தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ்

dost

அன்புள்ள ஜெ,

ஈரோடு சந்திப்பின்போது ஒரு உரையாடல் தருணத்தில் இயல்பாக என்னிடம் “தஸ்தாவெய்ஸ்கியின் பெருநாவல்களை வாசித்ததுண்டா?” என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நிலவறை குறிப்புகள் மட்டுமே வாசித்திருந்ததால் குற்றவுணர்ச்சியுடன் – அடியில் சின்னதாக அவமான உணர்ச்சியும் நெளிய- இல்லை என்று பலவீனமாகத் தலையசைத்தேன். அந்தச் சந்திப்பின்போதே சுசீலா அவர்களுக்குப் பாராட்டு விழா நடக்கவிருப்பது குறித்த ஆரம்ப நிலை அறிவிப்பும் நண்பர்களிடையே பகிரப்பட்டதால் நிகழ்வில் பங்கேற்பதற்குள் “அசடன்” நாவலை மட்டுமேனும் வாசித்து முடித்துவிட வேண்டும் என்று மனதுக்குள் உடனடியாகத் திட்டமிட்டேன். காண்ஸ்டென்ஸ் கார்னெட்டின் மொழிபெயர்ப்பு ஏற்கனவே அறையில் இருந்தபடியால் அதிலிருந்தே தொடங்கலாம் என்பது எண்ணம்.

நாவலை சரியாகப் பத்து நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். முதல் அத்தியாயத்தில் துவங்கி நாவலின் இறுதி அத்தியாயத்தை முடிக்கிற வரையிலும் ஏதோ துன்பியல் நாடகமொன்றில் நிரந்தரக் கதாபாத்திரமாகவே மாறிவிட்ட உணர்வு எனக்கு. நான் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு ஒரு வார்த்தைக்கூட வசனம் கிடையாது; முகத்தில் அரங்க ஒளி படாது; ஒருவிதத்தில் பார்வையாளர் மட்டும்தான். ஆனால் வெறும் பார்வையாளர் என்று சொல்லும்போதோ அச்சொல்லில், மேடைக்கும் இருக்கைக்கும் நடுவே உள்ள தூரம் அனிச்சையாக இணைந்துவிடுகிறது. எனவேதான் கதாபாத்திரம் என்றும் சேர்த்து கூற விரும்புகிறேன். “அசடன்” நாவலில் அனைத்துக் காட்சிகளுமே கொதி குமிழ்கள் போல் உணர்ச்சிகரத்தின் உச்ச நிலையிலேயே இருக்கின்றன. வெளிச்சமும் இருளுமாக மாறி மாறி எரிந்து அணைகின்றன. நேர் வாழ்வில் என் மொத்த ஆயுளிலும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே நான் எதிர்கொள்ளக்கூடிய நாடகீயத் தருணங்கள் இவை. நாவலிலோ மிகுதியான உக்கிரத்துடன் தொடர்ச்சியாகக் கண்முன் எதிர்பட்டுக் கொண்டேயிருந்தன. சிலபோது புத்தகத்தை ஏந்தியிருந்த கைகளில் நடுக்கம் எடுக்கும் அளவுக்கான உக்கிரம்.

“அசடன்” நாவல் மீதான என் வாசிப்பு பற்றி எழுதுவதற்கு முன்பாக வேறொரு விஷயம் குறித்து முதலில் பேச நினைக்கிறேன். இந்நாவல் சார்ந்த பிற விஷயங்களைப் பொதுவாக இணையத்தில் தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது அதன் தொடர்ச்சியாகத் தஸ்தாவெய்ஸ்கி பற்றிய நபோகோவின் புகழ்பெற்ற விமர்சன கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. தஸ்தாவெய்ஸ்கி மிகச் சாதாரணமான எழுத்தாளர்தானே தவிர அவர் ஒரு மேதை அல்ல என்று குறிப்பிடும் நபோகோவ் தஸ்தாவெய்ஸ்கியின் எழுத்துக்களை அக்கட்டுரையில் கடுமையாக விமர்சித்து மறுக்கிறார். உண்மையில் அது வாசகர்களை உடனடியாகச் சீண்டக்கூடிய கட்டுரை. (கிட்டத்தட்ட உங்கள் விமர்சன கட்டுரைகளைப் போல). இலக்கியம் பற்றிய புரிதல் இல்லாத இரண்டாம்தர வாசகர்களையே தஸ்தாவெய்ஸ்கி வசீகரிப்பார் என்கிறார் நபோகோவ்.

நபோகோவின் எதிர் கருத்துக்களுக்கான பதில்களை – குறைந்தபட்சம் நான் நேர்மையுடன் ஏற்றுகொள்ளும் விதத்திலேனும்- தர்க்கரீதியாகக் கண்டடைவதும் தஸ்தாவெய்ஸ்கியை வாசிப்பதன் ஒரு பகுதி என்றே கருதுகிறேன். தஸ்தாவெய்ஸ்கி சிறந்த எழுத்தாளர் இல்லை என்பதற்கு நபோகோவ் மூன்று காரணங்களைச் சொல்கிறார். அவரது காரணங்களையும் அவற்றுக்கான என் எதிர்வினைகளையும் தொகுக்கும் முயற்சி கீழே. (எனது அபிப்ராயங்கள் அசடன் நாவல் வழியாக மட்டுமே உருவானவை. எனினும் அசடன் உலகப் பேரிலக்கியங்களில் ஒன்று என்கிற அடிப்படையில் சற்றுச் சலுகை எடுத்து அவ்வபிப்ராயங்களைக் கொஞ்சம் திடமாகவே முன்வைக்கிறேன்.)

1.நம்பகத்தன்மை (Plausible) இன்மை : 

நம்பத்தன்மை என்று நபோகோவ் சுட்டுவது அப்பட்டமான யதார்த்தத்தை அல்ல. அப்பட்டமான யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் ஒரு படைப்புக்குக் கிடையாது என்கிற முன்குறிப்புடன்தான் அவர் பேசவே ஆரம்பிக்கிறார். ஒரு படைப்பு எவ்வளவுதான் யதார்த்ததிலிருந்து விலகி இருந்தாலும் அது நல்ல படைப்பாக இருக்கும்பட்சத்தில் தன்னளவிலேயே இசைவுமிக்கதாகவும்(harmony) வாசகர்களை நம்பச் செய்கிறபடியுமே இருக்கும். உண்மையில் யதார்த்தத்திலிருந்து விலகிய தனி உலகை நம்பும்படியாக உருவாக்குவதில்தான் எழுத்தாளரின் மேதைமை வெளிப்படமுடியும். தஸ்தாவெய்ஸ்கியிடம் அப்பண்பு இல்லை என்று சொல்லும் நபோகோவ் மனிதர்களை அடையாளங்களாகக் கொண்டு கருத்துருவாக்கங்களின் மோதல்களையே தஸ்தாவெய்ஸ்கி தன் நாவல்களில் பிரதானமாக நிகழ்த்துவதும் அப்பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்று எனக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுகிறார்.

ஒரு சுவாரஸ்யமான தற்செயல். ஈரோடு சந்திப்பில் நண்பர் ஒருவர் ஏறக்குறைய இதே கேள்வியைவேறுவடிவில் உங்களிடம் முன்வைத்தார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாகப் படைப்பின் நம்பகத்தன்மை குறித்தும் வாசிப்பில் அதன் எல்லைக் குறித்தும் நீங்கள் விரிவாகவே பேசினீர்கள். அப்பேச்சு கோல்ட்ரிஜின் கருத்தை ஒட்டி, இலக்கியப் படைப்பின் முன்பாக ஒரு வாசகன் முதலில் தன் சந்தேகங்களையும் அவநம்பிக்கையையும் ஒத்தி வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்திருந்தது. எல்லா அனுபவங்களையும் குறுக்கும் விதமாக நம்பகத்தன்மையை மட்டுமே மதிப்பீட்டுக் கருவியாக முன்னிறுத்துவது இலக்கியத்தில் ஏற்புடையது அல்ல. நிச்சயம், நபோகோவும் அதை அறியாதவர் கிடையாது. அதே சமயம் ஒரு வலுவான உலகை படைக்க முடியாத எழுத்தாளன் தன் திறனின்மைக்கான தப்பித்தல் பாதையாகக் கோல்ட்ரிஜின் கருத்தை பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. ஆக, கோல்ட்ரிஜின் பக்கம் சாய்ந்திருக்கும்போதும் நான் நபோகோவின் தரப்பையும் புரிந்துகொள்ளவே செய்கிறேன். நான் முரண்படுவது, நபோகோவ் முன்வைக்கும் காரணத்துடனே. “கருத்துருவாக்கங்களின் மோதல்” என்பதை என்னால் எதிர்மறை இயல்பாகப் பார்க்கமுடியவில்லை. உதாரணமாக, கான்யாவும் லேபதேவும் பண இச்சையின் அடையாளமாக இருப்பதனால்தான் அவர்களுடைய ஒவ்வொரு செயலும் வெறும் தனிமனிதனின் பலவீனமாக மட்டுமில்லாமல் ஒரு சமூக நோயாகவும், பின் அதற்கும் ஒரு படி உயர்ந்து என்றென்றைக்குமான இச்சையின் கீழ்மையாகவும் பொருள் விரிவு கொள்கிறது. மேலும், நிலவறை குறிப்புகள் நாவலின் முதல் பகுதி முழுக்கக் கதையோ நிகழ்வுகளோ அதிகம் இல்லாமல் மனிதனின் இருப்பு மற்றும் சாரம் குறித்த விசாரனை மட்டுமே இருப்பதையும் கணக்கில் எடுக்கையில் “அசடன்” மிஷ்கினோடு ரயிலில் பயணித்து முதல் முறையாகப் பீட்டர்ஸ்பர்கினுள் நுழையும்போதே கருத்துருவாக்கங்களின் மோதல்களையும் விசாரனைகளையும் எதிர்பார்த்து அவற்றுக்கான தயார் நிலையிலேயே வாசகர்கள் இருக்கவேண்டும் எனப் படுகிறது. அது ஒருவகையில் அவர்களது பொறுப்பும்கூட. அந்த முன்னெச்சரிக்கை ஒப்பந்தத்தில் சுய நினைவுடன் கையெழுத்திடாதவரை எந்த ரகசிய கதவிற்குள்ளும் நுழைய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

(“தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளில் எப்போதும் இந்தத் தொடர்ச்சி இருக்கும். ஒருகதாபாத்திரம் என்பது அவருக்கு ஒரு கருத்துருவத்தின் அடையாளம். ஒரு மானுட நிலைமை. அதைப் பலகோணங்களில் சொல்லிச்சொல்லி அதன் எல்லாப் பக்கங்களையும் பார்க்கவே அவர்முயல்கிறார்.” என்று நீங்களே இதை ஏற்கனவே பதிவு செய்துவிட்டிருக்கிறீர்கள்.)

அது மாதிரியே தஸ்தாவெய்ஸ்கி மிகுந்த திட்டமிடலுடன் செயல்படுவதால்தான் (rational) அவரது நாவல்கள் கலைத்தன்மை அற்றிருக்கின்றன என நபோகோவ் கூறுவதும் விவாதத்திற்குரியதே. தஸ்தாவெய்ஸ்கியின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ரிச்சர்ட் பெவியர் அசடன் நாவலுக்கான முன்னுரையில் “தனிப்பட்ட முறையில் தீவிரமான நம்பிக்கைகள் கொண்டிருக்கிற போதும், தன்கருத்தியல் முடிவுகளைத் தஸ்தாவெய்ஸ்கி படைப்பு மீது திணிப்பதில்லை” என்று எழுதுகிறார். நாவலின் காட்சிகளையும் கதாபாத்திர இயல்புகளையும் தன் நம்பிக்கையின்பாற்பட்டு மிகுந்த திட்டமிட்டலுடனே தஸ்தாவெய்ஸ்கி கட்டமைத்தாலும்கூட ஓர் எல்லைக்குமேல் கலை, காரணியத்தை உடைத்து மீறுவதை அவராலும் தடுத்திருக்க முடியாது என்றே எண்ணுகிறேன். கிறிஸ்து போல் அழகிய ஆன்மாவுடைய ஒரு மனிதனை உருவாக்கும் எண்ணத்துடனே தஸ்தாவெய்ஸ்கி அசடனை எழுத ஆரம்பித்திருக்கிறார். ஆனால் கடைசியில் மிஷ்கின் சென்று சேரும் பிறழ்வின் இருட்டுதான் இல்லையா?

  1. அசாதாரணக் கதாபாத்திரங்களும் அவர்களது மாறாகுணங்களும்:

நபோகோவ் இங்கு இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

முதலாவதாக, பைத்திய விடுதியிலிருந்து வெளியே வந்து மீண்டும் பைத்திய விடுதிக்கே திரும்பிச்செல்கிற தஸ்தாவெய்ஸ்கியின் அசாதாரணமான செயற்கை கதாபாத்திரங்களை வைத்து ஒட்டுமொத்தமான மானுட இயல்பையும் மானுட இயல்புக்கான சாரத்தையும் வகுக்க முடியாது என்கிறார் அவர்.

இரண்டாவதாக, தஸ்தாவெய்ஸ்கியின் எந்தக் கதாபாத்திரமும் குண மாற்றங்களுக்கு உள்ளாவதில்லை. அவர்கள் முதன்முதலாக யாராக அறிமுகமாகிறார்களோ நாவல்களின் இறுதிவரை அவ்வியல்புகளில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கிறார்கள். அதிர்ச்சி பீறிடுகிற, உணர்ச்சிகரமான பல்வேறு சம்பவங்களில் மைய பாத்திரமாக இருந்து அச்சம்பவங்களுக்குத் தீவிரமாக எதிர்வினையாற்றுகிற போதும் அவர்களுடைய இயல்புகளில் அவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. தஸ்தாவெய்ஸ்கி நுண்ணுணர் திறன்மிக்கவர் (sensitive) அல்ல; மாறாக வெறுமனே மென்னுணர் கிளர்ச்சியாளர் (sentimentalist) என்று நபோகோவ் குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ளும்போது தஸ்தாவெய்ஸ்கியின் கதாபாத்திரங்களையும் அவர் அப்படியே வகைப்பிரிக்கிறார் என யூகிக்கலாம்.

இவ்விரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அசடன் நாவலிலேயே பதில்கள் இருக்கின்றன என்பது இன்னொரு சுவாரஸ்யமான தற்செயல். முதல் குற்றச்சாட்டுக்கான பதில் – புனைவுகளில் நாம் எதிர்கொள்கிற மனிதர்களே யதார்த்தத்திலும் நம் முன்னே இருக்கிறார்கள்; ஆனால் கொஞ்சம் நீர்த்த வடிவத்தில் என்கிற பொருளில் தஸ்தாவெய்ஸ்கியே அசடன் நாவலில் எழுதியிருக்கிறார். அசடன் நாவலில் வருகிற உணர்ச்சிவயமான, தவறி விழுந்து நொறுங்கிக் கொண்டேயிருக்கிற, அறிவுபூர்வமாக நீண்ட தன்னுரைகள் நிகழ்த்துகிற மனிதர்களை யதார்த்தத்தில் பார்க்க முடியுமா என்பதற்கு என்னால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த நாவலின் வழியே மானுட இயல்பின் சாரத்தை வகுக்க முடியும் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. அந்த முடிவு நிச்சயம் முழுமையானதாக இருக்காது. ஏனெனில் மானுட இயல்பு பற்றிய எந்தமுடிவுமே முழுமையானது அல்ல. பைத்திய விடுதியிலிருந்து வெளியே வந்து மீண்டும் பைத்திய விடுதிக்கே செல்லும் இம்மனிதர்கள் செயற்கையானவர்கள் என்று சொல்வது பாரபட்சமானது. “நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னதனங்கள்” என்று கந்தன் பற்றி ஜி.நாகராஜன் சொல்வது போல் “நீங்கள் துணிந்திருந்தால் வடித்திருக்கக்கூடிய கண்ணீர், நீங்கள் துணிந்திருந்தால் அடைந்திருக்ககூடிய மீட்சி, நீங்கள் துணிந்திருந்தால் சென்று சேர்ந்திருக்கக்கூடிய இருள், அங்குக் கண்டிருக்கக்கூடிய வெளிச்சம்” என்றே மிஷ்கின் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.

இரண்டாவது குற்றச்சாட்டுக்கு இன்னும் தீர்க்கமாகவே அசடன் நாவலில் இருந்து பதில் எடுக்கலாம். வாழ்க்கையையே மாற்றிய சம்பவங்கள் என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே வாழ்க்கையை மாற்றியவைதானா? நம் குண இயல்புகளைக் கலைத்துப் புதிதாகக் கட்டி எழுப்பியவையா அவை? நாவலின் தொடக்கப் பகுதிகளில் ஒரு காட்சி. மரணத் தண்டனையிலிருந்து கடைசி நிமிடம் விடுவிக்கப்பட்ட ஒரு மனிதன் பற்றி மிஷ்கின் இபான்சினின் வீட்டில் உணர்ச்சி தளும்பப் பேசுகிறான். (அந்தக் கைதி நிஜத்தில் தஸ்தாவெய்ஸ்கி). அலெக்சான்றா அதைக் கேட்டு முடித்ததும் மிஷ்கினிடம், அம்மனிதன் விடுதலைக்குப் பிறகு தன்வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் எண்ணி எண்ணி பயனுள்ளதாக மாற்றி வாழ்ந்தானா என்றுகேலியாகக் கேட்கிறாள். மிஷ்கின் தடுமாற்றத்துடன் இல்லை என்றே சொல்ல வேண்டி வருகிறது.மரணத்திற்கு மிக அருகே சென்று அதில் தப்பித்து மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்பியபோதும் அம்மனிதனால் அவன் விரும்பிய மாற்றத்தை வாழ்வின் மேல் செலுத்த முடியவில்லை. அதனால் அவன் வெற்று போலிஎன்று அர்த்தம் இல்லை. நபோகோவ் குறைபடுவது போல் அவன் மென் உணர்வுகளில் கிளர்ச்சி அடைபவன் என்றும் அர்த்தம் இல்லை.அவன் பலவீனமானவன் என்பதும் மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பதுமே அதற்கு அர்த்தம்.அந்த குறைப்பாட்டின் நிமித்தம் அம்மனிதன் மரணத்தைச் சில அடிகள் இடைவெளியில், காத்திருப்பில் எதிர்கொண்டதையும் அப்போது காலம்பற்றி அவன் அறிந்த உண்மையையும் மதிப்பற்றவை என ஒதுக்க முடியாது. காயம் தடயமின்றி ஆறிப் போவதும் வலியும் இரு தனி உண்மை

  1. கடவுள்த்தன்மையுடைய விளையாட்டு:

கலை, படைப்புச் செயல்பாடு என்பதால் அது கடவுள்தன்மை கொண்டது. மறுபுறம் கலை என்பது ஒரு வகையில் விளையாட்டும்கூட. ஏனெனில் ஒரு படைப்பிற்குள் நுழையும் வாசகன் “இது புனையப்பட்டது” என்கிற விதியை முழுமையாக ஏற்றுக் கொண்டு அந்த அறிதலுடனே அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். அல்லது அந்த விளையாட்டில் ஈடுபாடுகிறான். எனவே கலை என்பது கடவுள் தன்மையுடைய விளையாட்டு (divine game) என்கிறார் நபோகோவ். இந்த அறிதல் நிலைக்கிற வரைக்குமே அப்படைப்புக் கலையாக இருக்கிறது. அதில் கலை ஆனந்தம் கிடைக்கிறது. இல்லாவிட்டால் அது மிகை நாடகம் அல்லது செய்தித்தாள் வாசிக்கும் அனுபவம் மட்டுமே என்று கூறுகிற நபோகோவ் தஸ்தாவெய்ஸ்கியின் எழுத்தில் அந்த அறிதல் குலைந்து வாசகனில் உணர்ச்சியை அதீதமாகதூண்டுவதால் அது கலை அல்ல என்கிறார்.

tolstoy1
மென்னுணர்ச்சியைத் தூண்டி வாசகர்களைக் கிளர்ச்சியடைய வைப்பது என்கிற முந்தைய விமர்சனமும் இதுவும் அருகருகில்தான் வருகின்றன. நபோகோவின் கட்டுரையில் இவ்விமர்சனமே இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருந்தது. என் வசதிக்காக நான் வரிசையை மாற்றியிருக்கிறேன். (சொல்லப்போனால் இம்மூன்று விமர்சனங்களுக்கிடையேக்கூட மிகப் பெரிய வேறுபாடுகள் கிடையாது. நெருங்கி வரும் ஒற்றுமைகளை வைத்து மூன்றையும் ஒரு நூலில் தைத்து எடுக்கலாம்). செய்தித்தாள் வாசிப்புக்கும் இலக்கிய வாசிப்புக்கும் நடுவே வேறுபாடு இருக்கிறது என்பதையும்”இது புனைவு” என்கிற அறிதலின் வழியாகவே படைப்பின் அழகியல் கூறுகளையும் பிற நுட்பங்களையும் நாம் கவனிக்கிறோம் என்பதையும் அவற்றின் மூலமாகவே கலை அனுபவத்தைப் பெறுகிறோம் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் இந்தக் கலை அனுபவமோ அல்லது விளையாட்டோ அல்லது நிறைவோ முற்றிலுமாகத் தனி மனித அகம் சார்ந்தது. (subjective). (வாசிப்புஎன்பதே அப்படியானதுதான்.). கறாராக அதில் சரி தவறுகளை நிறுவ முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு படைப்பில், புனைவின் சமன் குலைந்திருக்கிறது என்று சொல்வதற்கோஅல்லது அது தக்கவைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கோ ஆதாரங்கள் கொடுக்க முடியாது. ஆமோதிப்பும் மறுப்பும் இங்கே தனி நபர் முடிவாகவே இருக்க முடியும். எனவே அதுகுறித்து அதிகம் பேசாமல், அசடனில் வெளிப்படுவது மலினமான உணர்ச்சித் தூண்டல் இல்லை என்பதை மட்டுமே சொல்ல முயற்சிக்கிறேன். அத்தகைய மலினமான உணர்ச்சித் தூண்டல் இவ்வளவு குழப்பமான வலைப் பின்னல்களோடும் தத்தளிப்புகளோடும் இருக்க முடியாது. அதற்கு உண்மையில் ஒருவர் இவ்வளவு கண்ணீர் சிந்தியிருக்க வேண்டியதில்லை.

அசடன் நாவல் துப்பறியும் கதைகள் போலவே வேகமாகவும் “திடுக்கிட வைக்கும்” திருப்பங்களுடனுமே பயணிக்கிறது என்றாலும் அது எவ்வகையிலுமே குறைப்பாடாக வாசிப்பின்போது என்னை உறுத்தவில்லை. வெண்முரசு நாவல்வரிசையை ஒருவர் போர் சாகசக் கதையாகப் படிக்கவும் வாய்ப்பிருக்கிறது. தஸ்தாவெய்ஸ்கியின் படைப்புகள் மறுவாசிப்பில் சலிப்பேற்றும் என்றும் அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள எதுவும் இருக்காது என்றும் நபோகோவ் கூறியிருக்கிறார். அதை நான் இப்போது மறுக்க முடியாது. காலத்தில் மறுவாசிப்பிற்குப் பிற்பாடும் உறுதியாக மறுப்பேன் என்று மட்டும் நம்பிக்கை இருக்கிறது.

விஷால் ராஜா

Vladimir_Nabokov_1960s
நபக்கோவ்

அன்புள்ள விஷால்ராஜா,

நபக்கோவின் இந்தக்குற்றச்சாட்டு தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்ற செவ்வியல்மேதைகளை எண்பதுகளில் மீண்டும் தமிழ்ச்சூழலில் முன்னிறுத்த ஆரம்பித்தபோதே பேசப்பட்டது.  நான் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பின் தொடரும் நிழலின் குரலிலும் ஒரு அத்தியாயம் உள்ளது, நேரடியான கட்டுரையாக. நபக்கோவுக்குப்பின் இவ்விருவரையும் ஒப்பிட்டும் ஆராய்ந்தும் ஏராளமாக எழுதப்பட்டுவிட்டது.

சில விஷயங்களைத் தொகுத்துக்கொள்ளவேண்டும். ஒன்று, நபக்கோவ் தஸ்தயேவ்ஸ்கி பற்றி மட்டும் இந்தக் கடுமையான கருத்தைச் சொல்லவில்லை. தல்ஸ்தோயைப் பற்றியும் இதேபோன்ற மறுப்பைச் சொல்லியிருக்கிறார். [ஒழுக்கபோதனைத் தன்மைகொண்டது, ஆசிரியரின் இருப்பு அனைத்துக் கதாபாத்திரங்களிலும் வெளிப்படுவது, மையப்பார்வையை தீர்க்கதரிசியின் பாவனையில் வெளிப்படுத்துவது, மிகவும் ருஷ்யத்தன்மை கொண்டது]

ருஷ்ய இலக்கியமேதைகளான புஷ்கின், ஷோலக்கோவ் போன்றவர்களைப்பற்றியும் இவ்வாறு மறுப்புரைத்திருக்கிறார். போரிஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோவை குப்பை என தூக்கிக் கடாசினார். [ஜோடிக்கப்பட்டது, சில்லறை மிகையுணர்ச்சி கொண்டது]  அப்போதுதான் அதற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஷோலக்கோவ் அதன்பின் நோபல் வாங்கினார். உலக இலக்கியப் பரப்பு நபக்கோவை பொருட்படுத்தவில்லை. நபக்கோவ் இன்று ஒரு சிறுபான்மையினரான அமெரிக்க இலக்கியவிமர்சக வட்டத்தின் செல்லம்.அவ்வளவுதான்

நபக்கோவுக்கு இன்று இலக்கியத்திலுள்ள இடம் என்ன? அவரை எப்படி மதிப்பிடுகிறார்கள்?

அ குடியேறியாக இருந்தாலும் ஆங்கிலநடையை கச்சிதமாகக் கையாண்டவர்.

ஆ. நவீனத்துவ இலக்கிய அழகியலில் கச்சிதமான வடிவமுள்ள சில ஆக்கங்களை அளித்தவர்

இ. பாலியலை நுட்பமாகச் சொன்ன லோலிதா போன்ற சில நூல்களின் ஆசிரியர்.

இ. ருஷ்ய இலக்கியம் மீது கடுமையான கருத்துக்களை முன்வைத்தவர்.

— அவ்வளவுதான். அவர் செயல்பட்ட தளத்தில் அவரைவிட கூரிய படைப்புகளுடன் டி.எச்.லாரன்ஸ் சாதனைபுரிந்திருக்கிறார்.

நபக்கோவ் அக்கருத்துக்களை முன்வைக்கும்போதே ’கடுமையான கருத்துக்கள்’ என்ற தலைப்புடன் தான் வெளியாயின. அக்கட்டுரைகளின் தொகுதிக்கே அதுதான் தலைப்பு என ஞாபகம். அவை இலக்கியச்சூழலில் ஒரு விவாதம் நிகழ உதவின. அத்தகைய விவாதங்கள் எப்போதும் நன்றுதான். கடுமையான கருத்துக்களினூடாக ஒரு சூழலே இலக்கியம்பற்றிப் பேசத் தொடங்குகிறது. நாரதர் கலகம்.

அவை பேசப்பட்டமை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக.

1, அன்று ருஷ்ய இலக்கியவாதிகள் நோபல்பரிசை வென்றபடியே இருந்தனர். ஐரோப்பாவின் பிறநாடுகளின் இலக்கியவாதிகளின் இடம் சரிந்துகொண்டிருந்தது. ஜாய்ஸுக்குப்பின் பிரிட்டிஷ் இலக்கியத்தில் பெரிய நட்சத்திரம் ஏதுமில்லை. வேண்டுமென்றால் விர்ஜீனியா வுல்ஃபைச் சொல்லலாம். ஆகவே ஆங்கில ஊடகங்கள் இக்கருத்துக்களை மிகையான முக்கியத்துவம் கொடுத்து முன்வைத்தன. நபக்கோவும் அதை மிகச்சரியாகக் கணித்தே அக்கருத்துக்களைச் சொன்னார்.குறிப்பாக அவர் இக்கருத்துக்களை அமெரிக்க கல்வித்துறை வட்டாரத்திலேயே சொல்லிக்கொண்டிருந்தார்.

2, ஸ்டாலினுக்குப் பிந்தைய ருஷ்ய அரசு தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் போன்றவர்களை தங்கள் முகமாக முன்னிறுத்த தொடங்கியது. பனிப்போர் காலகட்டம் அது. ஆகவே அந்த அடையாளங்களை உடைக்கவேண்டிய கட்டாயம் மேற்குக்கு இருந்தது. ஆகவே அவர்கள் புலம்பெயர்ந்த ரஷ்யரான, ரஷ்ய அடையாளத்தை மறுக்க விரும்பிய நபக்கோவை பயன்படுத்திக்கொண்டார்கள். [ஏறத்தாழ இதே இடம்தான் அயன் ராண்டுக்கும் அமெரிக்காவில் அளிக்கப்பட்டது]

இதெல்லாம் வம்புகள் என்று கடந்து சென்று இக்கருத்துக்களின் இலக்கிய இடத்தைப் பார்ப்போம். இவை ஒட்டுமொத்தமாகவே நவீனத்துவத்தின் தரப்பு என்பதைக் காணலாம். ஆச்சரியமான ஒன்றுண்டு, அசோகமித்திரன் எழுபதுகளில் தல்ஸ்தோய் பற்றி ஏறத்தாழ இதேகருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். கட்டுரைகளிலும், இன்று என்ற நாவலிலும். வண்ணநிலவன் தஸ்தயேவ்ஸ்கி பற்றி இதே கருத்துக்களை எழுதியிருக்கிறார்.

நவீனத்துவ அழகியல் முன்வைக்கும் வடிவ இலக்கணத்தைக்கொண்டுதான் நபக்கோவ் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி  இருவரையும் நிராகரிக்கிறார் என்பதைக் காணலாம். அதே அளவுகோலைக் கொண்டு பார்த்தால் பிரிட்டிஷ் ஆசிரியர் சார்ள்ஸ் டிக்கன்ஸ், பிரெஞ்சு ஆசிரியர் விக்டர் யூகோ, அமெரிக்க ஆசிரியர் ஹெர்மன் மெல்வில் போன்ற  மாபெரும் ஆசிரியர்கள் அனைவரையும் நிராகரிக்க வேண்டியிருக்கும். மெல்லுணர்வாளர்கள், இலட்சியவாதம் பேசியவர்கள், மிகைநாடகத் தருணங்களை எழுதியவர்கள்…அதை நபக்கோவ் செய்வதில்லை.

vishaal
விஷால்ராஜா

அதோடு நபக்கோவுக்குப் பின்னால் வந்த பெரும்படைப்புகளையும் அதே அளவுகோலைக்கொண்டு நிராகரிக்கவேண்டும் என்பதைக் கவனியுங்கள் அவர் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்ச்கிக்குச் சொல்லும் எல்லா குறைகளும் பிந்தைய பெருநாவல்களான மார்க்யூஸின் நூறு ஆண்டுக்காலத் தனிமை [One hundred years of solitude], மிலோரட் பாவிக்கின்  கசார்களின் அகராதி [Dictionary of khazars ] , உம்பர்ட்டோ எக்கோவின் ரோஜாவின் பெயர் {The Name of the Rose  ]போன்ற அனைத்து நாவல்களுக்கும் பொருந்தும்.

ஏன் அவருடைய சமகாலப் படைப்புகளும் அவர் காலாவதியான பின்னரும் உலக இலக்கியத்தில் நின்றிருப்பவையுமான கஸான்ட் ஸகீஸின் சோர்பா என்னும் கிரேக்கன், [  Zorba the Greek]  கிறிஸ்துவின் இறுதிச் சபலம் [The Last Temptation of Christ], குந்தர் கிராசின் தகர முரசு  [Tin drum ] போன்ற நாவல்களுக்கும் பொருந்தும்.

அப்படியென்றால் நபக்கோவின் கருத்துக்களுக்கு என்னபொருள்? அவர் கருத்துக்களைக்கொண்டு அக்காலகட்ட நவீனத்துவ இலக்கியங்களை மட்டுமே கருத்தில்கொள்ள முடியும். நபக்கோவ் அவருடைய காலகட்டத்திற்குள் மட்டுமே ஒடுங்கும் எழுத்தாளர். எழுத்தாளர்களில் கணிசமானவர்கள் அப்படித்தான். அவர்களின் பேசுபொருட்கள், அவர்களின் பார்வை அந்த காலகட்டத்திற்குரியது. அவர்களின் வடிவம் அச்சூழலில் பொதுவாகத் திரண்டு வருவது. அவர்களின் திறன்கள் பொதுமையில் உச்சம் என்னும் தன்மைகொண்டவை. பேரிலக்கியங்களுக்குரிய பிறிதொன்றிலாத தன்மை அற்றவை.

நவீனத்துவ காலகட்டத்தைச் சேர்ந்த நபக்கோவ் அச்சூழலின் எல்லா இயல்புகளையும் உணர்வுகளையும் பெற்றவர். இன்று வாசிக்கையில் சல்லித்தனமாகத் தோன்றும் பாலியல்விடுதலை கருக்கள். அக்காலகட்டத்தின் பொதுவான சோர்வை மானுடப்பிரச்சினையாகக் காணும்  முதிரா இருத்தலியல் நோக்கு ஆகியவையே அவருடைய சாரம்.

அவர் சொல்லும் இலக்கியவடிவ இலக்கணம் நவீனத்துவத்தின் பொதுவான படைப்புகளுக்குரியது. அதாவது பிசிறின்றி செதுக்கப்பட்ட வடிவம், சுருக்கமானதும் தர்க்கபூர்வமானதுமான நடை, சமநிலைகொண்ட பார்வை, கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி வெளிப்பாடு, புறவயமான அன்றாட உலகின் நம்பகத்தன்மை கொண்ட நிகழ்ச்சிகள், ஆசிரியர் வெளிப்படாமல் கதைப்புலம் மட்டுமே வெளிப்படும் புனைவுச்சூழல் ஆகியவையே அவர் இலக்கியத்தில் தேடுபவை.

அவற்றை தஸ்தயேவ்ஸ்கியின் ஆக்கங்களில் கண்டடைய முடியாது. அவை கட்டற்ற நடை, வடிவற்ற வடிவம், கொந்தளிக்கும் உணர்ச்சிவெளிப்பாடுகள், தரிசனத்தை முன்வைக்கும்பொருட்டு உருவாகும் தீவிரமான நிகழ்வுகள், ஒவ்வொரு வரியிலும்  ஆசிரியரின்  இருப்பு என்றே அமைந்திருக்கும்.தத்துவம், கவித்துவம், உணர்ச்சிகரம் என எல்லா தளத்திலும் தன் தரிசனம் நோக்கிச் செல்லமுற்படும்.

அதுவே செவ்வியலின் இயல்பு. நபக்கோவ் நிராகரிப்பது அதையே. அதை நிராகரித்தால்தான் அன்றைய நவீனத்துவ எழுத்துக்களை நிலைநிறுத்த முடியும். அன்றைய காலகட்டத்தின் பார்வை அது. அதை அடுத்தகட்ட பின்நவீனத்துவப் பார்வை நிராகரித்தது. வடிவபோதம், மொழிமேல் கட்டுப்பாடு, உணர்ச்சிகள்மேல் அறிவின் ஆளுகை ஆகியவை புனைவில் வெளிப்படவேண்டிய உன்னதம் [sublime] பித்து [trance] ஆகியவை வெளிப்படாமல் தடுத்துவிடும் என்று பின் நவீனத்துவம் கருதியது. இலக்கியத்தின் உண்மையான நோக்கம் அவற்றை அடைவதே.

மொழியின் பிறவடிவங்கள் அவ்விரண்டுநிலையை மட்டுமே அடையமுடியாது. ஒர் இதழியல்நூல், ஒருநல்ல கட்டுரைநூல், ஒரு தத்துவநூல் இலக்கியம் எண்ணி அளந்து சொல்வன அனைத்தையும் சென்றடைந்துவிடும். மொழி ‘தன்னைமறந்து’ சென்றடையும் இடங்களை மட்டுமே அவை தொடமுடியாது. கச்சிதமான வடிவம் என்பது ஆசிரியர் ஒரு இலக்கை முன்னரே முடிவுசெய்து படைப்பை அதற்கேற்ப செதுக்குவது. அது வாசக ஊடாட்டத்தை மறுக்கிறது. பெரும்பாலும் படைப்பில் ஆசிரியனை மீறி பீரிட்டுச்சென்று நிற்கும் பகுதிகளே உண்மையான படைப்பூக்கம் கொண்டவை. இலக்கியம் அதன்பொருட்டே எழுதப்படுகிறது என அந்நோக்கு வாதிட்டது.

இந்நோக்கு வலுப்பெற்றதுமே நவீனத்துவப் படைப்புகள் பின்னகரத் தொடங்கின. அவற்றில் ஒட்டிக்கொண்டு, அக்காலகட்டத்தின் குரலாக ஒலித்த நபக்கோவும் மறைந்தார். இன்று அவர் அக்காலகட்டத்தின் ஓர் அடையாளம். மாபெரும் ருஷ்ய இலக்கியவாதிகளின் பட்டியலில் அவர் இல்லை. மாபெரும் பிரிட்டிஷ் படைப்பாளிகளின் பட்டியலிலும் அவர் இருக்கமுடியாது.

நவீனத்துவத்தின் முக்கியமான பலவீனங்களில் ஒன்று அது அறிவியல்மீதான மயக்கம் கொண்டிருந்தமை. ஆகவே புறவயநோக்கை பெரிதும் நம்பியது. நவீனத்துவத்தின் பல ஆசிரியர்களுக்கு அறிவியலாளர் என்னும் முகமும் உண்டு, நபக்கோவ், கோபோ ஆப் போன்றவர்கள் உதாரணம். அறிவியல் வேறுஒருவகை மொழிபு. இலக்கியம் அதனுடன் ஊடாடமுடியாது. இலக்கியம் அதை குறியீடுகளாக எடுத்தாளவே முடியும். இலக்கியம் ஒருவகையில் அறிவியலின் அறிதல்முறைக்கு மாற்றானது, அதன் இடைவெளிகளை நிரப்புவது. அதை பின்நவீனத்துவர் சொன்னபின்னரே நவீனத்துவத்தின் அலை அடங்கத் தொடங்கியது.

நபக்கோவின் மையச்சிக்கலே அவர் மீண்டும் மீண்டும் புறவயமான தர்க்கத்தை வலியுறுத்துகிறார், அதை இலக்கியத்தின் உயர்ந்த குணாதிசயமாக நோக்குகிறார் என்பது. மெல்லுணர்ச்சி என அவர் பெரும்பாலான செவ்வியல் படைப்புகளை நிராகரிப்பது இதனால்தான். நவீனத்துவம் தூக்கிவீசப்பட்டதே அது புறவயநோக்கு என்னும் இரும்புச்சட்டையைப் போட்டுக்கொண்டு நீச்சலடிக்கிறது என்பதனால்தான்

பேரிலக்கியங்கள் பெரிய வினாக்களை எழுப்பிக்கொள்கின்றன. அவ்வினாக்களுடன் தன் முழு அறிவுத்திறனுடன், முழுவாழ்க்கைப் பிரக்ஞையுடன், முழு ஆன்மீகத்தேடலுடன் உரையாட முற்படும் வாசகனுக்குரியவை அவை. அவன் அந்த பெரியவினாக்கள் எப்படி விரிந்து விரிந்து தரிசனங்களை நோக்கிச் செல்கின்றன என்றுதான் பார்ப்பான். நாவலின் நிகழ்ச்சிகள் தன் வாழ்க்கையில் நடந்தவை போலுள்ளனவா, அன்றாட யதார்த்தமாக உள்ளனவா, கதாபாத்திரங்கள் இயல்பாகப் பேசிப்புழங்குகின்றனவா என்பது அவனுடைய அக்கறை அல்ல.

இங்கே இன்னொன்றைச் சொல்லவேண்டும். ஒரு இலக்கியக் காலகட்டம் எழும்போது அதன் இலக்கணத்தைக் கொண்டு முந்தைய காலகட்டத்தின் மேதைகளை மறுப்பது ஓர் இலக்கிய வழக்கமாக உலகமெங்கும் உள்ளது. அப்படி மறுக்காமல் மேலே செல்ல இடமிருக்காதுபோலும். ஆனால் அந்த மறுப்புகளுக்குப் பெரிய மதிப்பு கிடையாது.அதை மேதைகள் செய்திருந்தாலும்

உதாரணமாக, தல்ஸ்தோய் ஐரோப்பிய கலை,இலக்கியத்தின் சிகரங்கள் எனப்படும் வாக்னர், ஷேக்ஸ்பியர் இருவரையும் முழுமையாக நிராகரித்தார். அவர் நம்பிய யதார்த்தவாதத்தை முன்வைப்பதற்காக.ஆச்சரியமென்னவென்றால் நபக்கோவ் தஸ்தயேவ்ஸ்கிக்குச் சொல்லும் பல குற்றச்சாட்டுக்களை தல்ஸ்தோய் அவர்களைப்பற்றிச் சொன்னார். மிகையுணர்ச்சி, செயற்கையான புனைவுத்தருணங்கள், ஒற்றைப்படையான கருத்தை ஓங்கிச்சொல்லுதல், புறவயமான சமநிலை இல்லாமை என.அதேபோல தல்ஸ்தோயை ஐரோப்பிய விமர்சகர்கள் மதமெய்மையை முன்வைப்பவர், ஒழுக்கவாதி என பின்னாளில் நிராகரித்தனர். நவீனத்துவத்தின் துடுக்கான, மீறல்கொண்ட அழகியலை முன்வைப்பதற்காக. இரண்டையும் நாம் சமமாகவே பார்க்கவேண்டும்.வாக்னரும், ஷேக்ஸ்பியரும், தல்ஸ்தோயும் அப்படியேதான் நீடிக்கிறார்கள்.

கடைசியாக மீண்டும் வாசிப்பதைப் பற்றி. நான் என் 25 வயது முதல் முப்பதாண்டுக்காலத்தில் தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளை மூன்றுமுறை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன். ஆங்கிலம்  மலையாளம் கடைசியாக சுசீலாம்மாவின் தமிழ் மொழியாக்கத்தில். ஒவ்வொரு முறையும் முற்றிலும் புதியனவாகவே இருந்தன. என் முதிர்வுக்கு ஏற்ப நான் வெவ்வேறு உணர்வுநிலைகளை, சிந்தனைகளை அடைந்தேன். கொஞ்சம் வயதானபின் வாசித்தால் தஸ்தயேவ்ஸ்கியின் இலட்சியவாதத்திற்கிணையான கசப்பும் உள்ளூர ஓடுவதை, அவரே அவருக்கெதிராக ஓட்டு போடுவதைக் காணமுடியும்.

தஸ்தயேவ்ஸ்கி மீண்டும் வாசிக்கப்படவேண்டியவர், தல்ஸ்தோய் மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்க்கவேண்டியவர் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் நபக்கோவின் லோலிதாவை இடுப்புக்கு கீழே வாழ்க்கை உள்ளது என நினைக்கும் வயதில் ஒரே ஒருமுறை மட்டும் வாசிக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅசடன் வாசிப்பு- சௌந்தர்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-13