கேள்வி பதில் – 48

தங்களைப் பாதிக்கும் அளவில் விமர்சித்த பத்திரிகைகளுக்கு உங்களால் எழுத இயலுமா? அல்லது நீங்கள் பேசிய கருத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் உங்கள் reaction எப்படி இருக்கும்?

— மதுமிதா.

இலக்கியவாதி எப்போதுமே தன்னை மீறிச்செல்லும் உணர்ச்சிகளினால் ஆனவன். அதுதான் பெரும்பாலும் இலக்கிய உலகின் பூசல்களின் பின்னணி. ராஜதந்திரிகளின் சுயக்கட்டுப்பாடு அங்கே இயல்வதல்ல. என்னைத் தாக்கிய இதழ்கள், எழுத்தாளர்கள் தன்னளவில் எந்த அளவுக்கு முக்கியமானவர்கள் என்பதே எனக்கு முக்கியம். முக்கியமானவர்கள் என்றால் கோபம் அடுத்த ஒருவாரம்வரைதான், அதிகபட்சம். என்னைக் கடுமையாக தாக்கும் பல முக்கியமான எழுத்தாளர்களுடன் நான் உடனே நட்புகொண்டதும் மீண்டும் தாக்கியதும் சாதாரணமாக நிகழ்வதே. எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் எல்லாம் உதாரணங்கள். ஆனால் படைப்புநோக்கிலும் சிந்தனையளவிலும் சாதாரணமானவர்கள் தங்கள் சிறுமையினாலேயே தாக்கமுனைகையில் என்னால் அதை எளிதாக எடுத்துக் கொள்ள இயல்வதில்லை. ஆனால் அவர்களை நான் ஒருபோதும் ஓரு பதிலடி அளித்த கணத்துக்குப் பிறகு பொருட்படுத்தியதில்லை. என் கருத்துகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என்னும்போது என் தரப்பில் நியாயம் இல்லையென்றால் ஆழமான மனவருத்தம்தான் ஏற்படும். சிலதருணங்களில் என் சொற்கள் எல்லைமீறியதுண்டு. அப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் உடனே மன்னிப்பும் கோரியிருக்கிறேன். இலக்கியத் திறனாய்வு சார்ந்த நியாயமான காரணம் உண்டு என்றால் வேறுவழியில்லை. நான் காட்டிய இதே கடுமையை உன் நியாயங்களுடன் நீயும் என் மீது காட்டலாம் என்று சொல்வதுதான் ஒரேவழி. சொல்லியிருக்கிறேன்.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 47
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 49