பகுதி ஐந்து : விடுதல்
நைமிஷாரண்யத்தின் எல்லையை அடைந்த யமன் நின்று திரும்பி நோக்கி நெடுமூச்செறிந்தார். அவரருகே வந்த ஏவலனாகிய திரிதண்டன் “அரசே, நாம் திரும்புகிறோமா?” என்றான். யமன் “இல்லை, இது இங்கே இப்படி முடியாது என்று எனக்குப் படுகிறது. இன்னும் பல படிகள் உள்ளன இதற்கு” என்றார். “அதெங்ஙனம்?” என சொல்லத் தொடங்கிய திரிதண்டன் யமனின் தத்தளிக்கும் முகத்தை நோக்கியபின் “என்ன எண்ணுகிறீர்கள் என்பது தெளிவாகவில்லை” என்றான்.
யமன் “இறுதி வினா ஒன்று உண்டு. அதுவே என்போன்ற தேவர்களுக்குரியது. அதைத்தான் நான் அவரிடம் கேட்கவேண்டும்” என்றார். “ஆனால் அதை நான் மானுட அறிவுநிலைகளினூடாகவே சென்றடைய முடியும். இப்போது மூன்று படிகள் மட்டுமே ஏறியிருக்கிறேன்” என்றார். திரிதண்டன் “இன்னும் எத்தனை?” என்றான். “அதை எவ்வண்ணம் அறிவேன்?” என்று யமன் சொன்னார். ஐயத்துடன் “அது முடிவிலாததென்றால்?” என்று திரிதண்டன் கேட்டான். யமன் “அவ்வண்ணம் அமைய வழியில்லை. மண்ணில் மானுடரின் இயல்புகளும் திறன்களும் எல்லைக்குட்பட்டவை” என்றார்.
பின்னர் மீசையை நீவியபடி இருள் நிறைந்த காட்டை நோக்கிநின்று “அவர் சொன்ன ஒரு வரியே அதற்கும் அடிப்படை. அறிவென்று ஒன்று இங்கிருப்பதே அது அறியற்பாலது என்பதற்கான சான்று” என்றார். திரிதண்டன் “நான் என்ன செய்யவேண்டும், அரசே?” என்றான். “இன்னொருவர் வேண்டும், இதற்கடுத்த நிலையில் வினாவுடன் கொதித்துக்கொண்டிருக்கும் ஒருவர். அவரை கண்டறிக!” என்றார் யமன். திரிதண்டன் திரும்பிநோக்க அவன் நிழல்பெருக்கென காலர்கள் எழுந்தனர். “செல்க!” என்றான் திரிதண்டன்.
அவர்கள் மறைந்து மறுகணம் தோன்றினர். முன்னால் நின்றிருந்த தமோகாலன் என்னும் ஏவலன் “அரசே, இளைய யாதவரை எண்ணி கணம்கணமென எரிந்துகொண்டிருப்பவர்களில் முதன்மையானவரை அஸ்தினபுரியின் அரண்மனையில் பார்த்தேன். அவர் பெயர் விதுரர்” என்றான். “குருகுலத்தின் அமைச்சர். கவிமுனிவராகிய கிருஷ்ண துவைபாயன மகாவியாசருக்கு சிவை என்னும் அன்னையில் பிறந்தவர். திருதராஷ்டிரருக்கும் பாண்டுவுக்கும் இளையவர்.” யமன் “ஆம், அவரேயாகலாம். அறிதலை வாழ்வெனக் கொண்டவர். அறிவுகடந்த ஐயம் அவருக்கே எழும்” என்றார். மறுகணம் அவர் விதுரரென்றிருந்தார். நைமிஷாரண்யக் காட்டுக்குள் தொய்ந்த தோள்களும் கூன்விழுந்த உடலுமாக சென்றுகொண்டிருந்தார்.
அது மறுநாள் இரவின் அதே பொழுது. இளைய யாதவர் சற்றுமுன்னர்தான் அகல்சுடரை அணைத்திருந்தார். வெளியே காலடியோசையை கேட்டு அவர் எழுந்து அகலை பொருத்தாமல் சென்று கதவை திறந்தார். முற்றத்தில் மேலாடையை போர்வைபோல் உடலைச் சுற்றி அணிந்து குளிருக்கு உடல் குறுக்கி நின்றிருந்த விதுரர் ஒன்றும் சொல்லாமல் கைகூப்பினார். “வருக!” என்றபடி உள்ளே சென்ற இளைய யாதவர் விதுரரிடம் அமரும்படி கைகாட்டிவிட்டு சிக்கிமுக்கியை உரசி அகல்சுடரை பொருத்தினார்.
விதுரர் அமர்ந்துகொண்டு உடலை மேலும் குறுக்கிக்கொண்டார். இளைய யாதவர் அமர்ந்து “நீர் அருந்துகிறீர்களா, அமைச்சரே?” என்றார். “ஆம்” என்றார் விதுரர். இளைய யாதவர் அளித்த நீரை அருந்தி மேலாடையால் வாயை துடைத்துக்கொண்டார். அவருக்கு அப்போதும் மூச்சிளைத்துக்கொண்டிருந்தது. இளைய யாதவர் புன்னகைத்து “நெடுநாட்கள் உடல்பயிலவில்லை என எண்ணுகிறேன்” என்றார். “துயில்நீப்பு. காலைகள் அனைத்தும் களைப்பால் வெளிறியிருக்கின்றன. உச்சிப்பொழுதில் மட்டும் சற்று துயில்கிறேன். இரவுகளில் நானறியா இருள்தெய்வங்கள் வந்து சூழ்ந்துகொள்கின்றன” என்றார் விதுரர்.
இளைய யாதவர் “ஆம், போர் எழும் நகர்களில் பகலில் ஊக்கமும் இரவில் ஐயமும் பெருகும் என்பார்கள்” என்றார். விதுரர் அதற்கு மறுமொழி சொல்லாமல் நிலம்நோக்கிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. விதுரர் தலைதூக்கி “நான் உங்களிடம் எதை கேட்கவந்தேன் என தெரியவில்லை. உண்மையில் உங்களை சந்திக்கும் எந்த எண்ணமும் எனக்கில்லை” என்றார். “மெய்யாக சொல்லவேண்டுமென்றால் உங்கள்மேல் கடும்சினமே கொண்டிருந்தேன். இப்போரை மூட்டிவிட்டுச் சென்றது நீங்களே.”
இளைய யாதவர் “நானா?” என்றார். “ஆம், நீங்கள் வந்த மூன்று தூதுமே போரை மூட்டும் செயல்களே.” இளைய யாதவர் “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “யாதவரே, துரியோதனனும் அவன் அரசத்துணைவரும் உள்ளூர அச்சம் கொண்டிருந்தார்கள். போருக்கெழும் ஒவ்வொருவரும் எதிரியின் ஆற்றலை அறிய முயல்கிறார்கள். அதற்கென உளம்கூர்கிறார்கள். கூர்ந்துநோக்கும் எதுவும் உருப்பெருகும். எதிரியின் ஆற்றலை பெருக்கியே மதிப்பிடுவார்கள். ஒருவரோடொருவர் பேசப்பேச பெருகும் அது. பேச்சை நிறுத்தி எண்ணத்தொடங்குகையில் மேலும் பெருகும். அச்சமும் ஐயமும் இல்லாமல் களம்செல்லும் எவருமில்லை” என்று விதுரர் சொன்னார்.
“அவர்கள் தங்கள் ஆற்றல் குறித்து ஐயம் கொண்டிருந்தனர். ஏனென்றால் கௌரவர்களின் பெரும்படைத்தலைவர்கள் அதுவரை ஒன்றென நின்று பொருதியதே இல்லை. பாண்டவர்களைப்பற்றி அச்சம் கொண்டிருந்தனர், ஏனென்றால் அவர்களை எவரும் எப்போதும் வென்றதேயில்லை. அனைத்தையும்விட அவர்கள் உங்களைப்பற்றி திகைப்பே கொண்டிருந்தனர். எவரென்று எவராலும் வகுக்கப்படாத பேருருவர் நீங்கள். அனைத்தையும் அழித்தது உங்கள் தூது. போர்முனை ஒருங்கியபின் தூது வருவது ஆற்றலின்மையை காட்டுகிறது. நிலம்கோரி இரந்து நிற்பது அச்சம் என பொருள் கொள்கிறது.”
“நீங்கள் தூது வந்ததே துரியோதனனை தருக்க வைத்தது” என்று விதுரர் தொடர்ந்தார். “மீண்டும் தூது வந்தபோது மேலும் ஆணவம் கொண்டான். இன்று இப்போரில் யானை நாணல்காட்டிலென தான் நுழைந்து அப்பால் செல்வோம் என நம்பிக்கொண்டிருக்கிறான். போர் ஒழிவதற்கான அனைத்து வாய்ப்புகளும் முற்றாக மூடப்பட்டுவிட்டன.” இளைய யாதவர் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தார். “ஆனால் போர் அவ்வண்ணம் எளிதில் முடியாது. பேரழிவே எஞ்சும். பிறந்த கணமே நிமித்திகர் உரைத்தனர், பீமன் குலாந்தகன் என்று. அர்ஜுனன் லட்சம்பேரை கொல்லும் வில்கொண்ட சவ்யசாசி என்று. அது நிகழும். அவர்களை எவராலும் வெல்லவியலாது” என்றார் விதுரர்.
“ஒருவேளை பாண்டவர்கள் இவர்களை முற்றழிக்க சற்றே தயங்கியிருக்கக்கூடும். அத்தயக்கத்தையும் இல்லாமலாக்கியது உங்கள் தூது. ஊசிமுனை நிலம்கூட மறுக்கப்பட்டதென்பதே பாண்டவர்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்னும் உரிமையை அளிக்கிறது. அவர்கள் எது செய்தாலும் எதிர்காலத்தின் விழிகளில் சரியென்றாக்குகிறது. அவர்களைக் கட்டியிருக்கும் அனைத்துச் சரடுகளிலிருந்தும் விடுவித்துவிட்டீர்கள், யாதவரே. இப்போரை மிகச் சரியாக கொண்டுசென்று குருஷேத்ரத்தில் நிறுத்திவிட்டீர்கள்” என்றார் விதுரர்.
இளைய யாதவர் மாறாப் புன்னகைகொண்ட முகத்துடன் பாவையென அமைந்திருந்தார். விதுரர் “நீங்கள் எண்ணுவதென்ன? இந்நிலத்தில் ஒரு குருதிப்பெருக்கை உருவாக்கி எதை அடையப்போகிறீர்கள்? விண்ணளந்த பேருருவனின் மண்வடிவம் நீங்கள் என்று உங்களை சொல்கிறார்கள் எளியோர், அறிவிலாப் பெண்டிர், அறிவுமயங்கிய சூதர். ஆனால் அவர்கள் எப்போதும் அறிவறியாத ஒன்றை அறிபவர்கள். மெய்யாகவே நீங்கள் அவர்தானா? கோடித்தலையை குருதிபலியாகப் பெற்று விண்மீள வந்த தெய்வமா? அறியேன். ஆனால் நீங்கள் மண்ணுக்கு நலம்பயக்கவில்லை. அழிவைநோக்கி கொண்டுசெல்கிறீர்கள்” என்றார்.
“உங்கள் குலத்தை உங்கள் கைகளாலேயே முற்றழிக்கவிருக்கிறீர்கள். உங்களை தந்தையெனக்கொண்டு வளர்ந்த மைந்தர்கள் பல்லாயிரவர் களத்தில் தலையுருள குருதிசிதறி விழப்போகிறார்கள். உங்களை தெய்வமென்று கொண்ட பெண்கள் பலர் கைம்பெண்ணாகவிருக்கிறார்கள். யாதவரே, இன்றும் உங்களை வழிபடும் கௌரவ அரசியர் அனைவரையும் பாழ்கொள்ளச் செய்யவிருக்கிறீர்கள். அதனூடாக எந்நன்மை நிகழினும் அதனாலென்ன?”
மூச்சிரைக்க விழிகள் நீர்மைகொள்ள விதுரர் நிறுத்தினார். “நான் என் மூத்தவரை சென்று பார்க்க அஞ்சி தவிர்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னை அழைக்கவுமில்லை. முதற்சிலநாட்கள் அவரைப்பற்றி எண்ணலாகாதென்று ஒழிந்தேன். பின்னர் எண்ணாமலிருக்க இயலாதென்று கண்டேன். சஞ்சயனையும் யுயுத்ஸுவையும் சென்றுகண்டு அவர் எப்படி இருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். துயர்கொண்டிருக்கிறார், துயிலிழந்திருக்கிறார் என்றனர். அவருடைய மருத்துவரை சென்றுகண்டேன். அவர் நாடி பிழைகொண்டிருக்கிறது என்றார். துயிலின்பொருட்டு அளிக்கப்படும் நஞ்சு அவ்விளைவை அளிக்கிறது என உணர்ந்ததாகவும் நஞ்சின்றி துயிலவைக்க வழியுண்டா என உசாவிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.”
இப்புவியில் அவரன்றி எவரையும் நான் மெய்யுறவென்று கருதவில்லை என்று உணர்ந்தேன். அவர் மைந்தருக்கு அணுக்கமாக இருப்பதும் அவர்களைக் காக்கப் போரிடுவதும் அந்த அன்பின்பொருட்டே. நாளெல்லாம் அவரைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்து தன்னிரக்கம் கொண்டேன். அவருக்காகவே வாழ்ந்திருக்கிறேன். இறுதியில் அவரை முழுமையாகவே கைவிட்டுவிட்டு திறனற்றவனாக அமர்ந்திருக்கிறேன். என் கல்வி, நுண்ணறிவு, நல்லியல்பு எதுவும் அவருக்கு பயனளிக்கவில்லை.
ஒருநாள் உளமுருகி அழத்தொடங்கினேன். எண்ணி எண்ணி அவரைப்பற்றிய என் நெகிழ்வைப்பெருக்கி விழிநீர் ஒழிந்தபின் மீண்டேன். அந்த நீள்துயரிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி அவரைச் சென்று பார்ப்பதே என்று தோன்றியது. மறு எண்ணமில்லாமல் அப்போதே கிளம்பி புஷ்பகோஷ்டத்திற்கு சென்றேன். வாயிலில் அமர்ந்திருந்த சங்குலன் எந்த மாறுதலுமில்லாமல் அப்படியே இருந்தான். அதுவே எனக்கு ஓர் ஏமாற்றத்தை அளித்தது. “அரசர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டேன்.
அவன் தன் தந்தை விப்ரரைப்போலவே சொல்குறைந்தவன், விழி சந்திக்காத நோக்குகொண்டவன். “அவையமர்ந்திருக்கிறார்” என்றான். உள்ளே சென்றபோது மூத்தவர் யுயுத்ஸுவுடன் நாற்களமாடிக்கொண்டிருந்தார். அவர் அருகே சஞ்சயன் அமர்ந்திருந்தான். யுயுத்ஸு களம்நோக்கி குனிந்திருக்க சஞ்சயன் யுயுத்ஸுவின் காய்நீக்கங்களை மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். என் காலடியோசை கேட்டதும் கையில் எடுத்த காயுடன் அவர் செவிதிருப்பினார். நான் அருகே சென்று “மூத்தவரே, வணங்குகிறேன்” என்றேன். “நலமாக இருக்கிறாயா? நீ வந்து நீணாள் ஆகிறது” என்றபின் காயை நீக்கி “நீ விளையாடு, மைந்தா” என்றார்.
யுயுத்ஸு என்னை நோக்கிக்கொண்டிருந்தான். நான் விழிகாட்டியதும் “இளைய தந்தை தங்களிடம் பேசவிழைகிறார் போலும்… நான் ஏவலரிடம் சற்று சொல்லாடிவருகிறேன்” என்று எழுந்து சென்றான். அவர் என்னிடம் “என்ன சொல்லவிருக்கிறாய்?” என்றார். “நான் அவைக்குச் சென்றே நெடுநாட்களாகின்றது” என்றேன். “ஆம், அதை அறிந்தேன். படைக்கூட்டுக்கு ஜயத்ரதனையும் அரசர்களுடன் பேசுவதற்கு பூரிசிரவஸையும் அவை நிகழ்த்துவதற்கு சல்யரையும் அரசன் அமைத்திருப்பதாக சொன்னார்கள்” என்று அவர் எந்த உணர்வுமின்றி சொன்னார்.
“ஆம், என்னால் அதிலெல்லாம் ஈடுபட இயலாது” என்றேன். என் குரலில் ஒலித்த எரிச்சல் எவர்மேல் என தெரியவில்லை. “ஆம், உன்னால் இயலாது” என்றபின் மூத்தவர் சஞ்சயனிடம் “நமக்கு அரசனின் செய்தி ஏதாவது வந்ததா?” என்றார். “இல்லை” என்றான் சஞ்சயன். என் ஏமாற்றமும் எரிச்சலும் மிகுந்தபடியே சென்றன. “பாண்டவர்களின் படைக்கூட்டும் நிகரென எழுந்துகொண்டிருக்கிறது. அவர்கள் வெல்லப்பட இயலாதவர் என்பதனாலேயே அவர்களுக்கும் அரசத்துணைகள் அமைந்துகொண்டிருக்கின்றன. நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் தங்கள் நெடுநாள் வஞ்சங்களுடன் அவர்களுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றேன். “ஆம், இயல்புதான்” என்றார்.
உரத்த குரலில் “பேரழிவு அணுகிக்கொண்டிருக்கிறது, அரசே” என்றேன். “நம்மால் என்ன செய்ய இயலும்? நம்மை மீறிச் செல்கின்றன அனைத்தும்” என்றார் மூத்தவர். திரும்பி “யுயுத்ஸு எங்கே?” என சஞ்சயனிடம் கேட்டார். “அவர் ஏவலரை பார்க்கச் சென்றார், அரசே” என்றான் சஞ்சயன். “அவனிடம் என் உணவை எடுத்துவைக்கும்படி சொல்” என்றபின் என்னிடம் “நீ என்னுடன் உணவருந்துகிறாயா?” என்றார். நான் “நிமித்தநூல்கள் சொன்னவை ஒன்றுகுறையாமல் எழுந்து அணுகுகின்றன, மூத்தவரே” என்றேன். அவரிடம் எந்த உணர்வுமாற்றமும் தெரியவில்லை. “நம் அரசர் குருதிச்சரடின் இறுதிப்புள்ளி, நகரையும் குடிகளையும் அழிவுக்குக் கொண்டுசெல்லும் கலிவடிவர் என்றனர். அதே நாவால் பீமனை குலாந்தகன் என்றனர்” என்றேன்.
ஒவ்வொரு சொல்லையும் நஞ்சுதீட்டி அம்பு என செலுத்தினேன். “நூற்றுவரும் அவர் பெற்ற ஆயிரத்தவரும் களம்படுவர் என்று நம்மிடம் சொன்ன நிமித்திகர் பலர்.” அவர் “ஆம், அவர்கள் சொல்வதே மெய்யென்றிருக்கலாம். நாம் நம்ப விழைவதை நம்புகிறோம்” என்றபின் “சஞ்சயா, எனக்கு உணவு எடுத்துவைக்கச் சொன்னாயா?” என்றார். “சொல்கிறேன்” என்று சஞ்சயன் எழுந்து சென்றான். நானும் அவரும் மட்டும் அணுக்கமாக நின்றிருந்தோம். அவருடைய விழிக்குழிகள் குருதிக்குமிழிகளாக அசைந்தன. வாய் எதையோ மெல்வதுபோலவோ தனக்கே சொல்லிக்கொள்வதுபோலவோ அசைந்தது.
“அரசே, நம் மைந்தரின் குருதியிலாடி அமையப்போகிறோம். நம் கொடிவழி முற்றழிய பட்டமரமென நின்றிருப்பதே நம் ஊழ்” என்றேன். அவர் “ஆம், அதுவே இறைவிருப்பம் எனில் அவ்வாறே நிகழ்க” என்றபின் “சஞ்சயன் வந்தானா?” என திரும்பினார். யுயுத்ஸு வந்து “தந்தையே, உணவு ஒருங்கியிருக்கிறது” என்றான். நான் “நாம் முற்றிலும் கைவிடப்பட்டிருக்கிறோம், மூத்தவரே” என்றபோது என் குரல் உடைந்தது. “நினைவறிந்த நாள் முதல் நான் தவிர்க்கமுயன்றது இது. இருளென சூழ்ந்துவிட்டிருக்கிறது.” அவர் என்னை நோக்கி முகம்திருப்பி “ஆம்” என்றார்.
அந்த விழியின்மை எத்தனை அச்சமூட்டுவதென்று அப்போது அறிந்தேன். வழியை மூடிய மொட்டைப் பெருஞ்சுவர் என என் முன் நின்றது. பாய்ந்து அந்நெஞ்சை பிளக்கவேண்டும் என்று, என் தலையை அதில் அறைந்து பிளக்கவேண்டும் என்று உள்ளம் எழுந்தது. இன்னும் விசையுடன் எதையேனும் சொல்ல விரும்பினேன். மேலும் மேலுமென நஞ்சை நாடினேன். ஆனால் சொல்திரளவில்லை. அந்தத் தத்தளிப்பாலேயே என் விழிகள் நீர்கொண்டன. “நம் இறப்பை நாமே காணப்போகிறோம். உயிரிழந்த பின்னரும் ஓடென எஞ்சும் சிப்பிகளாக வாழப்போகிறோம்” என்று விம்மி அழுதேன்.
“ஆம், அவ்வாறென்றால் அவ்வாறே. இதுகாறும் அனைத்தையும் அடைந்துவிட்டோம். அளித்தவரின் விழைவு அதுவென்றால் திருப்பி எடுத்துக்கொள்ளட்டும்… அடேய் மூடா, என்ன செய்கிறாய்?” என்றார் மூத்தவர். சஞ்சயன் “இங்கிருக்கிறேன்” என்றான். “என் கையை பிடி…” என்று நீட்டினார். அவன் அவர் கையை பற்றியதும் “மெல்ல அழைத்துச்செல். சென்றமுறை பீடத்தில் முட்டிக்கொண்டேன்” என்றார். சஞ்சயன் நான் ஏதேனும் சொல்ல எஞ்சுகிறதா என என்னை நோக்கினான்.
நான் இரு கைகளையும் முட்டிசுருட்டி இறுக்கினேன். பற்கள் கிட்டித்துக்கொண்டன. “நீ துயர்கொள்ளாதே. அனைத்தும் முடிவாகிவிட்டது. நாம் இயற்றுவதற்கொன்றுமில்லை. உன் கடமைகளை செய்துகொண்டிரு… உன் மைந்தர் நலம்பெறுக!” என்றபின் “யுயுத்ஸு எங்கே? அடேய் மூடா, உணவு ஒருக்கமாகிவிட்டதா?” என்றார். யுயுத்ஸு “ஆம், தந்தையே” என்றான். அவர் மெல்ல நடந்து விலகுவதைக் கண்டு நின்றேன். அனைவரும் சென்றபின்னரும் அங்கேயே நின்றேன்.
யுயுத்ஸு திரும்ப வந்து என்னை கண்டு விரைந்து அணுகி “ஆணை ஏதேனும் உண்டா, தந்தையே?” என்றான். “உண்கிறாரா?” என்றேன். “ஆம்” என்றான். “பொழுதாகவில்லையே…” என்றேன். தயங்கி “பசிக்கையில் உண்கிறார்” என்றான். “இப்போதெல்லாம் பசி மிகுந்துள்ளது என எண்ணுகிறேன்… உடல் முன்னைவிட பெருத்திருக்கிறது” என்றேன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. பற்களைக் கடித்து “மைந்தர் நெஞ்சுபிளந்து கிடக்கும்போது அக்குருதியை அள்ளி சோற்றிலிட்டு உருட்டி அளித்தாலும் உண்பார்… விழியின்மை என்பது ஒரு உடல்நிலை அல்ல” என்றேன்.
யுயுத்ஸுவின் முகம் இறுகியிருந்தது. மேலும் ஏதோ சொல்ல வாய் எடுத்தபின் திரும்பி வெளியே சென்றேன். வழிமூடியதுபோல் நின்ற சங்குலனிடம் “விலகு மூடா… இது என்ன யமபுரியா, பிணத்தை வைத்து வாயிலை மூடுவதற்கு?” என்றபின் வெளியே சென்றேன். வெளியே நின்றிருந்த ஏவலனிடம் “தேர் ஒருங்குக… தேர் சித்தமாக இல்லையேல் உன்னை கழுவேற்றுவேன்” என்றேன்.
என் உடல் பதறிக்கொண்டே இருந்தது. கால்கள் தளர அவ்வப்போது நின்றேன். பின்னர் முற்றத்திற்கு வந்து தேரிலேறிக்கொண்டேன். “எங்கே?” என்று கேட்ட பாகனிடம் “செல்க!” என்று மட்டும் சொன்னேன். இல்லத்திற்கு மீளவே தோன்றியது. ஆனால் அங்கே சென்று அமரமுடியாது என்றும் தோன்றியது. பல நாட்களாக நான் பகல் முழுக்க தொன்மையான போர்ச்சுவடிகளை எடுத்து படித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு சூழ்கையும் என்னென்ன அழிவுகளை உருவாக்கும் என்று நோக்கினேன். எதையெல்லாம் இரு சாராரும் அமைக்கக்கூடும் என்று கணித்தேன். என் உள்ளத்தில் மீளமீள போரை நிகழ்த்தி நோக்கிக்கொண்டிருந்தேன். மீண்டும் என் சுவடிகளுக்குச் செல்ல என்னால் இயலாதென்று தோன்றியது. “கோட்டைமுகப்புக்கு” என்றேன்.
தேர் சீரான சகட ஒலியுடன் சென்றுகொண்டிருந்தது. அந்த ஒலியின் தாளம் என்னை சற்றே அமைதிப்படுத்தியது. நகரம் இரைவீசப்பட்ட மீன்குளம் என கொப்பளித்துக்கொண்டிருந்தது. வீரர்கள் களிவெறிகொண்டவர்களாக குதிரைகளில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். பெண்கள் அவர்களை நகையாடி மலர்களையும் பழங்களையும் எடுத்து வீசி கூச்சலிட்டனர். புரவிகளின் பின்னால் சிறுவர்கள் கூவியபடி ஓடினர். எங்கும் விழவுக்கொண்டாட்டம். மலர்சூடியிருந்தனர் குலமகளிர். அத்தனை கொடிகளும் புதிய துணிகளால் வண்ணம் பொலிந்தன. கோட்டைகளும் காவல்நிலைகளும் புதுச்சுண்ணமும் காவியும் பூசப்பட்டிருந்தன. நகரில் கள்ளருந்தாதவர் சிலரே என்று தோன்றியது.
அப்பால் வாழ்த்தொலியும் குரவையோசையும் முழவும் கொம்போசையுடன் இணைந்து ஒலித்தன. “யார் அது?” என்றேன். “கணிகர்” என்று பாகன் சொன்னான். “தேரை விலக்கி நிறுத்துக…” என்றேன். ஒரு சிறு சாலைப்பிரிவில் தேர் நின்றது. தேனீக்கூட்டம் ஒன்று ரீங்கரித்தபடி செல்வதுபோல ஒரு திரள் சாலையினூடாக நகர்ந்தது. நடுவே கணிகர் சிறுதேர் ஒன்றின் பீடத்தில் அமர்ந்திருந்தார். உடல்நலம் நன்கு தேறியிருந்தது. நிமிர்ந்து அமர்ந்து இருபக்கமும் நோக்கி கைதூக்கி வாழ்த்து சொன்னார். சூழ்ந்திருந்த வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “ஞானாசிரியர் வாழ்க! மூன்றுணர்ந்தோர் வாழ்க! வெற்றிவிதைப்போர் வாழ்க! குருகுலத்து முதல்குரு வாழ்க!” என்று கூவியபடி மக்கள் இருபுறமும் திரண்டு மலர்களை அள்ளி அவர்மேல் வீசினர்.
“அஸ்தினபுரியின் இன்றைய முதன்மைத்தலைவர் இவரே. பாண்டவர்தரப்பின் இளைய யாதவரை வெல்லும் திறன் இவருக்கு மட்டுமே உண்டு என்கிறார்கள் மக்கள்” என்று பாகன் சொன்னான். “இளைய யாதவரை மும்முறை அவையில் வென்றார் என்று சூதர் பாடுகிறார்கள்.” நான் கணிகரையே நோக்கிக்கொண்டிருந்தேன். தன்னில் மகிழ்ந்து திளைத்துக்கொண்டிருந்தார். அவருடைய நகைப்பு மிக அழகானது. இளமைந்தரின் அறியாச் சிரிப்புபோல. அவர் விழிகளும் இளமைந்தருக்குரியவை. தீமையே உருக்கொண்டவர் என்பதே அவரைப்பற்றிய என் எண்ணம். ஆனால் அத்தகைய அழகு எப்படி அமைந்தது? தீமைக்கு அழகின்மையையும் நன்மைக்கு அழகையும் அளிக்கவேண்டுமென்று முதலில் தோன்றியது எந்த மூடக் கவிஞனுக்கு?
கோட்டைமுகப்புக்கு சென்றேன். அங்கிருந்த எவரும் என்னை பொருட்படுத்தவில்லை. வழக்கமான முறைமை வணக்கங்கள், வாழ்த்துரைகள். நான் அவர்களின் போருக்கு எதிரானவன் என்று எண்ணுகிறார்கள் என உணர்ந்திருந்தேன். கோட்டைமேல் ஏறி காவல்மாடத்தில் நின்று பார்த்தேன். முரசு புதிய தோல்பரப்புடன் அன்றுபிறந்த குழவியின் மெருகுடன் இருந்தது. வெளியே முகமுற்றத்தில் ஒரு காவல்படை முரசும் கொம்பும் முழங்க அணிவகுத்து கடந்துசென்றது. காவலர்தலைவனிடம் “இது காந்தாரப்படை அல்லவா?” என்றேன்.
“ஆம், சுபலரின் தலைமையில் பதினெட்டு அணிகள் நேற்று வந்தன. மேலும் மேலுமென படைகள் வந்துகொண்டே இருக்கின்றன” என்று அவன் சொன்னான். “கொசுவை கொல்ல சுத்தியலா என இப்போதே பகடிபேசுகிறார்கள் களிமகன்கள். பாண்டவர்களின் தரப்பில் இருப்பவை பயிலாப் படைகள். அவர்களை எதிர்க்க இன்றிருக்கும் படைவல்லமையே இருமடங்குக்கும் மேல். ஒருநாளில் போர் முடியும். அவர்களில் எஞ்சுபவர்கள் உறுப்பிழந்தவர்கள் மட்டுமாகவே இருப்பார்கள்… இன்னும் படைதிரட்டுவது நாம் வெல்லுமுறுதி கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டும்” என்றான்.
அவன் முகத்திலிருந்த நம்பிக்கையை கண்டேன். அது சொல்லிச்சொல்லி திரட்டப்பட்டது. நெடுங்காலமாக உருவானதனால் உறுதியாகி பாறையென்றானது. அதற்கெதிரான அனைத்துச் சொற்களுக்கும் அவனிடம் மறுமொழி இருக்கும். “ஆம், ஆனால் போர் நிகழும்வரை படைதிரண்டுகொண்டே இருக்கவேண்டும் என்பதல்லவா போர்நெறி?” என்றேன். “ஆம், ஆதரவு வந்தபடியே இருப்பது களிப்பூட்டுவதை மறுக்கவியலாது” என்றான். “குருதிபெருகும்” என்று நான் எனக்கே என சொன்னேன். அவன் “குருதி தூயது, தெய்வங்களுக்குரியது” என்றான். “நம் குருதியும்” என்றேன். “ஆம், நம் குருதியும் நம் மைந்தர் குருதியும். பலியில்லாமல் போர்வெற்றியில்லை” என்று அவன் சொன்னான்.
அவன் முகத்தை நோக்கினேன். அங்கிருந்தது மெய்யான களிப்பு. மேலும் சொல்லெடுக்கத் தோன்றாமல் மேலே நின்றபடி கீழே படைகள் குறுக்கும் மறுக்குமாக அணிகளாக சென்றுகொண்டிருப்பதை நோக்கினேன். எண்ணைப்பூச்சுகொண்டு நின்றிருந்த கைவிடுபடைகள் கண்ணில்பட்டன. மேலும் பலமடங்கு அம்புகள் விற்களில் பொருத்தப்பட்டு இறுகிக் காத்துநின்றிருந்தன. விற்சகடங்களுக்கு அருகே யானைகள் அசைந்து நின்றன. அங்கிருந்து நோக்கியபோது அந்த முனைகள் ஒவ்வொன்றும் விழி என ஒளிசூடியிருப்பதாகத் தோன்றியது. வில்வளைவுகள் புன்னகைத்தன.
இறங்கி அவற்றின் அருகே சென்றேன். அவற்றின் முனைகளை தொட்டுப்பார்க்கவேண்டும் என்று தோன்றியது. மேலேறிச் செல்ல படிகள் இருந்தன. நான் அணுகியதும் காவலன் “குறுகிய ஏணி, அமைச்சரே” என்றான். “ஆம்” என்றபடி அதன்மேல் ஏறினேன். நூறு அம்புகள் தொடுக்கப்பட்ட பன்னிரு விற்கள் கொண்ட பொறி அது. நூறு கூர்முனைகள் வானோக்கி நின்றிருந்தன. வானிலிருந்து வரும் எதிர்காலத்தை நோக்கி. அங்கே முதன்முறையாக வந்ததை நினைவுகூர்ந்தேன்.
மேலும் ஏறி ஓர் அம்பின் முனையை மெல்ல கையால் தொட்டேன். என் உடல் மெய்ப்புகொண்டது. விழிகள் நீர்பொடிய எங்கோ ஆழத்தில் விழுந்துகொண்டே இருக்கும் உணர்வை அடைந்தேன். நிமிர்ந்து எதிரே நோக்கினேன். அந்த விசையை இழுத்தால் போதும், கோட்டைக்கு வெளியே ஆயிரம் உயிர்கள் மறையும். ஒருகணத்தில் குருதிப்பெருக்கொன்றில் ஆடி மீண்டேன்.
நெடுங்காலத்திற்கு முன்பு அங்கே வந்து அந்தக் கைவிடுபடைகளைக் கண்டபோது அவை அக்கணமே ஏவப்படவேண்டுமென என் உள்ளத்தின் ஆழம் விழைந்தது. போரெழுந்தாகவேண்டும் என அன்னையிடம் சென்று சொன்னேன். அதன் நலன்களை விரித்துரைத்தேன். அன்றிருந்த அந்நிலையிலேயே அப்போதுமிருந்ததை உணர்ந்தேன். எதுவும் மாறவில்லை. அந்நகர் காத்திருந்தது. அங்கு வாழ்ந்த ஒவ்வொரு உள்ளமும் காத்திருந்தது.
“யாதவரே, அன்று நான் என் இல்லத்திற்குத் திரும்புகையில் உடலெங்கும் மெல்லிய மிதப்பை கொண்டிருந்தேன். இரும்பைக் கடித்தால் வருவதுபோன்ற இனிமையான கூச்சம் என் பற்களிலும் எலும்புகளிலும் நிறைந்திருந்தது. தேரிலமர்ந்து இருபுறமும் பெருகி அலையடித்த திரளின் உவகையை நோக்கியபோது நான் ஒவ்வாமை கொள்ளவில்லை. அவர்களுடன் இணைந்து என் அகமும் கொண்டாடிக்கொண்டிருந்தது” என்றார் விதுரர்.
“மாளிகைக்குச் சென்று மீண்டும் போர்க்கலைச் சுவடிகளை எடுத்துக்கொண்டேன். இம்முறை வெறிகொண்ட வீரனாக களத்திலிருந்தேன். அப்போது அறிந்தேன் முன்பும் அவ்வாறுதான் இருந்தேன் என்பதை. அப்போதுதான் உங்களை அணுக்கமாக உணர்ந்தேன். நீங்கள் விழைவதையே நாங்களும் ஆற்றிக்கொண்டிருக்கிறோம் என்று” என்றார் விதுரர். “ஆகவேதான் உங்களைக் காணவேண்டுமென விழைந்தேன்.”