ஆயுதம் செய்தல்

m777-18-1495100864

ஆசிரியருக்கு,

சென்னையில் நடைபெற்ற இந்த ஆயுத தளவாட கண்காட்சி பற்றி பார்த்திருப்பீர்கள். இது நாம் காந்தி தேசம் எனக் கூறிக் கொள்வதன் அடிப்படைக்கு எதிராக உள்ளது. இது ஒரு அறப்  பிறழ்வு எனவே நான் எண்ணுகிறேன்.

இரண்டாம் உலக  போரில் ஜெர்மானிய வதை முகாமுக்கு எதிராக ஜெர்மானிய அறிவு ஜீவிகளோ அல்லது சமூகப் போராளிகளோ அல்லது பொதுமக்களோ எதுவும் கருத்து தெரிவித்ததாக பெரிதாக வரலாற்றில்  இல்லை , அதே போல சீனாவில், கொரியாவில், மலேயாவில் கட்டவிழ்க்கப்பட்ட மனிதத்தன்மையற்ற வன்முறைக்கு எதிராக ஜப்பானியக் குரல் பெரிதாக எதுவும் இல்லை

விதிவிலக்காக ஈழப் பிரச்னையில் சில சிங்கள அறிவுஜீவிகள் எழுதிய கட்டுரைகளை நான் காலச் சுவடில் வாசித்துள்ளேன். இது தவிர்த்து அமெரிக்கர்கள் ஈராக்கில் , ஆப்கானில் அடிப்படையற்று தாக்கியபோது  அவர்களின் கூட்டு மனசாட்சி மௌனமாகவே இருந்துள்ளது.

சுசர்லாந்து,சுவீடன், அமெரிக்கா  போன்ற வளர்ந்த நாடுகள் உலகெங்கும் வர்த்தக ரீதியாக ஆயுதங்களை அரசிற்கும் போராளிகளுக்கும் சட்ட ரீதியாகவும் கள்ளச்  சந்தையிலும் விற்று ஈட்டிய பொருளில் தமது நாட்டில் வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள், வரி வெட்டளிக்கிறார்கள், மக்களும் மகிழ்ந்து சொகுசில்  திளைக்கிறார்கள். ஆயுத விற்பனை செய்யும் நாடுகள் அமைதி ஏற்படாவண்ணம் கவனமாக தமது சந்தையை காக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன் மோடி அரசு வர்த்தக ரீதியாக இந்த ஆயுதவிற்பனை என்னும் கொக்கை முடிவை எடுத்திருக்கிறது, விளைவு  தான் தற்போதைய சென்னை ஆயுத தளவாட கண்காட்சி. இதற்கு எதிர்பாக ஒரு குரலும் இங்கு இல்லை.

ஆயுத தயாரிப்பில் சுய சார்பு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் வர்த்தக ரீதியாக ஆயுத தளவாட விற்பனை என்பது மூன்றாம் உலக நாடுகளின் குருதியில் கை நனைப்பது, காந்தியத்திற்கு எதிரானது. இது குறித்து நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் ?

கிருஷ்ணன்,

ஈரோடு.

***

அன்புள்ள கிருஷ்ணன்.

வர வர ஒரு மனநிலை இங்கே ஓங்கி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் மட்டுமே கருத்துச் சொல்லவேண்டும். சூழியல், பொது அரசியல் எதில் எவர் எக்கருத்தைச் சொன்னாலும் நிபுணர்கள் என சிலர் பாய்ந்து வந்து ‘நீ வாயை மூடு,நிபுணர் கருத்து சொல்லட்டும்’ என்கிறார்கள். அறிவித்துக்கொள்ளும் நிபுணர்களும் அதில் உண்டு. ஜனநாயகத்தை நிபுணர்கள் பார்த்துக்கொள்ளட்டும் சாமானியர்கள் பிழைப்பைப் பார்த்துக்கொள்ளட்டும் என்னும் சூழல்

ஆகவே ஒரு நிபுணரிடம் கேட்டேன். பாதுகாப்புத்துறை பற்றி ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கட்டுரைகள் எழுதுபவர். அவர் சொன்னதில் புள்ளிவிவரம் நீக்கப்பட்ட செய்தி இது.

இந்தியாவின் தேசியநிதியில் மிகப்பெரும்பகுதியை நாம் ஆயுதம் வாங்கவே செலவிடுகிறோம். நமக்கு கடன் அளிக்கும் சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆணைகளில் முக்கியமானது நாம் ஆயுதம், செய்தித்தொடர்பு ஆகியவற்றில் உயர்தொழில்நுட்ப பொருட்களை உற்பத்திச்செய்யக் கூடாது. அவற்றை இறக்குமதிதான் செய்யவேண்டும் என்பது. அந்நிதிநிறுவனங்கள் அளிக்கும் நிதியில் பெரும்பகுதி ஆயுதம் வாங்கவே செலவிடப்படும். ஆயுதங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்களே பல்வேறு வளைந்த வழிகளினூடாக அந்நிதிநிறுவனத்தில் முதலீடும் செய்திருக்கின்றன.

இது ஒரு நச்சுச்சுழல். இதை உடைக்க இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளால் இயலவில்லை. இன்று சர்வதேச சூழல் சற்று மாறியிருப்பதனால் அரசியல் அழுத்தங்கள் சற்றுக் குறைந்திருக்கின்றன. ஆகவே இங்கேயே ஆயுதங்களை உற்பத்தி செய்யமுற்படுகிறார்கள். அதில் மிகையை ஏற்றுமதி செய்வார்கள். அந்நிதி நம்மால் உற்பத்தி செய்யப்படாத ஆயுதங்களை வாங்கச் செலவிடப்படும். ஆயுத உற்பத்தியால் நமக்கு அன்னியச்செலாவணி மிச்சமாகும். பொருளியல் வளர்ச்சி ஏற்படும்.

ஆயுதம் உற்பத்தி செய்யும் நாடுகளே உலகின் வலிமையான நாடுகள். பொருளியல் திறன் கொண்ட நாடுகளும் அவையே. ஆகவே ஆயுதத்தை உற்பத்திசெய்யாமலிருப்பது இயலாது. ஆயுதங்களால் போர் வருவதில்லை. ஆயுதச்சமநிலையின்மையால்தான் போர் வருகின்றது. விரும்பியோ விரும்பாமலோ உலகின் பொருளியலே ஆயுதப்பொருளியல்தான். நம் மக்களுக்கு சோறும் துணியும் வீடும் வேண்டுமென்றால் ஆயுதம் செய்தாகவேண்டும். வேறுவழியே இல்லை.

இன்னொரு நிபுணரிடம் கேட்டேன். இவரும் மேற்குறிப்பிட்ட தகுதிகள் கொண்டவர். கூடுதலாக கதைகளும் நாவல்களும் எழுதுபவர்.ஆயுதம் என்பது எப்படியானாலும் எங்கோ போரில் பயன்படுத்தப்பட்டே தீரும். பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் கையாள்பவை இரண்டாம்கட்ட பயன்பாட்டிலிருக்கும் ஆயுதங்கள்.

ஆயுத உற்பத்தி என்பது எந்நிலையிலும் அழிவையே அளிக்கும். அதைத்தடுக்க ஒரே வழி ஆயுதப்போட்டியில் இருந்து பின்வாங்குவதே. அதை பொருளியல்போட்டியாக மாற்றிக்கொள்வது. பூசல்களைக் கூடுமானவரை தவிர்ப்பது, உள்நாட்டுச்சிக்கல்களை பேசித்தீர்ப்பது ஆகியவற்றின் வழியாக ஆயுத அடிமைத்தனத்தைத் தவிர்க்கலாம்

வளர்ந்த நாடுகள் ஆயுதங்களை உருவாக்கி நம்மை சுரண்டுகின்றன. அதற்குப்பதில் நாம் ஆயுதங்களை உருவாக்கி ஆப்ரிக்கா போன்ற நாடுகளைச் சுரண்டுவது அல்ல. அது மறைமுகமாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் செய்வதை நாம் ஆதரிப்பதாகவே பொருள் அளிக்கும். அவர்கள் நம்மைச் சுரண்டுவதன் அதே விதியே நம்மாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடைசியாக, ஆயுத உற்பத்தி மட்டும் ஒருபோதும் உண்மையான பொருளியல் வளர்ச்சியை உருவாக்காது. ஆயுதங்களை விற்க போர்களையும் உருவாக்கவேண்டும், அமெரிக்கா செய்வதுபோல. அது மேலும் பெரிய தார்மிக வீழ்ச்சியையே அளிக்கும். நம்மையும் போர்ச்சுழலில் சிக்கவைத்துவிடும். போர் என்னும் பெரும் ஊதாரித்தனத்தில் நாமும் சிக்கிக்கொள்வோம், அமெரிக்கா சிக்கியிருப்பதுபோல.

இருதரப்பு கருத்துக்களையும் கேட்டேன். இன்று நிபுணர்கள் சாதாரண மனிதர்கள் எதிர்த்துப்பேசமுடியாதபடி பேசும் ஆற்றல்கொண்டவர்கள். பெரும்பாலானவர்கள் அரசியல்நிலைபாடு கொண்டவர்கள். உண்மையான நிலைபாடு சிலருக்கு. சிலர் பணியமர்த்தப்பட்டவர்கள். தங்கள் தரப்பை முழுமையாக நியாயப்படுத்திவிடுவார்கள். இரண்டாம் தரப்பைச் சொன்னவர் இடதுசாரி. அவரிடம் ருஷ்யா நமக்கு ஆயுதங்கள் விற்றதைப்பற்றிக் கேட்கமுடியாது. முதல் தரப்பைச் சொன்னவர் வலதுசாரி. அவரிடம் அமெரிக்கா செய்வதை நாமும் செய்யலாமா என்று கேட்கமுடியாது.

ஆகவே ஒரு வகையான பாமரத்தனத்துடன் ஆயுத உற்பத்தியின் வழியாக வரும் செல்வம் அழிவையே அளிக்கும். அதை ஏற்றுமதி செய்து உலகில் அழிவை பரப்புவது பெரும்பாவம் என்றநிலைபாட்டையே நான் சென்றடைகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைகவிதை மொழியாக்கம் -விவாதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-25