அன்பான ஜெ.
கேமரன் மலையில் இருந்த புத்தர் கோயிலில் உங்களிடம் சொல்லியதாக நினைவு. எழுத்தாளர்களின் அவர்கள் செயல்பாடுகளின் புகைப்படங்களை தொகுத்து வல்லினம் மூலம் இணையத்தளம் உருவாக்கப்போவதாக. விஜயலட்சுமியின் தொடர் முயற்சியில் அது முழு வடிவம் பெற்றுள்ளது. சடக்கு என பெயரிட்டுள்ளோம்.
அப்போது நாஞ்சில் நாடன் தன்னிடம் ஒரே ஒரு சிறுவனாக இருந்தபோது உள்ள படம் உள்ளது என்றார். உண்மையில் தமிழ் எழுத்தாளர்களின் படங்களை சேமிக்கும் முயற்சிகள் அந்தந்த நாட்டில் தொடங்கப்பட்டால் பெரும் பொக்கிஷமாகலாம். இன்று பல படைப்பாளிகளின் மிகச்சில படங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. நீங்கள் இத்தளத்தை அறிமுகம் செய்தால் பரவலான கவனத்துக்குச் செல்லும். இப்போதைக்கு 800 படங்களுக்கு மேல் விபரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர் வேலைதான். நிறைவடைவதில்லை.
ம.நவீன்
அன்புள்ள நவீன்,
மகத்தான முயற்சி. எந்தவித அமைப்புபலமும் இல்லாமல், நிதிக்கொடைகள் இல்லாமல் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடுவதிலுள்ள அர்ப்பணிப்பும் தீவிரமும்தான் நான் எப்போதுமே வழிபடும் செயல்கள். இத்தகைய செயல்களுக்குரிய வரலாற்று முக்கியத்துவம் காலப்போக்கில் வந்துசேரும்.
செய்திகளைச் சேகரிப்பது ஒரு பெரும்பணி. கூடவே வகைமைப்படுத்தி அட்டவணைப்படுத்தி பொதுச்சொத்தாக்குவதும் அதற்குச் சமானமான பெரிய வேலை என நினைக்கிறேன். தமிழகத்திலும் எவரேனும் செய்தால் நல்லது
ஆனால் பொதுவாகத் தமிழகத்தில் எதிர்மறை மனநிலை உச்சமாக உள்ளது. அதுவே தீவிரம் என்று கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளாவது தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் செய்யப்படும் வேலைகள் என எதுவும் சமீப காலத்தில் கண்ணுக்குப்படவில்லை. படைப்பியக்கம்கூட உடனே எழுதி உடனே கலக்கிவிடவேண்டும் என்னும் மனநிலையில்தான் நிகழ்கிறது.
தமிழியக்கம் சார்ந்தும், புத்திலக்கியம் சார்ந்தும் வெளிவந்த சிற்றிதழ்களைச் சேகரித்து ஒளிநகல் எடுத்து ஆவணப்படுத்துதல், வெளிவந்த நூல்கள் அனைத்தையும் அட்டவணைப்படுத்தி ஆவணப்படுத்துதல், முதற்பதிப்புகளின் அட்டைகளின் நகல்களை இணையத்தில் ஆவணப்படுத்துதல், தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கைச்சுருக்கங்கள் –கூடுமானவரை அவர்களின் சொற்களில் – ஆவணப்படுத்துதல் என பணிகள் மலைமலையாக குவிந்துள்ளன இங்கே. ஆர்வமுள்ளவர்கள் இல்லை.
தமிழகத்தின் ஆலயங்களுக்காக, சிற்பங்களுக்காக அவற்றுக்கான தனி இணையதளங்கள் உருவாக்கப்படவேண்டும். அவற்றில் அச்சிற்பங்கள் ஆவணப்படுத்தப்பட்டால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் சென்று பார்க்க முடியும். தேவையென்றால் செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து கரியுரித்தபெருமான் சிலைகளையும் வரிசையாக ஓர் இணையதளம் பதிவுசெய்யுமானால் அதுவே ஒரு பெரிய வரலாற்றுத்தரிசனமாக அமையும்.
இன்றையசூழலில் இவற்றை அரசு செய்யாது. திருப்பதி ஆலயம் ஆந்திரத்தில் இதற்கிணையான பல பணிகளைச் செய்திறது. காஞ்சிமடம் போன்ற அமைப்புகள் செய்யுமென்றால் நல்லது.
இம்மாதிரி முயற்சிகள் செய்யப்படும் போது உடனடியாக நிறைவை அளிக்காதவை. ஒரு குறிப்பிட்ட அளவு செய்தபின் திரும்பிப்பார்த்தால் மட்டுமே நிறைவளிப்பவை. அத்தகைய மனநிலைகளில் இங்கே இன்று எவரும் இல்லை. அரிதாக எதையாவது தொடங்கியவர்கள் கூட அதைவிட்டுவிட்டு ஊடகம் முன்வந்து எதிர்மறை எண்ணங்களை உளறுவதே இங்கே காணக்கிடைக்கிறது. புதியதலைமுறையில் இருந்து எவரேனும் எழுந்துவந்தால் நல்லது
நானும் உங்களைப்போலவே எதிர்பார்க்கிறேன்
ஜெ
***
http://vallinam.com.my/
http://vallinam.com.my/