அவை. கவித்துவத்துக்காக அவை எழுதப்படவில்லை. ஆனால் அப்படியே அவை கவிதையாக ஆகிவிடுகின்றன. வாழ்த்துக்கள்
சீதாராம்
ஐயா,
சிலகாலமாகவே உங்களுக்கு எழுதும்போது அதிகபட்சம் பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுவது என்ற எண்ணம் கொண்டிருந்தபோதும், இந்தக்கடிதம் தானே நீண்டுவிட்டது. மன்னிக்கவும்.
மத்தகம் என்ற குறுநாவலை நேற்றிரவு படித்துமுடித்தேன்.அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது இரவு இரண்டு மணியாகிவிட்டபோதும், வீட்டில் சென்று படிக்கவேண்டும் என்று அச்செடுத்துக்கொண்டு போய்விட்டேன். படித்து முடிக்கும்போது விடிந்துவிட்டது. அப்படியே கிளம்பி மீண்டும் அலுவலகம் வந்து சேர்ந்தாகிவிட்டது.
மத்தகம் படித்த அனுபவத்தை, பிரமிப்பு அல்லது அற்புதம் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட இயலாது.படித்துமுடிக்கும் வரை ஒரு யானை என்னருகே நிற்பதுபோன்ற உணர்வு இருந்துகொண்டிருந்தது. அவ்வப்போது என் தோளில் துதிக்கையால் தொடுவதுபோன்ற ஒரு உணர்வும். கேசவனோடே அந்த மழையில் நானும் பயனித்ததுபோன்றதொரு உணர்வு. யானைதான் எத்தனை அழகான ஒரு ஜீவன். எழுத்துதான் எத்தனை வலிமையானவை. படித்து முடித்ததும் கேசவனோடே வாழ்ந்துமுடித்ததுபோல இருந்தது. யானைகளின் ஒரு நுண்ணிய அசைவையும்கூட விட்டுவிடாமல் விவரிக்க உங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்று புரியவில்லை. யானைகளை நீங்கள் கூர்ந்து நோக்குவதும், யானைகளின் மீது உங்களுக்கு அலாதியான ப்ரியம் இருப்பதையும், விஷ்ணுபுரம் முதல், உங்கள் காசிரங்கா கட்டுரைகள் வரை படிக்கும் போது தெளிவாகிறது. நீங்கள் சிலகாலம் யானை பாகனாக இருந்திருப்பீரோ என்ற ஐயமும் உள்ளது.(உண்மைதானா?)
அருணாச்சலம்,சுப்புக்கண்,சீதரன் ஆசான் பாத்திரப்படைப்பு அற்புதம். அம்பிளியை பற்றிய விவரனைகள் மிகைப்படுத்தப்படவில்லை என்று இருக்குமானால் யார் தான் மோகிக்கமாட்டார்கள்? உதாசீனப்படுத்தும் பெண்மீது ஒருவித கவர்ச்சி தோன்றுவது இயற்கை ஆண்களுக்கு விதித்தது போலும்.
நீலம்மை போன்ற பெண்களை பார்த்ததுண்டு.ஹைதராபாதில் இருந்தபோது பெண்களை ஆட்டோக்களில் அடித்து ஏற்றி அழ அழ கூட்டிச்செல்வதை பார்த்து நின்றிருக்கிறேன். அழுது மறுத்த ஒரு பெண்ணை இருவர் ஆட்டோவில் கால் வைக்கும் இடத்தில் தள்ளி காலைவைத்து அழுத்திச்சென்ற காட்சி தந்த அதிர்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. வேசியானாலும் விருப்பமில்லாதவளை புணர்தல் மிருகத்திற்கும் கீழானதாகத்தானே இருக்கமுடியும். ஒருவேளை அந்த அழுகையும் ஆண்களின் மோகத்தை கிளறுவதோ என்றும் தோன்றுகிறது. பெண்கள் மீதான ஆண்களில் ஆணவம், அவளை கதறி அழவைப்பதில் மிகவும் அசிங்கமாக வெளிப்படுவதாக நினைக்கிறேன். பரிதாபப்படவைக்குமொரு பாத்திரம். அருணாச்சலத்தின் மனைவியைப்போன்ற முதிர்ந்த பெண்களின் காமத்தின் வெளிப்பாடுதான் எத்தனை அருவருப்பானது. உடலை பயன்படுத்திக்கொள்ளும் நிலை கொடுமை என்றாலும் அது நிதர்சனத்தின் உச்சமாக வெளிப்பட்டிருக்கிறது.
இந்தக்கதையின் மையப்பாத்திரம் கேசவன் தான் என்னும்போதும், பரமனின் பாத்திரப்படைப்பு வித்யாசமானதென்றாலும், என்னால் அப்பாத்திரத்தினூடே வாழ்ந்துபார்க்க முடிகிறது. அத்தனை மனிதரும் இத்தனை குரூரங்களும்,மன விகாரங்களும் உடையவர்களாக இருப்பினும் வெளிப்படுத்தாமல் இருப்பதாலோ, சமத்காரமான வெளிப்பாட்டினாலோ நல்லவர்களாகிவிடுகிறார்கள்.சிறுவயதில் பாலியல் ரீதியான பயன்படுத்துதலுக்கு ஆளானவர்களின் மனம் இப்படித்தான் இருக்குமோ? காமத்தை அவர்கள் ஒரு அதிகார வெளிப்பாடாக்கிக் கொள்ளுவதாகவே படுகிறது. இவர்களைப்போன்றவர்களை மனதால் காயப்படுத்தத்தான் கெட்டவார்த்தைகள் என்று அழைக்கப்படுபவை பெரும்பாலும் காமம் சார்ந்து இருக்கின்றனவோ என்னவோ.