சென்ற செப்டெம்பர் எட்டாம்தேதி ஆந்திரத்தில் நல்கொண்டா என்ற ஊருக்கு அருகில் உள்ள பன்னகல் என்ற சிறு கிராமத்துக்குச் சென்றிருந்தோம். தொல்பொருட்துறையால் பேணப்பட்டுவரும் ‘பச்சன சோமேஸ்வரர்’ ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கே ‘சாயா சோமேஸ்வரர்’ ஆலயம் பற்றி எழுதிவைக்கப்பட்டிருந்ததைப் படித்தோம். அந்த ஆலயம் பன்னகலிலில் இருந்து மேலும் தள்ளி, கரும்பும்சோளமும் வளர்ந்து பச்சை அலைகள் நெளியக்கிடந்த விரிந்த வயல்பரப்புக்கு நடுவே செந்நிற நதிபோல ஓடிய செம்மண்சாலைக்கு மறு நுனியில் இருந்தது. கார் புயல்பட்டபடகுபோல அலைபாய, அந்தச்சாலையில் சென்று சற்றே திரும்பியபோது பச்சைக்கடலலைகளில் மிதக்கும் கப்பலின் முகப்பு போல கோயிலின் கற்கும்பம் தெரிந்தது.
காரை நிறுத்திவிட்டு இரவுமழையால் சேறாகிப்போன செம்மண்களிப்பாதையில் தடுமாறி நடந்து சாயாசோமேஸ்வர் கோயிலை நோக்கிச்சென்றோம். வயல்வெளியிலிருந்து நீர்த்துளிகளை அள்ளி வீசிய காற்றில் உடம்புசிலிர்த்துக் கொண்டிருந்தது. வெயில் எழ ஆரம்பிக்கவில்லையென்றாலும் ஒளிர்ந்த மேகங்களின் வெளிச்சம் இதமாக பரவி நிறங்களையும் ஆழங்களையும் மேலும் அழுத்தமானதாகக் காட்டியது.
காகதீயபாணியில் கட்டப்பட்ட கோயில் அது. கருவறைக்குமேலேயே எழுந்த அதிக உயரமில்லாத பிரமிடு வடிவத்தில் பல அடுக்குகளாக உயர்ந்துசெல்லும் கோபுரம் உச்சியில் தஞ்சைபெரியகோயிலில் இருப்பதுபோன்ற கற்கும்பத்தைச் சென்றடைந்தது. சுற்றுச்சுவர் ஆங்காங்கே உடைந்து சரிந்திருக்க, கற்பாளங்கள் பரவிய திருமுற்றத்தில் கல்லிடுக்குகளில் நெருஞ்சி பூத்துக் கிடந்தது.
அர்த்தமண்டபத்தில் ஏறியதுமே அதுவரை இருந்த கோயிலின் பாழடைந்த தோற்றம் விலகி, என்றும் புதுமை அழியாத கலையின் வசீகரம் சூழ்ந்துகொண்டது. காகதீயர்காலக் கலை என்பது தன் முழுமையை அர்த்தமண்டபத்தை அமைப்பதிலேயே எய்தியிருக்கிறது. அறுபட்டைத்தூண்கள். அவற்றின் மேல் வட்டவடிவ கபோதங்கள். மேலே கவிழ்ந்ததாமரை வடிவக்கூரை. தூண்களிலும் உத்தரங்களிலும் நுண்ணிய சிற்பங்கள். ஒரு முழ உயரமுள்ள நடனமங்கை அணிந்திருக்கும் கைவளையலின் செதுக்குவேலைகளைக்கூட கல்லில் கொண்டுவந்திருக்கும் கலைநுட்பம்
மலர்களைப் பார்க்கும்போது இந்த ஆச்சரியம் உருவாவதுண்டு. இத்தனை சிக்கலான நுண்மையான அலங்காரங்கள் எதற்காக? வண்டுவந்து தேன்குடிப்பதற்காக என்பார்கள் அறிவியலாளர். வண்டு அவ்வலங்காரங்களைப் பொருட்படுத்துகிறதா என்ன? ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு நுண்மை. மூக்குத்தியளவுள்ள பூவுக்குள் பற்பல அடுக்குகளாக உள்ளே சென்றுகொண்டே இருக்கும் அதிநுண்ணிய அலங்காரங்கள். காலையில் விரிந்து மாலையில் உதிரும் ஒரு மலருக்குள் எவருமே எப்போதுமே அறியாமல் அவை நிகழ்ந்து மறைந்துகொண்டே இருக்கின்றன.
அதை இயற்கையின் படைப்புக் கொந்தளிப்பு என்று மட்டுமே சொல்லமுடியும்.நம்முடைய மரபில் அதற்கு லீலை என்று பெயர். அலகிலா விளையாட்டு என்று பொருள். கேளி என்றும் இன்னொரு சொல் உண்டு. பிரபஞ்சங்களைப் படைப்பது அந்த சக்திக்கு ஒரு விளையாட்டு. விளையாட்டு என்பது விளயாடலின் உவகையின் பொருட்டு மட்டுமே நிகழ்வது. உருவாக்குவதன் பரவசத்தை மட்டுமே அப்போது படைப்பவன் உணர்கிறான்.
செவ்வியல் [கிளாசிக்] கலை என்பது இயற்கையின் படைப்புத்தன்மையை தானும் அடைவதற்காக மனிதன் எடுக்கும் பெருமுயற்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை பக்கத்து கட்டிடத்தில் ஏறி நின்று நோக்கினால் கோபுரத்தின் மடிப்புக்கு உள்ளே நிற்கும் தேவனின் சிலையின் ஒவ்வொரு நகையிலும் சிற்பி செய்திருக்கும் நுண்ணிய செதுக்கல்கள் பிரமிப்பூட்டுகின்றன. இப்படி ஒரு கட்டிடம் வராமலிருந்தால் அச்சிலையை சாதாரணமாக மனிதக் கண்கள் பார்க்கவே முடியாது. தமிழ்மண்ணில் உள்ள பல லட்சம் சிற்பங்களில் பார்க்கவேபடாத சிற்பங்களே அதிகம். கம்பராமாயணத்தின் அத்தனை பாடல்களையும் நுண்மையுணர்ந்து ரசித்த ஒரு வாசகன் இருக்கவே முடியாது.
செதுக்கிச் செதுக்கிக் கண்முன் தெரியும் பரப்பையே கலையால் நிரப்பிவிடுபவன் கலைஞன். அது ஒரு முழுமை. எவருமே பார்க்காவிட்டால்கூட அது அங்கே தன் முழுமையுடன், ஒரு காட்டுப்பூ போல, திகழ்ந்திருக்கும்.
சாயாசோமேஸ்வர் ஆலய மண்டபத்தில் இருந்து உள்ளே சென்றோம். கருவறைமுன் ஒரு பன்னிரண்டு வயதுப்பையன். எட்டுவயது தோன்றும் முகத்தில் வறுமையின், சத்துக்குறைவின் தேமல்கள். சட்டை இல்லாத மெல்லிய உடல். அவன்தான் பூசாரி. ‘பன்னஹல்க அஜய்குமார்’ என்று பெயர். எட்டாம் வகுப்பு மாணவன். காலையில் பூஜைமுடிந்து பள்ளிக்குச் செல்வானாம். இடிந்து தொபொருள்துறை பாதுகாப்பில் இருக்கும் கோயிலுக்கு எவருமே வணங்க வருவதில்லை.
கருவறைக்குள் நுழைந்த அஜய்குமார் பள்ளத்தில் இறங்கிச் சென்றான். அவனுடைய தலைமட்டும் தெரிந்தது. வெளியே நின்றபோது எதிரே உள்ள சுதைச்சுவர் மட்டுமே தெரிந்தது. கீழே ஆழத்தில் இருந்த லிங்கத்தின் அருகே அவன் ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்தபோது சட்டென்று லிங்கத்தின் நீளமான நிழல் அச்சுவரில் எழுந்தது. சாயாசோமேஸ்வர் என்ற பெயர் அப்போதுதான் புரிந்தது. சாயை என்றால் நிழல். அந்த ஆலயத்தில் லிங்கத்தின் நிழல்தான் கோயில்கொண்டு வழிபடப்படுகிறது.
கண்முன் நின்று மெல்ல அதிர்ந்த லிங்கநிழலையே நோக்கிக் கொண்டிருந்தேன். காற்று வீசியதில் நிழல்லிங்கம் எம்பி எழுந்து மீண்டும் அடங்கியபோது மனம் பதறியது. ஆழியலை வந்து கரையை மோதுவது போல நினைவுகள். கனத்துப்போனவனாக வெளிவந்து ஈரக்காற்று முகத்தில் பரவ, கார் நோக்கி நடந்தேன். மேலும்மேலும் கோயில்கள். அனுபவங்கள். ஆனால் எங்கள் பயணம் காசியை அடைந்தபோது நான் மீண்டும் சாயாசோமேஸ்வரை நினைத்துக் கொண்டேன்.
காசிக்கு நான் முதலில் வந்தது 1981இல். தனியாக வந்தேன். துறவி என்று சொல்லக்கூடாது, பரதேசி என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒருமாதம் கண்ட இடத்தில் தூங்கி இலவச உணவுகளை உண்டு இங்கே வாழ்ந்தேன். என் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணனின் தற்கொலையால் மனம்குலைந்து படிப்பை விட்டுவிட்டு அலைந்த நாட்கள் அவை. அதன்பின் என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டதை ஒட்டி மீண்டும் உக்கிரமான பேதலிப்புக்கு உள்ளாகி 1984 இறுதியில் மீண்டும் காசிக்கு வந்தேன்.
காசி அழகற்ற நகரம். பித்தனின் தலைக்குள் நெரியும் எண்ணங்கள் போல அதன் மிகக்குறுகிய தெருக்களில் வண்டிகளும் மாடுகளும் மக்களும் முட்டிமோதுகிறார்கள். ஆனால் சந்துகள் எல்லாம் எப்படியோ கங்கையின் படிக்கட்டு ஒன்றை நோக்கிச் சென்று இறங்கும். இருண்ட சந்துகளின் வலைப்பின்னலில் வழிதவறாமல் காசியில் அலைய முடியாது. ஏதோ ஒரு கணத்தில் வழி திரும்பி சட்டென்று கங்கை நோக்கி திறக்கும் படித்துறையாக ஆகும். தரையில் விழுந்த வானம் போல பளீரென ஒளிவிடும் கங்கையின் நீர்வெளி. அந்தக் கணத்தின் உவகைக்காகவே காசியின் கடப்பைக்கல் பரப்பப்பட்ட சாக்கடைச்சந்துகளில் அலையலாம். அந்தக் கணத்தின் கண்டடைதலுக்காகவே கங்கையை இழக்கலாம்.
ஆனால் காசியளவுக்கு ஆர்வமூட்டும் இன்னொரு நகரம் இந்தியாவில் இல்லை. பலவகையான மக்கள் வந்து குழுமியபடியே இருக்கிறார்கள். மூதாதையர்களுக்கு நீர்க்கடன்செய்யவருபவர்கள். குடும்பச்சுமைகளைத் தீர்த்துவிட்டுக் கடைசிநீராடவருபவர்கள். சுற்றுலாப்பயணிகள். பக்தர்கள். பெரிய சங்குவளையிட்ட ராஜஸ்தானிப்பெண்கள். இரும்புத்தண்டைகளும் காப்புகளும் போட்ட பிகாரிப்பெண்கள். பெரிய மூக்குத்திவளையங்கள்போட்ட ஒரியப்பெண்கள். குடுமிகள். பஞ்சக்கச்சங்கள். பைஜாமாக்கள்…. இது இந்தியாவின் ஒரு கீற்று. தெருக்களில் எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு விசித்திர முகம் தென்படும். மண்கோப்பையில் கொதிக்கும் டீ. பால்சுண்டவைத்த இனிப்புகள். புளிக்கும் ஜாங்கிரி. இலைத்தொன்னையில் இட்டிலியும் நீர்சாம்பாரும். எங்கும் நிறைந்த சைக்கிள்ரிக்ஷா மணியோசை. காசியின் சின்னச்சின்ன சந்துகளில் வாழ்க்கை நுரைத்துக் கொந்தளிக்கிறது. மக்கள்மீது பாசம் கொண்ட ஒருவன் காசியை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுவான்.
காசி மரணத்தின் நகரமும் கூட. இங்கே மரணம்தான் முக்கியமான தொழில். முக்கியமான பேசு பொருள். பொழுதுபோக்கும் மரணம்தான். காசி என்றாலே பிரபலமான மணிகர்ணிகா கட், அரிச்சந்திர கட் என்ற இரு பெரும் சுடலைப்படிக்கட்டுகள்தான் நினைவுக்கு வரும். காசிக்கு மகாமசானம் என்றொரு பெயர் உண்டு. காசியில் ஒருபோதும் சிதை அணையக்கூடாது என்று ஒரு வரம் உள்ளதாம். காசிவாசி காலபைரவ மூர்த்திக்கு சிதைப்புகைதான் தூபம்.. அந்த வரம் இன்றுவரை இல்லாமலாகவில்லை. எப்போதும் சுடலைப்படிகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிணங்கள் எரிய பிணங்கள் மஞ்சள் சரிகை மூடி காத்துக் கிடக்கும். பிணங்களை சைக்கிளில் வைத்துக் கட்டியபடி சந்துகளில் ஓட்டிவருவார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களின் மேலே ஏற்றி வருவார்கள். ஒற்றைமூங்கிலில் பிணத்தைச் சேர்த்து கட்டி தூக்கிவந்து சுவரில் சாத்தி வைத்து விட்டு அமர்ந்து டீ குடிப்பார்கள். காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.
காசி அன்னியர்களின் நகரம். இந்தியாவெங்கும் இருந்து சாமியார்களும் பைராகிகளும் காசிக்குத்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். விதவிதமான சாமியார்களை இங்கே காணாலாம். மொட்டைகள், சடைகள், தாடிகள். கனல்போல் கண்கள் எரியும் துறவிகள். கைநீட்டும் பிச்சைக்காரர்கள். அஹோரிகள் என்று சொல்லப்படும் கரிய உடை தாந்த்ரீகர்களும் நாகா பாபாக்கள் என்று சொல்லப்படும் முழுநிர்வாணச் சாமியார்களும் அவர்களில் உக்கிரமானவர்கள். சாமியார்களுக்கு இங்கே நூற்றுக்கணக்கான இடங்களில் அன்னதானம் உண்டு. ஆகையால் எவரும் பசித்திருப்பதில்லை. பிச்சை எடுக்கும் சாமியார்கள் அனேகமாகக் காசியில் இல்லை. தேவையான பணம் அவர்களைத் தேடிவந்து காலில் விழும்
இதைத்தவிர உலகம் முழுக்கவிருந்து ஹிப்பிகள், நாடோடிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், போதை அடிமைகள், மனநோயாளிகள் காசிக்கு வந்தபடியே இருக்கிறார்கள். நீர்த்துளி நீர்தேங்கியதை நாடுவதைபோல அவர்கள் காசியை நாடுகிறார்கள். நான் முன்பு வந்தபோது வெள்ளையர்கள் மட்டுமே கண்ணில்பட்டார்கள். இப்போது அதேயளவுக்கு மஞ்சள் இனத்தவரும் தெரிகிறார்கள். வணிகநாகரீகத்தால் வெளியே தள்ளப்பட்ட மனிதர்கள் அவர்கள். காசியில் இருந்துகொண்டு அவர்கள் நம்மை பித்தெடுத்த கண்களால் வெறித்துப் பார்க்கிறார்கள்.
காசி போதையின் நகரம். ஆகவே அதற்கு ‘ஆனந்தகானனம்’ என்றும் பெயர் உண்டு. போதை என்றால் கஞ்சா அல்லது சரஸ் அல்லது ·பாங். கஞ்சாகுடிக்கும் சிலும்பிகளைத் தெருவில் போட்டு விற்கிறார்கள். எங்கே கைநீட்டினாலும் கஞ்சா கிடைக்கும். மேலும் தீவிரமான போதைப்பொருட்களும் சாதாரணமாகக் கிடைக்கும். ரங் என்றால் பிரவுன்சுகர். ரஸ் என்றால் மார்·பின் ஊசி. தால் என்றால் எக்ஸ்டஸி மாத்திரைகள். நள்ளிரவின் அமைதியில் அல்லது காலையின் கடுங்குளிரில் எந்நேரத்திலும் படித்துறைகளை ஒட்டிய சந்துகளிலும் மண்டபங்களிலும் சாமியார்கள் கஞ்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். அதைத்தவிர சாமியார்கள் கூடிவாழும் பல பாழடைந்த மண்டபங்களும் நதிக்கரைக் குடில்களும் காசியில் உண்டு. காசி வைராக்யத்தின், துறவின் நகரம். காசி பைத்தியத்தின் நகரம். காசி சுடலைச் சாம்பல் பூசிய பித்தனின் வாசஸ்தலம்.
நள்ளிரவில் காசியில் நுழைந்தபோது பாலத்தின் மேலிருந்து அந்த பிறைச்சந்திரவடிவமான படித்துறைவரிசையைப் பார்த்தேன். வர்ணா ஆறு முதல் அஸ்சி ஆறுவரையிலான 108 படித்துறைகளுக்குத்தான் வருணாசி என்று பெயர். காலபைரவக்ஷேத்ரம் என்பது மருவி காசி. செவ்வைர நெக்லஸ் ஒன்று விழுந்துகிடப்பதுபோலப் படித்துறை விளக்குகள் ஒளிர்ந்தன. அருகே கங்கையின் நீர் இருளுக்குள் உலோகப்பரப்புபோல பளபளத்தது. கார்கடந்துசென்றபின்புதான் என் நெஞ்சின் அழுத்ததை உணர்ந்தேன்.
தாளமுடியாத நெஞ்சக்கனலுடன் காசிக்கு வந்த நாட்களில் அதன் கூட்டமே எனக்கு ஆறுதல் அளித்தது. கூட்டத்துக்குள் புகுந்து முட்டிமோதி இடித்து சென்றுகொண்டே இருக்கும்போது மனத்தின் எடைமுழுக்க உப்புப்பாறை நீரில் கரைவதுபோல மறைந்துவிடுவதாக தோன்றும். போகும்வழியில் ஏதாவது ஒரு கடையில் சப்பாத்தி தானமாகப் போடுவார்கள். நீத்தார்கடன்செய்தபின் காசியின் ஏதாவது ஒருகடையில் பணம்கொடுத்து ஐம்பது,நூறுபேருக்கு உணவு என்று ஏற்பாடுசெய்து போவது வட இந்திய வழக்கம். ஒருவேளை நான்கு சப்பாத்தி வாங்கினால் எனக்கு பின்னர் உணவு தேவையில்லை
கால்களைத்து மண்டபங்கள் எதிலாவது அமர்ந்த கணமே தனிமை என்னைச் சூழ்ந்துகொள்ளும். ஒளிரும் கங்கைநதி. காலமே நதியாக வழிந்து கடல்தேடுகிறது. அதில் ஆடும் ஓடங்கள். நீராடும் உடல்களின் நெளிநெளியும் நிழல்பிம்பங்கள். மனம் உருகி உருகி ஒரு கணத்தில் அழ ஆரம்பித்திருப்பேன். பலமணிநேரம் நீளும் அழுகை. அழுகை தேய்ந்து அப்படியே நான் தூங்கிவிடவேண்டும். அதுமட்டுமே அன்று எனக்கு ஓய்வு. ஒரு கணத்தில் விழித்துக்கொள்ளும்போது மொத்த நகரமே இடிந்து என்மீது விழுவதுபோல ஓசைகள் என்னைத்தாக்கும்.
காசியில் இருந்த நாட்களில் ஒருதடவைக்குமேல் நான் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றதில்லை. எந்தக்கோயிலுக்குள்ளும் நுழைந்ததில்லை. கோயில்கள் எனக்குப் பதற்றமூட்டின. ஆனால் சிதை எரியும் காசிப்படித்துறைகள் மிகமிக ஆறுதல் தருவதாக இருந்தன. குளிர்ந்த டிசம்பர் இரவுகளில் சிதையின் வெப்பத்தை உடலெங்கும் ஏற்றபடி மணிகர்ணிகா கட்டில் அமர்ந்திருப்பதில் ஆனந்தம் இருந்தது. காசியில் சிதைகள் நான்கடி நீளமே இருக்கும். பிணத்தின் காலும் தலையும் வெளியே கிடக்கும். வயிறும் மார்பும் எரிந்து உருகிச் சொட்டி வெடித்து மடிந்ததும் கால்களை மடக்கி தீக்குள் செருகுவார்கள்.
எரியும் பிணத்தின் முகம் உருகி அமுங்கி மெல்லமெல்ல மண்டைஓட்டு வடிவம் கொள்வதன் பேரழகை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன். பின்னர் ‘நான்கடவுள்’ படப்பிடிப்புக்காக ஒருமாதம் காசியில் தங்கியிருக்கும்போதும் பலமுறை சிதையருகிலேயே நின்றிருக்கிறேன். இப்போது சென்றபோதும் அரிச்சந்திராகட்டத்தில் தலைக்குமேல் எரியும் மதியவெயிலில் ஒரு பிணம் முழுமையாக எரிந்தழிவதுவரை நின்றிருந்தேன். அந்தக் காட்சி மண்ணில் உள்ள அனைத்தையுமே செரித்து அழித்துக் கொண்டிருக்கும் அளவிலாக் காலத்தை சில நொடிகளில் கண்டு முடிப்பதுபோன்றது.
அன்று காலை நேரத்தில் சிதையருகே இருந்தபோதுதான் முதன்முறையாக ஒரு பண்டாரம் என்னிடம் பேசினார். ”தமிழாளாய்யா?” என்றார்.”ஆமாம்” என்றேன். ”அய்யோன்னு சொல்றதைக் கேட்டேன்”என்றார். சிலும்பியை அவரது சீடர் பற்றவைத்துக் கொண்டிருந்தார். நகைத்தொழிலாளர்கள் பொன்னுருக்கும் கவனத்துடன். சாமி ”எந்தூரு?”என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை .”அதுசெரி. அப்ப சாமியாயிட்டுது…ஹஹஹ!” அந்தச்சிரிப்பின் பொருள் இன்று புரிகிறது. ”வேண்டப்பட்டவங்க செத்தாச்சாக்கும்?”என்றார் சாமி. தலையசைத்தேன். ”யாரு?” நான் ”அம்மா..” என்றேன்..ஏனோ அப்பா நினைவு அப்போது வரவில்லை. ”முன்னையிட்ட தீ முப்புரத்திலே…” என்று சிரித்து இருமி சீடனிடம் ”லே நாயே எடுரா” என்று சொல்லி சிலும்பியை வாங்கி ஆழ இழுத்துப் புகைவிட்டார்.
நாலைந்துமுறை இழுத்துவிட்டு தலையை சிலுப்பிக் கொண்டு சீடனுக்கு அளித்துவிட்டார். சீடன் மனநோயாளி போல இருந்த இளைஞன். அவன் ஆழ இழுத்துவிட்டு பரட்டைத்தலைமுடியின் நிழல் முகத்தில் விழ அப்படியே குனிந்து அமர்ந்திருந்தான். என் வலப்பக்கம் கங்கை நூறாயிரம் நிழல்பிம்பங்கள் நெளிய அலைவிரிந்து சென்றது. இடப்பக்கம் மக்கள்திரள். பேச்சுக்குரல்கள் அருவி ஒலிபோல. வண்ணங்கள் காலை ஒளியில் கொப்பளித்துக் கொண்டிருந்தன.
”இந்தாலே நாயே”என்று சாமி எனக்கு சிலும்பியை நீட்டியது. ”வேண்டாம்”என்றேன். ”பிடிலே நாயே”என்றார். கங்குபோல சிவந்த கண்கள். இரு சிதைகள் எரியும் புதர்மண்டிய மலைபோல முகம். வாங்கிக் கொண்டேன். ஒருகணம் தயங்கினேன். பின்னர் வாயில் வைத்து இழுத்தேன். தேங்காய்நார்புகை தொண்டையில் மார்பில் கமறியது இருமிக் குமுறியபடி திரும்ப நீட்டினேன்.
”இந்தாலே” என்று சாமி மீண்டும் நீட்டினார். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. என் மனதில் எண்ணங்கள் சீராகவே இருந்தன. நான் மீண்டும் அதை வாங்கி ஆழ இழுத்தேன். இப்போது அந்தக் கமறல் குறைந்திருந்தது. சீடன் ”ஹிஹிஹி”என்று சிரித்து என்னை பார்த்தான். வாய் கோணலாக இருந்தது. சாமியார் மீண்டும் எனக்கு சிலும்பியை நீட்டினார்.
நான் பெருமூச்சுடன் கங்கையைப் பார்த்தேன். பல்லாயிரம் வருடங்கள் பலகோடி நீத்தார் நினைவுகள். ஓடி ஓடிச் சென்றடையும் முடிவிலியாகிய கடல். அது நீத்தார் நினைவுகள் அலைபுரளும் பெருவெளி. நினைக்க வாழ்பவர் எல்லாமே நீத்தார் ஆகப்போகிறார்கள். இன்று இதோ கரையில் நடக்கும் இவர்கள் அனைவரையும் நாளை வேறு எவரோ இங்கே கொண்டுவந்து கரைக்கப்போகிறார்கள்.
சிதையில் இருந்து சற்றே சாம்பலை எடுத்து சொந்தக்காரர்களிடம் தந்துவிட்டு அதே கனலில் அடுத்த பிணத்தைத் தூக்கி வைத்தார்கள். மஞ்சள் சரிகைப் போர்வையில் இருந்து ஒரு கைமட்டும் வெளியே நிராதரவாக நீட்டி நின்றது. இரண்டு பிணங்கள் சிதைகாத்து வண்டல் தரையில் கிடந்தன. சிதைச்சாம்பல் சுமந்த இரு படகுகள் ஆடின. அப்பால் மனிதர்கள். செத்த பிணத்தருகே இனி சாம்பிணங்கள். தலையைப் பின்னாலிருந்து ஒரு காற்று தள்ளியது. உட்கார்ந்த இடம் பள்ளமாக ஆகி நான் இறங்கிக் கொண்டே இருந்தேன். ”பிடிலேநாயே”என்று சாமி வெகுதூரத்தில் சொன்னார்.
நான் சிலும்பியைத் திருப்பிக் கொடுக்கும்போது கவனித்தேன்; கங்கைக் கரைப் படித்துறைகள், அப்பால் தெரிந்த ஓங்கிய ராஜபுதனபாணிக் கோட்டைச்சுவர்கள், அதன்மீதெழுந்த இடிந்த கட்டிடங்கள் அனைத்தும் நெளிந்துகொண்டிருந்தன. கங்கைவலப்பக்கம் இருந்து இடப்பக்கம் மாறிவிட்டதா? அல்லது நதிநீர் எழுந்து காசியையே மூடிவிட்டதா? நதியாழத்தில் இருந்துதான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா?
திரும்பி இடப்பக்கம் பார்த்தேன். என் முதுகெலும்பில் சிலிர்த்தது. கங்கை ஓடிக்கொண்டிருக்க அதன் மீது நிழல்கள் நெளிவற்று, அசைவற்று, கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம்போல நிலைத்து நின்றிருந்தன. ஒருகணம் – அல்லது அது பல மணி நேரமாகவும் இருக்கலாம்- அதைப்பார்த்து இருந்துவிட்டு நான் சிரிக்க ஆரம்பித்தேன். ‘என்ன இது பைத்தியம் போல ஒரு சிரிப்பு’ என்று எண்ணியபடியே மேலும் சிரித்தேன்.
அந்தக் காட்சியின் வசீகரத்தை எத்தனையோ முறை மீண்டும் கனவில் மீட்டியிருக்கிறேன். சொல்லப்போனால் இருபத்தைந்து வருடங்களாக அந்தக்காட்சியையே நாவல்களாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறேன்.