வெ.ஸ்ரீராம்
கவிதை மொழியாக்கம் -கடிதம்
கவிதை மொழியாக்கம் -எதிர்வினை
அன்புள்ள சீனு, சூரியா,
இவ்விவாதத்தில் எனக்குச் சொல்வதற்கொன்று உண்டு. விவாதம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் அதை வெளியே நின்று பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ள ஏதேனும் இருக்கவேண்டும், அப்போதுதான் அது பயனுள்ள விவாதம்
ஒரு சொல்லை ‘சரியாக’ மொழியாக்கம் செய்வது எப்படி என்பதல்ல இங்கே விவாதம். கவிதையை மொழியாக்கம் செய்வது பற்றி. கவிதைமொழியாக்கம் என்பது மிகச்சிக்கலான ஒரு பண்பாட்டு நிகழ்வு. கவிஞர்கள் பலர் கவிதைமொழியாக்கம் பற்றியே கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.
ஏனென்றால் கவிதை பல்வேறு பண்பாட்டுக்குறிப்புகள், மொழிக்குறிப்புகள் ஆகியவற்றாலானது. உட்குறிப்புகளின் ஒரு பெரும் தொடர்ச்சியில் அது உள்ளது. தனக்கென ஓர் உள்வட்டம் உருவாக்கி அதற்குள் நின்றுபேசுகிறது. அதன் கூறுமுறையின் ஒருபகுதி உலகளாவியது, ஒருபகுதி மிகச்சிறு சூழலுக்குரியது
‘
ஆகவே, எப்போதும் அதன் ஒரு பகுதி மொழியாக்கத்தில் கைவிடப்பட்டுவிடும். விடப்பட்டுவிட்டதைச் சொல்லி ஒரு கவிதைமொழியாக்கத்தைக் குறைசொல்பவர்கள் அதை மொழியாக்கம் செய்வதன் சவால்களை அறியாதவர்கள். எதுவிடப்படுகிறது, ஏன், எவ்வாறு என்பதே விவாதத்திற்குரியது
கவிதை மொழியாக்கம் செய்பவன் முதலில் ஒரு வாசகன். அவன் ஓர் அர்த்த உருவாக்கம் நிகழ்த்துகிறான். பின்னர் அதிலிருந்து சமானமான இன்னொரு கவிதையை உருவாக்குகிறான். இதுவே கவிதைமொழியாக்கம். நீங்கள் இருவரும் வெவ்வேறு வாசிப்புகளைக் கவிதைக்கு அளிப்பதைக் காண்கிறேன்.
அப்படியென்றால் எது ‘சரியான’ மொழியாக்கம்? அப்படி ஒன்று இல்லை. ‘அணுக்கமான’ மொழியாக்கமே உண்டு. அந்த மொழியாக்கத்தின் இயல்புகளாக நான் பார்ப்பவை
அ அக்கவிதையின் பூடகத்தன்மை, விரிவாக்கவாய்ப்பு ஆகியவற்றை அது அழிக்காது. கவிதையை அவிழ்த்து மொழியாக்கம் செய்யாது
ஆ. அக்கவிதையை இன்னொரு குறியீட்டு,பண்பாட்டுச் சூழலுக்குக் கொண்டுசெல்லாது. மூலச்சூழலிலேயே நிகழ்த்தும்
இ. மொழியாக்கம் செய்யப்படும் மொழியின் பழகிய வடிவம், கவிமொழியின் சாயல் அற்றிருக்கும்
ஆகவே ஒரு கவிதைக்கு நல்ல நாலைந்துவகை மொழியாக்கங்கள் இருக்கமுடியும். உலக இலக்கியத்தில் கவிதைகள் திரும்பத்திரும்ப மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே உள்ளன
வெ.நி.சூர்யா நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். பேசும்போது இதைப் பற்றிச் சொன்னேன். நீர் என அவர் மொழியாக்கம் செய்திருப்பது அவருடைய வாசிப்பு. அது சோர்ஸஸ் என்பதில் உள்ள பூடகத்தன்மையைச் சற்று குறைக்கிறது. வளங்கள் என்னும் சொல் கவிதைக்கு வெளியே அர்த்தத்தை கொண்டுசெல்கிறது. ஊற்றுக்கள் என்னும் பொருள்வரும் ஒரு சொல்லாட்சியே அங்கே மேலும் பொருத்தமானதாக அமைந்திருக்கும்[இந்த தேசம் ஊற்றுக்களால் நிரம்பியிருக்கிறது]
ஜெ