அன்பின் ஜெ,
வணக்கம்.
இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் சார்பில் அதிலும் சென்னையில் பெருவிழா எடுத்து எனக்கு நீங்கள் பெற்றுத் தந்திருக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது. ஓர் அர்த்தமுள்ள வாழ்வைத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்ற உணர்வை நீங்களும் நண்பர்களும் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள். அது மேலும் பல ஆண்டுக்காலம் உற்சாகமுடன் செயல் புரிய எனக்குத் துணை வரும்.
ருஷ்யக்கலாசார மையத்தில் நிகழ்ந்த 7.4.2018 மாலைக்கூட்டம் என் வாழ்வில் முக்கியமான நேரங்களில் ஒன்று. தங்களுக்கும் எல்லா நண்பர்களுக்கும் என் நன்றி.இத்துடன் என் ஏற்புரையை இணைத்திருக்கிறேன்.
நன்றியும் அன்புமாய்
சுசீலா
***
ஏற்புரை
அனைவருக்கும் வணக்கம். விழாத்தலைமை ஏற்றிருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு.இ.பா அவர்களுக்கும் என் அன்பிற்குரிய நண்பரும், எழுத்தாளருமான திரு.ஜெயமோகன் அவர்களுக்கும் அரங்கில் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை முன் வைத்து ஆய்வுரை நிகழ்த்திய எழுத்தாளத் தோழர்கள் யுவன் சந்திரசேகர்,ராஜகோபாலன் சுரேஷ் பிரதீப் ஆகியோருக்கும் இந்த விழாவை நடத்துவதில் ஒருங்கிணைந்ததோடு இதில் பங்கேற்றுச் சிறப்புச்செய்த தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர் திரு திரு.மிகயீல் கார்ப்பட்டோவ் அவர்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த இனிய நட்புக்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் அவையில் குழுமியிருக்கும் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கங்கள்.
நான் செய்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை கவனப்படுத்தும் வகையில் சென்னையில் ஒரு விமரிசனக் கூட்டம் நடத்தப்போவதாக பிப்ரவரி மாதம் ஜெயமோகன் எனக்கு ஒரு மின்அஞ்சல் அனுப்பி ,கைபேசியிலும் சொன்ன அந்தத் தருணத்திலும் கூட ருஷ்யக்கலாசார மையத்தோடு இணைந்து இத்தனை பெரிய விழாவாக இது உருப்பெறக்கூடும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. நண்பர் சிரில் அலெக்ஸ் அவர்கள் இது குறித்துப்பகிர்ந்தபோதும், தொடர்ந்து ஜெயின் தளத்தில் விரிவான பதிவும் அழைப்பிதழும் வெளியானபோதும் மகிழ்ச்சியோடு கூடவே சிறு தயக்கமும்- கூச்சமும் கூட எனக்கு ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு முதன் முதலாக ஆ மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்த காலகட்டத்திலிருந்து அந்த இலக்கியக்குடும்பத்தில் ஒருத்தி நான். திரு ஜெயமோகன் உட்பட விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரும் -என்னை நேரில் பார்த்தவர் பாராதவர் என எல்லோருமே- -தங்கள் குடும்பத்தின் ஒரு மூத்த சகோதரியாக, அன்னையாகவே என்னை ஏற்று வேற்றுமை பாராட்டாத உண்மையான அன்பையும் மதிப்பையும் செலுத்தி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு இளையோர் எடுக்கும் விழாவாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டபடி இதற்கு இசைந்தேன்.
மேலும் என் மொழியின் வழியாகவும் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கும் இலக்கியப்பேராசான் தஸ்தயெவ்ஸ்கி அவர்களுக்குத் தமிழ் இலக்கிய உலகம் ஒன்று கூடித் தமிழகத் தலைநகரில் எடுக்கும் விழா என்றே இதை நான் கொள்கிறேன். அந்த மாமேதைக்கு என் நன்றியைக்காணிக்கையாக்குகிறேன்.
படைப்பாக்க முயற்சிகளில் மொழியாக்கத்துக்கும் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு என்பதை அறிந்திருந்தாலும் மிகப்பெரும் மொழியாக்க முயற்சி ஒன்றில் நான் நேரடியாக ஈடுபட நேர்ந்தது மிக மிகத் தற்செயலான ஒரு நிகழ்வு.
தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் முதன்முதலாக அறிந்த பிள்ளைப்பிராயம் தொடங்கி எதையாவது எழுதியே ஆக வேண்டும் என்ற தீராத ஆர்வம் என்னில் பற்றிக்கொண்டிருந்தது. கிடைத்த நூல்களையெல்லாம் வாசிப்பது மட்டுமல்லாமல் ஏதோ ஒன்றை எழுதிப்பார்க்கும் முயற்சியை நான் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து மேற்கொண்டிருந்தேன். என் நேசத்துக்குரிய பேராசிரியப்பணி பிற பொறுப்புக்களுக்கிடையிலும் கூட வாசிப்பையும் எழுத்தையும் இடையறாது தொடர்ந்து வந்த எனக்குப் படைப்பாளியாகக்கிடைத்த முதல் அங்கீகாரம் 79இல் அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் என் முதல் சிறுகதைக்குக்கிடைத்த முதல் பரிசு. தொடர்ந்து பணி நெருக்குதல்கள்,ஆய்வு இவற்றுக்குஇடையே சில இடைவெளிகளோடு பல கதைகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும் முழுநேர எழுத்து எனக்கு சாத்தியமாகாத நெடும் கனவாக மட்டுமே இருந்து வந்தது. இருந்தாலும் ஆண்டுக்கு 1,2 கதைகளையாவது எழுதிப்பார்த்தபடி அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளால் எழுத்தென்னும் சிற்றகல் என்னுள் முற்றிலுமாய் அவிந்து விடாது காத்தபடி முழுமையான எழுத்துப்பணியில் என்னை மூழ்கடித்துக்கொள்வதற்கான காலம் கனிந்து வரக்காத்திருந்தேன்.
பணிநிறைவு பெற்று குடும்பத்தோடு தில்லி கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்த அந்த வேளையிலேதான் மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் துரைப்பாண்டி அவர்கள் வழியாக தஸ்தயெவ்ஸகியின் குற்றமும் தண்டனையும் நாவலைப் பெயர்க்கும் பணி என்னை வந்தடைந்தது. அவர் வழியாக தஸ்தயெவ்ஸகி என்னிடம் வந்து சேர்ந்த ஒரு முகூர்த்த நேரமாகவே அதை என்னால் கொள்ள முடிகிறது. சொந்த மொழி, பழகிய சூழல், நட்புக்கள் என எல்லாவற்றிலிருந்தும் அந்நியப்பட்டிருந்த தில்லி மண்ணில் -படைப்பாக்க மனநிலை எனக்குள் கைகூடாத ஒரு ஒரு காலகட்டத்தில் குற்றமும் தண்டனையும் நாவலைப் படிக்கத் தொடங்கினேன். ஒரு சில பக்கங்களைத் தாண்டுவதற்கு முன்பே தஸ்தயெவ்ஸ்கி எனக்கு மிகவும் நெருக்கமானவர் போலத் தோன்றத் தொடங்கினார். ரஸ்கோல்நிகோவுக்கு அவரது அன்னை கடிதம் எழுதும் கட்டத்தை நெருங்கியபோது எந்த முயற்சியும் செய்யாமலே எவரோ dictation போடுவது போல அதன் தமிழ் வரிகள் என்னுள் ஓடத் தொடங்கியிருந்தன.
தானும் கூட கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ் தஸ்தயெவ்ஸ்கி படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டது போல .மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில் எல்லாம் பயணம் செய்து,அதன் இண்டு இடுக்குகளையும் கூடத்துழாவி,அங்கே மண்டிக்கிடக்கும் சபலங்களை,சலனங்களை,அழுக்குகளை,ஆசாபாசங்களை,அன்பை,அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும் அவரது எழுத்தை வாசிக்க வாசிக்க அவர் எனக்கு மிகவும் நெருக்கமாகிப்போனார்.அந்த மாமேதையின் வார்த்தைகளுக்குள் – உருகி,உட்கலந்து,கசிந்து.கண்ணீர் மல்கி நான் என்னையே தொலைத்து விட , கூடு விட்டுக்கூடு பாய்வது போல தஸ்தயெவ்ஸ்கியே என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போகிறாரோ என்ற மனமயக்கம் கூட ஒரு கட்டத்தில் என்னுள் ஏற்பட்டிருக்கிறது. .தஸ்தயெவ்ஸ்கி சொல்ல விரும்பிய கதையை,உணர்வுகளைத்தமிழில் முன் வைக்க நானும்,என் எழுத்தும் கருவிகள் மட்டுமே என்ற உண்மையை அப்போது நான் விளங்கிக்கொண்டேன். எட்டு மாதங்களில் அதன் முதல் வரைவை முடிக்கும் அளவுக்கு என்னை ஆட்கொண்டு இயக்கியது அவரது எழுத்து மட்டுமே. 2007இன் இறுதியில் வெளிவந்து இலக்கிய வட்டத்தில் வரவேற்புப் பெற்ற குற்றமும் தண்டனையைத் தொடர்ந்து அசடனைப் பெயர்க்கத் தொடங்கினேன்.
அசடன், குற்றமும் தண்டனையும் போல ஒருமுகத் தன்மை கொண்டதல்ல; பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவையே இடியட்/அசடன். பல இடங்களில் திணறவும் தடுமாறவும் வைத்தாலும் அதிலுள்ள பிரெஞ்சுத் தொடர்களுக்காகவும் சொல்லாட்சிகளுக்காகவும் ஜே என் யூ பிரெஞ்சுத் துறைக்கு ஒரு மாணவ நிலையில் நான் பல நாள் அலைந்து திரிய நேர்ந்தாலும் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது எனக்கு ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது.
குற்றமும் தண்டனையும், அசடன் ஆகிய இரு படைப்புக்களையும் என் வழி தமிழில் முதலில் பதிப்பித்து தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கத்தின்பால் என்னை ஆற்றுப்படுத்திய பாரதி புக் ஹவுஸ் துரைப்பாண்டி அவர்களை இந்த நல்ல தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன். சில நெருக்கடிகளால் அவரால் தொடர்ந்து அந்தப்பணியை முன்னெடுக்க இயலாமல் போனநிலையில்- பலருக்கும் பிரதிகள் கிடைக்காமல் போன கட்டத்தில் – இவற்றை செம்பதிப்புக்களாகக்கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி அந்த 2 பெரும் படைப்புக்களைப்பதிப்பிக்க முன் வந்த தோடு[அசடன் செம்பதிப்புஅச்சில்] அவற்றுக்குப்பின் நான் செய்த தஸ்தயெவ்ஸ்கி குறுங்கதைகள், நிலவறைக்குறிப்புக்கள், இப்போது அச்சில் இருக்கும் இரட்டையர் ஆகியவற்றை மிகச்சிறப்பான தரத்தோடு பதிப்பித்து வரும் நற்றிணை பதிப்பகத்தாருக்கு – குறிப்பாக தோழர் யுகனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மிகப்பிரம்மாண்டமான படைப்புக்களை மொழிபெயர்த்ததை விடக் கடுமையான சவால்களை என் முன் வைத்த சிறிய ஆக்கம் நிலவறைக்குறிப்புக்கள் [Notes From The Underground]. தஸ்தயெவ்ஸ்கியின் பெரிய நாவல்கள் பலவற்றைப்போல எண்ணிக்கையற்ற கதைமாந்தர்களையோ,விறுவிறுப்பான கதைப் பின்னலையோ,மூலக்கதையோடு பிணைந்து வரும் சிறு சிறு கிளைக்கதைகளையோ கொண்டிருக்காமல்எதிரும் புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி- தன்னைத்தானே முரணிக்கொண்டும்,பழித்துக்கொண்டும்,சுய பலங்கள்-பலவீனங்கள் சார்ந்த உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியபடியும் ஓயாமல் உள்ளுலைந்து கொண்டிருக்கும் மனிதமன விசித்திரங்களை ஒரு தனிமனிதமனச்சான்றின் குரலாக்கி வாசகப் பார்வைக்கு அப்பட்டமாக முன்னிறுத்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. புனைவுகளின் சாத்தியங்களையெல்லாம் தன் படைப்புக்களில் எட்ட முடிந்த ஓர் இலக்கிய மேதை இருப்பியல் வாதம் என்னும் இலக்கிய அணுகுமுறைக்கு அளித்திருக்கும் புனைவு வடிவமே நிலவறைக்குறிப்புக்கள். உள்ளச் சுழல்களின் கொந்தளிப்பும்,இருட்டும் நிரம்பிய பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயலும் படைப்பாளியின் தடத்தைப் பிறழ்வின்றிப் பின் தொடர்ந்த வண்ணம் – வெளிப்படையாகச் சொல்லப்படாத பூடகமான அகச்சுழிப்புக்களோடு கூடிய இந்தப்பிரதிக்குள் பயணம் செய்து அதை என் மொழியில் வைக்க நான் எடுத்துக்கொண்ட கால அவகாசம் அளவில் கூடுதலான முன்னவற்றை விட மிகவும் அதிகமானது என்பதே இதன் செறிவையும் அடர்த்தியையும் இருண்மையையும் சொல்லி விடக்கூடும்…
பெரும் படைப்பாளிகளும் மொழிபெயர்ப்பாளர்களும் நிறைந்திருக்கும் இந்த அவையில் தஸ்தயெவ்ஸ்கி.யின் 5 மொழிபெயர்ப்புக்களை செய்து முடித்திருப்பவள் என்னும் ஒரே ஒரு தகுதியுடன் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட ஆர்வமுடன் இருக்கும் இளைய தலைமுறைக்கு என் அனுபவ அடிப்படையில் சுருக்கமாகச்சில செய்திகளை முன் வைத்து என் ஏற்புரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நான் மொழிபெயர்ப்புக்கோட்பாடுகளையோ நெறிமுறைகளையோ முறையாகக் கற்றுக்கொண்டு இந்தத் துறையில் கால் பதித்தவள் இல்லை. அது தேவையும் இல்லை என்பதையே என் அனுபவமும் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் எதிர்வினைகளும் திரும்பத் திரும்ப எனக்கு உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
தொடந்த இலக்கிய வாசிப்பும் தொடர்ந்து ஏதேனும் ஒன்றை எழுதிப்பார்த்தபடி ஏதோ ஒரு வகையில் நம் மொழியைக் கூர் தீட்டிக்கொண்டபடி அது துருப்பிடித்துப்போகாத வகையில் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளும் மட்டுமே நம் மொழி ஆளுமையை உயிர்ப்போடு வைப்பவை படைப்பாக்கங்களுக்கு மட்டுமல்ல, மொழிபெயர்ப்புக்கும் துணை வருபவை அவை மட்டுமே என்பதே அனுபவ வாயிலாக நான் பெற்ற தெளிவு. செவ்விலக்கிய வாசிப்புக்களோடு சமகாலப் புனைவுகளையும் தொடர்ந்து கொண்டிருப்பதே இன்றைய மொழியின் நீரோட்டத்துக்குள் நம்மை இட்டுச்செல்லக்கூடியது; வழக்கிறந்ததாக ஆகி விடாமல் இன்றைய போக்கை ஒட்டியதாக நம் மொழிக்குப் புதுமையும் செழுமையும் சேர்க்கக்கூடியது . இன்றைய காலகட்டத்து இளைஞர்களும் கூட என் மொழியாக்கத்தோடு ஒன்ற முடிகிறதென்றால் என் மொழி நடையோடும் சொற்தேர்வோடும் இணைய முடிந்து அதன் சரளத்துக்காக அதை ஏற்க முடிகிறதென்றால் அதற்கான அடிப்படைக்காரணம் அதுவே.
அது போலவே மொழியாக்கத்தின் கதை ஓட்டத்தை நான் உயிர்ப்போடு தந்திருக்கிறேன் என்று நீங்கள் குறிப்பிடுவதற்கான பின்புலத்தை எனக்கு அமைத்துத் தந்தவை நான் எழுதிப்பார்த்திருக்கும் சிறுகதைகளும் ’யாதுமாகி’ என்ற என் நாவல் முயற்சியுமே. மொழியாக்கம் என்று தோன்றாத வண்ணம் அதை நான் தந்திருந்தால் அதற்கான காரணம், இடை இடையே இவ்வாறு தனிப்பட்ட படைப்பாக்கங்களிலும் நான் ஈடுபட்டு வருவது மட்டுமே..ஒரு மொழியாக்கம் முடிந்ததும் ஒரு சிறு படைப்பாக்கம் என்று என்னை நான் தகவமைத்துக்கொள்கிறேன். படைப்பாக்கத்தால் மொழியாக்கமோ மொழியாக்கத்தால் படைப்புத் திறனோ எந்த வகையிலும் பாதிப்புறுவதில்லை என்பதே நான் கண்டடைந்த முடிபு.
இவற்றுக்கெல்லாம் மேலான முதன்மையான ஒன்று உண்டு. அதுவே மொழியாக்கும் படைப்பின் மீது நாம் கொள்ளும் எல்லை கடந்த நேசம் பற்று. அதுவும் நாமும் வேறில்லை என்று ஒன்றிக்கலக்கும் அபேத நிலை மட்டும் நமக்குக் கை கூடி விட்டால்- மொழி ஆளுமை நம் வசப்பட்டு விட்டால்- மொழிபெயர்ப்புக்காகப் பிறகு எந்தத் தனிப்பயிற்சி வகுப்பும் இலக்கண நெறிகளும் வழிகாட்டுதல்களும் தேவையில்லை என்று துணிந்து இறங்கி விடலாம். நாம் மிகவும் நேசிக்கும் – நம்மைக்கட்டிப்போட்டு பிரமிக்க வைக்கும் விடும் ஒரு பிரதி சார்ந்த மொழிபெயர்ப்பில் முனையும்போது மட்டுமே குறிப்பிட்ட அந்த எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், மூலப்படைப்பாளி பெற்ற அகக்காட்சிகளை -அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை- அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் சாத்தியமாகும்.
என்னைப்பொறுத்த வரை என் அகமனத்தைத் துலக்கவும் அதில் புத்தொளி பாய்ச்சவும் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் மொழியாக்கப்பணியில் நான் கழித்த பொழுதுகள் துணை வந்திருக்கின்றன. அவரது ஒவ்வொரு படைப்பைப் படிக்க நேரும் கணமும்,அதை விட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை; என் அகத்தை விசாலப்படுத்தி அகந்தையைச் சிதைத்துப்போடுபவை. திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே.
ஒரு சிறிய சம்பவத்தைச் சொல்வதோடு இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்.2011- அசடன் வெளி வந்த நேரம்; அப்போது தில்லியில் வசித்துக்கொண்டிருந்த எனக்கு மதுரை அனுப்பானடிப்பகுதியிலுள்ள அறிமுகமில்லாத தையல் கலைஞர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. 600 ரூபாய் என்பது அவரைப்பொறுத்த வரை ஒரு மிகப்பெரும் தொகை; அத்தனை விலை தந்து அசடனை வாங்கிப்படித்து என் கைபேசி எண்ணையும் முயன்று கண்டு பிடித்து ‘’ஆங்கிலம் அறியாத என்னிடம் அசடனைக் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்’’என்று அவர் நெகிழ்ந்து சொன்ன அந்தக்கணம் என் நெஞ்சில் உறைந்து கிடக்கிறது. வேறெந்த விருதுகளையும் விட மேலான ஆத்மார்த்தமான அந்தச் சொல் போலவே இன்றைய விழாவும் என் நெஞ்சை நிறைத்தபடி நான் வாழ்ந்திருப்பது அர்த்தமுள்ள ஒரு வாழ்வைத்தான் என்று என்னை உணர வைக்கிறது.
அந்த நிறைவையும் மகிழ்வையும் எனக்களித்த இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் பெரு முயற்சி எடுத்து இந்த விழாவை நிகழ்த்திக்காட்டியிருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
***
ஜெயமோகன் உரை
விழா பதிவு
சுசிலா நன்றியுரை
சுரேஷ் பிரதீப்
ராஜகோபாலன்