மொழியாக்கம் பற்றி மீண்டும்…

susila

எம்.ஏ.சுசீலா நன்றியுரை

இந்திரா பார்த்தசாரதி உரை

அன்புள்ள ஜெ,

எம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கத்தைப் பாராட்டிய நிகழ்ச்சியில் பேசப்பட்ட ஒரு கருத்தைப்பற்றி இங்கள் எண்ணத்தை அறியவிரும்பியே இந்தக்கடிதம். மொழியாக்கம் பற்றிப் பேசும்போது எம்.ஏ.சுசீலா அவர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் அவர்களுக்கு மொழியாக்கப் பயிற்சிகள், அதற்கான கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார்கள். [எங்கள் கல்லூரியில் மொழியாக்க வகுப்புகள் உள்ளன. பாடத்திட்டத்திலேயே மொழியாக்கம் உள்ளது]  எம்.ஏ.சுசீலா பேசும்போது மூலமொழியில் இருந்து மொழியாக்கம் செய்யவேண்டும் என்பது கட்டாயமில்லை என்று சொன்னார்கள். இதைப்பற்றி நண்பர்களிடம் உரையாடியதனால் இந்த சந்தேகம்

மகேஷ்

inthira

அன்புள்ள மகேஷ்,

இலக்கியவாசகர்களுக்கு சாதாரணமாகத் தெரிந்ததுதான் இது, இலக்கியவாசகர்கள் அல்லாதவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியவைக்கவும் முடியாது. மொழியாக்கங்கள் இருவகை. புனைவல்லாத்தளங்களின் மொழியாக்கம்,புனைவுமொழியாக்கம். புனைவல்லாதவற்றை மொழியாக்கம் செய்ய பட்டறைகள் பெரும்பங்களிப்பாற்றுகின்றன. மொழியாக்க நெறிகள் புறவயமாக வகுக்கப்படவேண்டும். உதாரணமாக சட்டம், அறிவியல் போன்ற துறைகள். அங்கே மொழியாக்கமே ஒரு புறவயமானச் செயல்.

புனைவுமொழியாக்கம் முற்றிலும் வேறானது. முறையான பயிற்சி பெற்று, முறையான கொள்கைகளின்படிச் செய்யப்பட்டு, ஏராளமான பேரால் செம்மைசெய்யப்பட்ட மொழியாக்கங்களை பத்துபக்கம் படிக்கமுடியாமலிருப்பது தமிழில் மிகச்சாதாரணம். நான் நூல்களை சொல்ல விரும்பவில்லை. வாங்கிப்படித்து இரும்பு உருளையால் புறமண்டையில் அறைபட்ட அனுபவம் இல்லாத தமிழ் வாசகன் இருக்க வாய்ப்பில்லை.

புனைவுமொழியாக்கத்தில் பயிற்சிக்கோ கொள்கைக்கோ முதன்மை இடமில்லை. அவற்றை மொழியாக்கம் செய்பவரின் தகுதிகள் முற்றிலும் வேறு. அவர் மொழியாக்கம் செய்யும் மொழியின் சமகால புனைவுமொழியை அறிந்தவராக இருக்கவேண்டும், அதில் தொடர்ந்து ஈடுபடுபவராக இருக்கவேண்டும். வெறுமே மொழியை மட்டும் அறிந்திருந்தால்போதாது. மொழிவேறு புனைவுமொழி வேறு. புனைவுமொழி என்பது சமகாலப் படைப்புகளை தொடர்ந்து வாசிப்பது, உள்ளத்தால் புனைந்துகொண்டிருப்பது, ஓரளவு எழுதிப்பார்ப்பது ஆகியவற்றினூடாகவே உருவாகிறது. புனைவுமொழி அறியாதவர்களின் மொழியாக்கமே இயந்திரத்தனமாக, பழைமையானதாக அமைகிறது.

மொழிபெயர்ப்பாளர் உருவாகி வருவது எழுத்தாளர் உருவாகி வருவதைப்போலவே. திட்டமிட்டு வகுப்பெடுத்து எழுத்தாளர்களை உருவாக்க முடியாது. மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரே, அவர் எழுதுவதும் புனைவே. அது இரண்டாம்கட்டப்புனைவு. மொழிபெயர்ப்பாளர் ஒரு குமாஸ்தா என்னும் உளநிலையே அவரை பயிற்றுவிக்கலாம் என்னும் சொல்லில் தொனிக்கிறது.

இலக்கியத்தின் இயக்கமுறை முற்றிலும் அகவயமானது. மொழி ‘சரியாக’ இருப்பதல்ல மொழியினூடாக மூல ஆசிரியனின் உணர்வும் எண்ணமும் வெளிப்படுவதே படைப்பை வாசிப்புக்குரியதாக்குகிறது. சரியாக இருக்கும் மொழி செயற்கையானதாக, அன்னியமானதாக இருக்கையில் வெறும் ஈடுபாடு காரணமாகவே மூலத்தின் விசையை மொழியாக்கம் செய்துவிடுபவர்கள் உண்டு. அவர்களே புனைவுமொழியாக்கம் செய்யவேண்டியவர்கள். உலகின் மாபெரும் மொழியாக்கநிபுணர்கள் தன்னியல்பாக எழுந்துவந்தவர்கள்தான் – பிற படைப்பாளிகளைப்போல.

மொழியாக்கப்பட்டறைகளால் பயனில்லை என்று பெரும்பாலான சிறந்த மொழியாக்கநிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம் அவர்களில் பெரும்பாலானவர்கள் அத்தகைய பட்டறைகளில் வகுப்பெடுப்பதும் உண்டு. எம்.ஏ.சுசீலாவே திருவனந்தபுரத்தில் அப்படி ஒரு பட்டறையில் இருந்துதான் விழாவுக்கு வந்தார். பட்டறைகளின் பயன் என்னவென்றால் பங்கேற்பாளர்களில் இருந்து ஒருசிலர் உண்மையான ஈடுபாட்டுடன், உளவிசையுடன் எழுந்துவர முடியும். அவர்களைக் கண்டடைந்து அவர்களின் ஆரம்பகட்டச் சிக்கல்களை அப்பட்டறையில் சீரமைத்துக்கொள்ள முடியும். அதன்பின் அவர்கள் தங்கள் தனிவழியை தெரிவுசெய்யவேண்டியதுதான். சிறுகதை, கவிதை, திரைக்கதை போன்ற தளங்களில் நிகழும் அனைத்துப்பட்டறைகளின் பயனும் இவ்வகையில் எல்லைக்குட்பட்டதுதான்.நானே சிறுகதைப்பட்டறைகள் பல நடத்தியிருக்கிறேன். சிலவற்றை பயிற்றுவிக்கமுடியும், ஆனால் பயிற்றுவித்து படைப்பிலக்கியவாதியை உருவாக்க முடியாது.

இரண்டாவதாக மூலமொழியாசிரியரின் மேல் ஒரு நெடுங்காலப் பற்று, ஈடுபாடு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டும். அவருடைய குரலாக தான் ஒலிக்கவேண்டும் என்னும் விழைவு.  உலக அளவில் முக்கியமான பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் இந்த ஒன்றுதலைப்பற்றிப் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். அந்த உரிமையில் அவர்கள் சுதந்திரங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அந்த அகஇணைவு குலைந்துவிடும் என்பதனாலேயே அவர்களில் பலர் வேறு ஆசிரியர்களை மொழியாக்கம் செய்ய மறுத்துவிடுவதுண்டு. இவர்களின் மனமொழியே மூல ஆசிரியரால் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்களை மூல ஆசிரியருக்கு ஒப்புக்கொடுத்திருப்பார்கள்.

தமிழில் அப்படிப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். முதன்மையாகச் சொல்லப்படவேண்டியவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர் வி.எஸ்.காண்டேகரின் தமிழ்க்குரல். காண்டேகராகவே இங்கே வாழ்ந்தார். இந்நிலையிலேயே மொழி என்னும் புறவயமான கட்டுமானத்தை மீறி மூல ஆசிரியருடன் நமக்கு உறவு அமைகிறது.

ka sri sri

மூலமொழியிலிருந்து மொழியாக்கம் செய்வதே சிறப்பு. ஆனால் அது எல்லா மொழிகளுக்கும் இயல்வதல்ல. ஒரு மொழியைப் பேசும் சமூகத்தில் உலகமொழிகள் அனைத்திலிருந்தும் மொழியாக்கம் செய்ய திறனாளர்கள் இருக்க வாய்ப்பே இல்லை. இதன் விளைவாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் இணைப்புமொழி என ஒன்று உருவாகிவருகிறது. அதனூடாகவே படைப்புகள் பிறமொழிக்குச் சென்றுசேர்கின்றன. சென்றகாலங்களில் இங்கே சம்ஸ்கிருதம் இணைப்பு மொழி. இன்று உலகத்தின் இணைப்பு மொழி ஆங்கிலமே. சீன, ஜப்பானிய, ஐரோப்பிய இலக்கியங்கள் ஆங்கிலம் வழியாகவே உலகமெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றன. இன்று உலகின் பெரும்பாலான மொழிகளில் உள்ள உலக இலக்கியத் தொகை ஆங்கிலம் வழியாக உருவானதே. இணைப்புமொழியான ஆங்கிலத்துக்கேகூட ஏராளமான படைப்புகள் பிறிதொரு இணைப்புமொழி வழியாகச் சென்று சேர்ந்துள்ளன. ஆர்வமிருந்தால் ஒரு பட்டியலை நீங்களே இணையத்தில் தேடி உருவாக்கிக் கொள்ளமுடியும்.

தமிழில் இந்தி, ஆங்கிலம் வழியாகவே பெரும்பாலான மொழியாக்கங்கள் வந்துள்ளன. வட்டாரமொழிகளான மலையாளம், கன்னடத்தில் இருந்தும் அரிதாக ஃப்ரெஞ்சில் இருந்தும் நேரடி மொழியாக்கங்கள் உள்ளன.

 

ஜெ

இரண்டாம் மொழிபெயர்ப்பு
எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்
எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்
எம்.ஏ.சுசீலா விழா காணொளி
முந்தைய கட்டுரைதுகள்
அடுத்த கட்டுரைவாழ்த்துக்கள்,செழியன்