இரண்டு முகம்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா? அம்மா, தம்பி, தங்கை நலம் என்று நம்புகிறேன்.
25 வயதில் தான் ஒரு புரிதல் பிறக்கும் என்பது நூறு சதவீதம் உண்மை.
நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போது civil service கனவுகளில் இருந்தேன். யார் கேட்டாலும் civil service எழுத போகிறேன் என்றே சொல்வேன். நானும் நூலகமே கதி என்று கிடப்பதை பார்த்து விட்டு எல்லாரும் அதை நம்பவும் செய்தனர்.
ஆனால் இலக்கியத்தை கண்டுகொண்டது அந்நாட்களில் தான். பின்னர் safety net ஆக இருக்கட்டும் என்று என் தந்தை வற்புறுத்த M.Phil படித்தேன். பின்னர் பெங்களூரில் Christ Universityல் ஒரு வருடம் ஒரு Media Project ஒன்றில் copy paste செய்து கொடுக்கும் பணி.
அப்போது தான் உங்கள் தளத்தை கண்டுகொண்டேன். அங்கே இருந்த நூலகத்தில் முன்னட்டை, பின்னட்டை இல்லாத மடித்தால் ஒடிந்து விழும் பக்கங்களை கொண்ட 1972ல் பதிப்பிக்க பட்ட புயலிலே ஒரு தோணி நாவலை வாசித்தேன்.
அதில் 24 வயதான பாண்டியன் ஊர் திரும்புவது என்று முடிவு செய்வான். அதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் அழித்த பிறகே அவனுக்கு அது தோன்றும்.
எனக்கும் அப்போது 24 வயது. நான் பெட்டி தட்டும் வேலை வேண்டாம் M. Phil இருக்கிறதே ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று வீட்டிற்கு வந்துவிட்டேன். 2012ல் பெங்களூரில் இருந்து கிளம்பிய போது என்னுடைய சம்பளம் 13000 ரூபாய். அடுத்த மாதம் பேராசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளி வந்தது. அதில் நான் வெற்றி பெற்றுவிட இனி ஆசிரியர் வேலை பார்ப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்று பெங்களூரில் வாங்கிய சம்பளத்தில் பாதியை சம்பளமாக தந்த ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன்.
சம்பளம் குறைவாக இருந்தாலும் நமக்கென்று நிறைவான நேரம் இருக்கிறது என்று வாசிப்பில் மூழ்கி திளைத்தேன். மேலும் இலக்கியம் கற்றுக்கொடுக்கிறோம் என்ற ஒரு திருப்தியும். 70 பேர் இருக்கும் வகுப்பில் ஒருவருக்கு வாசிக்கும் ஆர்வம் பிறந்தாலும் அதை வெற்றி என்றே கருதிக்கொண்டேன்.
பெற்றவர்கள், உறவினர்கள், நண்பர்கள் பின்னர் போறவன் வாறவன் எல்லாம் TNPSC, RRB, SSC, VAO எழுத யோசனை சொன்னார்கள். நான் பேராசிரியர் ஆக தகுதியுடையவன், எனக்கு லஞ்சம் இல்லாமல் உங்களால் வேலை வாங்கி தரமுடியுமா என்ற எதிர்கேள்வியை கேட்டுக்கொண்டே போட்டி தேர்வுகளும் எழுதிக்கொண்டிருந்தேன்.
இதற்கிடையே ஒவ்வொரு வருடமும் புதிதாக இணையும் மாணவர்களிடம் தட்டச்சு, சுருக்கெழுத்து, Office Automation என்று clerical வேலைக்கான தகுதிகளை கல்லூரி முடியும் முன்னே படித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். முக்கியமாக இலக்கியம் வாசிப்பவர்களிடம் அதை தினம் சொல்வேன். என் தந்தை எனக்கு சொன்ன ‘safety net’.
உங்களுக்கு நேரத்தையும் பணத்தையும் அளிக்கும் வேலை கிடைப்பது முக்கியம் என்று திரும்ப திரும்ப சொல்வேன்.
கடந்த 6 வருடங்களில் பல மாதிரி மனக்குழப்பங்களுக்கு ஆளானாலும் வாசிப்பதை நிறுத்த வில்லை. மாணவர்களுக்கு வாசிப்பை அறிமுக படுத்துவதையும் நிறுத்த வில்லை. வாசிப்பவர்களை விட ஏன் வாசிக்க வேண்டும் என்று கேட்பவர்கள் அனேகம். ஏனென்றால் நீங்கள் ‘பால் வண்ணம் பிள்ளை’ போல ஆகவிடக்கூடாது அதற்கு தான் வாசிக்க வேண்டும் என்று சொல்வேன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி VOC கல்லூரியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். ஒரு பைசா லஞ்சம் கிடையாது. இலக்கியம் கை விடவில்லை என்று உணர்ந்து கொண்டேன். அங்கே வேலைக்கு இணைந்த இரண்டு வாரத்தில் உங்களை மதுரையில் நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனாலும் கடந்த 6 வருடங்களில் family, societal pressure எல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.
கடந்த வாரம் கூட நான்கு வேடங்கள் கட்டுரையை தேடி வாசித்தேன். பின்னர் இக்கட்டுரையை படித்து தான் என் பாணியில் நான் Personal Life, Professional Life, Social Life என்று கல்லூரி முடித்து செல்லும் மாணவர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கேன் என்று உணர்ந்து கொண்டேன்.
உலகமே ஒரு நாடக மேடை எல்லா இடத்திலும் இலக்கிய வாசகன் வேடம் சரி வராது அதனால் நாய் வேசம் போட்டால் குலைக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். எப்போதாவது தலைக்கணம் கூடும் நாட்களில் இது போன்ற கேள்விக்கு நீங்கள் பத்தி அளிக்க சரி தான் personal life Professional மற்றும் social life ஐ over shadow பண்ண அனுமதிக்க கூடாது என்று எண்ணிக்கொள்வேன்.
– மிக்க அன்புடன்
மருது
பி.கு
எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். உங்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக இணைத்துள்ளேன்.
கறுப்புக்கண்ணாடி -கடிதங்கள்
மதுரை கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இரண்டு முகம் மாதிரியான கடிதங்கள் உங்களுக்கு வருவதற்கான காரணம் மேலோட்டமான பரபரப்புகள். ஐரோப்பிய ஃபேஷன்கள் ஆகியவற்றைக் கடந்து நீங்கள் உண்மையிகேயே இலட்சியவாதம் சார்ந்த வேறு ஒருவகையான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறீர்கள் என்பதுதான். உங்கள் தளத்தை வாசித்து இயற்கை, பயணம், இயற்கைவிவசாயம், சிறுதொழில் என பல தளங்களில் எதையாவது செய்ய ஆரம்பித்த சிலரை எனக்கே தெரியும். தன்னறம் என்ற வார்த்தை அவர்களை அப்படி ஊக்குவிக்கிறது.
அதேசமயம் இங்கே அதையெல்லாம் கடைப்பிடிப்பதில் ஏராளமான சிக்கல்களும் உள்ளன. அதெல்லாம் அடிக்கடி மனச்சோர்வையும் அளிப்பவை. ஆகவேதான் எழுதுகிறீர்கள். நீங்கள் அனைத்தையும் நடைமுறையில் நின்று நேரடியான சொந்த அனுபவம் வழியாகவே பார்க்கிறீர்கள். இந்தக்கட்டுரையிலும் அந்த நடைமுறைப்பார்வை இருப்பதுதான் சிறப்பு
ஆர்.ராமநாதன்