யாதவரே, நான் தவிர்க்கமுடியாத இடத்தை உருவாக்கிவிட்டு சாத்தன் அமர்ந்திருந்தார். “காவிய ஆசிரியன் என்பது தீயூழ் என எவரும் சொல்லி கேட்டதில்லை. காலத்தை வென்று வாழ்பவன் அல்லவா அவன்?” என்றேன். “ஆம், முதற்கவிஞன் கொல்லப்பட்ட அன்றிலை நோக்கி விடுத்த விழிநீர்த்துளியின் ஈரம் இன்னமும் காயவில்லை என்பார்கள். தலைமுறைகளைக் கடந்து, காலப்பெருக்கைத் தாண்டி நிலைகொள்கிறதென்றால் அது எத்தனை பெரிய துயர்!” என்றார்.
என் உள்ளம் நடுங்கியது. “அத்தகைய பெருந்துயர் எனக்கும் காத்திருக்கிறது என்கிறீர்களா?” என்றேன். அவர் அதற்கு நேரடியாக மறுமொழி சொல்லவில்லை. “நீர் கிருதயுகத்தில் வாழ்ந்த சத்யகன் என்னும் கிரௌஞ்சத்தின் கதையை அறிந்திருக்கிறீரா?” என்று கேட்டார். “இல்லை” என்றேன். அவர் அக்கதையை சொன்னார்.
சத்யகனும் சத்யகியும் இமயச்சாரலில் அமைந்த புஷ்கரம் எனும் குளிர்வாவியில் வாழ்ந்தனர். சத்யகன் விண்ணிலெரியும் சூரியனை நோக்கிமகிழும் இயல்பு கொண்டிருந்தான். “பறவைகள் விண்ணில் பறப்பவை, மண்ணை நோக்குபவை. விண்நோக்கும் விழி நமக்கில்லை. மண்நோக்க படைக்கப்பட்டவையாதலால் அவை விண்ணின் விரிவையும் ஒளியையும் தாங்கவியலாது, நமக்குரியது நீரிலெழும் சூரியனே” என்று சத்யகி கணவனிடம் மீண்டும் மீண்டும் சொன்னாள். “நீர்ச்சூரியனும் சூரியனே என்று நமக்கு முன்னோர் கற்பித்திருக்கிறார்கள். நமக்கென சமைக்கப்பட்ட குளிர்கதிரோன் அவன்” என்றாள்.
சத்யகன் அவளை இகழ்ந்து “ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவன் மீறியாகவேண்டும் என்பதே நெறிகளின் இயல்பு. இல்லையேல் அவை உறைந்து அவ்வுயிர்க்குலத்தையே சிறையிடக்கூடும் என்று முன்னோர் உரைத்ததுண்டு” என்று மறுமொழி சொன்னான். “நாரை என இச்சிற்றுடலுக்குள் தன்னை நிறுத்திக்கொள்பவனுக்குரியது நீர்ச்சூரியன். தன்னை உடலில் இருந்து விடுவித்துக்கொள்பவர்களுக்குரியது வானம், அங்கு ஒளிரும் சூரியன்.” சத்யகி சீற்றத்துடன் “அறிந்து பேசுக! மேலெழுபவர்களைப் பொசுக்கும் அனல் அது” என்றாள். சத்யகன் “பலிகொள்ளாதது தெய்வம் அல்ல” என்றான்.
சூரியனை நோக்கி நோக்கி சத்யகனின் விழிகள் ஒளியிழந்தன. சூரியனை நோக்கி எழுந்து பறந்து இறகுகள் பொசுங்கி சிறகுகளின் விசை குறைந்தது. அச்சுனைவிட்டு அகல இயலாதவனாக ஆனான். சத்யகி சத்யகனுடன் கூடி நூற்றெட்டு முட்டைகளை இட்டாள். அவை விரிந்து அழகிய சிறு குஞ்சுகள் வெளிவந்தன. அவற்றுக்கு இரைதேடும்பொருட்டு சத்யகி காலையில் பறந்து மேலே சென்றாள். சத்யகன் அக்குஞ்சுகளை தன்பின் அழைத்துக்கொண்டு சுனையில் சுற்றிவந்தான். அவற்றுக்கு நீச்சலும் பறத்தலும் மூழ்குதலும் மொழிதலும் திரள்தலும் கற்றுத்தந்தான்.
ஒருநாள் பசிகொண்ட முதலை ஒன்று அச்சுனையின் கரைச்சேற்றில் வாய்திறந்து படுத்திருந்தது. உச்சிக்கதிரவனை அண்ணாந்து நோக்கிக்கொண்டிருந்த சத்யகன் முதலையை காணவில்லை. குஞ்சுகளில் மூத்ததான சிதன் முதலையின் திறந்த வாயை நோக்கி “அது என்ன, தந்தையே?” என்றது. சத்யகன் அக்குரலை கேட்கவில்லை. சிதன் சிறிய பறவைகள் அதன் வாய்க்குள் இறங்கி கொத்தி உண்பதையும் சிறகடித்தெழுவதையும் கண்டது. “அவற்றைப்போல் நாமும் விளையாடுவோம், வருக!” என அது தன் உடன்பிறந்தாரையும் அழைத்துக்கொண்டு முதலையை அணுகியது. அவை ஒவ்வொன்றாக முதலையின் வாய்க்குள் புகுந்து மறைந்தன.
நெடுநேரம் கழித்து உணவுடன் வந்திறங்கிய சத்யகி விழிகளை வானில் நட்டு சுழன்றுகொண்டிருந்த சத்யகனை நோக்கி பதற்றத்துடன் “எங்கே என் மைந்தர்?” என்று கேட்டாள். அவன் திகைத்து திரும்பிநோக்கி “இங்குதான் இருந்தனர்” என்றான். “சொல், மூடா! என் மைந்தர் எங்கே? என்ன செய்தாய் அவர்களை?” என அவள் கூவினாள். திரும்பி நோக்கியபோது கரைச்சேற்றில் விழிநீர் விட்டபடி படுத்திருந்த முதலையைக் கண்டதும் அனைத்தையும் புரிந்துகொண்டாள். “விண்நோக்கி அலையும் உனக்கு மைந்தர்களைப் பெறும் தகுதி இல்லை என அறியாதது என் பிழை. உனக்கு மைந்தராகப் பிறந்தது அவர்களின் பிழை. மீண்டும் மீண்டும் பிறந்திறந்து எங்கள் விழியின்மையின் பழியை போக்குகிறோம். ஆனால் நீ வாழ்வாய், ஒவ்வொரு இறகாக உதிர்ந்து மறைவதுவரை மைந்தர் துயர்கொண்டு இங்கிருப்பாய். மீண்டும் பிறந்து மைந்தர்துயரில் நூறாண்டு உழல்வாய்” என்று தீச்சொல்லிட்டாள். பாய்ந்து சென்று முதலையை அணுகி “என்னை ஏற்றருள்க, இறைவடிவே!” என்றாள். விழிநீர் சொட்ட பெருங்கருணையுடன் அவளை அது உண்டது.
நூறாண்டுகாலம் சத்யகன் அந்தச் சுனையில் வாழ்ந்தான். ஒவ்வொரு கணமும் மைந்தரை எண்ணி எண்ணி துயருற்றான். அத்துயரை மறக்க மேலும் மேலும் விண்ணை நோக்கினான். துயரின் எடையால் ஒரு கணமும் கால் ஓய முடியாதவனானான். அந்த முதலையை அணுகி “என்னை ஏற்றருள்க! எனக்கு விடுதலை அளித்தருள்க!” என்று மன்றாடினான். “உன் உடலின் இறகுகள் துயரின் எரிமணம் கொண்டுள்ளன. முற்றிலும் இறகுகள் உதிரும்வரை நான் உன்னை உண்ணப்போவதில்லை” என்றது முதலை.
முற்றிலும் விழியிழந்து நீரலைகள்மேல் அலைந்துகொண்டிருந்த அந்த நாரையை பிற நாரைகள் கேலிப்பொருளாக கருதின. ஒவ்வொருநாளும் அந்த முதலையின் முன்னால் சென்று நின்று ஏங்கியது அப்பறவை. ஆண்டுக்கு ஒரு இறகென உதிர முற்றுதிர்ந்து விடுதலைபெறும் நாளை எண்ணி எண்ணி காலம் கடந்தது. இறகுகள் அனைத்தும் உதிர்ந்து ஒரே ஒரு இறகு எஞ்சியபோது முதலையின் முன் சென்று நின்றது. ஒவ்வொரு கணமாக அணுகிவர இறுதியில் “என் மைந்தர்களே” என அது விம்மியபோது இறுதியிறகும் உதிர்ந்தது. முதலை கண்ணீருடன் அணுகி “நிறைவுறுக, சத்யகரே!” என அதை உண்டது.
சத்யகன் மறுபிறவியில் சரஸ்வதி நதியின் கரையில் பிரம்மனின் மைந்தர் காசியபப் பிரஜாபதியில் பிறந்த ஃபூ என்னும் முனிவருக்கு மைந்தனாக பிறந்தான். பிறவியிலேயே விழியற்றிருந்த அம்மைந்தனுக்கு அபந்தரதமஸ் என்று தந்தை பெயரிட்டார். சாரஸ்வத அபந்தரதமஸ் தந்தையிடமிருந்து வேதங்கள் நான்கையும் கற்றுத்தேர்ந்தார். பிரம்மனிடமிருந்து பிரஜாபதி வேதங்களை பெற்றார். அவரிடமிருந்து சுக்ரர் பெற்றார். தொல்வியாசர் சுக்ரரின் மாணவர். பிரஹஸ்பதி, சூரியர், இந்திரர், வசிட்டர், சாரஸ்வதர், திரிதமர், திரிசிகர், பரத்வாஜர், அந்தரீக்ஷர், வர்ணி ஆகியோர் கிருதயுகத்தில் வேதங்களை தொகுத்துப் பகுத்தனர். திரேதாயுகத்தில் த்ரய்யாருணர், தனஞ்சயர், கிருதஞ்சயர், ஜயர் பரத்வாஜர், கௌதமர் ஹரியாத்மர், வைஷ்ரவ வியாஜஸ்ரவஸ், திருணபிந்து, ருக்ஷ வால்மீகி, சக்தி பராசரர், ஜதுகரணர் முதலான பதினான்கு முனிவர்கள் வேதங்களை தொகுத்துப் பகுத்தனர். அவர்கள் ஆற்றியவற்றை முன்னெடுத்து விடுபட்டவற்றை நிரப்பி முழுமைசெய்யும் பணியை அபந்தரதமஸ் மேற்கொண்டார்.
வேதம் வேதம்போன்றனவற்றால் சூழப்பட்டது. வேதம் போன்றன வேதத்திலிருந்து முளைத்தவை என்பதனால் தந்தையை மைந்தர்போல் உயிராலன்றி வேறுபாடில்லாமல் மாற்றுகொண்டிருந்தன. வேதத்தின் உயிர் அதன் விண்ணொலி. எனவே செவியாலன்றி வேறெவ்வகையிலும் வேதச்சொல்லை தனித்தறிய இயலாது. விழியிழந்தவரான அபந்தரதமஸ் மலர்கள் மொக்கவிழும் தருணத்தைக் கேட்கும் செவிகொண்டவராக இருந்தார். ஒலியாலேயே புறவுலகை இணைத்து அடையாளம் அளித்து விரித்துக்கொண்டார். சொல்சொல்லென வேதமறிந்த அவரைச் சூழ்ந்து நூறு முனிவர்கள் அமர்ந்து வேதம் ஓதுகையில் ஒரு வேதமிலாச் சொல் ஒலித்தாலும் ஒரு சொல்லில் வேத ஒலி பிறழ்ந்தாலும் சுட்டிக்காட்ட அவரால் இயன்றது. நாளும் இரவும் ஒழியாது அவரிடம் வேதம் ஆராய வைதிகர் வந்தபடியே இருந்தனர்.
பிரஜாபதியான அபந்தரதமஸ் ஸ்ரவ்யை, ஹ்ருத்யை, பிரதிபை, ஸ்மிருதி, வாக், என்னும் ஐந்து மனைவியரை மணந்து நூறு மைந்தரை பெற்றார். அவர்கள் அவர் வாழ்ந்த சாரஸ்வதம் என்னும் காட்டில் மூத்தவரிலிருந்து இளையவர் என வேதம் கற்று வளர்ந்தனர். அன்று சித்திரை முழுநிலவானதனால் அவருடைய நூறு மைந்தரும் கானாடும்பொருட்டு சென்றிருந்தனர். அவர்களின் அன்னையர் ஆற்றங்கரையில் அமைந்த தங்கள் குடில்களில் துயின்றனர். நள்ளிரவில் துயிலாது தனித்தமர்ந்து அகோராத்ரம் என்னும் அதர்வ வேள்வியை இயற்றிக்கொண்டிருந்த அபந்தரதமஸ் முதல்முறையாக ஒரு வேதச்சொல் முன் திகைத்து உளமழிந்தார்.
அது வேதம் போலவும் அல்லது போலவும் தோன்றியது. நுண்பொருளும் ஒலியமைவும் வேதமென்றிருந்தபோதிலும் அதனுடன் முந்தைய சொல் முரண்கொண்டது. வேதமிலாச் சொல்லுக்கு அவியளித்து அதை தேவர்கள் கேட்கும்படி செய்யலாகாதென்பதனால் அபந்தரதமஸ் நெய்க்கரண்டியுடன் சிலையென்று அமர்ந்திருந்தார். ஆனால் வேள்விக்கென எடுத்த அவி வேறெந்த உயிராலும் உண்ணப்படாதாகையால் அந்தக் கையை திரும்ப எடுக்கவும் அவரால் இயலவில்லை.
அக்கணத்தில் அவர் முன் எழுந்த அனலவன் “மறுசொல் இன்றி இக்கணமே இக்காட்டை எனக்கு முற்றவியாக்குவாய் எனில் அந்த வேதச்சொல்லின் உண்மையை உனக்குரைப்பேன்” என்றான். மறுஎண்ணமின்றி “ஆம், அவ்வாறே” என அபந்தரதமஸ் சொல்லளித்தார். “உன் முன்னோடியான ஜதுகரணர் அச்சொல்லை வகுக்கையில் அருகே விளையாடிக்கொண்டிருந்த தன் இளமைந்தனை நோக்கி அரைவிழி திரும்பிய கணத்தில் ஒரு மாத்திரை பிழைவர சந்தம் குறைந்தது அச்சொல். ஆனால் அதைச் சொல்லி ஆயிரம்பேர் அவியிட்டமையால் வேதச்சொல்லின் ஒளியும் கொண்டது” என்றான்.
அபந்தரதமஸ் அச்சொல்லை மாத்திரை முழுமைசெய்து நெய்யை ஊற்றினார். பற்றி எழுந்து கிளைவிரித்து அருகே நின்றிருந்த மரங்களைக் கவ்வி உறுமியும் பிளிறியும் வெடிப்பொலியும் சிறகொலியும் எழுப்பியும் தீ அக்காட்டின்மேல் பரவியது. கானாடச் சென்ற அபந்தரதமஸின் நூறு மைந்தரும் அங்கே மரங்களின்மேல் ஏறுமாடம் கட்டி துயின்றுகொண்டிருந்தனர். பெருவெள்ளமென வந்து சூழ்ந்த காட்டெரிக்கு அவர்கள் இரையாயினர். அப்போதும் அபந்தரதமஸ் வேதம் ஓதிக்கொண்டே இருந்தமையால் அது மாபெரும் வேள்வியென்றாகியது. அவியுண்ண வானில் தேவர்கள் நிறைந்தனர்.
விழியற்றவர் அந்த அனல்வெம்மையை உணர்ந்து பெருவேள்வி என்று எண்ணி வேதமுழக்கமிட்டார். மைந்தர் அவியான செய்தியை அவர் அறிந்திருக்கவில்லை. ஆற்றங்கரைக் குடிலில் துயின்ற அவருடைய ஐந்து மனைவியரும் அலறிக்கொண்டு எழுந்து ஓடிவந்தனர். அவர்கள் அணுகமுடியாதபடி விண்வரை ஏறி எரிந்தது காட்டுத்தீ. வேள்விக்களத்தைக் கண்டதுமே நிகழ்ந்ததென்ன என்று அவர்கள் புரிந்துகொண்டனர். தர்ப்பையினூடாக வேள்விச்சாலையில் தீ பற்றி ஏறி அருகே நின்ற மரத்தில் படர்ந்து சென்றிருந்த கரித்தடம் தெரிந்தது. தன் வேதச்சொல் முழுமையடைந்ததை எண்ணி முகம்மலர்ந்து தனக்குள் ஆழ்ந்து அமர்ந்திருந்தார் அபந்தரதமஸ்.
அவர்களில் மூத்தவளாகிய ஸ்ரவ்யை “எங்கள் மைந்தர் எங்கே? சொல்க, எங்கள் மைந்தர் எங்கே?” என்று கூவினாள். ஹ்ருத்யை “எங்கள் மைந்தரை அவியிட்டு வேதச்சொல் பெற்றீர்… தந்தையர் எவரும் செய்யாத கொடுஞ்செயல் புரிந்தீர்” என்று அலறினாள். பிரதிபை “மைந்தரில்லா இவ்வுலகில் இனி வாழத்தகாது. நாமும் எரிபுகுவோம்” என்றபடி ஓட ஸ்மிருதியும் வாக்கும் அவளுடன் ஓடினர். ஹ்ருத்யை “மைந்தர் அருமையறியாத நீ இப்பிறவியில் நூறாண்டு வாழ்வாய். ஒவ்வொரு கணமும் மைந்தரை எண்ணி எரிந்துருகுவாய். மறுபிறவியில் மைந்தர்துயர் உன்னை சூழும். இறப்பின்றி முடிவிலி வரை அதில் திளைப்பாய்” என்றபடி எரி நோக்கி ஓடினாள்.
அவளுடன் செல்லவிருந்த முதல் துணைவியின் பாதங்களை எட்டி இரு கைகளாலும் பற்றிக்கொண்ட அபந்தரதமஸ் கண்ணீருடன் “என் விழியின்மையால் இப்பெரும்பழியை அடைந்தேன். தேவி, நான் உனக்கு மட்டும் கணவனாக அல்ல, மைந்தனாகவே இருந்தேன். எனக்கு அருள்க!” என்றார். ஸ்ரவ்யை அவரை நோக்கி “உங்கள் கண்ணீரை என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் பத்தினியரின் சொல் தெய்வங்களாலும் மாற்றவொண்ணாதது. இது என் நற்சொல். அடுத்த பிறவியில் நான் உங்கள் துணைவியாகி வருவேன். உங்களுக்கு அழியாத கவிச்சொல்லை அளிப்பேன். நீங்கள் அடையும் மைந்தர்துயரை காவியமாக ஆக்கி இனிமைகொள்ளச் செய்வேன். அதில் நீங்கள் இறப்பிலாது வாழ்வீர்கள்” என்றாள். நடந்து எரியில் மூழ்கி மறைந்தாள்.
“ஒவ்வொரு கணமும் கண்ணீர்விட்டபடி அபந்தரதமஸ் நூறாண்டு வாழ்ந்தார். வேதங்களை தொகுத்தமையால் மகாவியாசர்களில் ஒருவராக நிரையிலமைந்தார். கண்ணீருடன் மறைந்து மீண்டும் பிறந்தெழுந்தார்” என்று சாத்தன் சொன்னார். “கிருஷ்ண துவைபாயனரே, கலியுகத்திற்கான வேதங்களை தொகுக்கும்பொருட்டே அவர் உங்கள் வடிவில் பிறந்தார். ஸ்ரவ்யை சுவர்ணவனத்தில் சுகர்குலத்தில் ஹ்ருதாசியெனும் மங்கையாகப் பிறந்தாள். இன்குரலால் உங்களைக் கவர்ந்து மணம்கொண்டாள். சுகன் என்னும் மைந்தனை பெற்றாள். கிளிகளின் மொழியிலிருந்து கவிதையின் சந்தத்தை உங்களுக்கு அளித்தவள் அவள். இன்று உங்களைச் சூழ்ந்து இனிமையென நிறைந்திருப்பது அவளுடைய இன்குரலே.”
“சாத்தர் சென்றபின் என்னிடமிருந்து நான் விடுபட மேலும் மூன்று நாட்களாயின” என்றார் வியாசர். “அவர் சொன்னவற்றின் உட்பொருளை விரித்து விரித்து அனைத்தையும் விழிமுன் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். நன்றென ஒன்றும் உள்ளே எஞ்சாதவனாக. எதை நினைத்தாலும் இருளைச் சென்றடைவதனால் நினைப்பொழியும்பொருட்டு சூழ நிகழும் சிறுசெயல்களில் மாறிமாறி விழியோட்டியவனாக. இவையனைத்தும் புனைவே என்று அள்ளி ஒதுக்க முயன்றேன். சுவரை திரையென அள்ளிச்சுருக்க முயன்ற அறிவிலிபோல திகைத்தேன்.”
“அப்போதறிந்தேன் புனைவிலாடுவதன் பிழை என்ன என்று. மெய்நிகழ்வை உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளவே இயல்வதில்லை. அது எண்ணத்தால், சொல்லால் மாற்றிவிட முடியாதது. மாற்றி விளக்கவோ ஏடுபுரட்டிக் கடக்கவோ அதில் இடமே இல்லை. விழிநீருக்கு, சினத்துக்கு அது சற்றும் நெகிழ்வதில்லை. அந்தப் பாறையில் மோதி தலையுடைவதன்றி வேறு வழியே இல்லை. அதை முற்றுணர்ந்த கணம் திகைத்து திரும்பி ஓடினேன். என் புனைவுகளுக்குள் புதைந்துகொண்டேன். என் காவியத்தில் என் குருதிவழியினர் பல்கிப்பெருகினர். நிலம்வென்றனர். நகர் அமைத்தனர். வேள்விபெருக்கி அறம்வளர்த்தனர். குலம்செழித்து காலத்தில் படர்ந்தேறினர். திகட்டத்திகட்ட எழுதினேன். அதை சலிக்கச்சலிக்க நானே படித்தேன். மெய்ப்புகொண்டே அழுது நிறைந்தேன். அதனூடாக அனைத்தையும் கடந்துசென்றேன்.”
ஆனால் அன்றிரவு ஒரு கனவை கண்டேன். அதில் பெருகிவிரிந்திருக்கும் ஒரு குருதிநிலம் எழுந்தது. நான் நன்கறிந்தது, குருஷேத்திரம். அங்கே துடித்துக்கொண்டிருந்தனர் என் பெயர்மைந்தர், மறுபெயரர். என் குருதியில் கால் வழுக்கி விழுந்து எழுந்தேன். நெஞ்சிலறைந்து அலறியழுதபடி அக்களத்தினூடாக சென்றேன். அனைத்து முகங்களும் என்னுடையவை. சிதைந்த உடல்கள், சிதறித்தெறித்த தசைகள். ஆனால் அனைத்து விழிகளும் உயிருடனிருந்தன. புன்னகையுடன், துயருடன், அச்சத்துடன், ஐயத்துடன் என்னை நோக்கின. கதறியழுதபடி ஓடி அஸ்தினபுரிக்குள் நுழைந்தேன். அரண்மனையின் படிகளெங்கும் குருதி வழிந்து வழுக்கியது. “என்ன நிகழ்கிறது இங்கே? ஏன் இந்தக் குருதி?” என்று கூவினேன். முதிய சேடி ஒருத்தி “இங்குள்ள அத்தனை மகளிரின் கருக்களும் சிதைந்து ஒழுகுகின்றன, பிதாமகரே” என்றாள்.
என் கால்களில் ஒரு பிஞ்சுக்கை மிதிபட்டது. சிறுவிரல் அளவேயுள்ள கை. அப்பால் சிறிய தலை. அதில் கடுகென விழிகள். சிறுதுளையெனத் திறந்த வாய். நான் நெஞ்சிலறைந்து அலறியபடி அஸ்தினபுரியின் தெருக்களினூடாக ஓடினேன். நகரத்தின்மேல் நின்றிருந்த கருமுகில்திரள் உறுமியது. மின்னல்களில் மாளிகைகள் அதிர்ந்தன. பின் மென்மழை பெய்யத்தொடங்கியது. என் புருவங்கள் சொட்டியபோதுதான் உணர்ந்தேன், அது கொழுங்குருதி. குருதிமழை நகர்மேல் நின்று பொழிந்தது. காற்றில் பெருந்திரைச்சீலைபோல் அசைந்தது. தோகைத்திரளாக சுவர்களை அறைந்தது. ஓலமிட்டபடி சுழன்றது.
கோட்டையை விட்டு வெளியே சென்றபோது மூவிழி திறந்த பேருருவன் ஒருவனை கண்டேன். முக்கூர்வேலும் புலித்தோலும் அணிந்தவன். அப்பால் பிறிதொருவன். மேலும் ஒருவன். நகரைச் சூழ்ந்திருந்தனர் பதினொரு ருத்ரர்கள். அனலுருவான அஜர், அடிமரமென ஒற்றைக்காலூன்றி எழுந்த ஏகபாதர், நான்கு தலைகள்கொண்ட அக்னிபுத்திரர், எரிகுளமென விழியெழுந்த விரூபாட்சர், மலைமுடியென ஓங்கிய ரைவதர், கொலைக்கரம் நூறுகொண்ட ஹரர், பன்னிரு முகம் எழுந்த பகுரூபர், மூன்றுவிழியரான த்ரியம்பகர், காட்டாளத் தோற்றம்கொண்ட அசுரேசர், பொன்னொளிகொண்ட சாவித்ரர், மின்படைகொண்ட சயந்தர். அவர்கள் பதினொரு சுழற்காற்றுத்தூண்கள் என எழுந்து நகர்மேல் ஏறினர். அவர்கள் ஏந்திய தோமரமும், அனல்கொடியும், வாளும், மின்படையும், அம்பும், அங்குசமும், மணியும், தாமரையும், தண்டும், வில்லும், மழுவும் விசைகொண்டு வானிலெழுவதை கண்டேன்.
குருஷேத்திரத்திற்கு நான் வந்தபோது அங்கே அனைத்து உடல்களையும் நாய்களும் நரிகளும் கழுதைப்புலிகளும் காகங்களும் கழுகுகளும் உண்ணத்தொடங்கியிருந்தன. அவை பூசலிட்டு எழுப்பிய ஓசை அந்நிலத்தின் ஓலமென எழுந்துகொண்டிருந்தது. அவற்றால் கடித்து இழுக்கப்பட்ட என் மைந்தர் உயிர்பெற்றெழுபவர்களென தோன்றினர். சிறுகைகள் அசைந்தன. கால்கள் இழுபட்டன. தலை இல்லை இல்லை என அசைந்தது. அப்போதும் சிலர் உயிர் மிஞ்சியிருந்தனர். அவர்களை விலங்குகளும் பறவைகளும் கவ்வியுண்டபோது வலியுடன் முனகினர்.
நான் அதன்நடுவே அவளை கண்டேன். செம்புநிறமான நீள்குழல் பறக்க, கரிய உடலுடன் நின்றிருந்தாள். என் விழிமயக்கா என அணுகி நோக்கினேன். இறந்தவர்களின் குலமகளா? ஆனால் அவள் குழல் தழல்கதிரென நெடுந்தூரம் நீண்டு அலையடித்தது. தொலைவிலிருந்து நோக்கியபோது அவள் அழுதுகொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. அண்மையில் சென்று விழிகளை நோக்கியதும் அவள் அழவில்லை, கண்கள் கனிந்திருந்தமையால் அவ்வாறு தோன்றியது என்று உணர்ந்தேன்.
அவளுக்கு இருபுறமும் நீலநிறக் குழல்கள்கொண்ட இரு அணுக்கியர் நடந்தனர். அவர்களில் ஒருத்தி என்னை நோக்கினாள். என் அருகே வந்து புன்னகைத்தாள். அதற்கிணையான அழகிய புன்னகையை நான் கண்டதே இல்லை. திருமகளே எழுந்தாள் என எண்ணி என் உள்ளம் அமைதிகொண்டது. துயரும் வலியும் தனிமையும் வெறுமையும் அகன்றன. “தேவி, நீயே அடைக்கலம்” என்று சொன்னேன். “வருக!” என அவள் என்னை அழைத்துச்சென்றாள். குருஷேத்திரத்தின் ஓரத்தில் நிலம் பசித்து வாய்திறந்தது என பெருங்குழி ஒன்றிருந்தது. ஆழத்தில் அடியிலாத கரிய நீர் அசைவின்றி கிடந்தது.
“இதன் பெயர் வியாசஸ்தலி” என்றாள். “ஏன்?” என்று நான் கேட்டேன். இதுவே உங்களுக்குரிய இடம்…” என்றாள். “தேவி, என் அழலனைத்தும் அழியுமா?” என்றேன். “ஆம், அதுவே இறுதி” என்றாள். “நான் நீடுவாழி என்று அருட்சொல் பெற்றவன்” என்றேன். “இதுவும் வாழ்வே… இந்தப் பாதை முடிவிலா ஆழங்களுக்கு கொண்டுசெல்கிறது” என்றாள். “ஏழு அடியிலிகள்… இங்கே நீங்கள் அடையும் மைந்தர்துயருக்கு நிகரான எதுவும் அங்கில்லை.” அதன் விளிம்பில் நான் நின்றேன். மிகத் தொலைவில் பிங்கலகேசினி காற்றில் முகில் என மிதந்துசெல்வதை கண்டேன். “தேவி” என கைகூப்பினேன். என் உள்ளத்தின் அலைக்கழிப்புகள் முற்றாக நீங்கின. இனிமை எழுந்து அகம்நிறைத்து உடலில் பரவியது. என் முகம் மலர்ந்திருந்தது.
“ஒரு கணம்தான், நான் பாய்ந்திருப்பேன். அக்கணம் ஒரு சிறு நோக்குணர்வை அடைந்தேன். ஒரு சிறு அசைவு. விழித்துக்கொண்டபோது இலையிலிருந்து சிறுபாறையை நோக்கித் தாவிய தவளை ஒன்றை கண்டேன். பெருமூச்சுடன் நிலைமீண்டபோது உங்கள் நினைவெழுந்தது. நோயுற்றவன் நினைவுகூர்ந்த அருமருந்து என. உடனே இங்கு கிளம்பினேன்” என்றார் வியாசர்.