கவிதை மொழியாக்கம் -சீனு

ocp

வெ.ஸ்ரீராம்

கவிதை மொழியாக்கம் -கடிதம்

கவிதை மொழியாக்கம் -எதிர்வினை

கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம்

இனிய ஜெயம்

 

உங்கள் கடிதம் கண்டேன் கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம் எனது வாசிப்புப் பின்புலத்தை செம்மை செய்துகொள்ள உதவியது .கடந்த இரு தினங்களாக அவ்வப்போது  அந்த கவிதைக்குள்தான் கிடந்தது திளைத்துக்கொண்டு இருக்கிறேன் . இணையத்தில் தேடி சென்று அதன் மூலத்தை வாசித்தேன் .எலிசபத் பிஷப் என்பவர் அதை ஸ்பானிஷ் இல் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் . [கவிதையில் அவள் சொன்னாள் என்றபின் வரும் கூற்று பிரெஞ்சிலேயே இருக்கிறது ]. புதுவையில் பிரெஞ்சு பயிலும் இலக்கிய நண்பரை கேட்டேன் .அவர் அந்த சொல்  ஊற்று என்றே சொன்னார் . சுசித்ரா ராமச்சந்திரன் இந்த கவிதையை மொழியாக்கம் செய்து வைத்திருக்கிறார். அனுப்பி வைத்தார் .அவரும் ஊற்று என்றே குறிப்பிட்டார் . [சுசித்ரா பிரெஞ்சு கற்றவர் ] . நண்பர் ஒருவர்  நீராதாரம் புழங்கும் முப்பது இடங்களின் தமிழ் ஆங்கில சொற்களை அனுப்பி வைத்திருந்தார் . அதில் spring எனில் ஊற்று என கண்டிருந்தது .

 

மற்றொரு புதுவை நண்பர் எனக்கு அணுக்கமானவர்  அவர் ஆக்டேவியா பாஸ் ரசிகர்  தொலைபேசினார் முதல் சொல்லே சும்மா அடங்குடா என்றுதான் துவங்கினார் . எனது வாசிப்பில் நான் பாஸ் எதை கையளிக்கிறாரோ அதை தீண்டவே இல்லை என்ற விசனம் அவருக்கு . பிறகுதான் எனது கடிதத்தின் விடுபடல் புரிந்தது .முதலில் அந்த வாசிப்பை வைத்த பிறகே எனது வாசிப்பை வைத்திருக்க வேண்டும் .

 

அந்த முதல் வாசிப்பை இங்கே சொல்லி விடுவது இந்த உரையாடலில் முழுமையை அளிக்கும் என கருதுகிறேன் .

இரண்டு வெவேறு கலாச்சார பின்புலம் கொண்ட  ஆணும் பெண்ணும் இமைய நில  பின்புல சூழலில் சந்திக்கிறார்கள் . அந்த ஆணுக்கு கங்கை என்பது என்ன ? பாப விநாசினி . அந்த இயற்க்கை வழியே அவன் அடைவது என்ன ?  பரிசுத்தம் மற்றும் அமைதி .  அன்று இரவு அவன் கை கழுவியதாக சொல்வதன் பொருள் ? அது ஒரு மீட்சி .  பாரபாஸை விடுதலை செய்து ,இயேசுவை சிறைப்படுத்தி தீர்ப்பளித்த மன்னன் என்ன செய்கிறான் . சூழலின்படி குற்றமற்றவனை தண்டிக்கிறான் .  அவன் அதை செய்ய கடமைப்பட்டவன் அதிலிருந்து அவன் நழுவிக்கொள்ள முடியாது .  அந்த கை கழுவும்  சடங்கு எதை அவனுக்கு அளிக்கிறது ?   பாவத்திலிருந்து விடுதலையை . இந்தக் கவிதையில் கவி அடைவதும் பாவத்திலிருந்து விடுதலையே .  அந்த விடுதலைக்கான சாவியை அளிப்பது நீரே .[நீரெல்லாம் கங்கை ] .  இந்த வானும் மண்ணும் பாறையும் மேகமும் போல நாமும் இயற்க்கையின் ஒரு பகுதி ஆகவே கொண்ட இந்த உடலும் ,கொண்டாடும் காமமும் பாவமல்ல .  கவி  கங்கையை முன்வைத்து, ஊற்றுக்களால் நிறைந்த இந்த தேசத்தில் நின்று, இயற்க்கையின் சன்னதியில் அடையும் இந்த தரிசனத்தை வாசகனுக்கும் கடத்துவதே இதை அழகிய கவிதை என்றாக்குகிறது .

 

வைப்பு முறைப்படி இந்த வாசிப்புக்குப் பிறகே ,  அடுத்தகட்ட வாசிப்புக்கு செல்ல வேண்டும் .  மற்றபடி இந்த உரையாடல் வழி  வெளியான ”சீண்டல்” சொற்களுக்கு சஹ்ருதயர் சூர்யா வசம் மாப்பு கேட்டுக் கொள்கிறேன் .

 

நீரின் சாவி 

 

ரிஷிகேசத்துக்குப் பிறகும்

கங்கை பசுமையாகவே இருக்கிறது

கண்ணாடித் தொடுவானம்

உடைகிறது சிகர முனைகளில்

நாங்கள் பளிங்கின் மீது நடக்கிறோம்

மேலும் கீழும்

அமைதியின் பெரும் வளைகுடாக்கள்

நீல வெளிகளில்

வெண்பாறைகள் கருங்கொண்டல்கள்

நீ சொன்னாய்

இந்த தேசம் ஊற்றுக்களால் நிறைந்திருக்கிறது

அன்றிரவு எனது கரங்களை தூய்மை செய்து கொண்டேன்

உனது கொங்கைகளில் .

 

எலிசபத் பிஷப் மொழிபெயர்ப்பை கொண்டு எனக்கு நான் செய்து வைத்துக்கொண்ட மொழிபெயர்ப்பு இது : )

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதஸ்தயேவ்ஸ்கி இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுவையின் வழி