வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-19

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் புன்னகையுடன் “அங்கநாட்டரசரும் பீஷ்மரும் சிகண்டியும் இங்கே வந்தனர். இங்கு வருபவர்கள் எவரும் தங்கள் மெய்யான வினா என்ன என்பதை உடனே உரைப்பதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றித்தான் முதலில் சொல்லத் தொடங்குகிறார்கள். அதுகூட அவர்களின் வாழ்க்கை அல்ல, அவர்களின் அகப்புனைவுதான்” என்றார். விதுரர் அவர் என்ன சொல்லப்போகிறார் என விழிகளில் வியப்புடன் நோக்கினார்.

“மானுட வாழ்க்கை நிகழ்ந்த அக்கணமே தடமின்றி மறைந்துவிடுகிறது. அதன் ஒரு துளிகூட எங்கும் எஞ்சக்கூடாதென்பதே நெறி. ஏனென்றால் அது பிரம்மலீலை. எஞ்சுவது ஒவ்வொருவரும் தங்களுக்குள் திரட்டிக்கொள்ளும் புனைவுதான். எரிகல் விட்டுச்செல்லும் அனல்கோடு. கணந்தோறும் வாழ்விலிருந்து எடுத்து உருமாற்றி அப்புனைவை தங்களுக்குள் சேர்த்துக்கொள்கிறார்கள். அதையே அறிதல் என்றும் ஆதல் என்றும் சொல்கிறார்கள். அப்புனைவையே நினைவென்றும் காலமென்றும் எண்ணிக்கொள்கிறார்கள்.”

“விதுரரே, மானுட வாழ்க்கை ஒரு துளி ஒளியென நிகழ, சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்கோடி குமிழிவளைவுகள் அதை தங்கள்மேல் ஏற்றிக்கொள்கின்றன. நிகழ்வுகள் பல பட்டைகள் கொண்ட படிகங்கள். அதில் சிலவற்றையே மானுடன் அறியவியலும். அறியக்கூடுவனவற்றில் சிலவற்றையே அவன் தெரிவுசெய்கிறான். தெரிவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று என்பதனால் ஒவ்வொரு புனைவும் முற்றிலும் வெவ்வேறானது. எனவே முடிவில்லாத பெருக்கு. அது பிரம்மத்தின் இரக்கமில்லா விளையாட்டு. அது தன்னை பெருக்கிப் பெருக்கி அம்முடிவிலியில் தன்னை முற்றாக மறைத்துக்கொள்கிறது” என இளைய யாதவர் தொடர்ந்தார்.

அவர் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று புரியாமல் விதுரர் வெறுமனே நோக்கினார். “ஒவ்வொரு தருணமும் பிரம்மமே என்பதனால் மானுடனால் வாழ்வின் ஒரு தருணத்தைக்கூட மெய்யாக அறிந்துகொள்ளக்கூடுவதில்லை. ஒவ்வொரு தருணத்தைப்பற்றியும் முடிவிலா புனைவுகளையே அவன் அடையமுடியும். அப்புனைவுகளை ஒன்றாக்கி மெய்மையை சென்றடைய இயலாது. அவற்றிலிருந்து அவன் மீண்டும் தனக்குரிய தெரிவுகளை உருவாக்குவான். அடுக்குமுறையை தன்னுள் இருந்தே எடுப்பான். தனக்கு உகந்ததை கட்டி எழுப்பி அதனுள் வாழ்வான். புழுக்கள் தங்கள் உடல்வடிவிலேயே அறைகட்டி குடியிருக்கின்றன. அவ்வறையையே அவற்றின் உடல் உகந்ததென்று உணரும்” என்றார் இளைய யாதவர்.

ஒரேகணத்தில் அவர் சொல்லவருவன அனைத்தையும் புரிந்துகொண்டு விதுரர் சினம்கொண்டு எரிந்தெழுந்தார். அதை நோக்காமல் இளைய யாதவர் சொன்னார், “ஆணவமும் விழைவும் இரு சரடுகளாகப் பின்னி நெய்துவிரிக்கின்றன மானுடனின் அகப்புனைவை. ஓசையில்லாது ஓடும் தறியே உள்ளம். அதன் ஓசையே பேச்சு. தன்னுள் புனைந்து சலிக்கையில் அருகிருக்கும் ஒருவரிடம் அப்புனைவை விரிக்கத் தொடங்குகிறான். ஊடுக்குப் பாவென பிறன் தன் அகப்புனைவை அளிக்கத் தொடங்கினால் நெசவு விரிந்து விரிந்து செல்லும். அதையே நல்ல உரையாடல் என்கின்றனர்.”

அவர் அங்கில்லை என எண்ணுபவர்போல இளைய யாதவர் சொல்லிச் சென்றார். “காதலன் காதலியுடன், ஆசிரியன் மாணவனுடன், தந்தை மைந்தனுடன், தோழன் தோழனுடன், வழிப்போக்கன் அயலானிடமென இதுவே ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவர் சொல்லும் அகப்புனைவை பிறிதொருவர் ஒரு சொல்லுக்கு ஏற்கவில்லை என்றாலும் எதிர்நெசவு விழுந்துவிடுகிறது. முட்டிக்கொள்ளும் தருணம் ஆணவம் சீறி பேருருக் கொள்கிறது. பூசலில் முடியாத நீளுரையாடல்களை மானுடரில் இரு சாரார் மட்டுமே நிகழ்த்தமுடியும். ஒருவருவருக்கொருவர் முழுமையாக நடித்துக்கொள்ளும் அளவுக்கு நட்போ மதிப்போ அன்போ காதலோ கொண்டவர்கள். ஒருவர் ஆணவத்தை பிறிதொருவர் முற்றாக ஏற்குமளவுக்கு பணிந்தவர்கள். தோளோடு தோள்முட்டி ததும்பிக்கொண்டிருக்கும் இம்மானுடப் பெருந்திரளில் மிகமிக அரிதாகவே ஒருவரோடொருவர் பேசிக்கொள்வது நிகழ்கிறது என்பது பெரும்விந்தை.”

விதுரர் பேச வாயெடுப்பதைக் காணாதவராக இளைய யாதவர் சொன்னார் “மானுடர் பேசத்தெரியாதவர்களாகவே என்றுமிருந்திருக்கிறார்கள். புறத்தை பேசத்தொடங்கி அதனூடாக அகத்தை சொல்ல முயன்றதுமே புறத்தில் அகம் வந்துபடிவதன் முடிவிலாத வாய்ப்புகளின் சுழலில் சிக்கிக்கொண்டார்கள். ஒன்று சொல்லி ஓராயிரத்தை உணர்த்தமுடியும் என்னும் வாய்ப்பென்பது ஒரு வலை. அதில் சிக்கி ஒன்றையும் சொல்லமுடியாமலானார்கள். சொற்களில் மறைந்து மறைந்து விளையாடத்தொடங்கி, சொல்பெருக்கி அதற்கு இலக்கணம் வகுத்து, இலக்கணங்களை அக்கணமே மீறி, பொருள்சமைத்து ,பொருள்மயக்கத்தை கண்டடைந்து சென்றுகொண்டே இருக்கும் இப்பயணத்தில் கற்கும்தோறும் காணமுடியாதவர்களாகிறோம். சொல்பெருகுந்தோறும் சொல்லமுடியாதவர்களாகிறோம்.”

தன்னை அவர் சீண்டுகிறார் என புரிந்துகொண்டு விதுரர் உணர்வுகளை அடக்கிக்கொண்டார். அப்பேச்சினூடாக வெளிப்படும் உணர்வுகளை மட்டும் தொட்டு எடுத்துக்கொள்ள முயன்றவராக இளைய யாதவரின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தார். “தன்னைத்தானே சுழல்வழிகளும் எதிராடிகளும் நிறைந்த மாய மாளிகைக்குள் ஒளித்துக்கொண்டு தனிமைகொண்டு ஏங்குகிறது மானுட அகம். என்னை கண்டுபிடி என ஏங்குகிறது. அழைப்புகளை வெளியே வீசிவிட்டு காத்திருக்கிறது. அது அளிக்கும் சிறிய வாயில்களினூடாக எவரேனும் நுழைந்தால் உவகைகொண்டு ஓடிச்செல்கிறது. கண்ணீர் மல்குகிறது. தன் சொற்களையெல்லாம் அள்ளி அள்ளிக் குவிக்கச் சித்தமாகிறது.”

“ஆனால் அவன் இரண்டு அடி வைத்ததுமே அஞ்சி வழிகளை குழப்பத் தொடங்குகிறது. சுழற்பாதையில் அவனை கொண்டுசென்று மிகமிகத் தொன்மையான ஓர் ஓவியத்தை அவனுக்கு அளித்து இதுதான் நான் என்கிறது. அவனும் அத்தகைய ஓவியத்தை தான் என வைத்திருப்பவனாதலால் ஏமாற்றமடைகிறான். ஆனால் ஒருவர் தனக்கு அளிக்கும் ஓவியத்தை ஏற்றால் தன் ஓவியத்தை அவருக்கு அளிக்கமுடியும் என அறிந்தமையால் ஆம் என்று முகம்மலர்கிறான். மெய் என்று ஒப்புக்கொள்கிறான். இப்புவியில் மிகவும் புழங்கும் பணம் என்பது பொய்யே. விதுரரே, பணம் என்பதே ஒருவருக்கொருவர் ஒப்புக்கொள்ளும் பொய்தானே?”

அவர் தன்னுடன் விளையாடுகிறார் என்று விதுரர் உணர்ந்தார். “யாதவரே, நீங்கள் சொல்வதெல்லாம் மெய்யென்றே இருக்கலாம். ஏனென்றால் மெய்யென்றும் மாயமென்றும் தன்னை கணந்தோறும் முன்வைப்பவர் நீங்கள். பிறரால் புரிந்துகொள்ளப்படாமையால் ஞானி என்றும் ஞானத்தால் விளையாடுவதனால் தெய்வமென்றும் கருதப்படுபவர்” என்றார். இளைய யாதவர் தலைதூக்கி வாய்விட்டு சிரித்து “நல்ல சொற்கள், விதுரரே. உங்கள் அவைத்திறனாளர் என்னும் நிலையை மீட்டுக்கொண்டுவிட்டிருக்கிறீர்கள்” என்றார்.

“நான் உங்களிடம் விளையாடும்பொருட்டு வரவில்லை, யாதவரே” என்று விதுரர் சொன்னார். “நீங்கள் சொன்னதும் என்னை உட்புகுந்து அகழ்ந்தெடுத்து நோக்கினேன். ஆம், நான் விளையாடவில்லை என்றே மீண்டும் உணர்ந்தேன். உங்களிடமோ என்னிடமோ. ஏனென்றால் அவ்வாறு விளையாடிச் சலித்த ஒரு கணத்திலேயே எழுந்து கிளம்பியிருக்கிறேன். வாழ்க்கையை நான் சொன்னது என் இடரை முன்வைக்கவேண்டும் என்பதனால்தான்.”

“மிக எளிதாக அதை தத்துவம் எனத் தொகுத்து உரிய சொல்லாட்சிகளுடன் என்னால் முன்வைத்துவிடமுடியும். தத்துவச்சொல்லாட்சிகளுக்கு மிகப்பெரிய குறைபாடொன்று உள்ளது. அவை சொல்லப்பட்டதுமே அறைகூவலென மாறிவிடுகின்றன. கேட்பவரை மறுத்துச் சொல்லாடவே தூண்டுகின்றன. ஏற்பவர் அதை தன் நோக்கில் விரிவாக்குகிறார். மறுப்பவர் அதற்கு நிகரான மறுகட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார். தத்துவத்தினூடாக வாழ்க்கையைப்பற்றி பேசவே முடியாது என இத்தனை ஆண்டுகளில் நான் நன்கறிந்திருக்கிறேன். ஏனென்றால் வாழ்க்கையை தத்துவமாக ஆக்குவதையே இந்நாள்வரை செய்துகொண்டிருந்தேன். நான் சொல்லாட வரவில்லை. என் நேரடித்துயருடன் வந்திருக்கிறேன்” என்றார் விதுரர்.

“வாழ்க்கையைப்பற்றி எவரும் நேரடியாக உரையாடிவிட இயலாதென்றே நான் சொன்னேன்” என்றார் இளைய யாதவர் அதே புன்னகையுடன். “தத்துவம் என்பது வாழ்க்கையின் மையத்தொகுப்பு அல்ல. இயல்வதாகும் சுருக்கம். வேறெவ்வகையிலும் வாழ்க்கையைப் பற்றி பேசமுடியாது.” விதுரர் “அது வெறும் சொல்லாடலென்றே முடியும் என உணர்ந்திருக்கிறேன்” என்றார். “ஆம், அவையில் முன்வைக்கப்படும் தத்துவம் சொல்நுரையையே கிளப்பும். அகத்தே விதையென விழும் தத்துவம் அங்கிருந்து மெய்மையென எழும்” என்றார் இளைய யாதவர். “தத்துவம் என்பது ஊழ்கத்தால் தொட்டெழுப்பப்படும் மொழி.”

விதுரர் பெருமூச்சுவிட்டார். பின்னர் “அறியேன். இத்தருணத்தில் எண்ணிச்சுருக்கிய சொற்களுடன் உங்கள்முன் வந்தமரவேண்டுமென்று எனக்கு தோன்றவில்லை. என் வாழ்க்கையை அவ்வாறே எடுத்துவைக்கவேண்டுமென்று எண்ணினேன்” என்றார். இளைய யாதவர் அவரை கூர்ந்து நோக்கி “மருத்துவன் முன் உடலை என?” என்றார். “ஆம்” என அவர் விழிகளை நோக்கி சொன்னார் விதுரர். இளைய யாதவர் “நீங்கள் என் முன் காட்ட விழைந்தது எதை, விதுரரே?” என்றார். “அரசுசூழ்தலறிந்தவர், இப்போரை முன்னுணர்ந்து தடுக்க வாழ்நாளெல்லாம் முயன்றவர் என்பது ஒரு முகம். அதை நீங்களே அகற்றி அவ்வழிவை பிறரைப்போல் வரவேற்கும் எளியவர் என்று காட்டினீர்.”

“ஒன்றைக் காட்டி பிறிதொன்றை மறைத்தல் ஒரு சிறந்த சூழ்ச்சி. மானுட உள்ளம் மறைந்திருப்பதை தேடிக்கண்டடைந்து அதை உண்மையெனக் கொள்ளும்.  உண்மை மறைந்தே இருக்கும் என்பது மானுடம் கொண்டுள்ள அறிவுமயக்கங்களில் முதன்மையானது. அப்போதுதான் அதை கண்டடைவதன் மகிழ்வு கிடைக்கிறது. தன்னால் கண்டடையப்பட்ட ஒன்றுக்கு தன் ஆணவத்தாலேயே மானுடன் சான்றளிக்கிறான்” என இளைய யாதவர் தொடர்ந்தார். “நான் அவ்விரண்டையும் இரு புனைவுகளாகவே காண்கிறேன். அப்புனைவாடலின் நோக்கமென்ன என்றே பார்ப்பேன்.”

“சொல்க!” என்றார் விதுரர். “மானுடன் ஆக்கும் புனைவுகள் முடிவிலாத வாய்ப்புகள் கொண்டவை. ஆனால் அப்புனைவை உருவாக்கும் நெறிகள் மிகக் குறைவானவை. ஏனென்றால் அவன் வாழ்க்கை இங்கே இடம்காலம் வகுக்கப்பட்டு நிகழ்வது. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை கொண்டவன் என்பதற்கு நிகரான உண்மை அத்தனை மானுடரும் மானுடரே என்பது” என்று இளைய யாதவர் சொன்னார். “நீங்கள் ஏன் உங்கள் மூத்தவரின் விழிநீரை காணவிழைந்தீர்கள்? ஏன் அவர் விழிநீர் சிந்தவில்லை என்றதும் சினம்கொண்டீர்கள்?”

“என் ஆணவத்தால். நான் அங்கே இளையோன் என்று எழுந்து ஆறுதல் சொல்ல விழைந்தேன்.” இளைய யாதவர் அவர் விழிகளை நோக்கி புன்னகைத்து “ஆம், ஆனால் அதற்கு அடியில் அவர் முழுமையாகத் தோற்பதை விழைந்தீர்கள்” என்றார். விதுரர் இமைக்காமல் நோக்கினார். அவர் தலை நடுங்கத் தொடங்கியது. “குழிக்குள் எலி என பதுங்கியிருந்து நோக்கிக்கொண்டிருந்தது உங்கள் ஆழுளம். ஒவ்வொரு ஓசையையும் மணத்தையும் உள்வாங்கி உங்கள் தருணத்திற்காக காத்திருந்தீர்கள். அதில் திளைத்தீர்கள். அக்குற்றவுணர்வால் திரும்பச் சுழலத் தொடங்கினீர்கள். சொல்லிச் சொல்லி சரியென்றாக்கிவிட இயலாத ஒன்றென்பதனால் பிழையென்று ஏற்று நிகர்செய்ய முனைகிறீர்கள். அதற்கு சொல்பெறுகலம் என என்னை எண்ணினீர்கள்.”

“விதுரரே, திருதராஷ்டிரர் துயருற்றிருக்கிறார் என நீங்கள் நன்கறிவீர்கள். முதற்துயர் அலைவடிவானது. அதில்தான் மானுடர் தத்தளிப்பு கொள்கிறார்கள். அழுகையும் புலம்பலும் ஆற்றாது வெம்புதலும் அந்நிலையிலேயே. தொடர்துயர் அசைவிலா ஆழம் கொண்டது. சிறுதுயர்களுக்கு மானுடர் தெய்வங்களிடம் முறையிடுகிறார்கள். பெருந்துயர் தெய்வங்களால் அளிக்கப்படுவதென்று அறிகிறார்கள். அதை அறிந்ததுமே அமைதிகொள்கிறார்கள். அதை நோக்குதலை ஒழிந்து உலகியல் செயல்களாக அதை சிதறடித்துக்கொள்கிறார்கள். விசைப்பொறி என உடல் செயலாற்றவிடுகிறார்கள். அனலில் மணல் என ஐந்து புலன்கள் மேலும் புறவுலகை அள்ளிக்குவிக்கிறார்கள்.”

“ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சற்றே இயல்பு மாறி விந்தையானதாக ஆகிவிடுகிறது. அது சூழ்ந்திருப்பவர் விழிகளில் தெரிந்து திரும்பவருகிறது. அதை வெல்ல விழிதவிர்ப்பார்கள் பெருந்துயராளர். விழியின்மை கொண்டவர் நோக்கை தவிர்ப்பதை முதல்முறையாக உணர்ந்து சினம்கொண்டெழுந்தீர்கள்” என்றார் இளைய யாதவர். “அனைத்தையும் அறிந்த பின்னரும் அவர் அழுவதை விரும்பினீர்கள். ஏனென்றால் நீங்கள் வெல்ல விழைந்தீர்கள். முழுமையாக அவர் உங்கள் முன் சிதறிக்கிடக்க வேண்டுமென்று எதிர்பார்த்தீர்கள்.”

விதுரர் “சொல்க!” என்றார். “அது தோற்றவனின், பறிக்கப்பட்டவனின், சிறுமைசெய்யப்பட்டவனின் வஞ்சம். அதை பிறவியிலேயே நீங்கள் அடைந்தீர்கள். உங்கள் அன்னை சிவையில் இருந்து உங்களுக்கு விடுதலை இல்லை. விதுரரே, இந்நாட்களிலெல்லாம் நீங்கள் நாளும் சென்று அமர்ந்திருந்தது உங்கள் அன்னை அமர்ந்திருந்த அச்சாளரத்தில் அல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆனால்…” என தொடங்கி “இல்லை, சொல்லுங்கள்” என்றார் விதுரர். “தருக்கைவிட அளி சிறுமையை அளிப்பது. வெறுப்பைவிட அன்பு மேலும் சீற்றம்கொள்ளச் செய்வது” என்று இளைய யாதவர் சொன்னார்.

விதுரரின் உதடுகள் சொல்லுடன் அசைந்து அமைந்தன. “அறிவுடையோர் வஞ்சமிலாதாவது மிக அரிது” என இளைய யாதவர் தொடர்ந்தார். விதுரர் அச்சொற்கணத்தில் சினம் பற்றிக்கொள்ள எழுந்து நின்று “போதும், அனைத்தும் அறிந்தவரென நடிக்க இரக்கமின்மையை கைக்கொள்வது மிகச் சிறந்த வழி என நானும் நன்கறிவேன். ஒவ்வாதனவற்றை உண்மையென்றும் எண்ணாதனவற்றை அடியிலுள்ளவை என்றும் சொன்னால் திகைப்படைவர் எளியோர். நான் அவ்வாடலில் எழுபதாண்டுகள் உழன்றவன்” என்றார். மூச்சிரைக்க “என்ன சொல்ல வருகிறீர்கள்? இழிவுகொண்டு வெறுமைகண்டு இறந்த சிவையின் வஞ்சத்தை நஞ்செனக் கரந்து இக்குடி அழியும்பொருட்டு காத்திருக்கிறேன் இல்லையா?” என்றார்.

“இல்லை” என்றார் இளைய யாதவர். “நீங்கள் காத்திருப்பது அழிவை அல்ல. தன்னிரக்கம் கொண்டு நெகிழ்ந்து உடைந்து மிச்சமின்றி அழுது மீளும் தருணத்திற்காக. அது இன்றுவரை உங்களுக்கு வாய்க்கவில்லை. அது நிகழ்ந்துவிட்டால் இதுவரை சேர்ந்த நஞ்செல்லாம் வழிந்தோட தூய்மைகொண்டு எழுவீர்கள். உரிய குருதிக்கும் கண்ணீருக்கும் பின்னரே மானுடர் ஒளிகொள்கிறார்கள்.” விதுரர் “வீண்சொல்… வெற்றுத்தத்துவம்… இதை எவரும் சொல்லலாம். மானுடர் மீது வெறுப்பும் கசப்பும் இருந்தால் மட்டும் போதும். யாதவரே, நீர் பேருருவம் கொண்டு விண்ணில் தலையெழுந்து மண்ணில் சிற்றுயிர்களென உழலும் மானுடரை நோக்குவதாக எண்ணிக்கொள்கிறீர்கள். நீர் எவராக இருப்பினும் இவ்வுடலில் இவ்வுறவுப் பின்னலில் இருக்கும் வரை மானுடரே” என்றார்.

இளைய யாதவர் “நான் உங்கள் உணர்வை மட்டுமே கருத்தில்கொள்கிறேன், விதுரரே” என புன்னகையுடன் தொடர்ந்தார். “படைக்கலங்களின் நுனிதொட்டு வருடும்போது நீங்கள் உணர்ந்ததென்ன? உங்கள் எதிரியென எவர் வந்து அகத்தில் நின்றனர்?” விதுரர் தடுமாறி பின் மீட்டுக்கொண்டு மேலும் விசையுடன் “எவரையும்போலத்தான். நான், என் குருதி” என்றார். “ஆம், உங்கள் குருதி. அதைத்தான் நானும் சொன்னேன்” என்றார் இளைய யாதவர். விதுரர் தளர்ந்து “நாம் இதனால் எதை அடையவிருக்கிறோம், யாதவரே?” என்றார். இளைய யாதவர் “நாம் புனைவுகளை ஊடுருவுகிறோம். காட்டெரியைக் கடப்பதற்கு ஒரே வழி எரிந்த இடத்தினூடாக நடப்பது.” என்றார். விதுரர் கைகள் தழைந்து இருமருங்கும் விழ நோக்கி நின்றார். தர்ப்பைப்பாய்மேல் அமர்ந்த இளைய யாதவர் மேலே நோக்கிக்கொண்டிருந்தார். விதுரர் மீண்டும் அமர்ந்துகொண்டு “சரி, என்னை கிழியுங்கள், சிதையுங்கள். நான் ஒப்புத்தருகிறேன்” என்றார்.

“மான் சிம்மத்திற்கு தன்னை அளிக்கும் தருணம்” என இளைய யாதவர் சிரித்தார். விதுரர் சிரித்து “நான் இம்முறை சினம்கொள்ளப்போவதில்லை” என்றார். “நன்று, உங்களுள் உறைந்த நஞ்சின் ஊற்று எது என்று சொன்னேன். பிறவியால் அடைந்த நஞ்சை மானுடர் எளிதில் விலக்க இயலாது. வாழ்வு அதை பெருக்கும். துறவும் தவமுமே அதை கடக்க உதவுபவை.” விதுரர் “அந்நஞ்சு கீழ்நிலையினருக்குரிய தளையா?” என்றார். இளைய யாதவர் “கீழ்நிலையினருக்கு தாழ்வுணர்ச்சியின் நஞ்சு. அதைவிடக் கொடிய நஞ்சு உயர்நிலையினருக்கு, மேட்டிமையின் நஞ்சு” என்றார்.

“கீழ்நிலையினர் வஞ்சம் பெருக்கிக்கொள்கிறார்கள். அது வஞ்சமென அவர்களுக்கு தெரியுமென்பதனால் அதை கடக்கலுமாகும். மேல்நிலையினர் அளியை பெருக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆணவம் அழுகி நாறும்போதும் நறுமணமென்றே அவர்களுக்கு தெரியும்” என்றார் இளைய யாதவர். “பிறவிநோயென உடனிருக்கும் இந்நஞ்சைக் கொல்லாமல் எவருக்கும் விடுதலை இல்லை, விதுரரே.” விதுரர் “ஆம்” என பெருமூச்சுவிட்டார்.

“ஓராயிரம் முறை ஒளிக்கப்பட்ட ஒன்று பெருவல்லமைகொண்ட படைக்கலமாகிறது” என்றார் இளைய யாதவர். விதுரர் ஒவ்வா ஒலி கேட்டதைப்போல உடற்கூச்சமடைந்தார். “தீமைநிறைந்தவன் துறந்து செல்வதைவிட நல்லியல்பு கொண்டவன் துறந்து செல்வது கடினம். தீயோன் பிறரனைவருக்கும் தெரிந்தவற்றை துறக்கிறான். நல்லோன் பிறரறியாது பெருகியவற்றை பிறர் அறிய துறக்கவேண்டியிருக்கிறது” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் துறப்பதைக் குறித்தே எண்ணிக்கொண்டிருக்கிறேன். எப்படி சுழன்றாலும் என் எண்ணம் அங்குதான் சென்று நிலைகொள்கிறது” என்றார் விதுரர்.

“ஏன்?” என்று இளைய யாதவர் கேட்டார். “இப்பேரழிவில் எனக்கு பங்கில்லை என எண்ண விழைகிறேன். இதிலிருந்து முழுமையாக விடுபட்டுச் சென்றுவிட்டாலொழிய எனக்கு மீட்பில்லை. இதில் இனி நான் என்ன செய்தாலும் இதன் பழி எனக்கும் வந்துசேரும். யாதவரே, நேரடியாக சொல்கிறேன். நான் அஞ்சுவது என்னைத்தான். இப்போரில் என் உளம் ஈடுபடும். எவரோ கொல்லப்படுகையில் துயருறுவேன். எவரோ வீழ்கையில் நான் மகிழ்வேன். இரண்டும் என்னை கீழ்மையிலாழ்த்தும். இது தொடங்குவதற்கு முன்னரே இங்கிருந்து கிளம்பினேன் என்றால் மட்டுமே நான் மீண்டவன் ஆவேன்” என்றார் விதுரர்.

குரல் நெகிழ “நான் உங்களை நாடிவந்தது இதன்பொருட்டே என இப்போது உணர்கிறேன். நான் துறந்து செல்லும் வழி எது? எதை முதலில் அறுக்கவேண்டும்? எவ்வழியே மீளவேண்டும்? நீங்கள் சொல்லமுடியும். என் உளமறிகிறது, இங்கு அனைத்தையும் துறந்து அமர்ந்திருப்பவர் நீங்கள் ஒருவரே என” என்றார் விதுரர். இளைய யாதவர் “துறந்து சென்று எதை அடையவிழைகிறீர்கள்?” என்றார். “எதையும் அடையாவிட்டாலும் சரி. இங்கிருந்து இக்கீழ்மைகளில் உழலாமலிருந்தாலே நான் மீண்டவனாவேன்” என்றார். “இங்கிருந்து இவற்றை அள்ளும் இவ்வுள்ளத்தை கொண்டுதானே செல்வீர்கள்?” என்றார் இளைய யாதவர்.

விதுரர் “ஆம், நான் துறக்க விரும்புவது இதைத்தான்” என்றார். இளைய யாதவர் “வெறுத்தலும் விரும்புதலும் இல்லாதவன் எங்கிருந்தாலும் துறவியே. அகம் அசையா நிலையே யோகம். உலகியலையும் யோகத்தையும் வெவ்வேறெனக் கருதுபவர்கள் அறியாதவர்களே. உலகியலில் யோகத்திலமைபவன் இரண்டின் பயனையும் அடைகிறான். செயல்களில் ஒட்டாதவன் செயல்களின் பயனால் சிறப்புறுகிறான். மெய்யறிந்தவன் நான் எதையும் செய்யவில்லை என்று உணர்ந்தவன்” என்றார்.

“காண்கையிலும் கேட்கையிலும் தொடுகையிலும் முகர்கையிலும் உண்கையிலும் நடக்கையிலும் உயிர்க்கையிலும் உறங்குகையிலும் புலம்புகையிலும் விடுகையிலும் பெறுகையிலும் விழிக்கையிலும் துயில்கையிலும் புலன்கள் என்பொருட்டு இவற்றை ஆற்றுகின்றன, இவை நானல்ல என்று அகன்றவன் யோகத்திலமைந்தவன்” என்று தொடர்ந்தார். “செயல்முதன்மை, செயலாட்சி, செயற்பயன் மூன்றும் எவருக்கும் அளிக்கப்படவில்லை. தீயோன் நல்லோன் என்றுகூட எவரும் இறுதியாக பகுக்கப்படவில்லை.”

“அறியாமையால் சூழப்பட்டுள்ளது அறிவு. கருவை கருவறைக்குருதி என. அறிவு அறியாமையையே உடலெனக்கொண்டு எழுகிறது. அறியாமை அதன் ஊர்தி. சென்றடைவதுவரை உடனிருப்பது” என்றார் இளைய யாதவர். விதுரர் அச்சொற்களில் ஆழ்ந்தவராக அமர்ந்திருந்தார். வெளியே காற்றின் ஓசை எழுந்து அலைபெருகிச் சூழ்ந்து பின் அமைந்தது. காட்டு ஆடுகளின் தும்மலோசை எழுந்தது. விதுரர் பெருமூச்சுடன் கலைந்து “யாதவரே, இங்கு இந்தச் சிறிய சொல்லாடலிலும் நான் மீளுறுதி கொண்டது ஒன்றை குறித்தே. அறியும்தோறும் இருளையே காண்கிறோம். அறிந்து செல்லும் பாதை முற்றிருளுக்கே இட்டுச்செல்லும் எனில் அறிவினால் என்ன பயன்?” என்றார்.

அச்சொற்றொடர் அவரை முகம்தெளியச் செய்தது. “ஆம், மிகச் சரியாக இப்போதுதான் நான் என் வினாவை வந்தடைந்திருக்கிறேன். முன்பு நான் சொன்ன என் உணர்வுநிலைகள் அனைத்துக்கும் மையமென அமைந்தது இதுதான். வாழ்க்கை முழுக்க அறிவினூடாகவே வளர்ந்து வந்தேன். எனைச் சூழ்ந்த அனைவரையும் ஊடுருவிச்சென்று வகுத்தேன். என்னை கடந்துசென்று கண்டறிந்துகொண்டே இருந்தேன். என்னைக்கொண்டு அவர்களையும் அவர்களைக்கொண்டு என்னையும் உணர்ந்தேன். இன்று வந்து நின்றிருக்கும் உச்சிமுனையில் நின்று நோக்குகிறேன். நான் கண்டதெல்லாம் மானுடத் தீமை, அதை ஆளும் இயற்கையின் தீமை, அது அமைந்திருக்கும் பெருவெளியின் அறியமுடியாமை.”

“நான் அறிந்தது நூல்கள் சொன்ன பொய்யென்றும் நான் கொண்ட உளமயக்கென்றும் எக்கணமும் தெளியக்கூடும் என்று ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதை நம்பியே மீண்டும் மீண்டும் அறிய முயன்றேன். அவ்வாறே என்று அறிவு ஆணையிட்டுரைத்தபோது அவ்வாறு அமையலாகாதென்று விழைந்தேன். இன்று எழும் இப்போரின் வடிவில் என் முன் திசைமறைத்துச் சூழ்ந்து நின்றிருக்கிறது நான் மறுக்க விரும்பிய உண்மை” என்றார் விதுரர். “யாதவரே, நீர் கோரியபடி இதோ என்னைத் தொகுத்து சொல்வகுத்து முன்வைக்கிறேன். அறிவது தீமையை மட்டுமே என்றால் அறிவை ஒழிவதல்லவா மெய்யின் வழி?”

முந்தைய கட்டுரைகாவேரி
அடுத்த கட்டுரைமூன்று சிறுகதைகள்