மின்கேத்தலில் தண்ணீரை கொதிக்கவைக்கும்போது விசும்பல் ஒலிகளை விட்டுவிட்டுக் கேட்டேன். உன்னிடம் இருந்துதான் அவை எழுகின்றனவோ என்ற ஐயத்துடன் எட்டிப்பார்த்தேன். உன்னிடமிருந்துதான், உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உன்னிடம் வந்து பேசுவோமா வேண்டாமா என்ற சில கணம் யோசித்துவிட்டு விலகிச்சென்றேன்.
காயத்ரியை கடக்கும் முன்பே கனிமொழியை பார்க்க நேர்ந்தது. முகத்தில் ஒரு சில பெரிய பருக்கள் தென்படத் தொடங்கியிருந்தன கனியின் முகத்தில். ஒரு முடிக்கற்றை மட்டும் முன்னே வந்துவிழ அவனுக்கு எதிரே நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளை ஒரு ஆசிரியருடன் தொடர்புபடுத்தி பள்ளியில் உலவிய கதையை நரேன் நம்பாமல் இல்லை. இருந்தும் அவள் முகத்தை நோக்கி ஒரு கள்ளப்பார்வையைச் செலுத்தாமல் கடக்க அவனால் முடியவில்லை.
மறுநாள் அவள் ஒன்றும் நடக்காததுபோல எல்லாக் கடமைகளையும் செய்துவைத்ததைப் பார்க்கும்போதுதான் ஆச்சரியமாக இருந்தது. “பொண்டாட்டியாச்சேன்னு சும்மா விட்டேன்” என அவன் சும்மா சொல்லிப் பார்த்தான். அவள் சாந்தமாகவே தெரிந்தாள். முகம் முழுதும் மஞ்சள் பூசியிருந்தாள். நிறைந்த திலகம். அவ்வப்போது மென்மையாகச் சிரித்தாளே தவிர முகத்தில் வேறெந்த மாற்றமும் இல்லை. “பொட்டச்சிக்குத் திமிறப்பாரு” எனச்சொல்லி ‘தூ’ எனத் துப்பியபோது அவனுக்குக் கம்பத்து முட்டையை உடைத்து குடிக்கக்கொடுக்க பூசிய மஞ்சளின் வாசம் அவள் கைகளில் வீசியது.
சமீபத்தில் வாசித்த மூன்று சிறுகதைகள் இவை. மூன்றும் ஏறத்தாழ ஒரே உளச்சூழலில் நிகழ்வன என்று தோன்றியது. வாசகர்களுக்கு வெறுமே கவனப்படுத்துகிறேன். விவாதங்களுக்கும் கருத்துக்களும் அந்தந்த இணையதளங்களில் நிகழ்க
ஜெ